மென்பொருள் துறையால் சம்பளம் அதிகரிக்கின்றது. விலைவாசி ஏறுகின்றது. அதன் பலன் பல தட்டு மக்களிடம் சென்று சேருவதில்லை. விதர்பாவில் ஏழைகள் தற்கொலை செய்து கொள்வது மறக்கப்படுகின்றது போன்ற கருத்துகள் வலைத்தளங்களில் முன்னிறுத்தப்படுகின்றது.
விதர்பாவின் பிரச்சனையை முதலில் எடுத்துக் கொள்வோம். விதர்பா மகாராஷ்டிர மாநிலத்தில் இணைக்கப்பட்ட காலத்திலிருந்தே பிரச்சனைதான். மென்பொருள் துறை வளர்ச்சி அடையாமல் இருந்திருந்தாலும் இப்போது உள்ள குறைபாடுகள் எதுவும் களையப்பட்டிருக்காது. மகாராஷ்டிர மாநில ஆண்டு நிதி அறிக்கையில் எப்போதும் விதர்பா பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு குறைவே. மகாராஷ்டிராவின் மொத்த நீர் வளப் பெருக்கும், தடையில்லா மின்சாரமும் வேறு பகுதிகளுக்குத் திருப்பப்படுகின்றது. இதைப் பற்றிய பல தகவல்களை வலைத்தளங்களில் காணலாம். ஆட்சியில் இருப்போர் குறிப்பிட்ட பகுதியிலிருந்து வந்து கொண்டு இருப்பதால் அந்தப் பகுதியின் ஓட்டு வங்கியைக் காப்பதில்தான் கவனம் செலுத்துகின்றார்கள்.
விதர்பாவின் பாசன வசதிகள் மிக மோசமானவை. அதை மேம்படுத்தும் திட்டம் பற்றிய குரல்கள் எழுவதில்லை. விவசாயியை ஆதரிப்பதாக வரும் குழுமங்கள் கூட அவர்களின் நோக்கமான வெளிநாட்டு நிறுவன எதிர்ப்பு என்ற நிலையில் பிடி காட்டனை கண்டிப்பதில்தான் கவனம் செலுத்துகின்றார்கள். அடிப்படை உரிமையான பாசன வசதி பற்றிய விழிப்புணர்வோ, முக்கியத்துவமோ மறக்கப்படுகின்றது. மரபணு மாற்றப்பட்ட பிடி காட்டனிலும் போலி விதைகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. விற்பனை செய்தவர் யார், தொழில்ரீதியாக இவ்விதைகளை விற்பனை செய்வதற்கு தனிமனிதர் இயலாது, ஒரு கூட்டம் இருக்கவேண்டும். அவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பது பற்றிய தகவல்களை வலைத்தளங்களில் காண இயலவில்லை. விவசாயம் நஷ்டமடைந்து வறுமையில் இருப்பவர்களிடம் செத்தால் இரண்டு லட்சம் என அறிவிக்கும் 'புத்திசாலி' நிர்வாகமே மத்தியிலும், மகாராஷ்டிராவிலும் உண்டு. மகாராஷ்டிரா பருத்தி கொள்முதல் கூட்டுறவு அமைப்பின் ஊழல் மற்றும் நிர்வாகக் கோளாறுகளைப் பற்றி தகவல்களை வலைத்தளங்களில் காணலாம். இருப்பே போராட்டமாய் இருக்கும் விதர்பாவின் விவசாயிகளின் கடைசிக் கோவணத்தையும் உருவும் இவர்களின் கரை படிந்த கரங்களையும் பல வலைத்தளங்கள் கண்டு கொள்வதில்லை. இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் எனெனவென்றால் இது போன்று ஊழல்களில் ஈடுபடுவோரும் சாமான்யரே. குழந்தை, மனைவி பாசம் என்று எல்லா விஷயங்களை அனுபவித்து டிவி சீரியல் பார்த்துக் கண்ணீர் விடும் மத்திய தர வர்க்கத்தினரே.
வெறும் மென்பொருள் துறையைப் பிடித்துக் குறைப்பட்டுக் கொண்டே இருந்தால் நிகழ்வின் வேறு குறைபாடுகள் புனிதப்படுத்தப்பட்டு மறக்கடிக்கப் படுகின்றன. மென்பொருள் துறைக்கெதிரான பிரச்சாரத்திற்கே இது பெரிதும் பயன்படுகின்றது. தெலிங்காணா பருத்தி விவசாயிகள் விஷயத்தில் தொடக்கத்தில் கோட்டை விட்டாலும் இழுத்துக் கட்டி குறை களைந்த ஆந்திர அரசு மென்பொருள் துறையிலும் கவனம் செலுத்து மாநிலத்தை மேம்படுத்துவதை காணலாம்.
