இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தொகுப்பாளரின் மேசையிலிருந்து Print E-mail
ஆசிரியர் குழு   

துறைசார் எழுத்துப் பதிவுகள் பெருக, புதிய பார்வைகள், மாறுப்பட்ட சிந்தனைத்தளங்களில், சமூக அக்கறையுடன் வைக்கப்படும் எழுத்துகள் அதிக கவனம் பெற, தெளிநீரோடையாய், சிற்றாற்றுச் சிலிர்ப்பாய், காட்டாற்று வெள்ளமாய் வலைபதிவுக் கடலில் கலந்துள்ள அனுபவத் தொகுப்புகளைப் பார்த்துப் பிரித்து தர, வாசகர்களின் இலக்கியத் தேடல்களுக்கு வாசிப்புப் பெருவெளி காட்டவென பூங்கா உங்கள் ஆதரவுடனும், ஒத்துழைப்புடனும் உருப்பெற்று 20 இதழ்கள் கடந்துவிட்ட நிலையில், பூங்காவிற்கென பலரின் தனிப்பட்ட படைப்புகள், பங்களிப்புகள் மற்றும் உழைப்பின் மூலமும் பூங்கா தனிப்பொலிவுடன் ஒளிர்வதை நன்றியுடன் சுட்ட விரும்புகிறோம்.

 

தமிழகம்-கேரள மாநிலங்களுக்கிடையே 70 களிலிருந்து சுமார் 27 ஆண்டுகளாக இருந்து வருகிறது முல்லை பெரியாறு அணைப்பிரச்சனை. முல்லை-பெரியாறு நீரால் இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சம் பாசன நிலங்கள் பயன் பெற்று வநதன. அணையின் நீர் மட்டத்தைக் குறைத்ததால், 36 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசானது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏதோ 'லாவணி' கேட்கும் தொனியில் ஒதுக்குகிறார் அச்சுதானந்தன். அச்சுதானந்தனுக்கு உச்சநீதி மன்றமென்றால் கர்நாடகத்திற்கு நடுவர்மன்றம். இதுவரை காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புகள் அனைத்தும் இடைக்காலத் தீர்வுகள்தான். அதைச் செய்யவே அலறிக்கொண்டிருந்தன கர்நாடகத்தின் அரசுகள். இன்று காவிரி நடுவர் நீதிமன்றம், தான் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கவிருக்கிறது. கலவரத்திற்குப் பயந்து காவலர்களைக் குவித்துள்ளது கர்நாடக அரசு. காவிரிப் பிரச்சனை ஆரம்பித்தது சென்னை மாகணம் மற்றும் மைசூர் சமஸ்தானம் ஆகியவற்றால் போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து, எனவே இதன் பழமையை விளக்கத்தேவையில்லை. நாளையாவது நல்ல தீர்ப்பு வருமா?. நமது காவிரி-டெல்டா பகுதிகளின் நாடித்துடிப்பைத் தவணைமுறையில் தண்ணீர் அளித்து ஏற்றி, இறக்கிக் கொண்டிருக்கும் கர்நாடக அரசின் அநீதி இனியாவது முடிவுக்கு வருமா?. பவானி ஆற்றின் நடுவே முக்காலி அணைகட்டி விளையாடி, பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்திற்குத் தொடர்ந்து பிரச்சனை எழுப்பி மகிழ்ந்து, முல்லைப் பெரியாற்றில் முரட்டுப்போக்குடன் செயல்படும் கேரளத்தில் மழைக்காலங்களில் 2 இலட்சம் கோடி கன அடிநீர் கடலில் வீணாய் கலக்கிறது. பாசன நிலங்கள் மிகக் குறைவாக உள்ள அம்மாநிலத்தில் ஆண்டிற்கு ஆறுகள் மூலம் 2500 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு 6 ஆடி நீர் உயர்த்த இந்த ஆர்ப்பாட்டம். கர்நாடகமும், கேரளமும் இப்படி இருக்க, ஆந்திராவோ ஏற்கனவே ஏகப்பட்ட தடுப்பணைகள் உள்ள பாலாற்றின் குறுக்கே ஒரு புதிய அணையைக் கட்டுவோம் எனப் பயமுறுத்துகிறது... மஹாராஷ்ராவில் உற்பத்தியாகும் கிருஷ்ணாவிற்காக மாஹாராஷ்ட்ரா, கர்நாடக, ஆந்திரா மாநிலங்களின் சண்டைகளுக்கிடையே, தமிழக அரசும் போராடி 1996 ஆம் ஆண்டு, சென்னைக்கு 12 டி.எம்.சி நீரைப் பெற்றது. கண்டேலேறிலிருந்து கால்வாய் மூலம் வரும் இந்நீர் கால்வாயின் இருபுறமும் ஏற்பட்ட பழுதுகளால் ஒழுங்காக வரவில்லை,  இதைச் சரிசெய்ய 200 கோடி ரூபாய் சாய்பாபா, தனது ட்ரஸ்டில் இருந்து வழங்கிச் செப்பனிட்டதால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா 4 முதல்வர்கள், 2 ஆளுநர்கள் 3 மத்திய அமைச்சர்கள், 2 தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதைப்பற்றி "கலைஞரும் சாயிபாபாவும்" என்ற ஜோவின் பதிவு விளக்குகிறது.

