இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
காணக்கிடைக்கும் தெய்வங்கள் Print E-mail
அருள் குமார்   

 வாழ்வில் அலுக்கவே அலுக்காத விஷயங்கள் என்று ஒவ்வொருவருக்கும்  சின்னதாகவாவது  ஒரு பட்டியல் இருக்கும். என்னுடைய அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது குழந்தைகளும் அவர்களின் குறும்புகளும்!

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள்.  நான் புரிந்துகொண்டவரை கடவுள் என்பது ஒரு நிலை. கண்ணில் படுகின்ற எதையும், அவற்றின் மீதான எந்த கற்பிதங்களும் அற்று, அவற்றை அவைகளாகவே பார்க்கும் பாக்கியம் அந்த நிலையில் மட்டுமே வாய்க்கும். அந்த நிலையில் இருப்பவர்கள் குழந்தைகள் மட்டுமே. வாழ்வின் எல்லைகளை உணர்ந்து அடங்கிய முதிர்ந்த வயதோரையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்!

மாலை வேளைகளில் எங்கள் அலுவலகத்தின் எதிர் வரிசையிலிருக்கும் ஒரு வீட்டின் வாசலில் குழந்தையாய்க் கனிந்துவிட்ட ஒரு முதியவர் சில மாதங்களேயான ஒரு கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருப்பார்.  நான் என்னை மறந்து பார்க்கும் காட்சி அது.  இருவரின் முகங்களுக்கும் அதிகபட்சம் ஆறு வித்தியாசங்கள் கூட சொல்ல முடியாது!  வேறு யாருக்கும் புரியாத, அவர்களுக்கு மட்டுமேயான ஒரு மொழியில் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். உள்ளம் மலர்ந்து சிரிக்கும் அந்த முகங்களைப் பார்க்கக் கிடைக்க  நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்வின் இரண்டு எதிரெதிர் விளிம்புகளும் ஒன்றானவையே என்று சொல்லாமல் சொல்லும் காட்சியது. அப்பப்பா... இடையில்தான் எவ்வளவு பிரச்சனைகள், அனுபவங்கள். குழந்தைப்பருவத்தின் உன்னதங்கள் உணர்ந்து மீண்டும் அப்படி மாற நம் வாழ்நாள் முழுதும் தேவையாயிருக்கிறது நமக்கு!

நான் எனது குழந்தைப்பருவத்தைக் கடந்துகொண்டிருந்த நாட்களிலேயே  குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைத்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும்  விடுமுறையில் பாட்டி வீட்டிற்குச் சென்றால் மாமாவின் குழந்தை, சித்தியின் குழந்தை என்று மாற்றி மாற்றி கைக்குழந்தைகள் இருந்துகொண்டேயிருக்கும். அவர்களை விருப்பத்துடன் பார்த்துக்கொள்பவன் நான் என்பதால் அவர்களின் அம்மாக்கள் என்னிடம் விட்டுவிட்டு அவர்கள் வேலையை நிம்மதியாய் பார்ப்பார்கள். அக்காவின் குழந்தைகள் தங்கையின் குழந்தைகள் என்று இன்னமும் அது தொடர்கிறது. கூட்டுக் குடும்பமென்பதால் கைக்குழ்ந்தையில் இருந்து பள்ளி இறுதியாண்டு வரை  எப்போதும் எல்லா வயதிலும் குழந்தைகளுண்டு எங்கள் வீட்டில்.

நாம் உருவாக்கி வைத்திருக்கும் உலகின் கறைகள் படிந்துவிடாத ஓர் இயல்பான உலகின் தரிசனம் குழந்தைகளுடன் விளையாடும்போது கிடைத்துவிடுகிறது. அந்த உலகின் பொய்களும் கோபங்களும் கூட மிக அழகானவையாகவே இருக்கின்றன. மொழிகளற்றுப் பேசவும் சிரிக்கவும் அங்கே வாய்க்கிறது. மிக முக்கியமாக அங்கு ஃபார்மாலிட்டி என்கிற ஒரு விஷயமே இல்லை! சக மனிதனிடத்தில் சாதி, மதம், அந்தஸ்து என்று எந்த பேதமும் இல்லை!!  உள்ளம் உணர்ந்ததை உடற்கூறுகள் சொல்லும் சுதந்திரம் - அந்த வயதின் வரம்.

நாம் ஒவ்வொருவரும்  நமக்கே தெரியாமல் சொல்லவொண்ணா துயரத்துடன் கடந்துவருகிற நம் வாழ்வின் நாட்கள் எவை தெரியுமா?  நம் குழந்தைப் பருவத்தைக் கடக்கிற நாட்கள் தான்.  அதிலும் குறிப்பாக, ஓஷோ சொல்வது போல் பள்ளிக்கு கொண்டுவிடப்படுகிற நாட்கள்!  அங்கேதான் இயற்கை அளித்த நமக்கேயான நம் பாதையிலிருந்து விலகி முற்றிலும் கற்பிதங்களினாலான ஒரு பாதையில் செல்ல நாம் வற்புறுத்தப்படுகிறோம்.  நமக்கு இயல்பேயில்லாத கட்டுப்பாடுகளுக்கும், விதிமுறைகளுக்கும் நாம் கட்டாயப் படுத்தப்படுகிறோம்.  எத்தனை அழுதாலும் புரண்டாலும் இத்தனை மணிவரை இந்த இடத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பணிக்கப் படுகிறோம்.  நினைத்துப்பார்க்கமுடியாத வன்முறை நம்மீது பிரயோகிக்கப்படுகிற நாட்கள் அவை.

அப்புறம் நம் வாழ்வில் எதுவுமே நமதில்லை! சமூகம் இழுக்கும் எல்லா இழுப்புகளுக்கும் முடிந்தவரை வளைந்து கொடுப்பதும், முடியாதவற்றை எதிர்ப்பதால் வெறுக்கப்படுவதும் மாறி மாறி நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் வாழ்வில், சரியாகவோ அல்லது தவறாகவோ கற்ற பாடங்களை முன்னிருத்தி  குழந்தைகளின் தனித்தன்மைகள் புறக்கணிப்படுவது இன்னொரு பெரும் சோகம்!

எண்ணற்ற விதிமுறைகளும் கற்பிதங்களும் தந்த சிக்கல்கள் நிறைந்த நம் வாழ்வில், சில மணித்துளிகளாவது இயல்பான வாழ்க்கை வாழ முடிகிறதென்றால், அது நாமும் குழந்தையாய் மாறி முழந்தைகளுடன் விளையாடும்போது மட்டும் தான்! யோசித்துப்பார்த்தால் ஒரு உண்மை மிக ஆச்சர்யமாய் இருக்கிறது. இன்றைக்கு இருக்கிற நல்லவன், கெட்டவன், ஞானி, அரசியல்வாதி, தீவிரவாதி, etc., etc., எல்லோரின் குழந்தைப்பருவத்திலும் அவர்களின் எண்ணமும் மனசும் ஒன்றுபோலவேதானே இருந்திருக்கும்!  இயற்கை தந்த இனிய வாழ்வை இடையில் வந்து மாற்றிப்போட்டது யார்?

 

 

http://arul76.blogspot.com/2006/09/blog-post_21.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)