|
மு. கார்த்திகேயன்
|
இருபது வருஷத்துக்கு முன்னால எங்க ஊர்ல இருக்கவங்க சினிமா பாக்கணும்னா பக்கத்துல இருக்க திண்டுக்கலுக்கு தான் போகணும்.. இல்லைன்னா ஊர்ல அப்பப்போ தெருவுல திரைகட்டி ஓட்றப்போ தான் பாக்க முடியும். ஏதாவது திருவிழான்னா அப்போ ஒரே நாள்ல ரெண்டு படம் ஓட்டுவாங்க.. முத படம் எம்ஜியார் படம்..ரெண்டாவது சிவாஜி படம்.. இது சொல்லப்படாத சட்டம்.. அப்பப்போ சாமி படமும் போடுவாங்க.. அப்படி படம் போடப்போறாங்கன்னா ஒன்பது மணில இருந்து அந்த தெருவே ஜே ஜேன்னு ஆகிடும். எல்லோரும் வந்து அவங்களுக்கு தேவையான இடத்தளவு ரிசர்வ் பண்ணிட்டு போயிடுவாங்க. ஏதாவது கோரப்பாயோ இல்லை கோணியோ தான் ரிசர்வ் செய்ற பொருள்.. படம் போடுறதுக்கு கிட்டதட்ட 11 மணி ஆகிடும்.. படம் போடுறவன் வந்தபிறகு அவனுக்கு அந்த திருவிழா நடத்துறவங்க சாப்பாடு எல்லாம் போடுவாங்க.. அவன் சாப்பிடுற நேரத்துல இவங்க சவுக்கு குச்சி ஊணி, வெள்ளத்திரை கட்டிடுவாங்க.. அதோட ரெண்டு குச்சிலயும் குழாய்களை கட்டி பாட்டு போட ஆரம்பிச்சுடுவாங்க.. இந்த மாதிரி நேரத்துல தான் எல்லா கடைகளிலும் பட்டாணி, கடலப்பருப்பு, பான்பராக், வெத்தலை பாக்கு எல்லாம் பயங்கர விற்பனையா இருக்கும்.. படம் முடிஞ்ச அடுத்த நாள் பாத்தீங்கன்னா அந்த இடமே ஏதோ மஹாபாரத போர் நடந்த மாதிரி இருக்கும். எங்கே பாத்தாலும் படம் பாத்துகிட்டே புளிச் புளிசுன்னு துப்பி வச்ச வெத்தலை எச்சில்களும் பட்டாணி கடலையின் தொளிகளும் இறைந்து கிடக்கும்.
ஒரு தடவை மே மாதா விடுமுறைகளில் எங்கள் ஊர் ஸ்கூலில் தியேட்டர் மாதிரி தினமும் ஒரு படம் ஓட்டுவார்கள்.. எல்லாம் எம்ஜியார், சிவாஜி ஹிட் படங்கள் தான் பெரும்பாலும் திரையிடப்படும் எங்கள் ஊர்காரவங்களே சில பேர் இதை முன்னின்று நடத்துவார்கள். அப்புறம் டிவிக்கள் வந்த பிறகு, விசிடியில் படம் போடுவது ஒரு வழக்கமாக ஆகிவிட்டது. ஊரில் எந்த விஷேஷம்னாலும் விசிடில படம் தான். கல்யாணம்னாலும் சரி, யாராவது இறந்து போனாலும் சரி போடு மூணு படம் டிவில தான். 89-இல் சிவாஜி தனி கட்சி ஆரம்பித்து ஜானகி எம்ஜியாருடன் கூட்டணி வைத்தார். அப்போது அவர் எங்க ஊருக்கு வருவதாய் இருந்த போது அவர் வரும் வரை கூட்டம் சேர்க்க ரெண்டு மூணு படங்கள் ஓட்டினார்கள். இந்த மாதிரி விஷயத்துக்காகவும் படங்கள் ஓட்டுவது உண்டு..
இந்த மாதிரி விஷயங்களை விட்டால் கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு வேறென்ன பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கப் போகுது.. ஆனால் ஆன்களுக்கு ஒவ்வொரு டீக்கடைகளும் பெண்களுக்கு யாராவது ஒருத்தர் வீட்டுத் திண்ணையும் வெட்டியாய் ஊரில் யாரையாவது பத்தி பேசி பொழிதை கழிக்க இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஊரில் யாராவது ஒருவருக்கு பிரச்சினைனா ஊரே வந்து விசாரிப்பாங்க.. அவங்களுக்கு உறுதுணையா இருப்பாங்க எல்லோரும்... இறந்தவங்க வீட்டுக்கு ஊர்ல இருக்கிற ஒவ்வொரு வீட்ல இருந்தும் ஒரு ஆள் போவாங்க.. அதே மாதிரி அந்த பிணக்குழி பறிக்கவும் அந்த தெருவுல இருக்க ஒவ்வொரு வீட்ல இருந்து ஒரு ஆள் போவாங்க.. இதெல்லாம் எழுதப் படதா சம்பிரதாயம்.
