இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
மாட்டுவண்டிச் சவாரிகள்...! Print E-mail
கானா பிரபா   

ஜல்.....ஜல்....ஜல் என்று மாட்டு வண்டி ஒன்று ரோட்டில் போகும் சத்தம் கேட்கிறது. வீட்டுக்குள்ளிருந்து அந்தச் சத்தம் கேட்டு ஓடிப்போய் வெளியே பார்க்கிறேன். இருக்க இடமே இல்லாமல் முழுமையாகக் குழை நிரப்பிய மாட்டு வண்டி ஒன்று தெருவில் நடைபயின்று போகின்றது. வெறுப்போடு உள்ளே போகின்றேன். கொஞ்ச நேரத்தில் இன்னொரு மாட்டுவண்டிச் சத்தம் வருகிறது. எட்டிப் போய்ப் பார்க்கின்றேன். மாட்டுக்காரர் சகிதம் வெறுமையாக ஒரு மாட்டு வண்டி தாவடி நோக்கிப் போகிறது. குதூகலத்தோடு என் காற்சட்டையை மேலே இழுத்துவிட்டு, மாட்டு வண்டியின் ஓட்டதோடு என்னைத் தயார்படுத்தி நிதானமாகக் கெந்தியவாறே பின் பக்கமாக ஏறி அந்த மாட்டுவாண்டியின் ஓரமாகப் போய் இருக்கின்றேன். என்னைக் கடைக்கண்ணால் பார்த்து ஒரு முறுவலை நழுவவிட்டவாறே மாட்டுக்காரர் தன் வாகனத்திற்கு வழி காட்டுகின்றார். ஏதோ பெரிதாகச் சாதித்த களிப்பில் வண்டியின் கழியொன்றைப் பற்றியவாறே ஆடி அசைந்து செல்லும் மாட்டு வண்டியின் பயணத்தை அனுபவிக்கின்றேன். தாவடியில் இருக்கும் என் சித்தி வீடு வந்ததும் வண்டியிலிருந்து துள்ளிப் பாய்ந்து வெளியேறி, சித்தி வீட்டுக்குள் நுளைகின்றேன். கொஞ்ச நேரம் அவர்கள் வீட்டுத் திண்ணையில் இருந்தவாறே ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இணுவில் பக்கமாகப் போவதற்காக ஒரு மாட்டு வண்டி வருகிறது. துள்ளிப் பாய்ந்து ஒட்டி மீண்டும் என் மாட்டுவண்டிச் சவாரி இன்பத்தை அனுபவித்துக் கொண்டே என் வீடு நோக்கிப் போகின்றேன். " உவன் பிரபு வந்த மாதிரிக் கிடக்கு, காணேல்லை ஆளை" பின்னால் என் சித்தி பின்னாற் கதைப்பது கேட்கின்றது. குறும்பாகக் கொடுப்புக்குள்ள சிரித்துக்கொண்டு மாட்டுவண்டிச் சவாரியில் மூழ்குகின்றேன். இது என் இளமைக்காலச் சந்தோஷ நினைவுகளில் ஒன்று.

மாட்டுவண்டியின் பாவனையும் அது தந்த சேவையும் சொல்லி மாளாது, 1980 களின் நடுப்பகுதி வரை எங்களூரில் கிட்டத்தட்ட எல்லா விவசாயிகளின் வீடுகளிலும் மாட்டுவண்டி தான். தாவடிப் பிள்ளையார் கோயிலில் திருக்கார்த்திகை விளக்குப்பூசை எங்கள் வீட்டு உபயமாக நடைபெறும் ஒவ்வொரு வருஷமும் பூபாலசிங்கம் மாமா தன் மாட்டுவண்டியோடு அன்று காலையே வந்துவிடுவார். இணுவிலிலிருந்து கோயிலுக்குத் தேவையான சாமான் சக்கட்டுகளோடு குஞ்சுகுருமான்கள் எங்களையும் ஏற்றிக்கொண்டு மெல்ல நகரும் மாட்டுவண்டி. வண்டியின் வெளிப்புறம் காலை நீட்டி வருவதற்கான இட ஒதுக்கீட்டில் சின்னனுகள் எங்களுக்குள் பெரும் போட்டியே நடக்கும். இரவுப்பொழுது திருவிழா முடிந்ததும் பொங்கற்பானை நைவேத்தியம் சகிதம் வண்டி வீடு திரும்பும்.

