|
|
|
வலை |
|
|
|
தமிழ்நதி
|

என் பெயர் மதுவந்தி. முழுப்பெயரைச் சொல்லி அழைத்தால் வாய்நிறையும் என்று எனது தமிழாசிரியை வகுப்பில் அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால், வாய்நிறைய அழைப்பதில்தான் எல்லோருக்கும் அலுப்பு… அதனால் நான் மதுவானேன். பேரூந்து நிலையத்தில் நின்று ‘மது’என்று அழைத்தால் குறைந்தபட்சம் ஒருத்தியாவது திரும்பிப்பார்ப்பாள் என்பதனால் எனக்கு ‘மது’வைப் பிடிப்பதில்லை.
ஆனால், விமானம் பிய்த்து உதறி ஓடுபாதையில் ஓடி மேலேறும்போது வயிற்றுக்குள் பரவும் ‘திடுக்’எனும் கலவர உணர்வு எனக்குப் பிடிக்கும். அந்தக் கணத்திற்காகக் காத்திருந்து லயிப்பதுகூட இன்று மறந்துபோயிற்று. இருக்கையில் சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டபோது, இந்தப் பயணத்தை மீள்பரிசோதித்திருக்கலாம் என்று தோன்றியது. முன்னொருபொழுதிலும் முகமறியாத யாரோ ஒருவனைத் தேடி நான் போவது குறித்து நிலாவிற்கு மட்டுமே தெரியும். அவளும் கூட ‘கொழுப்பு’என்ற வார்த்தையை தனக்குள் சொல்லியிருக்கலாம். நீண்ட காலமாக எனது அறைத் தோழியாக இருக்கும் அவளையும்கூட சிலசமயங்களில் விதிர்விதிர்த்துப் போகச்செய்திருக்கின்றன எனது விசித்திர நடத்தைகள்.
சிறுவயதிலிருந்தே வீட்டவர்களால் ‘ஒரு போக்கு’என்று கணிக்கப்பட்ட பெருமை எனக்குண்டு. விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால் கூட கண்டுகொள்ளாமல் கையில் ஒரு புத்தகத்தோடு அறைக்குள் ஒதுங்கிவிடுவேன். வீட்டிலுள்ளோர் கணிப்பை வந்தவர்களும் வழிமொழிந்து போயினர்.
“அம்மாவிடம் சீதனம் வாங்கியதே பிழை. அதைக் குடித்து அழித்தது அதைவிடப் பெரிய பிழை”என்று வாதிட்ட ஒரு நாளில் அப்பா சொன்னார் “இது அடங்காப் பிடாரி…எங்கேயோ அடிபடப்போகுது”என்று.
அப்பாவிடம் அடிவாங்கிக் களைத்துப் படுத்திருந்த அம்மா வழக்கம்போல மாலையில் எழுந்து தேநீர் வைக்கும் போது “நீ இப்படி அப்பாவைக் கேளாக் கேள்வி கேட்டிருக்கக்கூடாது”என்று சொன்னா. அம்மாவுக்கு பூவும் பொட்டுமாகப் போய்ச் சேரவேண்டும் என்பதே நித்திய வேண்டுதலாக இருந்தது.
அக்கா எப்போதும் யாரையாவது காதலித்தாள். அவர்களுள் அண்ணாவின் நண்பர்களும் அடக்கம். ரமணி சந்திரன் எழுதும் நாவல்களில் வரும் கதாநாயகன் போல ஒருவன் வந்து தன்னைக் கொத்திக்கொண்டு போவான் என்று இருபத்து மூன்று வயது வரை காத்திருந்தும்(இடையிடையே சின்னச் சின்னக் காதல்கள் வந்துபோயின) பயனில்லாதுபோயிற்று. கடைசியில் இன்ன பயிருக்கு இன்ன மருந்தடிக்க வேண்டும் என்று வயல் வயலாக நடக்கும் கமநல உத்தியோகத்தன் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டுப் போனாள். அக்காவுக்கு அத்தானாக வந்தவன் வயலுக்கு மருந்தடிப்பதைக் கவனித்ததுபோக, மிகுதி நாளில் அவளுக்கு அடித்ததில் ஒருநாள் பூச்சிக்கு அடிக்கும் மருந்தைக் குடித்து கூடத்தில் புகைப்படமாகித் தொங்கினாள்.
