இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளியில் பொங்கல் விழா Print E-mail
அ. மாரியப்பன்   

இப்படியும் கொண்டாட முடியுமா பொங்கலை? தமிழையும் தமிழ் உணர்வையும் நம் கலைகளின் சிறப்பையும் பொங்கல் சுவையையும் உழைப்பின் மணத்தையும் சேர்ந்தியங்கும் அறத்தையும் ஒரு சேரக் காணும் வாய்ப்பை வழங்கியது திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளி. சனவரி 26, வெள்ளிக்கிழமை காலையில் வகுப்புக்கொன்றாக பதினைந்து பானைகளில் பொங்கல் பொங்கியது.

மொட்டு, மலர், ஒன்று என ஓலைக்குடிசையில் தொடங்கப்பட்ட மூன்று வகுப்புகள் பெற்றோர் மற்றும் சான்றோர் ஆதரவுடன், வெளிநாடுகளிலிருந்தும் உதவியோர் துணையோடு மேலும் சேர்ந்த குழந்தைகளுக்காக பல பிரிவுகளாக கல் கட்டிடமாக இன்று பதினைந்தாக விரிந்த கதையை எளிமையாக எடுத்துரைத்தார் விழா முதல்வர் திரு.பழநியாண்டவர் அப்புசாமி.

making_pongal


பெற்றோர் தம் பிள்ளைகளின் வகுப்பாசிரியரோடு இணைந்து பொங்கலிட்ட போது மேடையில் நாயனமும் தவிலும் முழங்கின. "தமிழை கல்வி மொழியாக்கு, தமிழ் மொழி பேசட்டும் என் பிள்ளை நாக்கு.." குரலெடுத்து பாடியது திருப்பூர் செம்பருத்தி கலைக்குழுவினர். மலைகளில் நாம் வாழ்ந்த போது பொருட்களை காவடியில் வைத்து ஏற்றிச் சென்ற வாழ்வியல் தேவை கலையாக மலர்ந்த வரலாற்றை காவடியாட்டம் நினைவுறுத்தியது. வாழும் மனிதன் வாழ்வியலுக்கான போராட்டத்தினூடே சமநிலை தவறாமல் தன் எல்லைகளை விரிவாக்குகிறான். தன்னால் இன்னும் இன்னும் முடியும் என்பதை தனக்குத்தானே உறுதிப்படுத்திக்கொள்கிறான். எல்லைகளை விரிவாக்க காண்போரையும் அழைக்கிறான். துள்ளியாடும் கால்களும், காற்றை அளையும் கைகளும், காவடியை தாங்கிய தோள்களும் வியர்வை பெருகும் தலையும் வடியும் கழுத்தும் இயங்கிய ஒத்திசைவில் சுழன்று சுழன்று ஆடியது காவடி அக்கலைஞனின் உடலெங்கும்.

feast 


தாளச்சத்தத்தினூடே சட்டென உயரும் குலவை ஒலி பால் பொங்கிற்றென்பதை அறிவிக்கும். மேடையில் தொடர்கிறது ஆட்டமும் பாட்டும். கீழே பானையில் கொதிக்கிறது அரிசியும் வெல்லமும். தமிழர் கலைகளின் செழுமையை ஆடி அறிவிக்கும் பள்ளிப்பிள்ளைகளின் கரகாட்டமும், ஒயிலாட்டமும். மறுபடியும் உயரும் குலவை. இப்போது பொங்கியது இன்னொரு பானை.

பொங்கிய இந்தப் பானையில் என்னதான் இருக்கிறது? ஒவ்வொரு குழந்தையும் தன் பங்கிற்கு வீட்டிலிருந்து கொண்டு வந்த அரிசியும் வெல்லமும் பிற பொருட்களும், தன் வகுப்பு பொங்கல் சுவைக்க வேண்டும் என ஆசிரியரும் பெற்றோரும் சேர்ந்துழைத்த பயனும் கலந்து மணம் வீசி பங்கெடுத்த அனைவருக்கும் பசியாற்றக் காத்திருக்கிறது அப்பானை.

உழைப்பின் பயனை உண்ணப்போகிறோம். உழைப்பைக் கொண்டாடாமலா? ஆசிரியரும் பெற்றோரும் இணைந்து வட்டமாய் ஆடி கும்மியடித்தார்கள். "ஓலையக்கா கொண்டையிலே ஒரு கூட தாழம்பூ..." இப்படி ஆரம்பித்த பாடல் ஓலையக்காவின் பாடுகளை பாடித் தொடர்ந்தது. பூப்பறிக்கும் விழாவில் பெண்கள் ஆற்றங்கரையில் கூடி ஆடும்போது பாடுவது என அருகிருந்தவர் விளக்கினார். பாடலோடு மேளமும் சேர்ந்து வேகம் எடுத்து தணிந்தது.

