|
விடலைப் பருவமும் - வீடியோ விளையாட்டும். |
|
|
|
மாசிலா
|
இப்போதெல்லாம் சிறுவர்களும் விடலை பருவத்தினரும் மிக அதிகமான நேரத்தை கணிணி திரைக்கு முன் அல்லது வீடியோ விளையாட்டுப் பெட்டிகள் முன் கழிக்கிறார்கள். பின்லேண்டில் எடுத்த ஒரு கணக்கின்படி, மூட்டுவலி, சதை பிடிப்புக்காக ஏகப்பட்ட சிறுவர்களும், விடலை பருவத்தினரும் (14-18 வயது) மருத்துவர்களை அனுகியதாகத் தெரிய வருகிறது. இவர்களில் கால்பங்கு தோல்பட்டை, கழுத்து வலிக்காகவும், 12% இடுப்பு வலிக்காகவும் அவதிப்பட்டதாகக் கணக்கெடுப்பு கூறுகிறது. ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் விளையாடினால் இதுபோன்ற உபாதைகள் எற்படும் என பெற்றோர்களுக்கு எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
.
பிள்ளைகள் இதுபோனற விளையாட்டுகளை விளையாடுகிற போது அவர்களைத் தனியாக ஏதாவது ஒரு அரையில் விட்டுவிடக் கூடாது. புழக்கமுள்ள, வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்தே அவர்களைக் கவனிக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 10 அல்லது 15 நிமிடம் ஓய்வெடுக்க வைக்க வேண்டும். விளையாடும்போது அவர்களிடம் அடிக்கடி பேச்சுக் கொடுத்து கொண்டே இருக்கவும் வேண்டும். சில விளையாட்டுகளில், அதிவேகமாக மாறி மாறிவரும் பளிச் பளிச்சென்ற காட்சிகளைத் தொடர்ந்து உன்னிப்பாக, மனதை நீண்ட நேரம் ஒருநிலைப் படுத்தி, விறுவிறுப்புடன் உடல் விரைப்புடன், ஒருவித கோர வெறிகொண்டு விளையாடுவதால், சில குழந்தைகளுக்கு 'எப்பிலெப்சி' எனப்படும் மூளை-நரம்பு சார்ந்த வலிப்பு ஏற்பகிறது. இது மிகவும் ஆபத்தானது.
கவனிக்கப்படாமல் விட்ட சில குழந்தைகள் உண்மை உலகத்திற்கும், விளையாட்டில் உள்ள கற்பனை உலகத்திற்கும் வித்தியாசம் செய்யத் தெரியாமல் அனைத்தையும் போட்டு மனதைக் குழப்பிக்கொண்டு கிடப்பர். ஒருசில குழந்தைகள் திடீர் திடீரென்று எதிர்பாரா நேரத்தில், நிஜ உலகத்தை விட்டு, கனவு உலகத்துக்குப் போய் வருவர். உதாரணத்திற்கு : கவனிப்பற்ற ஒரு சிறுவன் கார் பந்தய விளையாட்டை மிகவும் விரும்பி அளவுக்கு அதிகமாக அனுபவிப்பவன். இவன் நிஜ உலகத்தில் வீதியைத் தாண்டும்போது ஒரு காரோ பஸ்ஸோ வேகமாக இவனை நோக்கி வருவதைப் பார்க்கும்போது, அந்த "ஒரு கணத்தில்" தான் விளையாடின காட்சிகளில் இருப்பது போல் கனவு கண்டு உணர்ச்சி அற்றவனாக தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஏதும் செய்யாமல் நட்ட வீதியில் அப்படியே நிற்பான். அந்தக் கணத்தில் அவன் காதுக்கு யார் என்ன சொன்னாலும் உறைக்காது. வேறுசில விளையாட்டுகள் கொலைவெறி மற்றும் சண்டைவெறி போன்ற உணர்ச்சிகளைத் தூண்டுவதாக இருக்கின்றன.
இன்னுமொறு பிரச்சினை சமுதாயத்தைப் பற்றியது. தனிமையில் கனவுலகில் அளவுக்கு அதிகமாக விளையாடும் இளைஞர்கள் காலப்போக்கில் தான் சார்ந்த சமுதாயத்தை விட்டு மனதளவில் விலகி மிக நீண்டதூரம் சென்றிருப்பர். இதனால் தங்களுக்கே உரிய சில சமுதாய அடையாளங்களை இழந்து பரிதவிப்பர். இதனால் மன அழுத்தம் ஏற்பட நிறைய வாய்ப்பு உண்டு. அளவுடன் விளையாடினால் சில தரமுள்ள விளையாட்டுகளினால் நன்மைகளும் உண்டு. மூளை வளர்ச்சி பெறும். பெற்றோர்கள் கவனம் செலுத்தி நல்ல விளையாட்டுகளைக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். வயதிற்குத் தகுந்தாற்போல் உள்ள விளையாட்டுகளாக இருக்க வேண்டும்.
மாறிவரும் இந்த அவசர உலகில், தாயும், தந்தையும் வேலையென்று வீட்டில் இல்லாத நேரத்தில், யாருடைய நேரடிக் கவனிப்பிலும் இல்லாத பிள்ளைகள் அவர்கள் இட்டத்திற்கு மனம் போனபோக்கில், கண்ட விளையாட்டுகளைக் கட்டுப்பாடில்லாமல் விளையாட நிறையவே வாய்ப்பு உண்டு. இந்தப் பருவத்தில் அவர்களைக் கவனத்துடன் பாதுகாத்து வளர்க்கவேண்டும். http://naalainamathae.blogspot.com/2007/02/blog-post_8374.html
|