அக்காவை நினைத்து அம்மா கொஞ்சநாள் அழுதுகொண்டிருந்தா. சாவு வீடுகள் மட்டுமே அக்காவை நினைவுபடுத்துமளவிற்குத் தேறியதொருநாளில் அம்மா எனது கல்யாணத்தைப் பற்றிப் பேச்செடுத்தா. ஊரிலிருந்து கனடாவுக்கு அனுப்பப்பட்ட ஒளியிழை நாடாவில் என்னைப் பார்த்த அண்ணாவின் நண்பன் ஒருவன் என்னைக் கைபிடித்துக் ‘கரையேற்ற’ஆசைப்படுவதைப் பற்றிச் சொன்னா. வெளிநாட்டுக்குப் போனால் நிறையப் படிக்கலாம் என்று ஆசை காட்டினா. படிப்பது பிடித்த பைத்தியமாகிய நான் அன்றொரு காலை செம்பருத்தி மரத்தடியில் தலையைக் குனிந்தபடி அம்மாவிடம் சம்மதம் சொன்னேன். அன்று காலால் நிலத்தில் வட்டம் வட்டமாக கோழிக்கிறுக்கல் கிறுக்கியதுகூட நினைவிலிருக்கிறது.
இப்படித்தான் ஒருநாளில் அம்மா செய்து தந்த நகைகள், பலகாரம், மிளகாய்த்தூள் சகிதம் விமானமேறிப் போனேன். முப்புறமும் புகைப்படக் கருவிகள் கண்ணடிக்க கோலாகலமாகக் கல்யாணம். உறவினர் வீடுகளில் தொடர்ந்த விருந்தாட்டம். ஒரு மாதம் விடுமுறை எடுத்து ஊரூராய்ச் சுற்றினோம். எஞ்சிய பொழுது காதற்பெருக்கிலும் கலவியிலும் கழிந்தது.
அதிகம் வளர்த்துவதற்கில்லை. ‘மோகம் முப்பது நாள்’என்று எழுதிவைத்தாற்போலல்லாது ஆறேழு மாதம் தேனொழுக நெய்யொழுக வாழ்ந்தோம். ஜுன் மாதத்தில் கனடாவில் இருபது செல்சியஸ் குளிர் இருக்குமே… அதுபோல இதமாயிருந்தது வாழ்வு. பின்பு அடர்ந்தது பெருமிருள்.
“நீ படிக்கவென்றும் வேலைக்கென்றும் போனால் வீட்டை யார் பார்ப்பது…? நான் வேலைக்குப் போகிறேன். வீட்டை நீ கவனித்துக்கொள்”
“ஏன் ஆண் வீட்டைப் பார்த்துக்கொள்ளக் கூடாதா…?”
எனது நாக்கில் எனக்கே கொட்டும் தேளொன்று இருந்தது. தோளில் தலைவைத்துப் படுத்துக் காதருகில் கிசுகிசுக்கும் இரவொன்றில் ரதனை இலகுவாகச் சம்மதிக்க வைத்து வேலைக்குப் போயிருக்கலாம்.
ரதனுக்குள்ளிருந்து வெளிவந்து பேசத்தொடங்கிய ஆளை எனக்குப் பிடிக்கவில்லை.
“உனக்குப் படித்த திமிர்”
“பெண்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடக்கூடாது”
“உங்களையெல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்க வேண்டும்”
‘அது என்ன இடம்…?’என்று மட்டும் கேட்டிருந்தால் அடி விழுந்திருக்காது. ‘அங்கா…?’என்று குறிப்பிட்டுக் கேட்டது தவறாய்ப் போயிற்று. கன்னமிரண்டிலும் ஓங்கி அறைந்து ரதன் தள்ளிவிட்டதில் கதவில் இடித்து முன்மண்டை உடைந்து ரத்தம் வர மயங்கிச் சரிந்தேன். பக்கத்து வீட்டார் பொலிசாருக்கு அறிவிக்க நான் வைத்தியசாலைக்கும் ரதன் காவல் நிலையத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டோம்.
