இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
அகதிகள் முகாம்..பண்பாட்டு மாற்றங்கள் Print E-mail
ஆழியூரான்   

உயர்ந்து பறக்கிறது விஜயகாந்த் கட்சிக் கொடி. ''ஏ...போட்டோ புடிக்காங்க..” என்று நெல்லைத் தமிழில் வார்த்தைகளை சிதறவிட்டோடுகின்றனர் சிறுவர்கள். கலாச்சார, பண்பாட்டு மாற்றங்களை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கும் ஒரு இனத்தின் சாட்சியாக விரிகிறது தாழையூத்து அகதிகள் முகாம்.




திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் சங்கர் சிமெண்ட் தொழிற்சாலைக்குப் பின்புறமாக இருக்கிறது இந்த முகாம். சிமெண்ட் நுண்துகள்கள் விரவிக்கிடக்கிற முகாமில் யாவரின் முகத்திலும் வறட்சியான சிரிப்பையே காண முடிகிறது. அண்மையில் அயலகத்திலிருந்து வந்திருந்த திரு, தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த வரவணையானோடு நானும் இணைந்து தாழையூத்து அகதிகள் முகாமிற்குப் போயிருந்தோம்.

கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட முகாம் இது. தன் மண்ணையும், மக்களையும் ஈழத்தின் ஈர மண்ணை விட்டுவிட்டு,  உயிர் பிழைக்க புலம் பெயர்ந்து வந்தவர்கள் இவர்கள். கணவன் இங்கு... மனைவி அங்கு... பிள்ளை இங்கு... தாய் அங்கு.. என்று காலம் இவர்களை கூறு போட்டுவிட்டது. கேட்டபொழுதில் கதைப்பதற்கும், பகிர்வதற்கும் மனதெங்கும் ஆயிரமாயிரம் கதைகளை தேக்கிவைத்திருக்கின்றனர்.

நூற்றுக்கணக்கானவர்கள் வசிக்கும் இந்த முகாமிற்கு அரசு அமைத்து தந்திருக்கும் அடிப்படை வசதிகள் எவையும் போதுமானவையாக இல்லை. இந்த குறைகள் பற்றிய விடயங்கத் தன் பார்வையில் சிறப்பாகவே பதிவு செய்திருக்கிறார் திரு. என் பார்வையில் இந்த 16 ஆண்டுகளில் இவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்படுத்தப்பட்டிருக்கும் கலாச்சார பண்பாட்டு மாற்றங்களை இங்கு பதிவிட விரும்புகிறேன். அது அவசியமானது என்றும் கருதுகிறேன்.

மொழி:
முகாமில் வசிக்கும் பெரியவர்களின் மொழியில் கூட குறிப்பிடத்தகுந்த மாற்றம் தெரிகிறது. உரையாடலில் முழுக்கவே ஈழத்தமிழ் வருவதில்லை. பாதிக்குப்பாதி தமிழக தமிழையே கதைக்கின்றனர். எங்களுடன் உரையாடுவதற்காக மெனக்கெட்டு அவ்வாறு பேசுகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அதைக் கேட்டபோது, தங்களின் பேச்சுமொழியில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர். சிறுவர்கள், சிறுவயது முதலே இங்குள்ள பள்ளியில்தான் படிக்கின்றனர் என்பதால், நெல்லைத் தமிழை பிரதானமாய் பேசுகின்றனர். வீட்டிற்கு வரும்போது மட்டும் ஈழத்தமிழ் வார்த்தைகளோடு கலந்த தமிழுக்கு தாவிவிடுகின்றனர். ஒரே மொழியின் இரட்டைத் தன்மையை ஒரே நேரத்தில் உள் வாங்குவது சிறுவர்களுக்குள் என்ன விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது ஆய்வுக்குரியது. நாளை தங்களின் சொந்த மண்ணுக்குப் போக வேண்டிய நிலை வந்தால் இந்த சிறுவர்கள், ஈழத்தில் எதிர்கொள்ள வேண்டிய பேச்சுமொழி சிக்கல்கள் கவனிக்க வேண்டியவை.

