இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
யாழ்ப்பாணச்சாதியும்-ஈழத்தமிழரும் Print E-mail
மீறல்   

இப்படியொரு பதிவு போடும் துரதிஸ்டமான நிலையில் நாம் இன்றைக்கும் இருக்கிறோம் என்பது வேதனையானதுதான். அழுக்கு வெளிப்படையாகக் தெரியும் கீழைத்தேய மனிதர்களைத் தாண்டி வாசனைகளால் நாற்றம் மறைக்கும் மேலையத்தேயத்தில் இருந்து கிளம்பும் ஈழத்தமிழரின் சாதிய நாத்தம் சென்னைத் தமிழன் மூக்குவரை வருகிறது.

இன்றைக்குப் பெண்ணியம் பேசுவதும் சாதியம் பேசுவதும் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்கும் பிரபல்யப்படுத்துவதற்குமானவையாக மாறிவிட்டன. ஆனால், தங்களை அறியாமல் வெளிப்படும் ஆணாதிக்கம் போல, ஆதிக்கசாதித்திமிர்த்தனம் அல்லது எதோ ஒரு தனம் வெளிப்பட்டு விடுகிறது. இப்போது தமிழ்மணத்திலே சிலருக்கு நடந்ததும் அதுதான்.

உணர்வுகள் எண்டொரு வலைப்பூ அதில அவர் சோழர், நாவலர், வெள்ளாளம் எண்டு சொல்லுகிறவற்றுகெல்லாம் எதிர்வினைக்கும் கூட்டமும் சார்வினைக்கும் கூட்டமும் தமிழ்மணத்தில் மல்லுக் கட்ட ஆரம்பித்திருக்கிறன.  இதில பேசுற நிறையப் பேருக்கு ஈழமும் தெரியா;  அங்க இப்ப வரைக்கும் சாகிறவரின்ர அந்த மண்ணை விட்டு வெளியேற மனமில்லாத மக்களிண்ட வலியும் தெரியா; இன்னும் சொல்லப் போனால் போராட்ட ஆரம்பமும் தெரியா .....

ஈழப்போராட்டம் என்பதே யாழ்ப்பாணத்து உயர் சைவ வெள்ளாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதை வரலாறு தெரிந்த யாரும் மறந்து விட மாட்டார்கள். "சைவமும் தமிழும் தனது இரு கண்கள்" என்று சொன்ன நாவலரும் சிங்களவர்களுக்காக வாதாடி சுதந்திரமும் பெற்றுக் கொடுத்த சேர்.பொன்.அருணாசலம், சேர்.பொன்.இராமநாதன் ஆகியோரின் வழியில் வந்த வெள்ளாள மக்களே சிங்கள அரச பயங்கரவாதத்திற்கெதிரான மிதவாத அரசியலிலும் உச்சக் கட்ட தலைவர்களாக இருந்தனர்.

சிங்கள அரசின் சிங்களம் மட்டும் சட்டம் முதல் தரப்படுத்தல் வரை சகலவற்றினாலும் நேரடியாகப் பாதிக்கப்பட்டவன் படித்த யாழ்ப்பாண சைவ வேளாளத்தமிழனே. ஆனால், அது பொதுப்பிரச்சனையாக்கப்பட்டது. உண்மையில் இது தமிழருக்கெதிரான பிரச்சனை என்பதில் எனக்கு மாற்று இல்லை. சாதிரீதியாக அடக்கப்பட்ட தமிழன் படித்து வருகிறபோது அவனுக்கும் இந்தப் பிரச்சனை காத்திருந்திருக்கும். ஆக, இஃது ஒரு பொதுப்பிரச்சனைதான். சகல போராட்டங்களிலும் வெள்ளாளர் ஏன் முதன்மை பெற்றிருந்தார்கள் என்பதை விளக்கவே இதனைச் சொன்னேன்.

மிதவாத அரசியலுக்குப் பிறகு 80 களில் வந்த ஆயுதப் போராட்ட அரசியலில் வெள்ளாள சாதியில் இல்லாத இயக்கத் தலைவர் என்றால், அது பிரபாகரன் ஒருவரே. ஆனால் அவரும் கூட தங்களை வெள்ளாளருக்கு நிகரானவர் என்று சொல்லும், முக்குவர், திமிலர் உள்ளிட்ட மீனவ சாதியினரை தன்னுள் இற்றைவரைக்கும் சேர்த்துக் கொள்ளாத, கரையார் சமுகத்தவரே. பிற்பாடுகளில் பல்வேறு இயக்கங்களிலும் போராளிகளாகப் பல்வேறு சமூகப் பிரிவினரும் இணைந்து கொண்டார்கள். தோழர் புஸ்பராசா ஒரு தடவை சொன்னார், "எனது பார்வையில் ஓரளவு சாதியம் குறித்து சரியான பார்வை கொண்டவர் பிரபாகரன் மட்டுமே."

விடுதலைப்புலிகளின் முழுமையான ஆளுகைக்குள் யாழ்ப்பணம் நிர்வகிக்கப்படுகையில் இச்சாதியநிலைப்படுதலை ஒழிப்பதற்குச் சாதிபார்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது சாதியை அழிப்பதற்கு பதிலாக ஒளித்தது. அதாவது யாழ்ப்பாண வெள்ளாளர் புலிகளின் கண்களில் வெளிப்படையாகப் படாமல் சாதியை ஒளித்து (மறைத்து) வைத்தனர். வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லும் மூட்டை முடிச்சுகளோடு ஒளித்து வைத்த சாதிய மூட்டையையும் தாங்கள் போகும் ஊர்கள் தோறும், நாடுகள் தோறும் கொண்டு சென்றனர்.

