|
அருள் செல்வன் கந்தசுவாமி
|
பிரான் அலன் எனும் ஐபிஎம்மில் பணிபுரியும் பெண்மணி இந்த ஆண்டின் (2006) டூரிங் பரிசைப் பெறுகிறார் . டூரிங் பரிசு என்பது ஒவ்வொரு ஆண்டும் தரப்படுவது. அதைபெறுபவர்கள் தம் வாழ்நாளில் கணினித் துறைக்காக ஆற்றிய சேவைக்காகவும் கண்டுபிடிப்புகளுக்காகவும் வழங்கப்படுகிறது. இது பிரிட்டனின் கணினியாளரான டூரிங் அவர்கள் நினைவாக 'கணினிப் பொறி கூட்டமைப்பினால்' தரப்படுகிறது. பிரான் அலன் இப்பரிசைப்பெறும் முதல் பெண்மணி ஆவார்.

கணினித் துறையில் பிரானின் பங்களிப்பு உயர் செயல்திறம் மிக்க கணினிகளை ஆக்க உதவியதாக கருதப்படுகிறது. கணினிகளில் செயல்திறம் என்பது குறிப்பிட்ட காலத்தில் எத்தனை கணிப்புகளை அவை நடத்திக் காட்டும் என்பதைப் பொறுத்தே அளவிடப்படுகிறது. அதற்கு ஏதுவாக நாம் ஏறக்குறைய மானுட மொழியில் எழுதும் நிரல்களை பொறிமொழிக்கு மாற்றக்கூடிய தனியங்கி நிரல்தொகுப்புகள் வேண்டும். இவற்றை கொம்பைலர் என்று அழைப்பர். இத்தகைய மொழிமாற்று நிரல்தொகுதிகளை வடிவமைப்பதில் பிரானின் ஆய்வுகளும் முயற்சிகளும் பெரிதளவும் துணை புரிந்தன. இத்தகைய திறம்மிக்க மொழிமாற்று நிரல்களின் உதவியுடனும், ஒரு தீர்வைத்தரும் பெரும் நிரல்தொகுதியை பல பகுதிகளாக்கி பல சில்லுகளில் ஒவ்வொன்றாக ஒரே வேளையில் ஓட்டும் இணைகணிப்பு நிரல்களின் உதவியுடனும், உயர்திறக்கணிப்புகள் இக்காலத்தில் எளிதாக செய்யப்படுகின்றன. இவற்றிற்கான பல ஆதார பங்களிப்புகளைச் செய்தவர் என்றமுறையில் அவருக்கு இவ்வாண்டின் பரிசு கிட்டியுள்ளது. இச்சமயத்தில் உலகின் முதல் நிரலாளரும் ஒரு பெண்தான் (அடா லவ்லேஸ்) என்பதை நினைவுகூர்வோம்.
இணைச்சொற்கள்:
டூரிங் பரிசு: Turing Prize
கணினிப் பொறி கூட்டமைப்பு: Association of Computing Machinery
உயர்திறக் கணினி : High Performance computer
செயல்திறம்: Performance
கணிப்புகள்: Computations
பொறிமொழி: machine language
நிரல்தொகுப்பு: program
இணைகணிப்பு: parallel computation
(நிழற்படம் உரிமம்: http://www.computerhistory.org)
http://andaiayal.blogspot.com/2007/02/blog-post_22.html
|