இந்த வாரம் காவிரி நதி நீர் ஆணைய தீர்ப்பைப் ஒட்டிய பதிவுகள் அதிகம் வெளியாகி இருக்கவேண்டும். தமிழகத்தின் பற்றியெரியும் பிரச்சனைகளாக இருப்பவைகளில் முக்கியமானது காவிரி நதி நீர் பிரச்சனை. பல இலட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமான இப்பிரச்சனை 16 ஆண்டுகளாக நீதிமன்றுகளில் வழக்கப்பட்டு, நீண்டகாலமாக வழக்காடப்பட்டு வரும் வழக்குகளில் ஒன்றாக மாறிப்போனாலும் உண்மையில் காவிரி நதிநீர் பிரச்சனை கிட்டத்தட்ட 900 ஆண்டுகால பிரச்சனை என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி. 1146 இல் மைசூர் அரசன் முதலாம் நரசிம்மன் காவிரியின் குறுக்கே செயற்கை குன்றுகளை உருவாக்கி நீர்வரத்தைத் தடுத்தது தொடங்கி இது நீர்ப்பிரச்சனையாக மட்டுமின்றி ஒரு அரசியல் பிரச்சனையாகவும் இருந்துவருகிறது. இந்தியக் குடியரசு ஒன்று ஒருவாகி கூட்டாட்சி மலர்ந்த பின்னும் தனது தேசியநலன்களை முன்நிறுத்துவதில் கர்நாடகம் எந்த நியாயப்பூர்வமான, அரசியல்பூர்வமான, அறிவுப்பூர்வமான அணுகுமுறைகளையும் பின்தள்ளியே வந்துள்ளது. இந்தப் 16 வருட வழக்காடலின் ஊடே காவிரி டெல்டாவின் விவசாயம் சீர்குலைந்ததும், பல இலட்சக்கணக்கான விவசாயிகள் நலிவுற்றதும், உழவு சார்ந்த தொழில்கள் அழிவுபட்டதும், மாநில, மைய அரசுகளின் சரியான கவனத்தை பெறாமற் போனது தன்னை ஒரு விவசாய நாடாக அறிந்துகொள்ளும் இந்தியாவின் முரண்பாடுகளில் ஒன்று. இப்படி பல முரண்பாடுகளில் வாழப்பழகிக் கொண்ட இந்தியமக்கள் இதனால் எல்லாம் வழக்கம் போல அதிர்ச்சியடையவோ கேள்வி எழுப்பவோ இல்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். நவீன தொழிற்துறைகளில் ஒன்றாக மாறிப்போன தமிழ்சினிமாத் துறையில் எழும் பிரச்சனைகள் கூட சில மணிநேரங்களிலேயே அணுகப்படுவதும், தீர்க்கப்படுவதும், காவிரி நதி நீர் பங்கீடு என்ற பிரச்சனை அரசியல் தளங்களில் உண்மையில் பெறும் முக்கியத்துவத்தையே காட்டுகிறது.
காவிரி நதிநீர்ப் பங்கீடு என்பது முற்றிலும் அறிவியல் பூர்வமாகத் தீர்வு செய்யப்படவேண்டியது. உண்மையான அக்கறையும், நடுநிலையினையும் கொண்ட எந்த அரசும் இதை அறிவியல் பூர்வமாக எப்போழுதோ தீர்த்திருக்கமுடியும். நதிநீர் வளத்தையும், அதன் பயன்பாட்டையும் தீர்மானிக்கும் அறிவியற்பூர்வமான அத்தனை வசதிகளையும் கைவரப்பெற்றிருக்கும் நிலையில் இது வெறும் நதிநீர்ப்பிரச்சனையாக இருந்திருக்குமாயின் எளிதில் தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால் அப்படி இல்லாமல் இது இன்னும் பல சிக்கலான முடிச்சுகளை வேறு ஒரு தளத்திலும் கொண்டிருப்பதாலேயே அறிவியற்பூர்வாக அணுகப்படாமல் இருக்கிறது. அப்படி அணுகப்படவேண்டியது தமிழ்- கர்நாடக தேசிய நலன்களின் இணக்கப்பாடுகள்-முரண்பாடுகள் பற்றிய தளம் தான். ஏனெனில் நதிநீர் பிரச்சனையாக தோற்றம் காட்டும் இப்பிரச்சனை உண்மையில் இவ்விரு தேசிய இனங்களில் முரண்பாடுகள் என்ற தளத்திலேயே வேர்கொண்டிருக்கிறது. கன்னடம் தீர்மானமான ஒரு தேசிய இனமாக தோற்றம் பெற்ற காலத்தில் (கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்) இப்பிரச்சனையும் தோன்றி இருப்பது இப்பிரச்சனையின் உண்மையான உள்ளடக்கம் நீர்ப்பங்கீடு என்பது மட்டுமல்ல என்பதைத் தெளிவாகக் காட்டும். ஆனால் இந்நோக்கில் இப்பிரச்சனையை சரியாக அணுகாதவரை இப்பிரச்சனை உண்மையில் அணுகப்படாமலேயே இருக்கும். இதனிடையில் புதிய உருவாக்கமான இந்திய தேசியத்தின் அடிப்படையில் வைக்கப்படும் அணுகுமுறைகள் பலனற்றுப் போயிருப்பதை யாரும் மறுக்கமுடியாத சூழ்நிலையில் இப்பலனற்ற அணுகுமுறை மிகக்கூர்மையான சில கேள்விகளை முன்வைக்கிறது. அதாவது