'உனக்காக நானும் உங்க அம்மாவும் எவ்வளவு செய்தோம். எங்க தேவைகளை எல்லாம் தியாகம் செய்து உன்னைப் படிக்க வைச்சோம். இப்போ நீ என்னன்னா, சினிமாவில போறேன். இயக்குனரா ஆகப் போறேன் அப்படின்னு நிற்கிறாய். என் நண்பர்கிட்ட பேசி, ஒரு நல்ல வேலைக்குக் கூடச் சொல்லி வைச்சிருக்கேன். அதில் சேர்ந்தால் எதிர்காலம் நல்லா இருக்கும். எங்க உழைப்புக்கு பலன் இருக்கும், நல்லா யோசிச்சுக்கோ. எங்க கனவுகளில் மண்ணள்ளிப் போட்டுடாதே!'
இது போல அடுத்தவரின் குற்றவுணர்வைத் தூண்டித் தாம் விரும்புவதை சாதித்துக் கொள்ளும் போக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ ஒவ்வொருவரிடமும் இருக்கலாம். அதையே வாழ்க்கையாக கொண்டு, தன்னைச் சார்ந்தவர்களை கட்டிப் போட்டிருக்கும் தளைகளை உடைத்துக் கொண்டு, தனக்குப் பிடித்த வாழ்க்கையில் மகிழ்ச்சி தேடிக் கொள்ள விடாமல் தடுத்து விடும் சுயநலவாதிகள் நிறைய பேர் உண்டு.
எந்த வேலையும் செய்யாமல், தனக்குக் கீழே வேலை செய்பவர்களின் உழைப்பில் தன் பெயரைப் போட்டுக் கொண்டு, பேச வேண்டிய இடத்தில் பேசி, செய்ய வேண்டிய அரசியல் செய்து, தன்னை மட்டும் முன்னேற்றிக் கொள்ளும் ஒட்டுண்ணிகள் எப்படி சாத்தியமாகிறார்கள்?
அந்த ஒட்டுண்ணிக்கு விருந்தாக தனது உழைப்பை இறைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள்? அவர்கள் மீது என்ன நெருக்கடி?
எட்டு மணி நேரம் கடனே என்று வேலை செய்து விட்டு மாலையில் எரிந்து விழும் மனநிலைதான் மிஞ்சுகிறதா? உங்களுக்குப் பிடித்த வேலையை நேரம் காலம் பாராமல் செய்து வாழ்க்கை நடத்துவதை எப்படி மறந்தீர்கள்?.
விருப்பமில்லாத வாழ்க்கையில் பிறரின் ஒப்புதல் இல்லாமல் போய் விடுமோ என்று ஒட்டிக் கொண்டிருப்பது ஏன்?. தன்னுடைய மகிழ்ச்சியை விடச் சுற்றி இருப்பவர்களின் தலையாட்டல்தான் முக்கியம் என்று ஏன் காலத்தைத் தள்ளுகிறார்கள்?.
இதற்கெல்லாம் விடை சொல்கிறது, அயன் ராண்டின் ஃபவுண்டன் ஹெட்.
புத்தகப் புழுவாக கையில் கிடைத்ததை எல்லாம் படிப்பேன் என்று தெரிந்த பிறகு, கல்லூரியில் படிக்கும் போது சந்தித்த ஒரு உறவினர், 'அப்போ உனக்கு ஃபவுண்டன் ஹெட்டின் ரோர்க் போன்ற ஆட்கள்தான் பிடிக்கும்' என்று கிண்டலாகக் கூறினார். அதைப் பிடித்துக் கொண்டு அமெரிக்கன் நூலகத்தில் அந்தப் புத்தகத்தை தேடி எடுத்துக் கொண்டேன்.
நீள நீளமான பத்திகள், உரையாடலே இல்லாத தத்துவங்கள், சின்ன நெருக்கமான எழுத்துக்கள் என்று அடர்த்தியான தோற்றம். படிப்பதற்கும் கொஞ்சம் சிரமமான ஒன்றுதான்.
முதல் முறை படிக்கும் போது பீட்டர் கீட்டிங் மீதுதான் எல்லா அனுதாபங்களும் இருந்தன. பீட்டர் கீட்டிங்குதான் உண்மை வாழ்க்கையின் பிரதிநிதி.