 

நதிநீருக்காக போராடும் நேரம், இங்கிருக்கும் நதிகளில் ஏற்படும் மாசு, உடனடி நடவடிக்கைகோரும் மற்றொரு பிரச்சனை. கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டத் தொழிற்சாலைகள் பவானியைப் பெரிதும் மாசுபடுத்தியுள்ளன. பாலாறு தோல் தொழிற்சாலைகளாலும்., அதேபோல் நொய்யல் ஆறு சாயப்பட்டறைக் கழிவுநீராலும் அதிகம்  மாசுபடுத்தப்படுகின்றன. சாயப்பட்டறைக் கழிவுநீரை சுத்திகரித்து அந்நீரை கடலில் கலக்கும் திடுக்கிடச்செய்யும் திட்டம் ஒன்று தற்போது பரிந்துறைக்கப் பட்டுள்ளது. இதைப் பற்றிச் சாடுகிறது "திருப்பூரிலிருந்து நாகைக்கு" என்ற பதிவர் இராதாகிருஷ்ணனின் பதிவு.

நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் விஜயகாந்த் வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனையையும் அதைத் தொடர்ந்த அவரது ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டமும், அதன் விளைவாய் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைகளையும் பற்றிப் பேசுகிறது கவுதமனின் "வருமானவரிச் சோதனையும், ஜெயலலிதாவும் பதிவு". மும்பை மாநகராட்சித்தேர்தலைப் பற்றிய மணியனின் பதிவும் தொகுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளோடு தொடர்பு வைத்திருப்பவரென்று கனேடிய அரசு கொடுத்த தகவலினடிப்படையில் 2002ம் ஆண்டு நியூயார்க் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டு சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாஹேர் அரார் விதயத்தில் கனடா மற்றும் அமெரிக்க எத்தகைய அணுகுமுறையை கையாள்கிறதென விரிவாகப் விளக்குகிறது மதி கந்தசாமியின் பதிவு.

 

அறிஞர்தம் இதய ஓடை

ஆழநீர் தன்னைமொண்டு

செறிதரும் மக்கள் எண்ணம்

செழித்திட ஊற்றி, ஊற்றிக்

குறுகிய செயல்கள் தீர்த்துக்

குவலயம் ஓங்கச் செய்வாய்....

பத்திரிக்கை அலுவலகம் ஒவ்வொன்றிலும் சட்டமிட்டு மாட்டப்பட வேண்டிய வரிகள். பத்திரிக்கையாளர்களின் மனங்களிலும்தான். "பத்திரிகா தர்மம்" என்ற பதத்தை பயன்படுத்திக்கொண்டே, உள்ளே ஒழிந்து சிரிக்கும் சில அறிவுப்போலி முகங்களைக் கண்டுகொண்டேதான் கடந்து செல்கிறோம். உயிர் வளர்க்க செய்த தொழில்களையே பின்னர் உயிர் பறிக்கும் சாதி தர்மமாக மற்றி மக்களைப் பிளவிட்டு மகிழ்ந்த மாக்குணத்தின் தொடர்ச்சி... ஒரு சிறு கூட்டத்தின் பொதுநலம் காக்க., பெருங்கூட்டம் சாதியின் பெயரால் பொதுப்பகையை நூற்றாண்டுகள் தோறும் பொதியாய்ச் சுமந்துவரும் அவலம் எங்கு நின்றுவிடப் போகிறதோ என்ற அச்சம் அல்லும், பகலும் ஆட்டிப்படைக்கும் சில சக்திகள்... மொத்தமாய்ச் சென்று குத்தகையெடுத்து அடைக்கலமான இடம், ஆங்கிலப் பத்திரிக்கையுலகமோ?. இதற்குப் பதிலை இந்த வார அவுட் லுக் அதன் அட்டையிலேயே சொல்லுகிறது. இதைப் பற்றிப் பதிவர் சங்கரபாண்டியின் பதிவு விளக்குவதுடன், உடனடியாக அவுட்லுக் பத்திரிகைக்கு நம் கண்டனங்களை அனுப்பக்கோருகிறது (அவுட்லுக் பத்திரிகையின் மின்னஞ்சல் முகவரி This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it .)