அப்பா என்றோ என்னைக் குறித்து பிடாரி என்றது மெய்யாயிற்று என அம்மா கடிதம் எழுதினா. இந்தப் பிடாரியை எவன்தான் வைத்து அடக்குவான் என்றான் அண்ணா. அவனுக்கு நண்பர்கள் மட்டத்திலான மதிப்பீடுகள் அவசியம். நான் வைத்தியசாலையிலிருந்து நேரே நிலாவின் அறைக்குப் போனேன்.
சில மாதங்கள் கழித்து அண்ணா ஒருநாள் வந்து ‘மீண்டும் கல்யாணம் பண்ணிக்கொள்ளும் எண்ணம் இல்லையா…’ என்றான். ‘இல்லை’என்றதும் சர்க்கஸ் காட்டுகிறவன் காற்றிலிருந்து ரோஜாப்பூவை எடுத்து நீட்டும் இலாவகத்துடன் கையோடு கொண்டு வந்திருந்த தனது கல்யாணப் பத்திரிகையைக் கொடுத்துவிட்டுப் போனான். தன்னிரக்கத்தில் அழுகை வந்தது. மனிதர்களின் நாணமற்ற நடத்தைகளையிட்டுச் சிரிப்பும் வந்தது. அண்ணாவின் கல்யாணத்துக்கு நான் போகவில்லை. “இதுதான் மாப்பிள்ளையின் விவாகரத்தான தங்கை” என்று முதுகின் பின் சுட்டிக்காட்டிப் பேசும் சிரமத்தை நான் யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை. அம்மா ‘குட்டிச் சுவராய்ப் போ’என்று அழுதழுது எழுதிய கடிதத்தின் இறுதியில் காசனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தாள்.
நிலா அடிக்கடி கேட்பாள். “கல்யாணத்தின் பொருள் என்ன?”என்று. அதை ஏனோ ஆங்கிலத்தில்தான் கேட்பாள். நான் சிரித்துக்கொண்டே “ஒன்றுமில்லை”என்ற ஒரே பதிலை மீளவும் மீளவும் சொல்வேன். அதிகாலையில் எழுந்து வீட்டிலுள்ள எல்லோருக்கும் தேநீர் தயாரித்து வழங்கி….. இன்னபிற செயல்களில் ஈடுபட்டு ஒரே தடத்தில் நடந்து பூவும் பொட்டுமாகச் செத்துப் போகவேண்டுமென்று வேண்டிக்கொள்வதற்குத்தான் கல்யாணம் என்றால்… அதில் என்ன இருக்கிறது என்பது எனக்கும் புரியத்தானில்லை. மேலும்,எல்லாவற்றிலும் ஒழுங்கமைவை எதிர்பார்க்கும் ஒருத்தியால் மற்றவர்களோடு கூடிவாழுதல் சிரமம் என்றே தோன்றியது. புத்தகத்தை எடுத்த இடத்தில் நிலா திரும்ப வைக்காவிட்டால்கூட கோபம் வந்துவிடும் எனக்கு. ‘காற்சட்டை, காலணி, உள்ளாடை எல்லாவற்றையும் மூலைக்கொன்றாகச் சுழற்றியெறிந்துவிடுகிற கணவன் உனக்கு வாய்க்கட்டும்’ என்று நான் அவளுக்குச் சாபமிடுவேன்.