பங்குனித்திங்கள் காலத்திலும் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு மாட்டுவண்டிகள் புடை சூழ யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசத்திலிருந்தும் மக்கள் வண்டி கட்டி வந்துபோன காலமும் என் நினைவில் இருந்து நீங்காதவை.

"கனதூரம் போகோணுமெல்லே, என்னத்துக்கு நடை பயிலுறாய்? வேகமாப் போவன்" என்று தன் மாட்டோடு பேசிக் கையில் இருந்த தன் நீண்ட பூவரசம் தடியால் மாட்டின் முதுகைத் தட்டிக் கொடுத்து, இஞ்சை, இஞ்சை என்று மாட்டைப் போகும் திசை நோக்கித் திருப்புவார் மாட்டு வண்டிற்காரர். வாயில் நுரை தள்ள, என் கடன் பணி செய்து கிடப்பதே என்று மாடு வேகமெடுக்கும்.

சிலவேளைகளின் தன் சொந்த விசயங்களை மாடுகளுக்குச் சொல்லிக்கொண்டே மனத்தை ஆற்றிக்கொண்டுபோகும் வண்டிக்காரர்களையும் பார்த்திருக்கின்றேன். மனிதர்களுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கும் செல்லும் வழியில் இளைப்பாறி நீராகாரம் அருந்திப்போக வசதியாக முக்கிய சந்திப்புக்களில் நீர்த்தொட்டிகள் இருந்த காலமும் என் ஞாபக இடுக்குகளில் இருக்கின்றது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்குச் சமீபமாகவும் முனியப்பர் கோயிலடியிலும் இவை இருந்ததாக நினைப்பு.

எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோயிலுக்கு ஆறரைப் பூசைக்கு வண்டி கட்டி வந்து ஐயர் தந்த திருநீறையும் குங்கும சந்தனத்தையும் காளைகளின் நெற்றியில் தடவித் தன் வேலையைத் தொடங்கும் விசுவலிங்கமும், எங்கள் புகையிலைத் தோட்டத்திற்கு குழை தாக்கும் வேலைக்காகப் பூவரசம் இலை நிரவிய மாட்டுவண்டி சகிதம் தோட்டம் வரும் மாரிமுத்துவும் மாட்டுவண்டிக்காலத்தின் சில சாட்சியங்கள். 80 களின் நடுப்பகுதியில் இருந்து நவீனத்தின் ஆக்கிரமிப்பில் லாண்ட்மாஸ்டர் என்ற பதிலீடு மாட்டுவண்டிக்காலத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டியாக வந்து இப்போது முழு அளவில் ஆக்கிரமித்துவிட்டது என்றே சொல்லலாம். விசுவலிங்கமும் காலைப்பூசைக்குத் தன் லாண்ட் மாஸ்டரில் வரத்தொடங்கிவிட்டான். மாடுகளின் நெற்றியில் தடவிய நீறும் சந்தனமும் லாண்ட் மாஸ்டரின் எஞ்சினில் இப்போது.

எங்களூர்த் தெருக்களில் ஜல் ஜல் என்று கழுத்துமணியெழுப்பி குழம்பொலிகள் சந்தம் சேர்த்த மாட்டுவண்டிகளுக்குப் பதில் லாண்ட் மாஸ்டரின் கர்ணகொடூரச் சத்தம். அடுத்த தலைமுறைக்கு மாட்டுவண்டிகள் காட்சிப் பொருளாகும் காலம் நெருங்கிவிட்டது.

