|
புராணப் புனைவுகளும்...புண்பட்ட பெண்ணிலையும் |
|
|
|
தமிழ்நதி
|
கம்பர் இராமாயணத்தை எழுதினார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைத் தமிழுக்குத் தந்தார். வியாசர் மகாபாரதத்தைத் வழங்கினார். மனுதர்ம சாத்திரத்தை மனுவேதான் படைத்தார். சந்தேகமேயில்லை! ஆனால்… யாரும் பெண்ணை எழுதவில்லை. உண்மையில் அவள் பேசிய வார்த்தையை எழுதவில்லை.
கம்பரின் ராமன்: சீதை! நீ இவ்வளவு நாளா ராவணனோடை இருந்தனியெல்லோ… நீ எப்பிடிக் கற்போடை இருந்திருக்க முடியுமெண்டு ஒரு வண்ணான் கேக்கிறான். நான் இந்தக் குடிமக்களுக்கெல்லாம் அரசன். நீ பத்தினிதான் எண்டு அவையளுக்கு நான் நிரூபிக்காட்டில் நாளைக்கு என்னை நாயெண்டும் மதிக்கமாட்டாங்கள். நீ குறைநினைக்காமல் கொஞ்ச நாளைக்குக் காட்டிலை போய் இரு.
கம்பரின் சீதை:நீங்கள் சொல்லி நான் எண்டைக்காவது மாட்டனெண்டு சொல்லியிருக்கிறனா… நீங்கள் கிணத்துக்கை விழு எண்டால் எந்தக் கிணத்துக்கை எண்டு கேக்கிறவளெல்லோ நான்… இப்பவே போறன்.
சீதையைக் கம்பர் பேசவிட்டிருந்தால்: நீங்கள் அயோத்திக்கு மகாராசாவாய் இருக்கிறதுக்கு முதல்லை ஒரு மனுசனாய் இருங்கோ. ஒரு வில்லை முறிச்சு சூரத்தனம் காட்டினவுடனை நீங்கள்தான் எனக்கு எல்லாம் எண்டு உங்களுக்குப் பின்னாலை நான் வரேல்லையே… உங்கடை சின்னம்மா கைகேயிக்கு வயசு போன காலத்திலை உங்கடை அப்பர் குடுத்த சத்தியத்தைக் காப்பாத்த வேணுமெண்டதுக்காக நீங்கள் எல்லாத்தையும் விட்டிட்டுக் காட்டுக்குப் போனீங்கள். நான் ஒரு வார்த்தை கேட்டனா… ஒண்டும் கதைக்காமல் அந்தக் கல்லிலையும் முள்ளிலையும் உங்களுக்குப் பின்னாலை இழுபட்டுக்கொண்டு வரேல்லையே…! ராவணன் என்னைப் பிடிச்சு வைச்சிருக்கேக்கை நீங்களும் தனியத்தானே இருந்தனீங்கள். சூர்ப்பனகை அவள் இவளெண்டு உங்களைப் பாத்து ஆசைப்படாதவை ஆர்…? நீங்கள் எல்லா நேரத்திலையும் சுத்தமாய் இருந்திருப்பீங்களெண்டு எனக்கெப்பிடித் தெரியும்…? நீங்கள் ஏகபத்தினி விரதனெண்டு நிரூபிக்க லட்சுமணனைச் சாட்சிக்குக் கூப்பிடாதையுங்கோ… நீங்கள் அனுமனுக்கு ரெண்டு வால் எண்டால்… ‘ஓமண்ணை ஒண்டு நீளம் மற்றது கட்டை’ எண்டு அவன் சொல்லுவான்.
இளங்கோவடிகளின் கோவலன்:கண்ணகி! நீ எனக்காக வாசல்லையே காத்துக்கொண்டிருந்தனியா… நீதானடி பத்தினி! நான் திரும்பி வந்திட்டன். திருந்தியும் வந்திட்டன். சாப்பாட்டைப் போடு. இனி அந்த மாதவியின்ரை வீட்டுப் பக்கம் தலையே வைச்சுப் படுக்கமாட்டன்.