நிலாவைக் காதலித்தவன் வேறொருத்தியைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவுக்குப் போய்விட்டான். நிலாவிடம் அவனது புகைப்படம் ஒன்றிருந்தது. சிலவேளைகளில் அதை எடுத்துவைத்துப் பார்த்துக்கொண்டிருப்பாள். ‘வசீகரா’என்ற பாட்டுக் கேட்டால் அழுவாள். ‘சிலசமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்’ என்பது போன்ற வரிகளின்போது காதல் வயப்பட்ட கண்களோடிருப்பாள். அகன்ற நீளமான, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அந்தக் கண்களை ஒருவனால் எப்படி நிராகரிக்க முடிந்ததென்பதில் எனக்கும் வியப்புத்தான். அந்தக் கண்களை முத்தமிட வேண்டுமென்று கூட எனக்குத் தோன்றியதுண்டு. அழகிய கண்களை விடவும் வேறெதையோ அந்தப் புதியவள் கொண்டிருத்தல் கூடும். தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி நிலா நிறையப் பேசுவாள். குறிப்பாக, மறுநாள் காலை பதைத்தெழுந்து வேலைக்கு ஓடவேண்டிய தேவையில்லாத, ‘வைன்’அருந்தும் வார இறுதி நாட்களில் தற்கொலையைப் பற்றி ஒரு ஆய்வுரை சமர்ப்பிக்கும் அளவிற்கு என்னோடு பேசுவாள்.
நானும் நிலாவும் நன்றாகத் தானிருந்தோம் கணனி வாங்கும்வரை.
அறைக்குள் கணனி வந்ததன் பின் எல்லா ஒழுங்கமைவுகளும் கலைத்துப்போடப்பட்டுவிட்டதான ஒரு உணர்வு. அந்தச் சதுரப் பெட்டி இருந்த இடத்தில் இருந்துகொண்டு நேரத்தை விழுங்கியது. மரம், காற்று, புத்தகம், பாடல் எல்லாவற்றின் இடத்தையும் தான் எடுத்துக்கொண்டு அழிச்சாட்டியம் பண்ணியது. இணையத்தில் ஏதோ விளையாட்டாக எழுதப்போக யார் யாரோ வந்து ‘நன்றாக எழுதுகிறீர்கள்’என்றார்கள். வழக்கம்போல தலைக்குப்பின்னால் ஒளிவட்டம், முதுகில் சிறகு, கனவில் மிதத்தல்…. அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டன. அவையெல்லாம் முக்கியமல்ல. வலையில் மாதவனோடு பேசத் தொடங்கிய பிறகு எல்லாம் தலைகீழாயிற்று. எனக்கு ஒரு உடம்பு இருப்பதை நான் அடிக்கடி ஞாபகங்கொண்டேன். உரையாடல் இப்படித்தான் ஆரம்பமாயிற்று.
“நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்”
“நீங்களும்தான்”
அவன் எனது கவிதை வரிகளில் ஒன்றை ஞாபகமாக எடுத்து விசிறினான். மனசின் நெகிழ்ந்த பகுதிகளில் அவ்வரிகள் சென்று விழுந்தன. அவனது வலைப்பக்கம் போய் சில வரிகளை எடுத்துக்கொண்டேன். மறுபடியும் பேசியபோது மறக்காமல் ஒப்புவித்தேன். முத்தத்திற்கு முத்தம், பதிலுக்குப் பதில், பழிக்குப் பழி என்பதுபோல.
“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்…?”
அவன் அமெரிக்காவில் ஒரு மாநிலத்தின் பெயரைச்சொன்னான்.
“அப்படியா… பக்கத்தில்தான்”என்றேன்.
பிறகு எனக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு என்ன பெயர் வைப்பதென்று தெரியவில்லை. நான் அறிவானவள், தெளிவானவள், எளிதில் உணர்ச்சிவசப்படாதவள் என்ற தலைக்கனத்தின் மீது ஓங்கி ஒரே அடி! இரவு ஒன்பது மணியானதும் மனசுக்குள் ஒரு பதட்டம் தொற்றிவிடும். அவனது பெயர் வலையில் உயிர்பெற்றதும் பரவசம் உடலெங்கும் பரவும். மனசை அல்லது ஆசையை விரல்களுக்குக் கொண்டுவருவதில் இருவருக்குமே தயக்கம் இருந்தது. முதலில் புத்தகங்களைப் பற்றிப் பேசினோம். பிறகு எழுதுபவர்களைப் பற்றி, பிறகு பிறகென்ன… ‘சுற்றிச் சுற்றி சுப்பற்றை கொல்லைக்கு’வந்துதானேயாக வேண்டும். ஆதாமும் ஏவாளும் செய்த பாவத்திற்கான ஒத்திகையில் மதுவந்தியாகிய நானும் மாதவனாகிய அவனும் ஈடுபடவாரம்பித்தோம்.
