பொங்கலோ பொங்கல்....
தமிழரின் தனித்துவமான பண்டிகை. தரணியெங்கும் பரந்து வாழும் தமிழர்களெல்லாம் மனமகிழ்ந்து கொண்டாடும் ஒரு திருநாள். உழவர்கள் தங்கள் தொழிலுக்கு உறுதுணையாய் நின்ற பகலவனுக்கு நன்றிச்சொல்லி, தங்கள் விழை பயன்பொருட்களைப் படைத்து மகிழ்வுறும் நாள் இந்த இனிய நாள், பொங்குதிருநாளாக எங்களுக்கும் இருந்தது. ஒரு காலத்தில்...ஈழத்தின் தமிழர்பகுதிகளிலெல்லாம் பெரு மகிழ்வாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு பகுதிகளிலும், அவ்வப் பகுதிகளுக்கான தனித்துவங்களுடன் கொண்டாடப்பட்டது. பொதுமையில் ஒரேவிதமாகக் காணப்பட்ட போதும், அந்தத்தப் பகுதிகளுக்கான சிறப்புக்களும் சேர்ந்தே மிளிர்ந்தன. ஆனால் எல்லா இடங்களிலும் நகர்புறங்களைவிட, கிராமங்களில் இந்தப் பண்டிகையின் சோபிதமே அலாதியானது. இது உழவர் திருநாளல்லவா?. அந்த உன்னதமானவர்களின் உறைவிடம் கிராமங்கள்தானே?
ஈழத்தின் வடக்கே, பொங்கல் சற்று இந்து மதபாரம்பரியம் சார்ந்ததாக இருக்கும். ஆனாலும் தமிழர் திருநாளின் தனித்துவங்கள் தவறிப்போவதில்லை. காலையில் எழுந்து அனைவரும் குளித்து, புத்தாடைகள் அணிந்து, வீட்டின் முற்றங்கள் சாணகத்தால் மெழுகப்பட்டுக் கோலங்கள் வரையப்பட்டு, குத்துவிளக்கு, நிறைகுடம் வைத்து, நிறைகுடத்திற்குப் பக்கத்தில் முகம்பார்க்கும் கண்ணாடி ஒன்றும் அலங்கரித்து வைத்து, அடுப்பு மூட்டுவார்கள். அடுப்பு மூட்டுவதற்காகப் பெரும்பாலும், காய்ந்த தென்னம் பாளைகள் விறகாகப் பாவிப்பார்கள். பொங்கல் பானைகளின்( பிற்காலத்தில் அவை அலுமினியப்பானைகளாகின) கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டும் , அலங்கரிப்பார்கள். தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி சூடாக்குவார்கள். பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது சிலர் ‘பொங்கலோ பொங்கல் ‘ என்பார்கள், சிலர் சூரியனைப்பார்த்துக் கும்பிட்டுக் கொள்வார்கள். பொங்தித்தள்ளும் அந்த நுரைத்தபால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் கொள்வார்கள். கிழக்கு, வடக்கு, நோக்கி பால்வழிந்தால் நல்லதென மகிழ்வார்கள். சிலர் பொங்கற்தண்ணீரைச் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள்.சிறுவர்கள் சேர்த்துக்கட்டி வைத்திருக்கும், வெடிக்கட்டுக்களைக் கொழுத்தி வெடிவெடிப்பார்கள். வெடிகளின் அதிர்வை வைத்தே அயல்வீடுகளில் பொங்கல் பொங்கிற்றா என்பதை அறிந்து கொள்ளலாம்.
பொங்கி முடித்ததும் படையல் செய்வார்கள். தலைவாழையிலை விரித்து, சர்க்கரைப்பொங்கலிட்டு, அதன்மேல் சற்றுத் தயிர்விட்டு, அதன்மேல் வாழைப்பழத்தை உரித்து வைத்து, சுற்றிவர பண்டிகைக்காகத் தயாரிக்கப்பட்ட பொங்கல் பட்சணங்களும் சேர்த்துப் படைப்பார்கள். குடும்ப மொத்தமும் ஒன்று கூடிநின்று, சூரியனைப்பார்த்து தேவாம்பாடித் துதிப்பார்கள். பின் அனைவரும் பொங்கல் பகிர்ந்துண்டு மகிழ்வார்கள். சிலர் ஆலயம் சென்று வழிபாடியற்றிபின் வீடு வந்து உண்பார்கள். எப்போதும், பானையிலிருக்கும் பொங்கலை விடவும், வாழையிலையில் படையல் செய்த பொங்கலை, தயிருடன் சேர்த்துச் சுவைப்பது, மிகுந்த சுவையாக இருக்கும்.
பொங்கலன்று மாலைகளில், சில இடங்களில் மாட்டுச்சவாரியும் இடம்பெறும். பொங்கலுக்கு மறுநாள், மாட்டுப்பொங்கல் நடைபெறும். இது யாழ்ப்பாணத்தில் அநேகமாக மாலைவேளைகளிலேயே நடைபெறுவதைக் கண்டிருக்கின்றேன். மாடுகளைக் குளிப்பாட்டி அலங்கரித்து, மாடுகட்டும் இடங்களிலேயே பானை வைத்துப்பொங்கிப் படைத்து, பின் பொங்கலை மாடுகளுக்கு தீனியாக்கி மகிழ்வார்கள்.
