இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தொகுப்பாளரின் மேசையிலிருந்து Print E-mail
ஆசிரியர் குழு   

உழைக்கும் தொழிலாளர்களும், அவர்களது உழைப்பும், ஒரு சமூகத்தின் உயிர்நாடி. அவர்களைத் தவிர மற்றோரெல்லாம், அவர்களைத் "தொழுதுண்டு பின்செல்பவர்." உழைப்பும், கொடையும் செறிந்த அவர்களது வாழ்வில் முகிழ்த்தவையே உயரிய கலைகள். அக்கலைகளே அம்மக்களின் வாழ்வோடு பின்னிக் கிடப்பவை; அவர்களது உயிர்த்துடிப்பின் வடிவம்; அவர்களது வீழ்ச்சியையும், எழுச்சியையும் பரம்பரைகளுக்குச் சொல்லிக்கொண்டேயிருக்கும் பெருங்குரல். இத்தகு கலைகள் எப்படி மக்களிடமிருந்து அன்னியப்பட்டுப் போயின? எத்தனையாயிரமாண்டாய், அடர்ந்த ஆதிக்க இருள் நம் மக்களையும் அவர்களது கலைகளையும் கவித்திருக்கின்றது? பண்களும், இசையும் மொழியைத் தாமாகவே மாற்றிக்கொண்டனவா? தீண்டத்தகாதவராக என்றைக்கு மனிதர் தரம்பிரிக்கப்பட்டாரோ, அன்றே மனிதர்களின் கலைகளும் தரம்பிரிக்கப்பட்டன. பறையும், முரசும், முழவும், கொம்பும் சேரிக் கைகளில் மட்டுமே முனகிக் கிடந்தன. ஆனால் இப்போது? மீட்டெடுப்பு நிகழ்கிறது. தமிழ்ச் சமூகம் பலகாலமாக ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும் கலை மீட்டெடுப்புக்கான புதிய படிகள் கட்டப்படுகின்றன. தெற்கிலும், வடக்கிலும் பறையொலி மேடைகளை அதிரவைத்திருக்கின்றது. தெற்கே தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய "மக்கள் இசை விழா"வைப் பற்றிய அசுரன், இடையன், கோகுல் ஆகியோரது வரிகள் படிப்போரை ஆட்டிப் பார்க்கும்; தஞ்சையில் புழுதி பறக்க நிற்பதைப் போலிருக்கும்; காலாடும். "ஆயிரங் காலம் அடிமையென்றாயே, அரிசனம்னு பேரு வக்ய யாரடா நாயே?" என்று எவ்விதப் பாசாங்கும் இல்லாமல் சீறிச் சென்று கோட்டையின் கதவுகளை இடித்துப் பார்ப்பது ம.க.இ.கவின் முழக்கம். இங்ஙனம் தெற்கு திமிற, வடக்கு வியக்கிறது. ஆம்! மறுகாலனியாதிக்கத்துக்கும், பார்ப்பனீய மேலாதிக்கத்துக்கும் எதிராகத் தஞ்சை திமிறும் அதே வேளையில், வடக்கே சென்னை, இதுவரை கண்டிராத காட்சிகளையும், கேட்டிராத இசையினையும் "சென்னை சங்கம"த்தின் வாயிலாகக் கண்டும், கேட்டும் "இதுவா, இதுவா என் மூதாதையரின் இசை?" என்று வாய்பிளந்து வியக்கிறது. பகட்டும், மேனாமினுக்கும் தமிழிசையைத் திரித்துப் புரியாமொழியாக்கி வழியவிட்ட இசை ஒடுக்குமுறையிசையெனவும், பறையொலியும், தமிழிசையும் விடுதலையிசையெனவும் இன்று இனங்காணப்பட்டிருக்கின்றன. இப் பூங்கா இதழில் "சென்னை சங்கம"த்தை பிரதீப் குமார், சந்திப்பு, பொன்ஸ், லக்கிலுக் ஆகியோரது பதிவுகள் படம்பிடித்துக் காட்டியிருக்கின்றன. எதிர்பார்த்தபடியே, இதுகாலம்வரையில் கலாச்சாரக் களவையும், கலை ஒடுக்குமுறையையும் செய்துவந்த புனிதக் கலை விற்பன்னர்களுக்குப் பொறி கலங்கியிருப்பது உண்மை. ஏதோ தங்களால் முடிந்தளவுக்குப் பத்திரிகை இருட்டடிப்பையும், இவ்வெழுச்சிக்கு அரசியற்சாயம் பூசுவதையும் செய்து, தம் அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறார்கள். புறப்பட்டிருக்கும் மக்கள் இசை, நம் எல்லோரது மனங்களிலும் தேங்கிக் கிடக்கும் பாரம்பரிய இசைப் பெருமையை மீட்டுக் கொணரும் என நம்புவோம்.