இளங்கோவடிகளின் கண்ணகி: ஐயோ…! என்ரை ராசா…! நீங்கள் எப்பிடியும் திரும்பி வருவீங்களெண்டு எனக்குத் தெரியும். நான் ஊணுறக்கம் இல்லாமல் உங்களுக்காகத்தானே வாசல்லை நிண்டு பாத்துக்கொண்டு நிண்டனான். உங்களுக்குப் பிடிச்ச மீன்குழம்பு வைச்சிருக்கிறன். நீங்கள் வயிறாரச் சாப்பிடவேணும். நான் அதைப் பக்கத்திலை இருந்து பாக்கவேணும்.
கண்ணகியைப் பேச விட்டிருந்தால்:எங்கை வந்தனீங்கள்…? என்னிலை என்ன உரிமை இருக்கெண்டு வந்திருக்கிறீங்கள். நான் கறுப்பி. என்னைப் பிடிக்கேல்லை எண்டுதானே அந்த ஆட்டக்காறி மாதவி வீட்டிலை போய்ப் படுத்துக் கிடந்தனீங்கள். பாட்டும் ஆட்டமுமாய் பம்பல் அடிச்சுப்போட்டு இப்ப அவள் ஆரையோ நினைச்சு ஏதோ பாடினாளாம் எண்டு கோவிச்சுக்கொண்டு இங்கை ஓடிவந்திருக்கிறியள்… அங்கை இல்லையெண்டா இஞ்சை… இஞ்சை நான் மாட்டனெண்டா அங்கை… உங்களுக்கு வெக்கமில்லையே…!
வியாசரின் தருமன்: பாஞ்சாலி! நான் என்னை, சகோதரங்களை, நாட்டை, பொன்பொருளெல்லாம் இழந்த பிறகு உன்னையாவது வைச்சுக்கொண்டிருந்திருக்கலாம். உன்னையும் இழந்துபோனனடி! இனியென்ன செய்யிறது… மூட்டை முடிச்சு ஏதாவது இருந்தா எடுத்துக்கொண்டு வெளிக்கிடு. வனவாசம் போவோம்.
வியாசரின் பாஞ்சாலி:உங்களைச் சூதாட்டத்திலை இழந்தாப்பிறகு என்னை வைச்சு ஆடுறதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை. எண்டாலும் அதை யோசிக்காமல் நீங்கள் என்னைப் பணயம் வைச்சுப்போட்டியள். என்ரை தலைமயிரைப் பிடிச்சு இழுத்துக்கொண்டு வந்து சபைக்கு முன்னாலை தள்ளினான் துச்சாதனன் எண்ட துலைஞ்சுபோவான். அது மட்டுமில்லாமல் அவ்வளவு பேருக்கு முன்னாலை என்ரை சீலையை உரியப் பாத்து பரிசுகெடுத்துப்போட்டான். துச்சாதனன், துரியோதனன் எண்ட ரெண்டு பேரின்ரை ரத்தத்தையும் எடுத்து எண்ணெயாய் வைச்சுத்தான் என்ரை தலைமயிரை முடிவன். அதுவரைக்கும் இது இப்பிடியே விரிச்சது விரிச்சபடி இருக்கட்டும்.
பாஞ்சாலியைப் பேச அனுமதித்திருந்தால்: நீயொரு மனுசனெண்டும் புருசனெண்டும் கதைக்காதை. ஒருத்தனில்லை… மல்லன் மாதிரி அஞ்சு பேரை நம்பி நான் வந்தன். அவங்கள் சீலையை உரியிறாங்கள். நீங்கள் கையைக் கட்டிக்கொண்டு பாத்துக்கொண்டு நிக்கிறீங்கள். கோத்தை குந்திதேவி உப்புப்போட்டு உங்களுக்குச் சாப்பாடு தரேல்லையே…! துரியோதனன் எண்டவனைப் பாத்து நான் சிரிச்சனெண்ட ஒரே காரணத்துக்காக இண்டைக்குச் சபையிலை எல்லாரும் என்னைப் பாத்துச் சிரிக்கிற மாதிரிச் செய்துபோட்டான். நீங்கள் எல்லாரும் சேந்து அவங்களைக் கொல்ல வேணும். அதுக்குப் பிறகு சொல்லியனுப்புங்கோ… வனவாசமோ மாளிகை வாசமோ எங்கையெண்டாலும் வாறன்.
கம்பர்,இளங்கோ,வியாசர் கூட பரவாயில்லை. அங்கையிங்கை பொம்பிளைக்குச் சார்பாக் கதைச்சிருக்கினம். இவர் மனு என்ன சொல்லுறாரெண்டால்….