தங்கள் தொழிலுக்குத் துணையாகவிருந்த மாடுகளை மகிழ்ச்சிப்படுத்துவதாக அமையும், இம் மாட்டுப்பொங்கலும், சூரியனுக்கு நன்றி சொல்வதாக அமையும் தைப்பொங்கலும், தமிழர்களின் நன்றியுணர்வுக்குச் சான்றான ஒரு பண்டிகை எனவும் சொல்லலாம். தென் தமிழீழத்தின் பொங்கல் சற்று வித்தியாசமாக இருக்கும். எப்படியென்று அறிய ஆவலா? இங்கே வாருங்கள்.
தென் தமிழீழக் கிராமத்துப் பொங்கல்.
பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னரே வீட்டின் முன், ஆற்றுநீர் அடித்துக் கரைசேர்த்த வெள்ளைக்குருமணல் வண்டில்களில் ஏற்றி வந்து பறிக்கப்படும். வடபகுதியில் முற்றங்களை சாணகத்தால் மெழுகி, கோலம்போட்டு பொங்குமிடத்தை தயார் செய்வார்கள். ஆனால் தென் தமிழீழத்தில் இந்தக் குருமணலினைக் கொண்டு சிறிய மேடையொன்று அமைத்து, அதிலே கோலம் போட்டு, சுற்றிவரத் தோரணம் கட்டி அழகு செய்வார்கள். பொங்கல் பானைகள் பெரும்பாலும் மண்பாணைகளாகவே இருக்கும். மண்பானையில் பொங்கல் செய்வதென்பது, சுவையை மிகுதியாக்கும். ஆயினும் அதிலே பொங்குவது சற்று நுட்பமான காரியம்தான். பொங்கல், படையல் எல்லாம் ஏறக்குறைய வடபகுதிபோலவே இருக்கும்.
காலையில் படையலும் வழிபாடுமாக இருக்கும் பொங்கல் கொண்டாட்டங்கள் மதியப்பொழுதுகளில் வேறுவகை மனமகிழ்வுக் கொண்டாட்டங்களாக மாறிவிடும். சின்ன வயதில் அம்மா மதியத்துக்குப் பிறகு வெளியில் போகவிடமாட்டா. போட்டிகளும், விளையாட்டுக்களும், நடைபெறுமிடங்களில், போதையும் இருக்கும். அதனால் சண்டைகள் வந்துவிடும் என்கின்ற பயம்தான். ஆனால் எனக்கு அந்த வேளைகளில் நடைபெறும் போட்டிகளைப் பார்க்க மிகுந்த ஆசை. அதிலும் போர்த் தேங்காய் அடித்தல் என்றொரு விளையாட்டு மிகவும் பிடிக்கும். இந்த விளையாட்டைப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கின்றீர்களோ தெரியாது. மிகுந்த சுவாரசியமான விளையாட்டு அது.
சற்றேறக்குறைய கிறினைட் எனும் கைக்குண்டளவில்,( பாருங்கள் கைக்குண்டு எங்கள் தலைமுறைக்கு எவ்வளவு பரிச்சமாகப் போய்விட்டது) இருக்கும் சிறிய வகைத் தேங்காய் அது. யாழ்ப்பாணப் பக்கம் நாள்தேங்காய் மரமென சில மரத்தினைத் தெரிவு செய்து, அதன் தேங்காய்களை கோவில் தேவைகளுக்கும், மங்கள வைபவங்களும் பாவிப்பார்கள். அதுபோல் போர்த் தேங்காய் மரங்களும் தெரிவு செய்து பாவிக்கப்படும். இந்தத் தேங்காய்களின் மேலோடாகிய சிரட்டை(கொட்டாங்குச்சி) மிகவும் தடிப்பானது.
போர்த்தேங்காய் விளையாட்டில் ஒரே சமயத்தில், இருவர் ஈடுபடுவார்கள். தமிழகத்துக் கிராமங்களில் நடைபெறும் சேவற்சண்டைகளுக்கு இணையான சுவாரசியத்துடன் இவ்விளையாட்டு நடைபெறும். முதலில் ஒருவர் தன்தேங்காயை நிலத்தில் குத்தி நிறுத்துவார். மற்றவர் அதன் மேல் தன் தேங்காயைக்கொண்டு அடிப்பார். வைத்த தேங்காய் உடையாவிட்டால், முறைமாறி அடித்ததேங்காய் அடிவாங்கத்தயாராகும். சிலவேளைகளில் சிரடடைகள் வெடித்துச் சிதறுவதனால், போட்டியாளர்களின் முகம் கைகள் மட்டுமல்ல, பார்வையாளர்களது உறுப்புக்களும் ஊறுபடுவதுண்டு. போட்டியில் பணப்பந்தயம் முதல் தண்ணிப்பந்தயம் வரை இருக்கும். பல தேங்காய்களை சிதறடித்த தேங்காயை வைத்திருக்கும் நபர் அன்றைய பொழுதில் கதாநாயகன்தான். ஏனென்றால் அவர் எங்கெங்கு போட்டிக்குச் செல்கின்றாரோ, அங்கெல்லாம் அவர் பின்னே ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கச் செல்லும். அவரும் ராசநடை நடந்து செல்வார்.
