ஆண்டுக்கொருமுறை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடாத்தும் எழுத்தாளர்விழா இம்முறை மெல்பேணில் நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை - 27.01.2007 அன்று காலை பத்துமணியளவில் இவ்விழா தொடங்கியது. இவ்விழாவில் ஈழத்தின் மூத்த படைப்பாளிகள் மூவர் சிறப்பிக்கப்பட்டனர். நாட்டுக்கூத்தொன்றும் இடம்பெற்றது.
எஸ்.பொ, முருகபூபதி, கலைவளன் சிசு. நாகேந்திரன், காவலூர் ராசதுரை, 'சின்னமாமியே' நித்தி கனகரத்தினம், அருண் விஜயராணி, இளைய பத்மநாதன் என்று ஓரளவு பிரபலமானவர்கள் கலந்து கொண்ட விழா இது.
திரு.லெ.முருகபூபதி அவர்களின் தலைமையில் தொடங்கிய இவ்விழாவில் முதலாவதாக கருத்தமர்வு ஒன்று இடம்பெற்றது.
இதில், பவள விழாக்காணும் எழுத்தாளர் எஸ.பொ 'தமிழில் சிறுகதை - தோற்றம் - வளர்ச்சி - மாற்றம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். உரையின் முடிவில் கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டது. என்வரையில் அவ்வெழுத்தாளர் விழாவின் முக்கிய அங்கமாக இவ்வுரை இருந்தது. எஸ.பொ மொத்தமாக நான்குமுறை ஒலிவாங்கியடியில் வந்தார். ஒலிப்பதிவையும் இணைக்க நினைப்பதால் அவைபற்றித் தனியப்பதிவு போடலாமென்று நினைக்கிறேன். ஒரிடத்தில், தனக்கேயுரிய பாணியில் "சிறுகதை இலக்கியம் மீளவும் உயிர் பெறுவது புலம்பெயர்ந்தோரிடமிருந்து தான்" என்று சொல்லிவைத்தார்.
அதே கருத்தரங்கில் திருமதி பாமினி பிரதீப், கலாநிதி சந்திரலேகா வாமதேவா (வலைப்பதிந்து வந்த சந்திரலேகா இவரா?) ஆகியோர் 'எழுத்தாளர் விழாக்களில் சமூகப்பங்களிப்பு' என்ற தலைப்பில் கருத்தாடினர். நான்கைந்து வருடங்களின் முன்பு நடந்த விழாவில் அரங்கு நிறைந்த மக்கள் வந்ததாகவும் இப்போது மிகமிகக் குறைந்துவி்ட்டதையும் மையப்படுத்தியே விவாதம் இருந்தது. (அன்றைய காலை அமர்வில் வந்தவர்கள் அனைவரையும் சேர்த்து மொத்தம் அறுபது பேர் மட்டுமே. விழாவுடன் தொடர்பில்லாத எம்மைப்போல் வெளியாட்கள் ஒரு பதினைந்து பேர்தான் வரும்.)
'தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் சிறுவர் நாடகம்' என்ற தலைப்பில் திரு. அ.சந்திரகாசன் அவர்கள் உரையாற்றினார்.
பின் 'சின்ன மாமியே புகழ்' நித்தி கனகரத்தினம் 'தமிழர் உணவு நாகரிகம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மரக்கறி, கீரை, கிழங்கு வகைகளுக்கு உலகப்பயன்பாட்டுக்கென தமிழின் வேரிலிருந்தே சொற்கள் பெறப்பட்டன என்பதே அவரின் உரையுடைய அடிப்படை. வல்லாரை, பொன்னாங்காணி, கத்திரி, பசளி, நாரத்தங்காய், இஞ்சி என்பவற்றுக்கான வேற்றுமொழிப் பெயர்கள் எப்படி தமிழில் இருந்து போயின என்ற தொனியில் கதைத்துக்கொண்டிருந்தார். இந்த வரலாறுகளை மூடிமறைத்துக்கொண்டிருக்கும் தாவரவியல் ஆய்வாளரை அடிக்கடி கண்டித்துக்கொண்டும், தான் எப்படி யார் யாருடன் இது தொடர்பாக சண்டைபிடித்தேன் என்பதையும் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். இன்னும் நீளமான பெயர்ப்பட்டியலொன்றை வைத்திருந்தார், ஆனால் மத்தியானச் சாப்பாட்டு நேரமென்பதால் அவரை விரைவில் முடிக்கச்சொல்லி விட்டார்கள்.