மனு 1:வீட்டுக்குத் தேவையான பாத்திரம் பண்டத்தை வாங்கிறதுக்காக பொம்பிளைக்குக் கொஞ்சக் காசைக் குடுத்து வைக்கலாம். அவள் அந்தக் காசை வைச்சு தேவையான நேரம் அதைச் சிக்கனமாச் செலவு செய்யலாம். மற்றது தட்டுமுட்டுச் சாமான்களையும் வீட்டையும் கழுவித் துடைச்சு வைச்சிருக்க வேணும். ஆம்பிளை பூசை செய்யிறதுக்குத் தேவையான எல்லாத்தையும் எடுத்து வைக்கிறது, குசினிக்கை இருந்து சமையல் சாப்பாட்டைக் கவனிச்சுக் கொள்ளுறது, பாயை, மெத்தையைத் தட்டிப் போட்டு வெயில்லை காயவைக்கிறது இப்பிடியான வேலையளைக் குடுத்தால் அவளுக்கு வேறை ஒண்டிலையும் மனம் போகாது. ஒழுங்கா நல்லபிள்ளையாய் வீட்டுக்குள்ளையே இருப்பாள்.
மனு 2:புருசன்காரன் சூதாடுறவனாய் இருக்கட்டும். ஒவ்வொருநாளும் குடிச்சுப்போட்டு வீட்டை வாறவனாய், வருத்தக்காறனாய் எப்பிடியும் இருந்திட்டுப் போகட்டும். ஆனால் அவன்ரை மனுசிக்காறி திமிர்பிடிச்சவளாய் அவனுக்குச் செய்யவேண்டிய வேலையளைச் செய்து குடுக்காம இருந்தாளெண்டால்….. அவளை பூ வைக்கிறது, பொட்டு வைக்கிறது, பவுடர் போடுறது இதையெல்லாம் செய்யவிடக்கூடாது. நல்ல உடுப்புப் போட விடக்கூடாது. அதோடை இரவோ பகலோ அவவைக் கட்டில் பக்கமே எடுக்கக்கூடாது. மூண்டு மாசத்துக்கு இப்பிடியெல்லாம் செய்துகொண்டு வந்தியளெண்டால் அவள் தானாய் வழிக்கு வருவாள்.
மனு 3:ஒரு பொம்பிளையைக் கலியாணம் கட்டி அவளுக்கு எட்டு வருசத்துக்குள்ளை பிள்ளை பிறக்கேல்லை எண்டா, அவளை விட்டுப்போட்டு நீ ஆரையும் கலியாணம் கட்டலாம். வயித்திலை பிள்ளை தங்கி தங்கி அடிக்கடி அழியிற சாபிள்ளைக்காறியை பத்து வருசத்துக்கு மேலை நீ பொறுத்துக்கொண்டிருக்க வேணுமெண்டில்லை. அவளை விட்டுப்போட்டு வேறொருத்தியைக் கலியாணம் கட்டலாம். உன்ரை மனுசிக்காறிக்கு தொடர்ந்து பொம்பிளைப் பிள்ளையே பிறந்துகொண்டிருக்குதெண்டு வைச்சுக்கொள்… பதினொரு வருசத்துக்கு மேலையும் அவளைச் சகிச்சு வீட்டுக்குள்ளை வைச்சுக்கொண்டிருக்க வேணுமெண்டில்லை. கலைச்சு விடு. சும்மா சும்மா பெண்டுகளோடை இருந்து புறணி கதைச்சுக்கொண்டிருக்கிறவளை உடனடியா அடிச்சுக் கலைச்சுப்போட்டு நீ வேறை கலியாணம் கட்டு ராசா. மேலை சொன்ன குறைகளோடை இருந்து உன்னாலை கலைக்கப்பட்டவளவைக்கு இந்த ஜீவனாம்சம் அது இதெண்டு நீ ஒண்டும் குடுக்கத் தேவையில்லை. விளங்கிச்சுதோ…!
உங்களுக்கு விளங்கிச்சுதோ… இதை வாசிச்சு முடிச்சாப்பிறகு எனக்கொரு சிரிப்பு வந்துது. அதைத்தான் கோபச் சிரிப்பெண்டு சொல்லுறது எண்டு நினைக்கிறன்.
http://tamilnathy.blogspot.com/2007/02/blog-post_18.html
|