மொழி என்பது வெறும் தொடர்புக்கான சாதனம் என்ற அறியாமை நிறைந்த கூற்று ஆங்காங்கே தென்படுகிறது. ஒருவர் நினைப்பதை இன்னொருவருக்குச் சொல்ல மட்டுமே மொழியென்றால், வார்த்தைகள் தேவையே இல்லை என்பது கண்கூடு. ஏனென்றால் வாய்பேசவியலாதவர்களும் ஊடாடிக்கொண்டுதானிருக்கிறார்கள். எனவே மொழி என்பதன் தேவை வெற்று ஊடாட்டத்துக்காக மட்டுமன்றி அதற்கு மேலானவற்றுக்காகவும் இருக்கின்றது என்பதை நாம் உணர்தல் வேண்டும். ஒவ்வொரு சொல்லும் தன்னுள்ளே ஆழ்ந்த பொருளையும், ஒரு சமூகம் அச்சொல்லிற் தேக்கி வைத்திருக்கும் பல தலைமுறை அறிவையும் கொண்டிருக்கின்றது. ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சி என்பது புதியனவற்றைக் கற்றுக் கொள்ளுதலில் மட்டுமில்லாமல், பழையனவற்றிலிருக்கும் அறிவினைத் தொடர்ச்சியாகக் கற்று வருதலிலும் இருக்கிறது. ஐக்கியநாடுகள் சபையிலிருந்து சிறிய நாடுகள் வரை ஒவ்வொருவரும் தாய்மொழியினைக் கற்க வேண்டியதன், அதிலே திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும்வேளையில், தமிழில் இருக்கும் சொல்வளங்களைப் பாராட்டுவதற்கும், குறைகளைந்து மொழியினைப் பேணுவதற்கும், கலை மற்றும் அறிவியற் சொற்களைப் புகுத்துவதற்கும் நம்மிடையே இருக்கும் எதிர்ப்புணர்வு புரிந்துகொள்ளப்பட்டுக் களையப்படவேண்டும். இனிய ஆங்கிலத்தில் பேசுவது புலமையெனவும், இனிய தமிழில் பேசுவது மொழிவெறியெனவும் பொருள்கொள்ளப்படுவது ஏனென்ற கேள்வியினை நாம் கேட்டுக்கொள்ளவேண்டும். தனித்தமிழ் குறித்தும், தமிழின் மீது சுமத்தப்படும் வழமையான குற்றச்சாட்டுக்கள் குறித்தும் பதிலளிக்கும் விதமாக இராம.கி எழுதிய ஐந்து பதிவுகளும், இப்பொருளை ஒட்டிய குமரன், நாக.இளங்கோவன் ஆகியோரது பதிவுகளும் திரட்டப்பட்டிருக்கின்றன. "தனித்தியங்கும் தன்மை தமிழினுக்குண்டு" என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை மனதிலிருத்தி முன்னகர்வோம்.
அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் கோடைக்காலம் வந்துவிட்டதென்றால் நகராட்சிகள் ஏற்பாடு செய்யும் கண்காட்சிகளும், பாரம்பரியக் கலை நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்தபடியே இருக்கும். பல இனங்களோடு ஒப்பீட்டளவில் தமது கலை வடிவங்கள் எவ்வளவு இளையதாயிருந்தாலும் அவற்றையும் பெருமையோடு காட்டியும் கண்டும் களிக்கும் இவர்களோடு ஒப்பிடுகையில், பறையடித்தலைத் தலைநிமிர்த்திக்கொண்டு தன் கலை என்று தமிழர்கள் மார்தட்டிக்கொள்ள முடிந்ததில்லை. ஏனென்றால் பாரம்பரியக் கலைகளையும், அக்கலைஞர்களையும் நாம் தலைக்குனிவோடுதான் வைத்திருந்திருக்கிறோம். மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் கலை நிகழ்வுகளும் ஒரு மேலாதிக்கப் புறக்கணிப்பையே எதிர்கொள்கின்றன. இந்நிலையில், இக்கலைகளும் கலைஞர்களும் தலைநிமிர்வுடன் மக்களை அண்மிக்கும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது "சென்னை சங்கமம்" என்ற நிகழ்வு. இலத்திரன் வெள்ளொளியில் பறையாட்டத்தின் அதிர்வுகளும், தேவராட்டத்தின் அசைவுகளும் சென்னை மக்களின் உள்ளங்களில் ஆண்டாண்டுகளுக்கும் தங்கும். சென்னைச் சங்கமம் நிகழ்ச்சியைக் குறித்த ஒரு சிறப்பு முன்னோட்டம் சென்னை நண்பர்களால் இப் பூங்கா இதழுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் அருட்தந்தை ஜெகத் கஸ்பர்ராஜின் செவ்வியும், சிறப்பு ஒளிக்கோர்வையும் இடம்பெற்றிருக்கின்றன. தயாரித்தளித்த நண்பர்களுக்கு வாசகர்களின் சார்பில் பெருநன்றி! வரும் வாரப் பூங்காவிதழ் சென்னைச் சங்கமம் சிறப்பிதழாக மலரும். எனவே இந்நிகழ்வுகளைக் குறித்த பதிவுகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு பதிவர்களை (குறிப்பாக சென்னை நட்புகளை) அன்புடன் வேண்டுகிறோம்.