இந்த நேரத்தில் மாட்டு வண்டியில் பூட்டப்படும் மாடுகள் தருவிக்கப்பட்ட வரலாற்றையும் சொல்லவேண்டும். வடக்கன் மாடுகள் என்றவகை மாடுகளே இதற்கெனத் தனித்துவமான பாவனையில் இருந்தவை. வடக்கன் மாடுகள் என்ற பதம் வரக்காரணம் ஈழத்தின் வடக்கே உள்ள இந்தியாவிலிருந்து தான் இவை முன்னர் தருவிக்கப்பட்டவை. இது பற்றி மேலதிக விபரங்களை நான் தேடியபோது சிட்னியில் தற்போது வாழும் வல்வெட்டித்துறைச் சேர்ந்த இ.சிவகுரு தாத்தா தந்த தகவல்களின் படி 1940 களின் தான் சின்னப்பையனாக இருந்த காலப் பகுதியில் பெரியோர்கள் சொன்ன கூற்றுப் படி வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, காங்கேசன் துறை போன்ற இறங்கு துறைகள் ஈழத்தின் பாரிய துறைமுகங்களாக விளங்கியவையாம். இந்த இறங்குதுறைகளுக்கே 40 களுக்கு முந்திய காலகட்டத்தில் இப்படியான தமிழ்நாட்டிலிருந்து மாடு தருவிக்கும் முறைமை இருந்ததாகச் சொல்லுகின்றார்.

சலங்கு என்ற பாய்மரக்கப்பல்கள் உதவியுடன் ஈடுபட்ட இந்த இறக்குமதி வர்த்தகம் வல்வெட்டித்துறையில் காற்றடிக்கின்ற காலத்தில், இறக்குமதியாகும் பொருட்களோடு ஊர்காவற்துறைத் துறைமுகத்தில் பாதுகாப்புக்காகக் கட்டிவிடும் பழக்கம் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இப்படி ஊர்காவற்துறைக்கு மாற்றலாகும் முறைமை "ஒதுக்கான இடம்" தேடிப் போவது என்று சொல்லப்பட்டுவந்தது.

தில்லைச்சிவனின் "அந்தக் காலக்கதைகள்" என்ற நூலை தட்டிப்பார்த்தேன். 1928 ஆம் ஆண்டு சரவணை என்ற தீவுப்பகுதியில் பிறந்த அவரின் பிள்ளைப்பிராய நினைவுப் பதிவாக இருக்கும் அந்நூலில் இப்படிக் கூறுகின்றார்.

"அப்பொழுதுதான் புதிதாக வாங்கிக் கொண்டுவந்த இரண்டு வடக்கன்மாட்டுகாளைகள். ஊர்காவற்துறையில் உள்ள மாட்டுகாலைக்கு இந்தியாவில் இருந்து கப்பலில் இருந்து வந்து இறங்கி நின்றவை அவை. அண்ணாமலை மாடுகள், வெள்ளை வெளேரென்ற நிறம். நன்கு கொழுத்ததும் தளதளவென்ற மினுமினுப்பும் கொண்டவை. ஈ இருந்தால் வழுக்கி விழுந்து விடக்கூடிய வழுவழுப்புள்ள காளைகளின் கொம்புகளோ, நீண்டுயர்ந்து கூடு போன்றவை.." அந்தக்காலத்தில் ஒரு ஆயிரம் ரூபாவுக்கு முன் பின்னாக விலை கொடுத்து எனது பாட்டனர் வாங்கிக் கொண்டு வந்தார், இப்படி நீண்டு செல்கின்றது அந்த நினைவுப்பகிர்வு.

வரதரின் மலரும் நினைவுகளில் கூட இதையே இப்படிச் சொல்கின்றார்.
அண்ணாமலை மாடுகள் தென்னிந்தியாவிலுள்ள "திருவண்ணாமலை" என்ற இடத்திலிருந்து காலத்துக்குக் காலம் யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்யப்படும். "உரு" என்று சொல்லப்படும் பெரிய வள்ளங்களில் அந்த மாடுகள் இந்தியாவில் ஏற்றப்பட்டு இங்கே ஊர்காவற்துறையில் இறக்கப்படும். இப்படி மாடு வரும், காலத்தில், அவற்றை வாங்குவோரும், தரகர்களும், சும்மா விடுப்புப்பார்க்க வருபவர்களுமாக ஊர்காவற்துறை திருவிழாக்காலம் போலக் களை கட்டிவிடும்.

