அப்பலேர்ந்து அந்தக் கயவாணிப் பயபுள்ள ஒரு மாதிரியா என்னய உத்து உத்துப் பாக்குறான். மூஞ்சி முச்சூடும் தழும்ப வைச்சுக்கிட்டு சண்டைக்கோழி ராஜ்கிரண் ஸ்டைலுல ஒரு லுக்கு. எதோ அவம் பொண்டாட்டி தாலிய நான் அறுத்தா மாரி ரவுசு காட்றான். எங் காலக்கொடுமை அவனயும் என்னயும் ஒரே றூம்புக்குள்ளாறதான் போட்டு அடைச்சிருக்கு.
நா ரீஜண்டான ஆளுதான். இந்த ஈ.சீ.ஆர். றோட்டாண்ட ஒரு பில்டிங் கட்றாங்க இல்ல… அங்ஙன காட்டுவெயாரோ சாப்டுவெயாரோ என்னா கசுமாலமோ… அங்ஙனதா நமக்கு வேல. வேலன்னா இன்னா சும்மாவா… ஒரு நாளிக்கு எத்னை கல்லு தூக்கணும் தெர்யுமா… கல்லுத் தூக்கித் தூக்கியே ஒடம்பு கல்லு மாரி ஆய்ப் போய்ச்சு. எம் பொண்டாட்டி தேவியும் அங்ஙனதாம் வேலை பாக்குறா. என்னய மாரி நல்ல கலர்ரா ரெண்டு பசங்க. கறுப்புத்தா நைனா அள்கு… இந்தக் கசுமாலங்களுக்கு இன்னா தெர்யும்… செவப்பா பாச்சை மாரி இருக்கறதெல்லாம் அள்கா சொல்லு… ஆங் எங்க வுட்டேன்…?
அல்லாம் இந்தக் கக்கூசால வந்த வெனை நைனா…. ஒரு மன்சனுக்கு கட்ன பொண்டாட்டியால பிரச்னை வர்லாம். புள்ளைகுட்டியால பிரச்னை வர்லாம். அட… வேல பாக்குற எடத்ல பிரச்னை வர்லாம். கக்கூசால பிரச்னை வர்லாமா…? இந்த ஒலகத்துல யாரு கக்கூசுக்குப் போகல சொல்லு… எல்லாப் பயபுள்ளகளும் தலைல தூக்கி வைச்சு கரகாட்டம் போட்ற ஒலக அழகிகளுந்தா போறாங்க. நம்மள மாரி வக்கு வசதி இல்லாதவம் போனா தப்புங்கறாங்க…! இன்னா நா அந்த நாத்தம் புடிச்ச பயலுக மாரி வூட்டுக்குள்ளாற கக்கூஸ் போகல. நம்ம கன்ஸ்டரக்சன் சைடு பக்கத்ல ஒரு பட்டா நெலம் கெடக்கு. அத்த எந்தப் பொறம்போக்கு வாங்கிப் போட்டிச்சோ… அந்தப் பக்கமே தலையக் காட்றதில்ல. பில்டிங்கு கட்ற பன்னாடை குட்சைதான் போட்டுக் குட்த்திச்சு. தின்னு தின்னுப்புட்டு கழிக்கிறது எங்ஙனன்னு அந்த நாதாரிப் பயலுக்குத் தோணவே இல்ல பத்தியா…!