“பெயர்ப் பொருத்தம் நன்றாக இருக்கிறது…”
“பெயர் மட்டுந்தானா பொருத்தம்…?”
“நாம் காதலிக்கிறோமா…?”
“காதல் போல ஒன்றுதான் மது…”
“உங்களுக்கு ஊரில் பெண் பார்ப்பதாகச் சொன்னீர்கள்”
“அம்மா அப்பாவின் விருப்பம் அவளைக் கட்டிக்கொள்ளத்தான் வேண்டும்”
“என்னோடு எதற்காகப் பேசுகிறீர்கள்...?”
“தனிமை மது… உன் தனிமையை நானும் என் தனிமையை நீயும் பேசுவதன் மூலம் நிரப்பிக்கொள்வோம்”
“பிறகு….?”
“நீ பிரியச் சொன்னால் பிரிகிறேன்.”
“என்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னால்….?”
“யோசிக்க வேண்டும்”
“பயப்படாதீர்கள்… உங்களை நான் அப்படிக் கேட்க மாட்டேன். எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை”
“உன்னோடு தொடர்ந்து பேசுவதற்கு அதுவும் ஒரு காரணம்”
“அதாவது எதிர்பார்ப்புகள் எதுவுமற்ற பெண்… இவளோடு பேசும்வரை பேசிக் களித்து முடிந்தால் உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டுவிட்டு விலகிப்போய்விடலாம் என்று நினைக்கிறீர்கள். இந்த உணர்வு என் இடத்தில் யார் இருந்தாலும் ஏற்பட்டிருக்கும் இல்லையா?”
“இல்லை என்றால் அது பொய் மது”
அவன் உண்மை சொன்னது பிடித்தது. “என்னை உண்மை பேசுவதனால் வீழ்த்துகிறாயா…?”என்ற அபத்தமான கேள்விக்கு “பெண்களை ஏன் வீழ்த்தவேண்டும்…?”என்று எதிர்க்கேள்வி கேட்டான். கணனி வழி அனுப்பிய புகைப்படத்தில் அழகாயிருந்தான். ‘பார்த்த முதல் நாளே…’போன்ற பாடல்கள் பிடிக்கத்தொடங்கின. அவனை நினைத்து கவிதை எழுதினேன். அவன் பேசிய ஆங்கில உச்சரிப்பு இனிமையாக இருந்தது. ‘நீ அழகாய் இருக்கிறாய்’என்று அடிக்கடி சொல்வது அவன் பேசாதபோதும் ஒலித்தது. காமத்தை மேவிய ஏதோவொன்று அவனிடம் ஈர்த்தது. கடவுள்,சாதி,இசை,காமம்…. துப்பரவுத் தொழிலாளர்கள் என்று எதைக் குறித்தெனினும் அவனுக்கென அபிப்பிராயங்கள் இருந்தன.
பேசப் பேச போதவில்லை என்றிருந்தது. வார்த்;தைகளால் இறுக்கிக்கொள்வது போதவில்லை. நாற்காலியின் பின்புறம் அவன் வந்து நின்று அணைப்பது போன்ற கற்பனைகள் வந்தன. அந்தக் குரலின் தாபம்,ஏக்கம்,ஆசை,ஆற்றாமை…. ‘ச்சே…!’என்றிருந்தது. ஒரே நேரத்தில் உடம்பை விரும்புவதும் வெறுப்பதுமான சாத்தியமென்றறிந்துகொண்டேன்.
“இது காதல்தான்”என்றாள் நிலா.
“கத்தரிக்காய்”என்றேன் நான்.