 

ஒரு விவசாயக் குடும்பத்திலோ மற்ற சிறு குடும்பத்தொழிற் செய்யும் வீடுகளிலிருந்தோ, பொருள் அதிகமில்லாது, வென்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள அருகில் ஆட்களில்லாது, பெரிய தொழிற் நிறுவனங்களை உருவாக்கும் தொழிற்முனைவோர் உருவாகி வளர்வது அவ்வளவு எளிதானதல்ல., இந்த முதலாவது தலைமுறைத் தொழிமுனைவோரைப் பற்றிய ஆவணங்களைத் தொகுத்து புத்தகமாக்கும் தனது முயற்சி பற்றிப் பேசுகிறார் செந்தில்நாதன். வாழ்த்துகள். கைகொடுப்போம். "காற்றில் நகரும் ஒரு பட்டாம் பூச்சியின் இறகு துடிப்பு எனும் சிறு நிகழ்வு பெரும் சூறாவளியை உண்டாக்கும் பெருநிகழ்வின் முதற்படியாகவும் இருக்கலாம்" என்ற கோயாஸ் கருத்தாக்கத்தை  தொழிற் தொடங்குவோர்  முதற்பாடமாகக்  கொள்ளலாம். இதைப்பற்றி பேசுகிறது நிர்மலின் "பட்டாம் பூச்சிவிளைவுகள்" என்ற அறிவியற்சார் பதிவு. தமிழகத்தில் உணவு விடுதிக்கு பெயர் வைக்கும் முறைகளில் உள்ள மாற்றத்தைச் சொல்கிறது தங்கவேலின் "தமிழக ஹோட்டல் பெயர்கள் ஒரு சிந்தனை" பதிவு.

 

ஐரோப்பாவில் தன் இரும்புத்தடம் பதித்த டாட்டா பற்றியும்,  சுனாமி வாழ்வைச் சூறையாடி ஓய்ந்தும், வறுமை தாண்டவம் ஆடித் தங்களின் சிறுநீரகம் பறிக்கும் கொடுமை மீனவப் பகுதிகளைப் பீடித்திருக்கிறது. மக்களின் பணத்தை சுரண்டிய சில மருத்துவமனைகளும், (சில மருத்துவர்களும) உடற்ப்பகுதிகளைத் திருட ஆரம்பித்துள்ளன. இதைத்  "தமிழகப் பயங்கரமென",   தலைப்பிட்டு, பஞ்சாபில் தாங்கள் அலுவலகம்   வைத்திருப்பதைப் போல சில  இதழ்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், இவை பற்றிய பதிவுகள், பதிவுலகில்  இவ்வாரம் அதிகம் இல்லை.   

 

குழந்தைகளின் மேல் தொடர்ந்தேவப்படும் வன்முறைகள் அக்குழந்தைகளின் உறவினர்களாலேயே நிகழ்த்தப்படும் கொடுமை பற்றி விவரிக்கிறார் மங்கை 'நெஞ்சு பொறுக்குதில்லையே" பதிவில்.

 

மது முதலான போதைப் பழக்கங்கள் நம் சமூகங்களைச் சீரழித்து வருவது நாமறிந்ததே. இத்தகைய பழக்கங்களைப் பற்றிய விழிப்புணர்வை இளம் பருவத்திலேயே குழந்தைகளிடமும் பெற்றோர்களிடமும் ஏற்படுத்துவது முக்கியமானது. அதனைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வாரத்துக்கான பாடங்கள டி.எம்.ஐ இணயதளத்தில் உள்ளது. இவற்றில் குழந்தைகளுக்கு மது போன்ற போதைப் பொருட்களின் தீமைகளையும் அவை நம் உடலில் ஏற்படுத்தும் கொடிய விளைவுகளைப் பற்றியும், பெற்றோர்களுக்கு எவ்வாறு குழந்தைகளிடம் போதைப் பழக்கங்கள் தோன்றாமலிருக்கச் செய்யலாம் என்பதற்கான வழிமுறைகள் பற்றியும் செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றைப் பெற்றோர்கள் தரவிறக்கிக் கொண்டு பயன்படுத்தவும்.

 

 

கிரிக்கெட் போட்டிகள் பற்றிய அலசலாக அப்துல் ஜப்பார் அவர்களின் பதிவு, ஆஸ்திரேலியன் ஒப்பன் போட்டிகள் பற்றிய ஆசிப்மீரானின் பதிவு ஆகிய விளையாட்டுப்பதிவுகளுடன், மீரானின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அமீரகப் பொங்கல் விழா பற்றிய பதிவும் வசந்தனின் மெல்பேணில் நடைபெற்ற எழுத்தாளர் விழாபற்றிய பதிவும் இவ்வாரப்பூங்காவில் இடம்பெறுகிறன்ன.

 

தோட்டராயசாமியின் பற்பசை பற்றியபதிவு மற்றும் வயிற்றெரிச்சல் பற்றிய மெய்பேணல் பதிவுகளுடன் புத்தக விமர்சனம், பொருளாதாரம், பயணக்கட்டுரை , இணைய நுட்பங்கள் என பலவகைப் பதிவு மலர்களுடன் மணம்வீசுகிறது இவ்வாரப் பூங்கா.

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)