மாட்டுப்பொங்கல், பட்டிப்பொங்கலாக நடைபெறுவதும் இங்குதான் சிறப்பாக இருக்கும். தைப்பொங்கலின் மறுநாள் காலைமுதலே பட்டிகள் களைகட்டத் தொடங்கிவிடும். எருதுகளின் கொம்புகள் அழகாகச்சீவப்பட்டு வர்ணம் தீட்டப்படும். பசுக்கள் குளிக்கவார்க்கப்பட்டு, கழுத்தைச் சுற்றி மாலை அலங்காரங்கள் செய்யப்படும். . எருமையினப்பசுக்கள் நீராட்டபடுவதோடு சரி. பெரும்பாலும் நெற்றியில் ஒரு சந்தனப்பொட்டுடன் சமாதானம் கண்டுவிடும். ஏன் எனும் கேள்ளவி என்னுள் எழும்போதெல்லாம், என்னைப்போல் கறுப்பு என்பதாலோ அல்லது சோம்பேறித்தனமாக இருப்பதாலோதான் அவை பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை போலும் எனச் சமாதானம் கண்டுகொள்வேன். வடபகுதி போலல்லாது, காலையிலேயே பட்டிப்பொங்கல் நடைபெறும்.
பொங்கல் முடித்துப் படைத்த பின் பட்டிகள் திறக்கப்படும் அந்த்ததருணங்களுக்கான ஆயத்தங்கள் சில தினங்களுக்கு முன்னமே சிறுவர்களாகவிருந்த எங்கள் மத்தியில் ஆரம்பமாகிவிடும். நீளமான தடிகளில் கொழுவி ( வேனாம் வில்லங்கம்) கொழுக்கி போன்றதொரு கம்பியை வைத்துக் கட்டி, ஒரு தற்காலிக ஆயுதம் தயார் செய்து மறைத்து வைத்திருப்போம். பட்டிகள் திறந்து பசுக்களும் காளைகளும் திறக்கப்பட்டதும், சிறுவர்குழாம்கள் கவனிப்பது, அக்கால் நடைகளின் கழுத்துக்களைத்தான். அவற்றின் கழுத்தில் கோர்த்துக்கட்டப்பட்டிருக்கும் வடை மாலைகளும், அந்த மாலைகளில் சேர்த்துக்கட்டப்பட்ட பணநோட்டுக்கள் சிலதும் தான் எங்கள் எதிர்பார்ப்பின் இலக்கு. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கால்நடையைக் கலைத்தவாறே விரையும். அவற்றின் கழுத்திலே உள்ள மாலைகளைக் குறிவைத்து எங்கள் தற்காலிக ஆயுதம் நீளும். மாலைகள் அறுக்கபட்ட காளைகளையோ, பசுக்களையோ, பின்னர் யாரும் கலைக்க மாட்டார்கள். ஆனால் சில கால்நடைகள் இலகுவில் அகப்படமாட்டாது. தமிழகத்து ஜல்லிக்கட்டுக்குச் சமமான விறுவிறுப்போடு இந்த விரட்டும் நடக்கும்.
பெரும்பாலும் இந்த விளையாட்டில் இளைஞர்களும், சிறுவர்களுமே ஈடுபடுவார்கள். அறுத்தெடுக்கப்பட்ட மாலைகளில் உள்ள வடைகள் உடனடி உணவாகும். கிடைத்த பணம் அன்றிரவுச்சினிமாவுக்கு கட்டணமாகும். நீங்கள் எருமைப்பாலில் பொங்கிய பொங்கல் சாப்பிட்டிருக்கிறீர்களா? அமிர்தம் அமிர்தம் என்று என்னவோ சொல்கிறார்களே, அது அதுதான். ஆனா அந்த அமிர்தத்தை இப்போது நீங்கள் சாப்பிட முடியாது. ஏனென்றால் இன்று அந்த மண்ணில்தான் போரின் ஆழமான வடுக்கள், அவலங்களை ஏற்படுத்தி, எங்கள் சகோதரர்கள் எல்லாவற்றையும் இழந்த ஏதிலிகளாக, மரங்களின் கீழும், முகாம்களிலுமாக, உண்பதற்குச் சீரான உணவின்றிச் சிதைந்து போயுள்ளார்கள். போர்தேங்காய் விளையாடி உறவுகள், போரினால் சிதறுகாயாக அடிக்கப்படுகிறார்கள். ஆனாலும்..
எங்கள் நிலம் எங்களுக்கென்றாகும். அன்றையபொழுதுகளில் இன்பப் பொங்கல் நிறைவாய் பொங்கும் எனும் நம்பிக்கையோடு...
http://malainaadaan.blogspot.com/2007/01/blog-post_14.html
http://maruthanizal.blogspot.com/2007/01/blog-post_14.html
|