குடும்ப உறவைப் பலப்படுத்தல் வரிசையில் ஏழாவது மற்றும் எட்டாவது பகுதிகள் தற்போது டி.எம்.ஐ தளத்தில் வலையேற்றப்பட்டுள்ளன. எந்நாடானாலும் குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு அறிமுகமாதலும், அடிமையாதலும் நிகழ்ந்துவருகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு குழந்தைகளை எங்ஙனம் இக்கொடுமைக்கு ஆளாகாவண்ணம் பாதுகாப்பது என்ற விபரங்களை ஏழாவது பாடம் பெற்றோருக்கு விளக்குகின்றது. எட்டாவது பாடம் இதே கருத்துக்களைக் குழந்தைகளுக்குக் கூறும்வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் போதைப்பொருட்கள் என்பன யாவை, அவை எவ்வாறு நம் உடல் மற்றும் மனோநலத்தைப் பாதிக்கின்றன என்பவையும், அவற்றைத் தவிர்க்கும் முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. பெற்றோர் இவற்றைத் தரவிறக்கிக்கொண்டு பயன்பெறவும்.
பாலிவுட் தீட்டியிருக்கும் மனக்கோலங்களான அடுக்குமாடிகளும், பறக்கும் கார்களும் மட்டுமே மும்பை இல்லை, அதன் புறக்கணிக்கப்பட்ட தாராவிக்குள் ஒரு பெருந்திரளான மக்கள் கூட்டம் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருப்பதை பாலபாரதியின் 'தெரிந்ததும் தெரியாததும் - தாராவி' சுட்டிக் காட்டுகிறது.
மலேசியாவின் சீனப் புதுவருடக் கொண்டாட்டத்தைப் பற்றி மை ஃப்ரெண்ட் என்ற நண்பர் எழுதியிருக்கிறார். புதுமையான தகவல்களும், அதன் பின்னேயிருக்கும் பன்முகத்தன்மையை மனமுவந்து வரவேற்கும் பாங்கும், கண்கவர் படங்களும் இக்கட்டுரைக்கு மெருகூட்டியிருக்கின்றன. மிகச் சொற்பகாலமே தமிழில் கற்ற இவரது பதிவுகளுக்கு ஒரு வாசகர் வட்டம் உருவாகியிருப்பது கண்கூடு.
அரசுப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் என்றாலே தரம் தாழ்ந்தவையென்றும், குழந்தைகளின் ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு இப்பள்ளிகள் உதவாதவை என்ற எண்ணப்போக்கும் நிலவும் இச்சூழலில் ஓர் அரசுப் பள்ளியில் காணமுடிகின்ற முன்மாதிரித் தன்மைகளைப் படம்பிடித்துக் காட்டும் அயனுலகத்தின் பதிவும், ஒரு தாய்த்தமிழ்ப் பள்ளியைக் குறித்த மயிலாடுதுறை சிவாவின் பதிவும் நம்பிக்கையூட்டுவனவாக அமைகின்றன.
காலங்காலமாக நெய்யப்பட்டிருக்கும் பெருங்கதையாடல்களில் வரும் பாத்திரங்களைக் கட்டுடைப்பது தற்காலத்தில் துரிதமாக நிகழ்ந்து வருகிறது. பெண்களைக் குறித்தான மனுதர்மக் கட்டளைக் கதையாடல்களை சீதை, துருபதை, கண்ணகி ஆகியோரின் முன்பாக நிறுத்தியிருக்கிறார் தமிழ்நதி. இத்தகைய இலக்கிய மீள்பார்வைகள் காலத்துக்கும் நிகழ்த்தப்படுதல் இன்றியமையாதது.