சர்தான்னுட்டு நம்ம பயபுள்ளகல்லாம் விடியறதுக்குள்ளாற அங்ஙன போயி கழிச்சிட்டு வந்துடறது வழக்கமாயிப் போச்சு. சும்மா சொல்லப்படாது நைனா…! கடல் வேற பக்கத்துல இருக்கா… காத்து பிச்சு ஒதறிக்கினு வரும். ஆளு ஒயரத்துல ரெண்டு மூணு ஆமணக்கஞ்செடி வேற அங்ஙன இருக்கு. அதைச் சுத்தி ரவுண்டு கட்டி இருந்துப்புடறது. இந்த தெரு நாய் இருக்குல்ல அது மட்டும் நம்மள சுத்திச் சுத்தி வராம இருந்திச்சுன்னா நல்லாருக்குமேன்னு நெனைச்சுக்குவேன். அப்றம் அதும் பழகிப் போச்சு. இப்பல்லாம் நாய் பக்கத்ல இல்லேன்னா ஒளுங்கா போமாட்டேங்குது. இதுல நம்ம பொண்ணுங்க வேற வாளியும் கையுமா போனாளுகன்னு வையி… லேசில எந்திரிக்க மாட்டாளுங்க. இவ அவனோட படுத்தா… அவென் இவளோட எந்திரிச்சான்னு ஒரே கும்மி. வேல பாக்குற அல்லாரும் போய்ட்டு வர்றதுக்குள்ற சொய்ங்குன்னு விடிஞ்சுரும். பால்காரன்,பேப்பர்காரன், தொப்பை கொறைக்க நடக்கிறவன் அவென் இவென்னு றோட்டு முச்சூடும் களேபரமா ஆய்ப்போய்டும். அதுக்கோசரம் பயந்துக்கிட்டு வர்தோ இல்லியோ காலங்காத்தால போயி ஒரு தபா குந்திக்கினு வர்றது….
இன்னாயா ஒங் கதை முச்சூடும் ஒரே கக்கூசு நாத்தமா இருக்கும் போல்ருக்குன்னு நீங்க சொல்றது பிரியுது. நம்ம பில்டிங்கு பக்கத்ல ஒரு பிளாட்டு இருக்கு. அல்லாரும் கார் வைச்சிக்னு…புசுபுசுன்னு இங்கிலிசிலை பேசிக்னு…நம்ம கமல்ஹாசன் ரேஞ்சுல இருப்பாங்கன்னு வைச்சுக்கயேன். கொஞ்சம் பக்கத்ல வா நைனா… அதுலயும் இந்தப் பொண்ணுங்க இருப்பாளுங்க பாரு… செம கலரு… செம பிகருங்க. அல்லாம் வெண்ணெய உருட்டி உருட்டி வாய்க்குள்ளாற எறிஞ்சுட்டிருப்பாளுகளோ என்னவோ… தொடற வெரல் வளுக்கிடுமோங்கற மாரி கும்முன்னு இருப்பாளுங்க. ஜீன்ஸ் தொப்பூளுக்குக் கீழை ரெண்டிஞ்சி எறங்கித்தான் நிக்கும். சர்ட்டுங்கற பேர்ல ஒண்ணு மாட்டிருப்பாளுங்க. அதென்னமோ இடுப்பை மறைக்கற வேலையெல்லாம் செய்யாது… ஒப்புக்கு இறுக்க்க்கமா ஒட்டிக்கிட்டிருக்கும். அப்டியே பாக்கறவன காலி பண்ணிடுவாளுக. எங்க பொண்ணுகளே தொறந்த வாய்ல எலையான் போற மாரி அவளுகள ‘ஆ’ன்னு பாப்பாளுங்க. யேண்டி அவ தலயப் பாத்தியா யேண்டி அவ காலப் பாத்தியான்னு பேன் பாக்கிறப்பல்லாம் பேசிக்குவாளுங்க.
ம்… அந்த பிளாட்டுல இருக்கற பேமானிங்களுக்கு நாங்க அந்த நெலத்ல கக்கூஸ் போறது பிடிக்கலன்னு வைச்சுக்க. நாத்தமடிக்குதாம். வூட்டுக்குள்றயே நாறுதாம். கக்கூஸ்னா நாறத்தாஞ் செய்யும். அவெங் கக்கூசு மட்டும் நாத்தமடிக்காதா… சாப்டப்றம் சென்ட்டையா குடிக்கிறாங்க… இவங்க மூத்ரம்லாம் பன்னீராவா போகுது… நாம பள்ளிக்கொடம்னு ஒரு மண்ணும் பாத்ததுல்ல தான். கிராமத்துல சத்துணவு போட்றாங்களேன்னு கெய்வி கொண்டுபோய் உட்டுட்டு வர பின்னாடியே ஓட்யாந்து வாய்க்கால்ல உழுந்து கொளப்பிக்கிட்டிருந்தவன்தானே நானு. ஒரு கேழ்வி கேக்றன் நீயே சொல்லு நைனா… எத்தோ சன்நாயகம் மசிர்னு பேசிக்றாங்க… இந்த நாட்ல கக்கூசுக்குப் போனா குத்தம்னா இன்னாத்தப் பண்றதுன்னு அந்த எசமாடன் கேக்கட்டுமே.