உணவு:
முகாமில் இருக்கும் பெரும்பான்மையோர் மீனவர்கள். இலங்கையில் மீன் என்பது இவர்களின் அன்றாட உணவு. அதை கொணர்வதற்கும், சமைப்பதற்கும், உண்பதற்குமான எந்த சிரமமும் ஈழத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இங்கு நிலைமை வேறு. மீன் என்பது சராசரி உணவல்ல. அதிக விலைகொடுத்து, (சராசரியாக ஒரு கிலோ 50 முதல், 100 ரூபாய்) வாங்கி உண்ண வேண்டிய பொருள். முகாமில் கொடுக்கும் மாதாந்திர உதவி தொகையையும், கூலி வேலைக்குப் போனால் கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் வைத்துக்கொண்டு எப்படி மீன் வாங்குவது..? இதனால் தங்களின் உணவு பழக்கத்தையே மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைமை. இங்கு மட்டுமல்ல.. அகதிகள் முகாமில் அடைப்பட்டு கிடக்கும் அனைத்து மீனவ அகதிகளின் நிலையும் இதுதான். அப்படியே ஒரு சிலர் என்றைக்காவது மீன் வாங்கினாலும், தீப்பெட்டிகளை அடுக்கி வைத்ததுபோன்ற முகாமின் நெருக்கடியில் சங்கடமின்றி சாப்பிட முடியாது என்பதே யதார்த்தம்.




திருமணம்:
ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமிற்கு பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கின்றனர். அப்படி நடக்கும் திருமணங்களுக்கு அழைப்பிதழ் அச்சடிப்பதும், மண்டபத்தில் திருமணத்தை நடத்தி மகிழ்வதும் இவர்களின் பொருளாதார நிலைக்கு சாத்தியமில்லை. இதனால் அவரவர் வீட்டு வாசலில் அல்லது முகாமில் கொஞ்சம் இடமிருக்கும் பகுதியில் திருமணத்தை நடத்தி முடித்து விடுகின்றனர். திருமணத்திற்குப் பிறகான இவர்களின் வாழ்நிலையும் கொடுமையானதே. இட நெருக்கடியில் புது மண தம்பதிகள் தவிப்பதை நாகரீகம் கருதி பலர் நாசூக்காக சொன்னாலும், அதன் சங்கடம் புரிகிறபோது மனசு வலிக்கிறது.

மரணம் என்கிற நிலை வரும்போதுதான் இவர்கள் மன ரீதியான பாதிப்புக்கும், சங்கடத்திற்கும் ஆளாகின்றனர். இங்கு தந்தை இறந்த விடயத்தை ஈழத்தில் இருக்கும் மகனுக்கு ஒரு தகவலாக சொல்வதற்குக் கூட இயலாத சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன. உள்ளூர் சுடுகாட்டின் ஒரு ஓரப்பகுதியையே தங்களுக்கானதாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

முகாமின் இளைஞர்கள் பலரும், விஜயகாந்த்தின் ரசிகர்களாக இருக்கின்றனர்."எங்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டால் கேப்டனுக்கே வாக்களிப்போம்" என்கிறார்கள். பிரபாகரன்பற்றி பேச்சு வந்தால் மௌனமே பதிலாக வருகிறது. "இங்கட பிழைக்க வந்திருக்கம். தேவையில்லாம பேசி சிக்கல்கள் வந்துடக் கூடாதுதானே.." என்கிறார்கள்.

பேசிக்கொண்டே கிளம்பியபோது ஒரு இளைஞர் எங்களுடனேயே வந்தார். "ஈழத்தமிழர்கள் உலகம் முழுக்க இருக்காங்கள். லண்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா எண்டு பல நாடுகளில் நல்லா சம்பாதிக்கிறாங்கள். அகதியா போனாலும் அங்கட போனாதான் நல்ல பொழப்பு பொழைக்க முடியும். ஆனால் அதுக்கும் கன ரூபாய் வேணும். எங்களின்றைதான் அது இல்லையே... என்ன செய்ய ஏலும்..?" என்று அந்த இளைஞர் சொன்ன வார்த்தைகள் இன்னும் மனதை பிசைந்துகொண்டேயிருக்கின்றன.

 

http://nadaivandi.blogspot.com/2007/02/blog-post.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)