அன்றைய விழாவில் அவுஸ்திரேலியக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பொன்று 'வானவில்' என்ற பேரில் வெளியானது. அதில் நித்தி கனகரத்தினம் அவர்களின் கவிதையொன்றும் இருந்ததைப் பார்த்தேன். 'அம்மாவின் பழஞ்சோற்றுக் குழையலும் பூவரசங்குழையும்' என்ற தலைப்பில் அது இருந்தது. கவிதை தொடங்குகிறது இப்படி:
கீரை கிழங்கு மரவள்ளி கத்திரிக்காய் பால்கறியும் பொரித்த முருங்கைக்காய் ..................................

[நித்தி கனகரத்தினம் பேசுகிறார். பின்னாலிருப்பவர் மருத்துவக் கலாநிதி வேலுப்பிள்ளை கருணாகரன் என்று நினைக்கிறேன்.]
பின் மதிய உணவு. விழா ஏற்பாட்டாளரால் அனைவருக்கும் இலவச மதிய உணவு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. பாயாசமும் இருந்தது.
அடுத்ததாக கவிதைச் சமர் இடம்பெற்றது.
'ஆணாதிக்கமா? அதற்காய் பெண்ணாதிக்கமா??
பெண்ணடிமைத்தனமா? அதனால் ஆணாதிக்கமா??'
என்ற தலைப்பில் மனோ ஜெகேந்திரன், செளந்தரி சிவானந்தன் என்ற பெண்களிருவர் மாறிமாறி கவிதை வாசித்தனர்.
பின்னர் நூல் விமர்சன அரங்கு இடம்பெற்றது.
தலைமை: திருமதி ஜெயந்தி விநோதன்
1.துவிதம் (கவிதை) - ஆழியாள்
விமர்சனம்: திரு. குலம் சண்முகம்
2.ஈடு (நாடகம்) - எஸ்.பொ, அ.சந்திரகாசன்
விமர்சனம்: திரு.எஸ.சூசைராஜா
3. நினைவுக் கோலங்கள் (சிறுகதை) - லெ.முருகபூபதி
விமர்சனம்: செல்வி.ஜெயசக்தி பத்மநாதன்
4.கொஞ்சும் தமிழ் (சிறுவர் இலக்கியம்) -அம்பி
விமர்சனம்: திரு.எட்வர்ட் பிலிப் மரியதாசன்
5.பனிக்குள் நெருப்பு (விமர்சனம்) - எஸ்.பொ
விமர்சனம்: திரு.செ.சிவசம்பு
6.அம்மா என்றொரு சொந்தம் (சிறுகதை) - உஷா ஜவகர்
விமர்சனம்: திரு.கே.எஸ்.சுதாகரன்
7.சிறைப்பட்டிருத்தல் (போட்டிக் கதைத்தொகுப்பு)
விமர்சனம்: ஆவூரான்
8.மொழிபெயர்க்கப்பட்ட மெளனம் (நேர்காணல்) - லதா
விமர்சனம்: திருமதி உதயா சிங்கராசா
9.ஞானம் (சஞ்சிகை)
விமர்சனம்: திரு.எஸ். கிருஷ்ணமூர்த்தி.
விமர்சனங்களுக்கான பதிலுரையை எஸ்.பொ வும் முருகபூபதியும் நிகழ்த்தினர். 'கொஞ்சும் தமிழ்' என்ற சிறுவர் இலக்கிய நூலை எழுதிய கவிஞர் அம்பி அவர்கள் இறுதிநேரத்தில் சுகவீனமுற்றதால் விழாவில் கலந்துகொள்வில்லை. எனவே அந்நூல் உருவாக்கத்தில் கூடநின்று பணியாற்றியவர் என்ற முறையில் எஸ.பொ.வே பதிலுரைத்தார். ஆறுஇலட்சம் இந்திய ரூபாய்கள் செலவழித்து இப்புத்தகம் அச்சிடப்பட்டதாகச் சொன்னார். உண்மையில் மிகமிகத் தரமான வடிவத்தில் புத்தகம் வந்துள்ளது. கண்ணைக்கவரும் நிறப்படங்களும், ஓவியங்களும் உள்ளன.