அப்படி மறுதலித்து சரியாக மூன்று வாரங்களின் பின் இதோ உயரமான இந்த இளைஞனின் பக்கத்தில் காரில் அமர்ந்து கன்னத்தில் சூடு தகிக்க அவனது வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன்.
விமான நிலையத்தில் மாதவன் கொடுத்த ஊட்டமான சிவப்பு ரோஜாக்கள் உயிர்ப்புடன் மடியில் கிடந்தன.
“நீ துணிச்சலான பெண்தான்”
“ஏன் உங்களுக்குப் பயமாக இருக்கிறதா…?”
“புகைப்படத்தில் பார்த்தது போலில்லை நீ”
“நீங்கள் கறுப்புத் தங்கம் போலிருக்கிறீர்கள்”
அவன் சிரித்தபோது பற்கள் அதீத வெண்மையில் பளிச்சிட்டன. தேவையற்ற சதைகள் இல்லாத உயரமான உடம்பை எனக்குப் பிடித்திருந்தது. பாசாங்குகள் அற்ற என்னை அவனுக்கும் பிடித்ததாகச் சொன்னான். சற்றைக்கு உடல் மொழியால் பேசிக்கொண்டோம். ‘இதுதான் என்னோடு பேசிய அந்த உதடா…?’என்று அவன் தொட்டுத் தொட்டு நிச்சயப்படுத்திக்கொண்டான். அவனுக்கு எல்லாமே புதுமையாக இருந்தன. அந்த அறியாமையை சிரிப்போடு வேடிக்கை பார்த்தேன். தாய்மை தாய்மை என்று சொல்கிறார்களே அதுபோல ஒரு உணர்வு இடையிடையே ஏனோ தோன்றியதை நான் வேடிக்கை பார்த்தேன். பரீட்சார்;த்தங்களின்போது என்னை நானே வேடிக்கை பார்ப்பதும் எனக்குப் பிடிக்கும்.
“நீ மரப்பசு அம்மணி போல சிலசமயம் தோன்றுகிறாய்”
“நமது சமுதாயத்தில் நிகழ்வதற்கரிய அசாத்தியங்களைக் கொண்ட அதுவொரு அபத்தக் களஞ்சியம் என்று எனது நண்பர்களில் ஒருவர் சொன்னார். நீ சொல்வதன்படி நான் உலகிலுள்ள எல்லா ஆண்களையும் காதலிக்கிறேனா?”உரத்துச் சிரித்தேன்.
“இந்தச் சிரிப்பு… துணிவு… வெளிப்படை எல்லாம் பொய் போலத் தோன்றுகிறது”
நான் தாக்கப்பட்டவளாக நிமிர்ந்தேன்.
“நீ யாரையோ பழிவாங்குவதாக நினைத்து உன்னையே அழித்துக்கொள்கிறாய்”
ஒருகணம் அவனுடைய மடியில் விழுந்து கண்ணீர் தீரும்வரை அழுதாலென்ன என்று தோன்றியது. என்னளவில் பெரும்பாலான ஆண்களின் மனம் கசடுகளால் நிறைந்ததென நினைத்துக்கொண்டிருந்தாலும், ஆணுடைய உடலுக்கு பெண்ணைத் தனக்குள் இறுக்கிக்கொள்ளக்கூடிய ஆகர்ஷ்ணம் இருப்பதாக அந்தக் கணம் தோன்றியது. நம்மைவிடப் பெரிய ஆகிருதியாக இருப்பதால் அடைக்கலம் என்று நினைக்கிறோமா என்றுகூடத் தோன்றியது.
‘ச்சே… கடைசியில் சொதப்புகிறாயடி’ என்று கண்ணாடியைப் பார்த்துச் சொல்லிக்கொண்டேன்.