அவன் கல்லூரியில் முதல் மாணவனாக பட்டம் பெறுவது, நியூயார்க்கின் தலைசிறந்த கட்டிடக் கலை நிறுவனத்தின் உரிமையாளர் அவனுக்கு வேலை தருவதாகச் சொல்வது, இத்தாலி போய் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவை மறக்க முடியா விட்டாலும் அவனது அம்மாவின் திறமையான கையாளலால் வேலைக்குச் சேர்ந்து விடுவது, வேலையை விட ஆட்களின் மீது கவனம் செலுத்துவதுதான் முன்னேற்றத்துக்கு வழி என்று நிறுவன உரிமையாளர்களுக்கு சோப்பு போடுதல், வாடிக்கையாளர்கள் கேட்க விரும்புபவற்றைப் பேசுவது, முன்னேற்ற வழியில் தடையாக இருப்பவர்களை ஒதுக்கித் தள்ளுவது என்று மேலே மேலே போய் நிறுவனத்தின் உச்சத்தை அடைவது, தான் உண்மையாகக் காதலிக்கும் பெண்ணை மணம் புரியாமல் அங்கும் அம்மாவின் கையில் களிமண்ணாக தன் நிறுவன உரிமையாளரின் பெண் டொமினிக்கை திருமணம் செய்து கொள்வது, அங்கிருந்து மகிழ்ச்சியையும், வாழ்க்கையையும் முற்றிலும் தொலைத்து விடுவது என்று போலியான வாழ்க்கையின் முழுமையை அடைகிறான் பீட்டர் கீட்டிங்.
மறுபக்கம் பீட்டருக்கு ஒரு ஆண்டு இளையவனான ரோர்க். கட்டிடக் கலையைக் காதலிப்பவன். சின்ன வயதிலிருந்தே கட்டிடங்கள் உருவாகும் கலையை உணர்ந்து அனுபவித்தவன். அதன் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள கல்லூரியில் சேர்கிறான். அறிவியல், தொழில் நுட்பம் கற்பிக்கும் முதல் மூன்று ஆண்டுகள் ஒழுங்காகப் படிக்கிறான். நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கட்டிடக் கலை மேதைகளின் பாணியைக் கற்றுக் கொள்ள மறுப்பதால் கல்லூரியிலிருந்து பட்டம் பெறாமலேயேத் துரத்தப்படுகிறான்.
'அந்தக் காலத்தில் கிடைத்த பொருட்கள், அந்த கட்டிடத்தின் வாடிக்கையாளரின் தேவைக்கு குறிப்பிட்ட கட்டிடம் பொருந்தியது. இன்று கிடைக்கும் பொருட்கள், இன்றைய என்னுடைய வாடிக்கையாளரின் தேவைக்கு அதற்கும் தொடர்பே இல்லை. சும்மா பதினைந்தாம் நூற்றாண்டு கோதிக் பாணியில் என் வீடு இருக்கிறது என்று சொல்லிக் கொள்ள மட்டும் பயன்படுமே தவிர, வீட்டின் பயன்பாட்டுக்கு அதனால் ஒரு பலனும் இருக்காது. தீங்குதான் மிஞ்சும்.
'பட்டம் என்பது கல்லூரி எனக்குக் கொடுக்கும் அங்கீகாரம். அது இல்லாவிட்டாலும் என்னுடைய திறமைதான் எனக்கு அங்கீகாரம். என்னுடைய வாடிக்காயாளர்கள், பட்டம் இல்லாவிட்டாலும் திறமையைப் பார்த்து வருவார்கள். அதற்குத் தேவையானவற்றை நான் கற்றுக் கொண்டேன்' என்று பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்புகிறான். கல்லூரியை விட்டுத் துரத்தப்பட்டதற்கான வருத்தம் கூட இல்லை அவனிடம்.
தட்டுத் தடுமாறி, கிடைக்கும் வேலைகளைப் பார்த்து, தற்செயலாக போலியான தற்பெருமைக்காக வீடு கட்டாமல் தனது நிறைவுக்கு வீடு வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்த ஆஸ்டன் கெல்லரின் கண்களில் படுகிறான். அவரது வீடு முதல் வேலை. அதைப் பார்த்து சிலர் வேலைகளைக் கொடுக்கிறார்கள். எல்ஸ்வொர்த தூஹி தனது அரசியல் இயக்கத்துக்கு ரோர்க் போன்றவர்கள் அபாயம் என்று அவனை அழிக்க முயல்வதை புறங்கையால் தட்டி விட்டு கடைசியில் தனது வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறான்.