வட தமிழீழத்தித்திற்கு ஒரு மகாகவி (உருத்திரமூர்த்தி) போல தென் தமிழீழத்தில் கவிப் பணி ஆற்றிய சிறப்பு மிக்க கவிஞர் நீலாவாணன் (சின்னத்துரை). நீலாவாணைன் கவியாழத்தின் விசாலத்தைப் பகிர எனக்கு இன்னொரு பதிவு தேவைப்படும். எனவே அவரின் கவிப் படையலில் தோன்றிய முத்து "ஓ வண்டிக்காரா" கவிதையையும் அது ஈழத்து மெல்லிசைப் பாடலாக எப்படி மாறியது என்பதையும் செவியில் நனைக்க இங்கே தருகின்றேன். இந்த மூலக்கவி ஈழநாடு பத்திரிகையில் 21.06.1965 ஆம் ஆண்டு வெளிவந்தது.

கவி வரிகளைப் பாருங்கள் எவ்வளவு அழகுணர்ச்சி தென்படுகின்றது. என் மழலைப் பருவத்தின் இலங்கை வானொலி அனுபங்களில் மெல்லிசைப் பாடலாக வந்த இந்தப் பாடல் காலம் கடந்தும் அதே சுவை குன்றாது என் ரசனையில் பதிவாகி இருக்கின்றது. கண்ணன் - நேசம் என்ற புகழ் பூத்த ஈழத்து இரட்டையர்களின் இசையும், மா. சத்தியமூர்த்தியின் குரலும் பாடலுக்கு அணி சேர்க்கின்றது. பாடலில் கலந்து வியாபித்திருக்கும் புல்லாங்குழல் போன்ற தேர்ந்தெடுத்த வாத்தியங்கள் பாடலைச் சேதாராம் பண்ணாமல் நம் தாயகத்துக் கிராமியச் சூழ்நிலைக்கு மனதைத் தாவவிடுகின்றன.

ஓ என் அருமை வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போமுன் ஓட்டு

காவில் பூவில் கழனிகளெங்கும்
காதல் தோயும் பாட்டு!
நாமும் நமது பயணந் தொலையக்
கலந்து கொள்வோம் கூட்டு! - ஓட்டு

ஓ என் அருமை வண்டிக்காரா....

பனியின் விழிநீர் துயரத் திரையில்
பாதை மறையும் முன்னே
பிணியில் தேயும் பிறையின் நிழல் நம்
பின்னால் தொடரும் முன்னே - ஓட்டு

ஓ என் அருமை வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போமுன் ஓட்டு

பாடலைக் கேட்க

1990 ஆம் ஆண்டு நல்லூர்த்திருவிழாவிற்குப் போகின்றேன். வழக்கம் போல அதிக நேரம் கோயிலின் உள் மினக்கெடாமல் வெளியே வந்து சந்திரா ஐஸ்கிறீமில் வாங்கிய சொக் ஐஸ்கிறீமை நக்கியவாறு திருவிழாவிற்காக முளைத்த தற்காலிகமான கடைத்தொகுதிகளில் மேய்கின்றேன். அப்போது கண்ணிற் பட்டது ஒரு அங்காடி. அங்கே குவிந்திருக்கும் தாயக வெளியீடுகளோடு "களத்தில் கேட்கும் கானங்கள்" பாடற் போழைகள். என்னுடைய சுய நினைவுகெட்டியவரை பகிரங்கமாக ஒரு அங்காடியில் தாயக கீதங்களை விற்பனைக்காக வைத்திருந்தது அதுவே முதல்முறையாக இருந்தது. தொடர்ந்து வந்த நல்லூர்த்திருவிழாக்காலங்களில் இந்தப் பாடல்கள் கோயில் வீதிகளில் முழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துடனான எதிர்பாராத யுத்தம், தொடர்ந்த மூன்றாண்டு வனவாசம் கழிந்து தமிழீழ விடுதலைப்புலிகள் சொந்த மண்ணில் வியாபித்த வேளை, இந்த "களத்தில் கேட்கும் கானங்கள்" ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்புமுனை விளைந்த காலத்து உணர்வுப்பதிவுகளின் பாடல் வடிவமாக விளைந்திருக்கின்றது.

