இந்த வாரம் அவுட்லுக் ஆங்கிலப் பத்திரிகையின் புகைப் பிடித்தல் பற்றிய அட்டைப் படக் கட்டுரையில் புகை பிடிப்பவர்களை நவீன உலகின் பறையர்கள் என்று அட்டையிலேயே கொட்டை எழுத்தில் எழுதி பறையர் இனத்தை இழிவு படுத்தியுள்ளது (http://www.outlookindia.com/archivecontents.asp?fnt=20070205) . அவுட்லுக் பத்திரிகைக்கு உடனடியாக உங்கள் கண்டனங்களை அனுப்பி வையுங்கள்.
பிரிட்டிஷார் இந்தியாவுக்குள் வந்த பொழுது இங்கிருந்த கொடுமையான சாதியடுக்கில் தீண்டத்தகாதவர்கள் என்று ஆதிக்க சமூகத்தினரால் விலக்கிவைக்கப் பட்டவர்களுள் ஒரு பிரிவினர் பறையர்கள். பறை என்ற இசைக் கருவியைப் பயன்படுத்திய இசைக்கலைஞர்களே பறையர்கள் என்றழைக்கப் பட்டனர். இதன் பின் விளைவாக, ‘பறையர்கள் (pariahs)’ என்ற வார்த்தையை, சமூகத்தில் குற்றம் புரிந்து தள்ளி வைக்கப் பட்டவர்களை அழைப்பதற்கான ஆங்கில மொழி வழக்கில் பிரிட்டிஷார் பயன்படுத்த ஆரம்பித்தனர். இப்படியாக 1613 ஆம் ஆண்டு ஆங்கில அகராதியில் "pariah" என்ற வார்த்தை தவறுதலாகச் சேர்ந்து விட்டது.
காலப் போக்கில் சாதியப் பிரிவுகளின் கொடுமைகளை உணர்ந்த உலகம் இந்த வார்த்தைப் பிரயோகத்துக்கும் வெட்கித் தலை குனிந்திருக்க வேண்டும். இந்த வார்த்தையை ஆங்கில அகராதியிலிருந்து எடுத்தெறிந்திருக்க வேண்டும். மேலை நாடுகளில் "சரியான அரசியல் பயன்பாடு (politically correct usage)" என்ற நியதிப்படி இப்படிப் பட்ட தவறான வார்த்தைப் பிரயோகங்கள் மிகுந்த பிரக்ஞையுடன் வழக்கிலிருந்து நீக்கப் பட்டு பதிலாகப் புதிய வார்த்தைகள் பயன்படுத்தப் படுகின்றன ( http://simple.wikipedia.org/wiki/Political_correctness) . ஒரு சிறிய எடுத்துக்காட்டாகச் சொல்லப் போனால், ‘குள்ளன்‘ என்ற கொச்சையான உபயோகத்தை தவிர்ப்பதற்காக ‘குள்ளம்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘நெட்டையாக வளர இயலாமை" (short – vertically challenged) என்று குறிப்பிடுதலைச் சொல்லலாம்.
சில நேரங்களில் "சரியான அரசியல் பயன்பாடு" ஒரு பிரச்னையை விதண்டாவிதமாக எதிர் எல்லைக்கு இழுத்துச் செல்வது போல் தோன்றினாலும், இதன் பின்னணியில் உள்ள கரிசனம் பாராட்டக் கூடியது. எப்படியிருந்தாலும் சில "சரியான அரசியல் பயன்பாடு"கள் மிகவும் தேவையானவையாக விமர்சகர்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, கறுப்பின மக்களை "நீக்ரோ அல்லது நிக்கர் (negro, nigger) " என்று கொச்சையாக விளிப்பது. இந்த வழக்கு அநேகமாக ஒழிந்து கறுப்பின மக்கள் ஆப்ரிக்கர் அல்லது ஆப்ரிக்க அமெரிக்கர்கள் என அழைக்கப் படுகின்றனர். (இந்தியத் திரைப்படங்களில் இன்னும் இவ்வார்த்தைகள் பயன்படுத்தப் படுகின்றன என்பது வருந்தத்தக்கது). இவற்றை எல்லாவற்றையும் விட மிகக் கொடுமையான அல்லது தவறான பயன்பாடு சமூகக் குற்றவாளிகளை பறையர் என்று அழைப்பதுதான்.
மேலை நாட்டில் சில நேரங்களில் pariah என்ற வார்த்தை இன்னமும் பயன்படுத்தப் படுவதன் காரணம் சாதிக் கொடுமைகளைப் பற்றிய அவர்கள் அறியாமையும், பறையர் என்ற வார்த்தையின் வரலாறு தெரியாமையுமேயாகும். ஆனால் இந்தியாவில் பலமுறை இந்தத் தவறான வார்த்தைப் பிரயோகம் விவாதத்தில் வந்த பின்னும் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அதைப் பற்றிய அக்கறையோ, கரிசனமோ அல்லது குறைந்த பட்ச ஊடக அடிப்படை நெறியோ கிடையாது. இன்னும் சொல்லப் போனால், மேற்கத்திய "சரியான அரசியல் பயன்பாடு"களை அறிந்த ஆங்கிலப் பத்திரிகை மேதாவிகள் அவற்றைச் சரியாகவேப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவர்கள் கண்ணெதிரே இருக்கும் பிரச்னையைப் பற்றி அறிந்து கொள்ளக் கூட அக்கறை இல்லாதவர்கள். அதற்கான காரணத்தை இங்கு அலச வேண்டிய தேவையில்லை. ஏற்கனவே சாதிப் பிரச்னைகளில் ஆங்கிலப் பத்திரிகைகளின் சார்பு அனைவரும் அறிந்ததே. 1989 ஆம் ஆண்டின் சாதிக் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி இப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகம் தண்டிக்கப் படவேண்டிய குற்றமாகும். இதன்படி தமிழக அரசு முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியசாமியின் மேல் ஒரு முறை குற்றம் பதிந்தது.
நாம், குறிப்பாக தமிழர்கள், செய்ய வேண்டியவை சில உண்டு. ஏன் ‘தமிழர்கள்’ என்று குறிப்பிடுகிறேன்? இந்த அவமானச் செயலின் ஆரம்பம் தமிழர்களின் சாதிக் கொடுமையில் உருவானது. பறையர் என்ற தமிழ் வார்த்தை நம்முடைய அவமான வரலாற்றினால் ஆங்கில அகராதிக்குள் புகுந்தது.
1. உடனடியாக அவுட்லுக் பத்திரிகைக்கு நம் கண்டனங்களை அனுப்புவது (அவுட்லுக் பத்திரிகையின் மின்னஞ்சல் முகவரி
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
).
2. உலக அமைப்புகளையும், ஆங்கில அகராதிகளையும் தொடர்பு கொண்டு இந்தத் தவறான பயன்பாட்டை சுட்டிக் காட்டி இந்த வார்த்தையை நீக்க வேண்டியது. இணையத்தின் வாயிலாகவே இந்த எதிர்ப்பை நிகழ்த்த முடியும். இதைப் பற்றி விரைவில் ஒரு முயற்சியை உருவாக்குவோம்.
|