பில்டிங்கு ஓனர் கைல சொல்லிப் பாத்திருப்பானுக போல… இப்டி இவங்களயெல்லாம் இங்ஙன கழிக்க வேண்டாம்னு சொல்லிவையின்னு… மொதல்ல அவென் போடாங்கொய்யாண்ணு இருந்துட்டாம் போல. கொஞ்ச நாள் ஜாலியாப் போச்சுன்னு வையி. அப்றம் பில்டிங் ஓனர என்ன வெரட்டு வெரட்டினாங்களோ தெர்ல… ரெண்டு நாள்ல ரெண்டு கக்கூஸ் கட்டி நீங்க இங்ஙனதாம் போணும்னு சொல்லிப்புட்டான். சின்னஞ்சிறுசுகளுக்கெல்லாம் சிரிப்பாணி அள்ளிக்கிட்டுப் போது. அதெப் போயி எட்டிப் பாக்கிறதும்… அதுக்குள்ள ஒளிஞ்சு வெள்ளாடறதும்னு… நம்ம பொம்பளைங்க வேற வழிச்சிக்கிட்டு சிரிக்கிறாளுங்க… அய்ய…!நாலுக்கு நாலு அளவுல சுத்த வர சுவரு… முன்னாடி கதவு வேற… இதுக்குள்ற கக்கூஸ் போணுமான்னுட்டு… தெரு நாயி… ஆமணங்கஞ் செடி… அப்றம் சொய் சொய்யினு அடிக்ற காத்து இதெல்லாம் வுட்டுட்டு உள்ற இருக்கணுமாம்ல உள்ற…! படிச்சவனெல்லாம் நட்டுக் களண்ட பயபுள்ளகதாம் போல்ருக்குன்னு நம்ம பயலுவ பேசிக்னாங்க. யாராவது ஒர்த்தர் போயிப் பாருங்களேண்டான்னு நம்ம மாடசாமிதான் நயமா சொல்லி என்னை அன்ப்பிச்சான். அதயேங் கேக்கற கண்ராவிய ஒரு நிமிட்டுக்கு மேல அந்தக் கொகைல இருக்க முடியல. போதும்டா சாமின்னு பிய்ச்சுக்கிட்டு வெளிய ஓடியாந்துட்டேன்.
அப்றம் என்ன ஆச்சின்னா நாங்கல்லாம் வளக்கம் போல காத்தோட்டமா கக்கூசுக்குப் போக ஆரம்மிச்சோம். போறது நாங்க… எரியுறது என்னமோ அந்த வெள்ளத்தோலு வியாதிக்காரங்களுக்குப் போல. யெங்களக் கண்டாப் போதும் எத்தோ பாக்கக்கூடாததப் பாத்தாப்ல கறுப்புக் கண்ணாடிய எடுத்துப் போட்டுக்னு கமுக்கமா போய்ட்டே இருப்பானுவ. நம்ம ஓனரு வேற தாவாங்கட்டைல புட்ச்சு கெஞ்சிப் பாத்துக்னான். போடாங் கஸ்மாலம்… போயி ஒஞ் சோலியப் பாருன்னு போய்க்னே இருந்தோம்.