இந்திய இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையில் புதுவை ரத்தினதுரையின் பாடல் வரிகளைத் தமிழகப் பின்னணிப் பாடகர்கள் பாடியிருக்கின்றார்கள். ஒரு மாட்டு வண்டிக்காரன் பயன்படுத்தக்கூடிய எளிமையான சொல்லாடலும், அன்றைய காலகட்டத்தின் அவன் கொண்டிருந்த மனப்பாங்கையும், தன் மாட்டுடன் பேசிக்கொண்டே பயணிப்பதாக அழகாகத் தன் கவி வரிகளில் அடக்குகின்றார் புதுவையார்.


தமிழீழத்தின் தன்மானமுள்ள வண்டிக்காரன் விடுதலைப்புலிகளின் வீரத்தையும் தீரத்தையும் வியந்து பயணவெளிப்பாதையில் பாடுகிறான் இப்படி:

நடடா ராசா மயிலைக்காளை நல்ல நேரம் வருகுது
நடடா ராசா சிவப்புக்காளை நாளை விடியப்போகுது (2)

பொழுது சாயும் நேரம் இது புலிகள் வாழும் தேசம்
பொழுது சாயும் நேரம் இது புலிகள் வாழும் தேசம்

நடடா ராசா....

ஈழக்கடலில் மோதும் அலைகள் என்ன சொல்லிப்பாடும்
இந்த நாட்டில் வீசும் காற்று என்ன சொல்லிப்பேசும் (2)

நீலமேகம் எங்கள் நாட்டில் நின்று பார்த்துப் போகும் (2)
நீங்கள் வெற்றி சூட வேண்டும் என்று வாழ்த்துக்கூறும்
என்றும் வாழ வாழ்த்தும்.....

நடடா ராசா மயிலைக்காளை நல்ல நேரம் வருகுது
நடடா ராசா சிவப்புக்காளை நாளை விடியப்போகுது

ஊரில் எங்கும் புலியைத் தேடி ஊர்வலங்கள் வாரும்
கூரை எங்கும் குண்டு போட்டுப் பாரும் (2)
போரில் எங்கள் புலிகள் செய்த புதுமை கேட்டுப் பாரும்
புலரும் காலை தலைவன் மீது பரணி ஒன்று பாடும்
தரணி எங்கும் கேட்கும்.......

நடடா ராசா........

காடு மேடு வீதியெங்கும் கண்விழித்துக் கொள்வார்
காற்றில் கூட எங்கள் வீரர் கண்ணிவெடிகள் வைப்பார்

போற்றி போற்றி பிள்ளையாரே
புலிகள் வாழ வேண்டும் (2)

பேய்கள் ஓடிப் போக வேண்டும்
புலிகள் ஆள வேண்டும்
நாங்கள் வாழ வேண்டும்.......

பாடலைக் கேட்க

அதாவது நம் தேசத்தின் வரலாற்றுச் சூழ்நிலைக்கேற்ப இந்த மாட்டுவண்டிப் பயணம் எப்படியான கவியைப் புனைய வைத்திருக்கின்றது என்பதற்காகவே இந்த இரண்டு பாடல்களைத் தந்திருக்கின்றேன். இரண்டு வேறுபட்ட காலப்பகுதியில் இந்தக் கவிதைகள் எழுதப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட சமூகம், தான் சந்திக்கும் பாதிப்பையே இலக்கியமாகப் பெருமளவில் வடிக்கின்றது என்பதற்கு இதுவோர் உதாரணம்.
அதே மாட்டு வண்டி, அதே பாதை ஆனால் சூழ்நிலையும் தான் எதிர் நோக்கும் வாழ்க்கை தான் பாடலாகின்றது.

ஓ வண்டிக்காரா பாடலின் எழுத்து வடிவம் அனுமதி பெற்று மீள் பதிப்பிக்கப்படுகின்றது.
நன்றி: neelaavan.com

 

http://kanapraba.blogspot.com/2007/01/blog-post.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)