***
.
பெரிய அளவில் இந்தியாவிலும் ஆப்ரிக்காவிலும் மருத்துவ எய்ட்ஸ் மருந்து பரிசோதனை முகாம் நடத்தி வந்த ஒரு அமைப்பு தன் சோதனை முயற்சி அனைத்தையும் நிறுத்திக்கொண்டது. உகாண்டா, பினின், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் 13000 பெண்களிடம் இக்களிம்பு மருந்து பாவித்து நடத்திய பரிசோதனைக்குப் பிறகு நடத்திய கணக்கெடுப்பில், இவர்களுக்கு எச்.ஐ.வி கிருமியானது 'ப்லேசெபோ'(*) முறை மருத்துவத்தைப் பாவிக்கும் பெண்களை விட அதிக அளவில் தாக்குகிறது என்பது விளங்கியது.
.
அஷர்செல் (Ushercell) எனும் இம்மருந்தை உருவாக்கிய கனடாவின் பாலிடெக்ஸ் (Polidex) நிறுவனத்திற்கும் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு பன்னாட்டுச் சுகாதார அமைப்புகளுக்கும் இச்சோக முடிவு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
.
அஷர்செல் எனும் மருந்து கிருமி அழிக்கும் களிம்பு வகையைச் சேர்ந்தது. இதை, அந்தரங்கப் பகுதிகளில் தடவிக்கொண்டால், எச்.ஐ.வி கிருமியானது பெண்களைத் தாக்குவது தடுத்து நிறுத்தப்படும் எனக் கருதப்பட்டது. இந்நோய் அதிகம் பரவும், ஆணுறைகளைக் குறைவாகவே உபயோகப்படுத்தும், ஆண்-பெண் புணர்ச்சி மூலமே நோய் பரவும் நாடுகளில் இவ்வகை மருந்து ஒரு சிக்கனமான நல்ல மாற்றுவழி மருந்தாக இருக்கும் என அதி நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தது.
.
நைஜிரியாவில் 17000 பெண்களுக்கு இம்மருந்து பாவித்து செய்து பார்த்த பரிசோதனையில் ஒரு இடைப்பட்ட பலனே கிடைத்தது. பிறகு இச்சோதனை அங்கு நிறுத்தப்பட்டது. சில வருடங்களுக்கு முன், நொநொக்சைனொல் ( nonoxynol-9) எனும் விந்து அழிப்பு களிம்பு ஒன்றையும் சோதனை செய்யப்பட்டு, பலன் தராமல் சோதனை நிறுத்த பட்டது. அடிக்கடி பூசிவரப்பட்ட இந்த களிம்பினால் யோனியின் உள் பக்கத்தில் ஏற்பட்ட அரிப்பு மற்றும் எரிச்சல் காரணமாக நோய்க்கிருமி சுலமாக தாக்க வழி செய்தது. அஷர்செல் களிம்பு சோதனை தோல்வி அடைந்ததற்கு இன்னும் சரியான காரணம் தெரியவில்லை.
.
ஐ. நா, உலகச் சுகாதார அமைப்பு மற்றும் உலக எய்ட்ஸ் ஒழிப்பு அமைப்பு ஆகியவை அஷர்செல் களிம்பு மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தன. இன்னும் மிகப்பெரிய அளவில் இதுபோன்ற களிம்புகள், முக்கியமாக ஆப்ரிக்காவில், மிருகங்கள் மீது வெற்றிகரச் சோதனைக்குப்பின், தொடர்ந்து சோதிக்கப் பட்டு வருகிறதாம்.
*
*
ஆதாரம் : சியான்ஸ் எ அவெனீர்
பிரஞ்ச் மாத இதழ்
மொழி பெயர்ப்பு : மாசிலா.
.
(*) ப்லேசெபோ (placebo) : ஆபத்து விளைவிக்கக் கூடிய பரிசோதனைகளின் போது, பின் விளைவுகள் ஏற்படுத்தாமல் இருக்க 'அசல்' மருந்துக்குப் பதில் சில மாற்றங்களுடன் 'நகல்' கொடுக்கும் முறையே இது.