இந்திய தேசியமும் மற்றும் அதன் கையிருப்புச் சட்டமுறைகளும் தேசிய இனங்களின் இடையேயான முரண்கள்-இணக்கப்பாடுகள் என்ற தளத்தைச் சரியாகக் கையாளும் வகையில் முழுமைபெற்றிருக்கவில்லை. இந்நிலையில் முழுமைபெறாத சிகிச்சை முறையை நம்பி மோசமாகப் பாதிக்கப்படும் நோயாளன் ஒருவனைப்போல தமிழ்நாடு இதனால் பாதிக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையையையும் இதனோடு ஒப்பிட்டு நோக்கினால் இதைப் புரிந்துகொள்ள இயலும். இந்நிலையில் இப்பிரச்சனையை அணுகவேண்டிய தேவையும், நிர்ப்பந்தமும் தமிழக ஆட்சியாளர்களுக்கே உள்ளது. தேசிய இனங்களின் உரிமைகள், பொதுவான வளங்களை நியாயமாக பிரித்துக்கொள்ளுதல், சமமான பொறுப்புணர்வோடு வளர்த்தெடுத்தல், பாதுகாத்தல் போன்றவைகளில் இந்திய அரசியல்/ சட்ட அணுகுமுறைகள் மறுசீரமைப்புக்கும், மீளுருவாக்கத்துக்கும் ஆட்படுத்தப்பட்டு இற்றைப்படுத்தப்படவேண்டும். அதனடிப்படையிலேயே இப்பிரச்சனைகள் அணுகப்படவேண்டும். இது நீர்வளங்களைப் பகிர்தல் தொடங்கி, வனவளங்கள், சக்தி ஆதாரங்கள், சூழல் பாதுகாப்பு, மக்கட் தொகை பெருக்கக் கட்டுப்பாடு மட்டுமல்லாது வருங்காலத்தில் வரப்போகின்ற தேசிய இனங்களிடையே ஆன பல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள ஒரு கூட்டாட்சிக்கு உதவுவதாக அமையும்.
காவிரி நீர் ஆணையத்தின் தீர்ப்பை முன்வைத்து ஜடாயு, வெங்கட் ஆகியோரின் பதிவுகள் இப்பூங்காவில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
ஈழப்போராட்டத்தின் வடுக்களை பற்றி 'பாலையூற்று' பேசும் காலத்தே, நாளாந்தமாக அரச வன்முறைகளில் மருத்துவப் பணியாளர்கள் தொடங்கி, பொதுநல ஊழியர்கள் வரையிலான கொல்லப்படுவது தொடர்பாக 'கடத்தப்பட்ட TRO பணியாளர்களுக்கு நடந்தது என்ன?' என்ற பதிவு சுந்தரவடிவேலினால் எழுதப்பட்டிருக்கிறது.
ஜெயபாரதனின் சர்.சி.வி.இராமன் பற்றிய பதிவு அவரைப்பற்றிய அழகான சொற்சித்திரம். கானாபிரபாவின்,யாழ்ப்பாண அகராதி அறிமுகம் தமிழின் மொழிசார்ந்த அறிவியற்பூர்வமான முயற்சிகளில் ஒன்றான தமிழகராதி உருவாக்குதல் பற்றிய நல்ல அறிமுத்தையும் சேர்த்தே வழங்குகிறது. மண்ணில் இருந்து வந்த நம் உடம் பூரணமாக மண்ணுக்கே திரும்ப வேண்டும். அப்போதுதான் நாம் சடங்குகளை சரியாகச் செய்யமுடியும் என்று கூறி கண்தானம் தொடங்கி உறுப்பு தானங்களைக் கண்டிக்கும் மத அடிப்படைவாதப் போக்கு பொது ஊடகங்களையும் ஆக்கிரமிக்கும் வேளையில் பாலாவின் உயிர்கொடுத்த உத்தமர்கள் பதிவு தங்களது உடல்களை மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கிய உத்தமர்களைப் பற்றிப் பேசுகிறது. மாதவிலக்கின் பரிணாமம் பற்றிய கட்டுரையும் தூய்மைவாத, மத உணர்வு சார்ந்த பார்வைக்கு வெளியே நம்மைப் பார்க்கவைக்கும் ஒரு நன்முயற்சி. சில தொழில் நுட்பப்பிரச்சனைகள் காரணமாக பெற்றோர்- கையேடுகள் TMI தளத்தில் கடந்த வாரத்திலும் இவ்வாரத்திலும் வலையேற்றப்படாமல் உள்ளன. அவை விரைவில் வழக்கம் போல வலையேற்றப்படும். இது தவிர திரைப்படம், விளையாட்டு, மொழி, இணைய நுட்பங்கள் மற்றும் உணவு சார்ந்த நல்ல பல பதிவுகள் இவ்விதழில் தொகுக்கப்பட்டிருகின்றன.
வலைப்பதிவரும், இணையத் தமிழின் வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பைச் செய்து வந்தவருமான சாகரன் என்ற திரு கல்யாணின் அகால மரணம் ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பிரிவினைத் தாளாது துயருறும் அவரது துணைவியார், குழந்தை, பெற்றோர், உறவினர்கள், உற்ற நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களையும், அன்னாருடைய நினைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
|