மென்பொருள் துறையில் வேலை செய்வது காற்றில் மிதப்பது போல் சுகமானது என்ற கருத்துகள் பல இடங்களில் உண்டு. இங்கு வேலை நிரந்தரம் இல்லை, வேலைக்கான தகுதிகள் மேல் நோக்கிப் பிரயாணித்து கொண்டே இருக்கும். எட்டு மணி நேர வேலை, வாரக் கடைசி இளைப்பாறுதல் போன்றவை அவ்வளவு சுலபமாக எல்லா மென்பொருளாளருக்கும் அமைவதில்லை. மன அழுத்தமும், கடின உழைப்பும் தேவைப்படும் துறையாகவே மென்பொருள் துறை உள்ளது.
உருவாக்கப்படும் மென்பொருள்கள் வானில் விண்கலம் செல்லவும், சுலபமாய் புகைவண்டி சீட்டு வாங்கவும், தட்பவெப்பநிலைகளைக் கணக்கிடவும் மேலும் பல துறைகளிலும் உதவுகின்றது என்பது அவ்வளவாக நினைவில் கொள்ளப்படுவதில்லை.
மென்பொருள் நிறுவன உருவாக்கம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றது. எண்பதுகளில் வேலை என்றால் அரசு வேலைகளே என்றிருந்த நிலை மாறி தனியார் நிறுவன வேலைகளையும் திரும்பப் பார்க்க வைக்கின்றது. மென்பொருள் உருவாக்கத்தின் காரணமாய் கட்டடம் கட்டுதல், கட்டட நிர்வாகம், சாலை வசதிகள், புதிய குடியிருப்புகள், மின்சார உற்பத்தி மேம்பாடு, மின் விநியோக மேம்பாடு , விமானப் போக்குவரத்து, மோட்டார் வாகனத் தயாரிப்பு மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள், வங்கிகளும் அதைச் சார்ந்த தொழில்களும் எனப் பல உப தொழில்களும் வேறு வழியில்லாமல் மேல் வருகின்றன. மென்பொருளின் பயன்பாட்டை அதிகரித்து அதை முறைப்படுத்தி அரசு அலுவலகங்களுக்குக் கொண்டு வந்தால் நிர்வாகம் மேம்படும், ஊழல் குறையும் சாத்தியமும் உண்டு.
சர்வீஸ் தொழில் நிறுவனங்களே அதிகம் நம்நாட்டில் வரக் காரணம் மனிதவளமே. அடிப்படைக் கட்டுமானப் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. நம்நாட்டில் தடையில்லா மின்சாரமும், மேடு பள்ளம் இல்லா சாலைகளும் ஒரு ஆடம்பரப் பொருளாகவே உள்ளது. இவை அடிப்படையாக மாறும் பொழுதே உற்பத்தித் தொழில்களுக்கான முதலீடு அதிகரித்து அந்த வகைத் தொழில்கள் மேம்படும்.
இப்போது நிகழ்ந்திருக்கும் டாடா- கோரஸ் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் சாத்தியம் உண்டு. டாடாவிற்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய சந்தையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இரும்பு கோரஸ் வழியாக ஐரோப்பாவை குறைந்த விலையில் அணுகுவது சாத்தியமே. இந்த டாடா-கோரஸ்க்கான நிதி இந்தியாவின் மென்பொருள் நிறுவனமான டிஸிஸ்லிருந்து கிடைத்திருப்பதாக பத்ரியின் பதிவில் படித்தேன். ஒரு துறையின் லாபம் வேறு துறைக்கு முதலீடாக நகருகையில் அந்தத் துறை மேம்பட்டு பணிவாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
மென்பொருள் துறையின் மேம்பாடு சமான்யரின் பொருளாதார நிலையை உயர்த்த அதில் ஒரு பகுதி இல்லாதவருக்குச் சேருதலும் அதிகரித்துள்ளது. இயற்கை சேதங்களின் போதும, கல்வி உதவிகளிலும் மென் பொருள துறை சார்ந்த இளைஞர்கள் கொண்ட தன்னார்வ அமைப்புகள் இயங்குவதைக் காணலாம்.
திரைப்பட மோகமும், பரபரப்பு செய்திகளுக்கு அலைவதும் நமது அடிப்படை குணம். மென்பொருள் துறை அறவே இல்லாமல் இருந்தாலும் விதர்பா விவசாயின் தற்கொலை முதல் பக்கம் வரப் போவதில்லை. ஐஸ்வர்யா-அபிஷேக்தான் முதல் பக்கம். அவர்களது திருமணமே முதல் கவனம். அது நமது கலாச்சாரம். வேலைவாய்ப்பு அதிகரித்து படிப்பறிவு பட்டறிவாக மாறக் காலம் பிடிக்கும். பேஸன்சர் ரயிலின் வேகத்தில்தான் கலாச்சார மாற்றங்கள் நிகழும்.
http://sinthipoma.blogspot.com/2007/02/blog-post.html
|