இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தொகுப்பாளரின் மேசையிலிருந்து Print E-mail
ஆசிரியர்குழு   

இந்தப் பூங்கா இதழுக்கு இரண்டு சிறப்புக் கட்டுரைகளோடு நம்மைக் கௌரவித்திருப்பது சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள். தமிழ் இலக்கிய வட்டத்திலும், கிரிக்கெட் களத்திலும் பரிச்சயமான குரல் இவருடையது. இவரது இரண்டு கட்டுரைகளும் இருவேறு பொருட்கள் பற்றி எழுதப்பட்டிருக்கின்றபோதிலும் இரண்டிலும் ஆதங்க-எதிர்பார்ப்பு மனோநிலை வெளிப்பட்டிருக்கிறது. ஒன்று தமிழ் உணர்வாளர்களினது, இன்னொன்று கிரிக்கெட் ரசிகர்களினது. பிளவுகள் தவிர்க்கமுடியாது போயிருக்கும் தமிழக அரசியற்சூழலில் சுப.வீரபாண்டியனின் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தொடக்கத்தினால் ஆதங்கப்பட்டுப் பின்னர் இதனால் நன்மை விளைந்தால் சரிதான் என்று நம்மிடையே ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு ஒன்று. இந்திய அணியின் துவண்டிருக்கும் கூறுகளைச் சொல்லி ஆதங்கப்படுத்திவிட்டுச் சில வெற்றிகளையும் சொல்லித் தூண்டியிருக்கும் எதிர்பார்ப்பு மற்றொன்று. கனவுகள் மெய்ப்படுமா?

போர்நிறுத்த ஒப்பந்த மீறல், தமிழர்களை வலிந்து குடிபெயர்த்தல், சிங்களக் காலனியாக்கம், பிள்ளைக் கடத்தல், பத்திரிகையாளர்க் குரல்வளை நெறிப்பு, அத்தியாவசியப் பொருட்களுக்குத் தடையிடல், நாளாந்தக் கொலைகள், சர்வதேச அரசுகளிடம் பொய்முகங்காட்டல், உயர்பாதுகாப்பு வளையங்களின்பேரில் மக்களை மிரட்டுதல், கட்சித் தாவல்களை ஆதரித்து அரசியற்சூழலைச் சிக்கலாக்குதல் போன்ற எண்ணிலாத பிறழ்வுகளைச் சிங்கள அரசாங்கம் மேற்கொண்டு இலங்கையின் நிலையை மோசமாக்கி வருகின்றது. இந்த வழமை அவலங்கள், அவை குறித்து எழுதுவோரையும், விமர்சிப்போரையும் சோர்வடையச் செய்வதால் அவை வெறும் செய்தியளவிலேயே தங்கிவிடுவதைப் பதிவுகளில் பார்க்கமுடிகிறது. ஆனால், வரலாற்றில் பதியப்பெறும் அவசியம் கருதி இத்தகைய செய்திகளோடு, அந்நிகழ்வுகளின் பின்ணணி, விளைவுகள் ஆகியன தொடர்ந்து பதியப் பெறுதல் அவசியம். ஈராக்கியப் போரின்போது எழுதப்பட்ட ஆங்கில வலைப்பதிவுகளைப் போல, களநிலைகளைத் தொடர்ந்து சொல்லும் இலங்கைப் பதிவுகள் அதிகரிக்க வேண்டியது இன்றைய நிலையில் தேவையாகிறது. இவ்விதழில் அற்புதன், சோமி, ஈழக்கிறுக்கன், உணர்வுகள், திரு, ஆகியோரது ஈழம் குறித்த பதிவுகள் இடம்பெறுகின்றன. பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களது நூலான "திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு" குறித்த அறிமுகத்தை திராவிடத் தமிழர்களின் பதிவு முன்வைக்கிறது. பத்மநாப ஐயரின் மின்னூலாக்கலில் இது நூலகம் இணையத்தளத்தில் http://www.noolaham.net/library/books/01/59/59.htm தரவிறக்கக் கிடைக்கிறது.

தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை 1700ஐத் தொடவிருக்கும் நிலையில் மொத்தப் பதிவுகளில் மிகக் குறைந்த பதிவுகளே துறை சார்ந்த பதிவுகளாக வெளிவருகின்றன. பிறமொழி வலைப்பதிவுகளில் தொழில் நுட்பம், அறிவியல் குறித்த பதிவுகள் பெருகிவரும் வேளையில் தமிழ் வலைப்பதிவர்கள் தாம் சார்ந்திருக்கும் துறையினைப் பற்றிய தகவல்களை அதிகம் பகிர்ந்துகொள்வது நெடுங்கால நோக்கில் நன்மையைத் தருமெனப் பூங்கா நம்புகிறது. வலைப்பதிவுகளில் நிகழும் இந்த மாற்றம், தமிழ் நூற்பதிப்புலகிலும் வரும் காலங்களில் பிரதிபலிக்கக்கூடும். சென்னைப் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய பதிவில் பத்ரி குறிப்பிட்டுள்ள துறைசார்ந்த நூல்களின் போதாமையை வலைப்பதிவுகளிலிருந்து எடுத்து நிரவும் நிலையை ஏற்படுத்த வலைப்பதிவர்கள் முந்திக் கொள்ள வேண்டும்! இவ்விதழில் அறிவியற் பதிவுகளைத் தந்திருக்கும் மோகன்தாஸ், வெங்கட், மாசிலா, சிரிப்பு ஆகியோருக்கு நன்றி.

எப்பெரு நாடாயினும் விளிம்புநிலை மக்களின் வாழ்நிலையென்பது புறக்கணிக்கப்படுவதாகவே இருந்து வருகிறது. இம்மக்களைப் பற்றிய அக்கறையில் பிரான்சில் வாழ்ந்து மறைந்திருக்கும் அப்பே பியெரைப் பற்றிய யோகன் பாரிசின் பதிவு முக்கியமானதாகும்.

இணையத்தில் இன்பத் தமிழ் என்ற வாராந்திர ஒலிபரப்பினை ஐரோப்பிய வானொலிக்காகத் தயாரித்துவரும் மலைநாடன் அக்கோர்வைகளை நம்மோடு பகிர்ந்துகொள்ளச் சம்மதித்திருக்கிறார். அமைதியான குரலும், பின்னிழையும் இசையும் இவ்வொலிக் கோர்வையினைச் சிறப்புற அமைத்திருக்கின்றன. இந்நிகழ்ச்சியில் வரும் வாரங்களில் தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றியும் பேசவுள்ளதையடுத்து வலைப்பதிவர்களின் சார்பில் பூங்கா அவருக்கு நன்றி தெரிவிக்கிறது. இவ்வொலிக் கோர்வையுடன் கேட்டு மகிழ செல்லி பதிந்திருக்கும் 'காணி நிலம் வேண்டும்' பாடலும் சேர்க்கப்பட்டிருக்கின்றது.


காந்தியாரின் அரசியலும் வாழ்வும் பல கோணங்களிலிருந்தும் மீள்பார்வை பார்க்கப்பட்டு வருகின்றன. இப்பூங்காவில் அவரது வருணாசிரமம் குறித்த கருத்துக்களைச் சுட்டியுள்ளார் முத்துகுமரன். தமிழக முதல்வர்-சாயிபாபா குறித்த பல்வகையான பதிவுகளைச் சென்ற வாரம் கண்டிருந்தோம். அவற்றிலிருந்து ஆதிரை, நிர்மல் ஆகியோரது பதிவுகள் இவ்விதழில் இடம்பெறுகின்றன. ஷில்பா ஷெட்டியின் சர்ச்சை தொடர்பான சிரிப்பு, அற்புதன் ஆகியோரது பதிவுகளும், அய்யா வழி மதத்தினைப் பற்றிய திரு மற்றும் அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரது பதிவுகளும் பூங்காவை அணி செய்கின்றன. இவற்றுடன்  ஜடாயுவின் திருக்குறள் குறித்த நூற்குறிப்பும், எஸ்பி விஆர் சுப்பையாவின் கண்ணதாசனின் இயேசு காவியம் பற்றிய பதிவும், சேவியரின் ஆகாயத்துக்கு அடுத்த வீடு பற்றிய விமர்சனமும் இடம்பெறுகின்றன.

இத்தகு பல குரல்களுக்கும் மத்தியில் அமைதியான ஓடைகளைப் போன்ற பதிவுகளாக வாழ்வின் பல நிலைகளைத் தொட்டுச் செல்லும் அழுத்தமான கனவுகளை மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் நிவேதாவின் பதிவும், எம்எஸ்வி முத்துவின் Gathering the water, லட்சுமியின் ZOZO மற்றும் இது புது மொழி போன்ற பதிவுகளும் இவ்விதழினூடே மென்மையாகப் பயணிக்கின்றன.

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)