சமகாலத்தில், ஆழ்ந்த சொற்சித்திரங்களை எளிமையான வரிகளில் வடிக்கும் வல்லவர் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள். அவரது "சித்தன் போக்கு" என்ற சிறுகதைத் தொகுப்பைக் (பெருமாள் முருகனின் தொகுப்பு) குறித்த தனது வாசிப்பனுபவத்தை ஆசிப் மீரான் தந்திருக்கின்றார். மனதை வருடும் கதைகளுக்கானதொரு கட்டியமாகத் தெரிகின்றது இப்பதிவு.
"காட்டுமழைக்குறி தப்பிச்சொன்னாலென்னைக் கட்டியடியாண்டே" என்ற பாரதியின் வரிகளை வாசிக்கும்போது மனக்கண்முன் வரும் அடிமை நந்தனாரை நமக்கு நினைவூட்டுவார். அந்த நந்தனாரின் சரித்திரத்தையும், அவர் தில்லையில் அந்தணர் வளர்த்த தீயில் நுழைந்து எழுந்து இறைவனுடன் ஐக்கியமான காட்சியையும் சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலிருந்து கொண்டுதருகிறார் கீதா சாம்பசிவம். யோசிக்க வைக்கும் பதிவு.
மழை ஷ்ரேயாவின் ஐரோப்பியப் பயணக்குறிப்பு அழகிய படங்களுடன் வந்து மனதை நனைக்கிறது. கூடவே சட்டைப்பையில் ஓட்டை விழாமல் பணத்தை மிச்சமாக்கும் பயணச்சீட்டு வழிவகைகளையும் நம்மோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஈழப்போராட்டம் ஒரு சிக்கலான நிலையில் இருக்கும் இவ்வேளையில் சில சில்லறை விவாதங்களும் கிளம்புவதைக் காணமுடிகிறது. இவற்றை விவாதிப்பதற்கான தேவை நிச்சயமாக இருக்கின்றது. ஆனால் அத்தகைய தேவை இருப்போரைவிட, இத்தகைய விவாதங்களின் பின்னாலிருந்து அரசியல் குளிர்காய்பவர்களையே அதிகம் காணக்கூடியதாக இருக்கிறது. "இது ஒரு தொகை மக்களின் வாழ்வியல் உரிமைப் போர்" என்ற ஒரு நியாயமான எச்சரிக்கையோடு பதியப்பெற்றிருக்கிறது மீறலின் "யாழ்ப்பாணச்சாதியும்-ஈழத்தமிழரும்".
நாம் நேசிக்கும் பெரிய ஆளுமைகள் வாழ்ந்த வீடுகளைப் பார்ப்பதே ஒரு பேரனுபவம். அதிலும் அந்த வீட்டிலேயே பின்னாளில் வாழ்ந்தவொருவர் அப்படங்களை நம்மோடு பகிர்ந்துகொள்வது சாதாரண நிகழ்வல்ல. சுப்ரமணிய பாரதியார் வசித்த கடையம் வீட்டிலும், அந்தச் சுற்றுப்புறத்திலும் வாழ்ந்த கார்த்திக் பிரபு அவ்விடங்களின் படங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.
இவற்றைத் தவிர மாசிலாவின் அறிவியல் கட்டுரையொன்றும், லக்கிலுக், பத்மா அர்விந்த், இளவஞ்சி, துளசி கோபால், யு.எஸ். தமிழன், பொன்ஸ், அற்புதன் முதலான பலரது பதிவுகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவ்வார, பூங்கா இதழுக்குப் பங்களிப்பு செய்த அனைவருக்கும் பூங்கா நன்றியைத் தெரிவிக்கின்றது.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் முடிய இன்னும் 13 நாட்களே இருக்கும் நிலையில், நிலைகொள்ளாக் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கச் சம்மதித்திருக்கிறார் உங்கள் மனங்கவர் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் அவர்கள். ரசிகர்களே, உங்களை ஆட்டுவிக்கும் கேள்விகளை
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நன்றி!
|