தூஹியின் வாழ்க்கையும் எளிமையானது. நாட்டில் குறையுள்ளவர்கள் இருந்தால்தானே குறை தீர்ப்பவர்களுக்கு வேலை. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்து விட்டால் மதத் தலைவர்களுக்கு சமூக சேவகர்களுக்கு என்ன மிஞ்சியிருக்கும்! கனவுகள் முறித்துப் போடப்பட்டு நிறைவில்லாமல் வெளி அடையாளங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை உருவாக்குவதுதான் அவரது கனவு. அந்தக் கூட்டத்தை வழி நடத்தும் சிந்தனையாளராக அவர் இருந்து கொள்வார். ரோர்க் என்ற தனி மனிதனின் முன்பு அவரது திட்டங்கள், அவரது ஆயிரக்கணக்கான மக்கள் ஆதரவு தூள் தூளாகிறது.
டோமினிக் என்ற பெண் ரோர்க் போன்று போலி வாழ்க்கையை விரும்பாதவாள். ஆனால் வெறுத்துப் போய் ஒதுங்க முனைகிறாள். பாதைகள் சந்தித்து ரோர்க்கின் மீது காதல் கொள்கிறாள். தன்னைத் தண்டித்துக் கொள்ள, தான் மிகவும் வெறுக்கும் வாழ்க்கையை நடத்தும் பீட்டரை மணந்து கொள்கிறாள். அவனது சுயநலத்துக்காக பணக்காரர் வைனாண்டின் துணையாக விலை போகிறாள். அது இன்னும் மோசமான தண்டனையாக இருக்கும் என்று நினைத்தால் கேல் வைனாண்டு ஆச்சரியப்படுத்தும் படியாக வலுவான கொள்கைளின் படி வாழ்கிறார்.
குறிப்பிட்ட நிபந்தனைகளின் பேரில் ரோர்க், கீட்டிங்கால் வேறு யாராலும் முடியாத வடிவமைப்பு சவாலை ஏற்றுக் கொண்டு குறைந்த விலையில் தரமான வீடு கட்டும் அமைப்பு உருவாக்கி அதில் பீட்டர் தனது பெயரை போட்டுக் கொள்ள அனுமதிக்கிறான். நிபந்தனை, அதன் வடிவமைப்பை யாரும் மாற்றக் கூடாது. போகப் போக தனது முக்கியத்துவத்தை காட்ட விரும்பும் சக கட்டிடக் கலைஞர்களின் தொந்தரவால் வடிவமைப்பு மாறியே விடுகிறது.
டொமினிக்கின் உதவியுடன் பாதி கட்டப்பட்ட கட்டிங்களுக்கு வெடி வைத்து நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான் ரோர்க். 'அந்தத் திட்டம் என்னுடைய படைப்பு. அதை உருவாக்காமலேயே இருந்திருந்தால் வேறு யாருக்கும் அது கிடைத்திருக்காது. அதை உருவாக்கி உங்களுக்கு நான் கொடுத்த போது செய்து கொண்ட ஒப்பந்தத்தை நீங்கள் மீறினால் என்னுடைய படைப்பை அழித்து விட எனக்கு உரிமை இருக்கிறது.'
'ஒவ்வொரு மனிதனும் தனது விருப்பப்படி மட்டும் செயல்பட உரிமை இருக்கிறது. யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இதுதான் என்னை செலுத்தும் தத்துவம்.'
'இப்படி வாழும் மனிதர்களால்தான் உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் எல்லோரும் தம்மை ஆட்டுவித்து பலன் அனுபவத்துக் கொண்டிருப்பவர்களை உதறி விட்டுப் போய் விட்டால் என்ன ஆகும்' என்பதுதான், இன்னும் படிக்க கடினமான அட்லஸ் ஷ்ரக்ட்.
பொன்ஸின் பதிவில் வந்த ஒரு பின்னூட்டம் போல, மிதமிஞ்சிய மகிழ்ச்சியிலும், சோர்வடையச் செய்ய சூழலிலும் ஒரு சமப்படுத்தலைக் கொடுக்கக் கூடியது ரோர்க், பீட்டர் கீட்டிங் வாழ்க்கைகள். கதையாகப் படிக்காமல், தேன் குடிப்பது போல துளித் துளியாக நாக்கைச் சுழற்றிச் சுழற்றிச் சுவைத்துப் பார்த்தால் பிடிபட்டு விடலாம். ஒன்று அதன் சுவைக்கு அடிமையாகி விடுவோம் அல்லது இது என்ன அசட்டுத் தித்திப்பு என்று ஒதுக்கி விடுவோம். துணிவிருந்தால் தம் பிடித்து படிக்க முயற்சி செய்யலாம்.
பொன்ஸின் விமரிசனம்
நூல் கிடைக்கும் சுட்டி
ஆசிரியரைப் பற்றி
http://bookimpact.blogspot.com/2007/01/fountain-head-ayn-rand.html
|