அப்பால என்ன ஆச்சுன்னா திடீர்னு ஒருநா சுத்தி சொவரு எழுப்பிட்டானுக. பகீர்னு ஆய்ப்போச்சு. அட பேதில போவானுகளே… பெருவியாதி பிடிச்சவனுகளே… ஒரு மன்சன் கக்கூஸ் போறது பொறுக்கலியா ஒங்களுக்குனு கொதியேறிப் போச்சு. நம்ம வூட்டுப் பொம்பளைங்க கக்கூஸ் முன்னாடி வாளியோட வர்சையா நிக்றதப் பாக்க கண்ல ரத்தம் வராத கொற. நம்ம தோஸ்துக நாலஞ்சு பேரு மதில ஒடைச்சுட்டாப் போச்சுங்கறாங்க. நாமதாஞ் செய்தம்னு தெரிஞ்சு போச்சின்னு வையி… அப்றம் போலீசு கேசு ஆயிப் பூடும்னு நாந்தான் பசங்களை அடக்கி வைச்சேன். நாமதான் கொஞ்சநாள்ள போயிடப் போறம்ல அப்றம் எதுக்குடா கக்கூசும் கஸ்மாலமும்னு…நாங் கொஞ்சம் விசயகாரந்தான்னு அவங்களுக்குத் தெர்யும். அவனுகளும் வாலைச் சுருட்டிக்னு ஒளுங்கு மர்யாதயா அந்தக் கொகைல மொறைவைச்சு கழிஞ்சிட்டிருந்தானுவ.
அன்னிக்கு ஏதோ கடுப்பாயிப் போச்சு. தேவி வேற ஏதோ தொணதொணங்றா. அப்டியே தலைமயிர்ல புட்ச்சு ஒரு லாவு லாவி வுட்டேன். ஈரச்சேலைய சொவத்துல அடிச்சாப்ல பொத்தக்னு ஒரு சத்தம். அவ மண்டை ஒடைஞ்சு போச்சு. ஒன்னைய வாரிப் பெருக்க வயித்தால போகன்னு லபோதிபோன்னு வயித்ல அடிச்சிக்னு ஒரே சத்தம். நா நேர டாஸ்மாக் பக்கம் போயி ரெண்டு உள்ள தள்ளிக்னு வந்துட்டேன்.
யேண்டி இவளே… ஒங்கப்பனை பாம்பு புடுங்க… ஒங்காத்தாளை நாயி புடுங்க… ஒன்னய… இப்டி மன்சுக்குள்ள பேசிக்கிட்டு வந்துக்கிட்டிருந்தனா… ஒரு நாயி… பணக்கார நாயி… சர்ருன்னு மெதப்புல வந்து எம்மேல காரால இட்ச்சுட்டான். ங்கோ… ன்னு கெட்டவார்த்தையால நான் திட்ட அவென் இங்கிலிபிசில வெளுத்து வாங்க… ஒரே கூட்டம்… அப்பால என்ன தோணுச்சோ என்னவோ ஒரு கல்லை எட்த்து வுட்டேம் பாரு காரு கண்ணாடியப் பாத்து… ஜிகிபிகி ஜிகிபிகின்னு சிரிச்சுக்கிட்டே கண்ணாடி ஜல்லிக்கல்லு மாரி ஒடஞ்சுபோச்சு. அவனானா காரைச் சுத்தி ஓட்றான்… ஓ… மையி கோட்டு ஓ… மையி கோட்டுன்னு ஒரேயடியா பினாத்தறான். டேய் களவாணிப் பயலுவளா என்னய கக்கூஸ் போவுடாம பண்ணீங்கல்ல… சாவுங்கடா நாயிகளான்னு எனக்கானா ஒர்ரே சிரிப்பு அள்ளிக்கிட்டுப் போவுது.
அதுக்கப்றம் சத்தம் கேட்டு ஒடைஞ்ச மண்டையோட தேவி ஓடியாந்தா. மாடசாமியும் மன்னாரும் வந்தாங்க. அப்றம் போலீசு வந்திச்சு. அல்லாரையும் பாத்தவுடன போதை தெளிஞ்சுபோச். என்னய அள்ளிப்போட்டுக்கினு இங்ஙன கொணாந்து கடாசிட்டாங்க. இங்ஙனயாச்சும் வெளில கக்கூஸ் போக வுடுவாங்களான்னு தெர்ஞ்சுக்கலாம்னா இங்க ஒரு களவாணிப்பய என்னய என்னயப் பாத்துக்கிட்டிருக்கான். அவனுக்கும் என்ன கக்கூஸ் பிரச்னையோ என்னமோ அந்த எசைமாடனைக் கேட்டாத்தான் தெர்யும்.
|