 

karakam

ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று சேர்ந்தன பொங்கல் பானைகள். முதலில் குழந்தைகள். வரிசையாய் அமர்ந்து பொங்கலும் அன்பர்கள் கொடையளித்த பொரியும் முறுக்கும் கரும்புமாக அவர்கள் சாப்பிட்டபோது ஓடியாடி பரிமாறினார்கள் பெற்றோர். பிள்ளைகள் பசியாறிய பின் பெற்றோரும் வந்திருந்த பெரியோரும் உற்சாகம் பொங்க தம் உழைப்பின் பயனை ஒன்றாய் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.

விழா முடிந்து மெல்ல கூட்டம் கலைந்து கொண்டிருந்த நேரம் ஒரு குழந்தை தானாகவே ஒலி வாங்கியை எடுத்து பள்ளியில் பயிலும் பாடலை உடலசைத்து பாடிக்கொண்டிருந்தது. விழாவில் எடுத்த புகைப்படங்களை கணினி அறையில் அமர்ந்து இறக்கி விட்டு தங்கராசு ஐயாவிற்கு காட்டலாம் என்று தேடிய போது அலுவலக அறையில் அடுத்த வாரத்திற்கான பாடத்திட்ட விவாதத்தில் இருந்தனர் ஆசிரியர் அனைவரும்.  இப்படியான தமிழ்ப்பள்ளி எப்படி சாத்தியமாயிற்று இவர்களுக்கு என்று கேட்ட உடன் வந்த நண்பனை அழைத்துக்  காட்டினேன், வீட்டிற்குள் முடங்கி தொலைக்காட்சி பார்த்து, உறங்கியெழுந்து முடிந்து போகும் பொங்கல் பண்டிகையை ஒரு சமூக விழாவாக்கி, ஓடியாடி உழைத்து, வந்திருந்தவரை அகம் மகிழ அனுப்பி வைத்துவிட்டு, அடுத்த வாரத்திற்கான திட்டமிடலில் ஈடுபட்டிருந்த அவர்களை.

kummy 


எழுந்து வந்த தங்கராசு ஐயாவிடம் நண்பனின் அடுத்த கேள்வி. "ஐந்தாம் வகுப்போடு முடிச்சிட்டு அனுப்பி வச்சிடுவீங்க. அதுக்கு மேல அவங்க கஷ்டப்படுவாங்களா இல்லயா?" சென்ற ஆண்டு  வேலை மாற்றலான போது சென்னையில் நந்தன் படித்த இடிக்கப்பட்ட பாவாணர் பள்ளிபோல் கோவையில் தமிழ்ப்பள்ளி தேடி கிடைக்காமல் திருப்பூர் வந்து பார்த்த பின் நானும் இப்படி ஒரு கேள்வியை கேட்டதும் இங்கே கொடுக்கப்படும் தொடக்கக் கல்வி அவர்களை தயார்படுத்தும் என்றவர் பதில் சொன்னதும் நினைவில் நிழலாட இப்போதவர் என்ன சொல்லப் போகிறார் என காத்திருந்தேன். அவர் சொன்னார் "இப்படியொரு பள்ளியை உருவாக்க முடிந்திருக்கிறது. இன்னும் முடியும்".

காவடி சுழல ஆரம்பித்தது எனக்குள். விடை பெற்று வண்டியில் கோவை திரும்பிக்கொண்டிருந்த போது பள்ளியை பற்றியே பேசிக்கொண்டிருந்தாள் நண்பனின் மனைவி. "உங்களுக்கு தினமும் கோவைக்கு வேலைக்கு போய் வர கஷ்டமா இருந்தாலும் அடுத்த ஆண்டு ஆரம்பா குட்டி பள்ளிக்கு போக ஆரம்பிக்கிறப்போ இரண்டு பேரையும் இந்தப் பள்ளியில சேத்துருங்க"  சொல்லிக்கொண்டிருந்தாள் அவள். பள்ளியில் ஓடியாடி வேலை செய்து, சிறு குழந்தை போல் உற்சாகமாய் இருந்த அனு கிளம்பியதிலிருந்தே எதுவும் பேசாமல் வெளியில் எங்கோ வெறித்தபடி  அமர்ந்திருந்தாள். "சஞ்சனக்க சனக்கனக்க..." தாளம் போட்டபடி நந்தன் உச்சத்தில் "னகனகனகனக" என்று முழங்கினான். "ஊ ஊ" என்று குலவையிட முயன்று கொண்டிருந்தாள் ஆரம்பா.

திடீரென்று குலவையை நிறுத்திய ஆரம்பா சாலையில் கண் பதித்து வண்டியோட்டிக் கொண்டிருந்த என் முகம் திருப்பிக் கேட்டாள் "அப்பா அப்பா, அம்மா ஏம்பா அழுவுது?"

திரும்பிப் பார்க்கிறேன். அவசரமாய் கைக்குட்டையால் கண் மறைக்க முயன்றவளிடம் "பால் பொங்கிருச்சா அனு" எனக்கேட்டேன் நான். 

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)