அன்று மாலை அவன் என்னை அந்தக் கோப்பிக் கடைக்கு அழைத்துப்போயிருந்தான். எத்தனை நாட்கள் அந்த இடத்தை நான் கனவிலே கண்டிருக்கிறேன். முன்பொருபொழுதும் அங்கிருந்ததில்லையெனினும் பழகிய இடமாகப் பட்டது. மலையடிவாரத்தில் முகில்கள் உலவிக்கொண்டிருந்தன. மறுபுறத்தில் ஏரி கண்ணாடிக்கனவெனக் கிடந்தது. நகரத்தின் அழுக்குகள் அற்ற அந்த இடத்தில் பறவைகள் மணிக்கண் உருட்டி நடந்து திரிந்தன. காதலில் தோய்ந்து கண்மூடியிருந்தன பல இணைகள். பனி மூடிக்கொண்டிருந்த அழகிய மாலையில் அவன் என் கைகளைப் பிடித்துச் சொன்னான்.
“ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் தேவை மது”
அதை மறுத்துரைக்கும் விவாதங்களால் அந்தச் சூழலின் அழகு சிதைந்துபோய்விடுமென அஞ்சினேன்.
“ஒருவன் திருமணம் செய்துகொள்ள விரும்பக்கூடிய அத்தனை தகுதிகளும் உடைய பெண் நீ”
திடீரென எனக்குள்ளிருந்த பிடாரிக்கு ரத்தம் பார்க்கும் ஆசை கிளர்ந்தது.
ஆழம் பார்க்கவியலாதவளாக ஒரு மோனாலிசாப் புன்னகையோடு திரிபவள் என்ற கிறக்கத்தைக் கலைக்க இவன் யார் என்ற குரூரம் மேலெழுந்து பேசத்தொடங்கிற்று.
“அப்படியானால் நீங்கள் என்னைத் திருமணம் செய்துகொள்கிறீர்களா…?”
அடியென்றால் அடிதான்! அவனது சமாதானங்களை…, மறுதலிப்பதற்கான காரணங்களை…. கேட்கத் தயாராகி கண்களைப் பார்த்தேன்.
“மகிழ்ச்சியுடன்”என்றான்.
அவனது விழிகளில் பரிகாசம் இல்லை. எனக்குத்தான் அழுகை வந்தது.
சில நிமிடங்கள் ஒருவரது விரல்களை மற்றவர் ஆராய்ந்துகொண்டிருந்தோம். சிந்திக்க விரும்பாது உணர்ச்சியின் மடியில் சுருண்டு தூங்க ஆசைப்பட்டேன். கரகரத்த சற்றே நொய்மையான குரலில் ஒலிக்கும்‘குளிரும் நிலவினிலே’என்ற பாடலைக் கேட்பதன் போது நானடையும் கிளர்ச்சியை அக்கணம் உணர்ந்தேன்.
“வேண்டாம்… நீ என் ஞாபகமாய் இரு”ஒருமையில் அவனை அழைப்பது இப்போது சுலபமாக வந்தது.
“நாம் ஒருவரைப் பற்றி மற்றவர் நினைக்கும்போது உண்டாகும் அனுபவத்தை கல்யாணம் மூலம் நாம் கலைக்கவேண்டாம்”என்றேன்.
அவன் கையிலிருந்த கோப்பிக் கோப்பையின் விளிம்பைச் சுரண்டிக்கொண்டிருந்துவிட்டு ஆழ்ந்த குரலில் சொன்னான்.
“நீ சொல்வது சரி…. உன்னை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது”
குடித்துவிட்டு வந்து ‘நான் ஆம்பிளை…ஆம்பிளை’என்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் அப்பா, ‘கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லையா’என்று கேட்டு ‘இல்லை’என்ற அடுத்த கணம் திருமணப் பத்திரிகையைப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்த அண்ணா, ‘நீ பெண் வீட்டைப் பார்த்துக்கொள்’என்று கதவுக்குள் கட்டிவைக்க நினைத்தவன், உடம்பாய் மட்டும் என்னைப் பார்த்த எல்லோர் மீதான கோபமும் மனசிலிருந்து கரைந்துபோய்க்கொண்டிருந்தது போலிருந்தது.
நான் அவனிடம் கேட்டேன்.
“இந்த உலகம் இன்றைக்கு ஏன் இத்தனை அழகாயிருக்கிறது…?”
|
|
|