இந்தியாவில் இந்து ஒழிப்பு என்பதே சாதி ஒழிப்புக்கான முதல் முயற்சி. ஆனால், ஈழத்தில் நடக்கும் போரில் தமிழ் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ள சைவ அல்லது இந்து அடையாளத்தை முன்னிறுத்த வேண்டிய முரண் அபத்தம் இருக்கிறது (இதற்கும் சின்ன வயதில் அதிகம் கருத்தியல்களை உள்வாங்கியிருக்காத ஒரு போர்வீரனான பிரபாகரன் கோயிலில் கலியாணம் முடித்ததற்கும் முடிச்சுப்போடுவது தேவையற்றது.) சாதிய அழிப்புபற்றிய ஒரு பார்வை பிரபாகரனிடம் இருந்தது. எனினும், இன்றுவரை விடுதலைப்புலிகளால் அதில் வெற்றிகாண முடியவில்லை. ஆனால், ஒப்பீட்டளவில் சாதியம் குறைந்துள்ளது. என்றாலும், ஒரு போராட்ட சமூகத்தில் அஃது இத்துணை வலுவாக இருப்பது என்பது 60 களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் உச்சம் பெற்ற சாதியெதிர்ப்புப்போராடங்களுக்கான தேவை இன்னும் முடிந்து விடவில்லையென்பதையே காட்டுகிறது.

அதற்காக பிரான்ஸில் வதியும் சிலர் சொல்வதுபோல் ஈழத்தில் முதலில் நடக்கவேண்டியது சாதியப் போராட்டமே, அப்புறம்தான் இனப் போராட்டம் என்ற விடயத்தில் என்னால் ஒத்துப் போக முடியாது. சாதி ரீதியாக ஒடுக்கப்படும் மக்கள் பற்றிய எந்த விழிப்புணர்வுமற்று ஈழப்போராட்டத்தை ஆரம்பித்தபோது இருந்த சூழல் அல்ல, இப்போது இருப்பது. இப்ப நாங்கள் சாதியப் போராட்டத்தை முதலில் முன்னெடுக்க முனைவது புத்திசாலித்தனமற்றது. ஆனால், புலிகள் சாதியம் இன்னும் இருக்கிறது என்பதை விளங்கி சரியான நடவடிக்கை எடுத்தாகவேண்டும். அதற்குப் புலிகளுக்கு ஆலோசனை சொல்ல வேண்டும். முக்கியமாக அவர்கள் அந்த ஆலோசனைகளை உள்வாங்க வேண்டும்.

இப்போது, இந்த புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கட்டிக் காக்கப்படும் சாதிதான் ஒருகாலத்தில் ஒரு தீர்வு ஈழத்தமிழருக்குக் கிடைக்கிறபோது ஈழத்தில் ஆபத்தைக் கொண்டுவரும்.

இன்னுமொரு விடயம், ஒரு போராட்ட சமூகம் போரியல் தவிர்த்து கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எவ்வளவு பலவீனப்பட்டு போயிருகிறது என்பது அரைகுறை அரசியல் அறிவோடு தமிழ்மணத்தில் பேசுகிற சிலரைப் பார்க்கிறபோது தெரிகிறது (என்னையும் சேர்த்துதான்) போரியல் வாழ்வின் அரசியலைக் கூட நாம் புரிந்து விடாதவர்களாக இருக்கிறோமோ என்று கூடத் தோன்றுகிறது.

உண்மையில் இன்றைக்கும் சைவ வேளாள மரபில் இருந்து யாழ்ப்பாண சமுதாயம் மாறவில்லை. கடந்த பேச்சுவார்த்தைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் எழுப்பப்பட்ட சில எச்சரிக்கை ஒலிகளுள் சாதியமும் பெண்ணியமும் முக்கியமானவை. இதை ஆரூரான் உள்ளிட்ட அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

புலியெதிர்ப்பு, புலிப்பாசிசம் பேசியவை எழுதும் சாதியச்செருக்கும் கருணா போன்றவர்களை சனநாயகவாதிகளாக அங்கீகரிக்கும் போக்கும் ஒரு புறத்தில் பெரும் சாபக்கேடாய் மாறிப் போயுள்ள அதே நேரத்தில் முட்டாட்டனமாக புலியாதரவென்று கூறிக்கொண்டு அரைவேக்காடுத்தனமாகவும் அசிங்கமாகவும் பேசுவது என்பதும் எமது ஈழப் போராட்டத்தில் இந்தக் கணம் வரை செத்துக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்கு குளிரூட்டப்பட்ட தேசங்களில் இருந்து யுத்த முடிவுகளை கேட்கத் துடிக்கும் நாம் செய்யும் துரோகம் எனகிற என் கருத்தினை உங்களால் மறுக்கவியலுமா?

நணபர்களே, உங்களுக்கு பொழுது போகவில்லையென்பதற்காக விளையாடுகிற விடயமல்ல. இது ஒரு தொகை மக்களின் வாழ்வியல் உரிமைப் போர். அதன் அரசியல் முதிர்ச்சியின்மைகளும் பலவீனங்களும் வெளிப்படையானவை. பலவீனங்களைக் களையவேண்டிய தேவைக்கு ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம். அவற்றைச் செய்யுங்கள்; வெறும் வசைபாடல்களில் இவையனைத்தையும் வீணடித்து விடாதீர்கள்.

 

http://meeralkal.blogspot.com/2007/02/blog-post.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)