இத்துடன் பகல் விழா நிறைவு பெற்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரவு நிகழ்ச்சிகள் மாலை ஏழு மணிக்குத் தொடங்கின.
முதலில் ஒரு கவியரங்கம். பாடும்மீன் சு.சிறிகந்தராசா தலைமையில் சில கவிஞர்கள் கவிமழை பொழிந்தனர் (கவியரங்கத் தாக்கம்;-)).
'தங்கத் தாத்தா' சோமசுந்தரப் புலவரின் பேரனார் சோ.இளமுருகனார் பாரதி அவர்களும் இதிற் கலந்துகொண்டார்.
அதைத்தொடர்ந்து அன்றை விழாவின் முக்கிய பகுதியான படைப்பாளிகளுக்கான பாராட்டு நிகழ்வு தொடங்கியது. விருதுபெறும் மூவரில் எஸ.பொ, காவலூர் இராசதுரை ஆகியோர் 75 ஆவது வயதில் பவள விழா காணுகின்றனர். மற்றவரான சிசு.நாகேந்திரன் ('அந்தக் காலத்து யாழ்ப்பாணம்' எழுதியவர். இந்நூல் பற்றி சந்திரவதனா ஒரு பதிவு எழுதியிருந்தார்). 85 வயதை நிறைவு செய்கிறார். எனக்கென்றால் மூவரிலும் சிசு.நாகேந்திரன் அவர்கள்தான் துடிப்பாகத் தெரிந்தார்.

[எஸ்.பொவுக்குச் சான்றிதழ் கொடுப்பவர் சந்திரலேகா வாமதேவா.
பின்னால் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக:
கலைவளன் சிசு.நாகேந்திரன், சட்டத்தரணி ரவீந்திரன், ஓவியர் ஞானம்.]
விருது பெறும் மூவரில் இருவர் மட்டுமே மேடையில் இருந்தனர். அன்று காலையில் ஓடியாடித் திரிந்த காவலூர் இராசதுரையை மேடையில் காணவில்லை. இடையில் முருகபூபதி அறிவித்தார், சற்றுமுன்னர்தான் திடீரென்று உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று.
மற்ற இருவருக்கும் விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டன. அவர்களின் கலைச்சேவைகளைக் குறிப்பிட்டு தனித்தனி மடல்கள் வாசிக்கப்பட்டன.
(இம்மூவரைப்பற்றியும் விழாக்குழுவினர் வெளியிட்ட சேவைக் குறிப்புக்களை நேரம் கிடைத்தால் தட்டச்சி வெளியிடுகிறேன். இளைய தலைமுறையினர் பலர் இவர்கள் பற்றி அறிய உதவும்.)
அடுத்ததாக, வானவில் கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 31 கவிஞர்களின் கவிதைகள் வெளியிடப்பட்டன. இவர்களில் இருவர் அமரராகி விட்டனர். முன்பு எங்களோடு வலைப்பதிந்த தெய்வீகனின் கவிதையொன்றும் இடம்பெற்றுள்ளது.
இறுதி நிகழ்வாக அண்ணாவியார் இளைய பத்மநாதனின் நெறியாள்கையில் சிட்னி கலைஞர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'யாழ்பாடி' நாட்டுக்கூத்து இடம்பெற்றது.

['யாழ்பாடி' நாட்டுக்கூத்தின் இறுதியில் மங்களம் பாடும் நேரம்.
நடுவில் தாடியுடன் யாழ்பாடி பாத்திர நடிகனாக நிற்பவர்தான் அண்ணாவியார் இளையபத்மநாதன்.]
பின்னர் அருண் விஜயராணி அவர்களின் நன்றியுரையோடு விழா நிறைவுற்றது.
காலை அமர்வைவிட இரவு அமர்வுக்கு அதிகம் பேர் வந்திருந்தனர். வேலை காரணமா? அல்லது கூத்துப்பார்த்தலா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விழாப்படங்கள் சிலவற்றை எனது வசந்தம் வலைப்பதிவில் இடுகிறேன்.
http://vasanthanin.blogspot.com/2007/01/2007.html
|