எல்லா மக்களுக்கும் பிடித்த கிடைச்ச ஒரே பொழுபோக்கு வானொலி கேக்குறது தான்.. ஒரு காலத்துல அதில கேக்குறது தான் பாட்டு..செய்தி..விவசாய நிகழ்ச்சி.. இல்லைனா விஷேஷ நிகழ்ச்சிகள்ல கேக்குற பாட்டு தான். அவங்க வாழ்க்கை எல்லாம் பாடல் தான். பெரும்பாலும் எல்லோருக்கும் எல்லாப் பாட்டும் மை செட் குழாய்களில் தான் அறிமுகம். ஏதாவது ஒரு விஷேஷம்னா அந்த தெரு முழுதும் மை செட் கட்டுவாங்க.. காலைல ஐந்து மணிக்கு பாட்டு போட ஆரம்பிச்சா இரவு பத்து பதினொரு மணி வரை இந்த பாடல் தொடரும்.
இவ்வளவு சொன்ன நான் ஏன் என் ஊருக்கு அ.வெள்ளோடுன்னு பேர் வந்ததுன்னு சொல்லவே இல்லியே. ஒரு ஊருக்கு இனிஷியல் இருக்குன்னா அதுக்கு பல காரணங்கள் இருக்கலாம். திண்டுக்கலில் இருந்து மதுரை போற வழில கொடைரோடு தாண்டின உடனே அம்மையநாயக்கனூர்னு ஒரு ஊர் வரும். முந்தி காலத்துல அந்த ஜமீனுக்கு கீழே தான் எங்க ஊர் எல்லாம் இருந்தது. அதனால எங்க ஊருக்கு 'அ'ங்கிற இனிஷியல் வந்ததா சொல்வாங்க.. அந்த காலத்துல எங்க ஊர்ல இருந்து திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், சென்னை போன்ற இடங்களுக்கு கிட்டதட்ட ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்வாங்க.. அதுக்குன்னே ஆங்கிலேயர் ஆட்சில எங்க ஊருல ரயில்வே ஸ்டஷன் வந்தது. அப்போ ஏறுற சுமைகளை பாத்துட்டு வெல் லோடுன்னு சொன்னானாம் ஆங்கிலேயன். அது அப்படியே நிலைச்சு நின்னுடுச்சாம். இப்போ அந்த ரயில்வே ஸ்டஷன் இயங்குறது இல்லை. எல்லா சரக்கும் லாரில போயிடுது எல்லா ஊருக்கும்.
அதே மாதிரி எங்க ஊர் வெத்தலையும் ரொம்ப பிரசித்தி பெற்றது. அந்த காலத்துல, அவ்வையார் வேஷத்துல நடித்த கே.பி.சுந்தரம்பாள் எங்க ஊர் வழியப் போன வெத்தலை வாங்காம போகமாட்டாங்களாம். அந்த அளவுக்கு சுவையா இருக்குமாம் எங்க ஊர் வெத்தலை. அதே மாதிரி எங்க ஊர் திராட்சையும் ரொம்ப பிரசித்தம். திண்டுக்கலுக்கு திராட்சை சப்ளை பண்ணி திண்டுக்கல் திராட்சைன்னு பேர் வாங்க வச்சதுல எங்க ஊரும் ஒண்ணு..
இப்போது கிராமங்களில் விவசாயம் எல்லாம் அழிந்து வருது.. எல்லோரும் பட்டணம் போய் சம்பாரிக்கிறதால விவசாயம் செய்றவங்க எண்ணிக்கையும் ரொம்ப குறஞ்சிடுச்சு. தையல் வேலைக்கு திருப்பூருக்கும் பக்கத்தில் உள்ள துணி மில்களுக்கும் போய் சம்பாரிக்கவே எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். ஒரு பக்கம் நீர் இல்லாமல் எல்லா விளைநிலங்களும் கன்கிரீட் வீடுகளாய் மாறிவருது.
ஆட்சி செய்யும் அரசுகள் இதைப் பற்றி கருத்தில் கொண்டு விவசாயம் செய்பவர்களையும் வியசாயத்தையும் ஊக்குவிக்க நிறைய கருத்தரங்குகளை நடத்த வேண்டும். எந்த அளவுக்கு கணினி நிறுவங்களை கொண்டுவர எல்லா அரசுகளும் முயற்சி செய்கின்றதோ அதைப் போல விவசாயம் போன்ற தொழில்களையும் முன்னேற்ற பாடுபடவேண்டும்.
|