இந்திய நடுவணரசின் நிதியறிக்கை, தாக்கலின்போது ஆண்டுதோறும் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதும், நிதியாண்டின் இடையிலும், கடையிலும் அது ஏற்படுத்தும் தாக்கம் இன்னதென்று தெரியாமலேயே மக்களிடமிருந்து நழுவிப் போதலும் கண்டுவரும் கதை. இவ்வாண்டின் நிதியறிக்கையைப் பற்றிய பிரதீப்பின் பதிவு அதன் சாதக பாதகங்களைப் பற்றியும், வெங்கட்ராமனின் பதிவு நகைச்சுவையாக லாலுவிடமிருந்து சிதம்பரம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களைப் பற்றியும் பேசுகின்றன. இத்தலைப்பையொட்டிய செல்வநாயகியின் பதிவில், நடுவணரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல்வாழ்வு அமைச்சர் ரேணுகா சௌத்ரி, அரசிடம் வேண்டியிருக்கும் உயர் நிதி ஒதுக்கீடு குறித்த நியாயங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான கல்வி, மருத்துவம், சத்துணவு ஆகியவற்றின் இன்றியமையாமையை உணர்த்தும் அதே நேரம், ஒதுக்கப்படும் நிதி, சரியான நேரத்தில், சரியான இடத்துக்குப் போய்ச் சேருகின்றதா என்பதில் நம் அனைவரின் கவனமும் இருக்க வேண்டும் என்று புலனாகிறது.

குடும்பம் என்பது மேலெழுந்தவாரியாகவோ, அல்லது இதுவரையில் புனையப்பட்ட புனிதக் கதையாடல்களின் வழியாகவோ பார்க்குமிடத்து, பாசம், ஆதரவு, பற்று என்பதன் ஆதாரமாக நிலைபெற்றிருப்பதைக் காணலாம். ஆனால் இவற்றை, பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோர் பார்த்த விதம் வேறாயிருந்திருக்கிறது. அது முதலாளித்துவத்தின் நுண்வடிவாயும், ஒரு குறுக்கப்பட்ட அரசாகவும், ஆண்டான் - அடிமை உறவு நிலையின் ஊற்றுக் கண்ணாகவும் இருப்பதைக் காண முடிகிறது. மாற்றங்களை விரும்பும் ஒரு குமுகாயம் குடும்பத்திலிருந்தே தன் கேள்விகளைத் தொடங்க வேண்டும் என்கிறது சுகுண திவாகரின் பதிவு.

இனப் போராட்டங்களில் ஓங்கியொலிக்கும் குரல், பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களினது. போராட்டங்களை ஒடுக்குவதற்கு, இவர்களது குரலைத் தொடர்ந்து நெரிப்பதையே ஆதிக்க சக்திகள் முதன்மையாய்க் கையாளும் முறை. 1915-17களில் துருக்கியில் கொல்லப்பட்ட ஆர்மீனியர்களைப் பற்றி ஓயாது குரலெழுப்பி வந்தவரைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறது தேசிய வெறி. இத்தகைய குரல் ஒழிக்கப்படுவதினும் கொடியது அவ்வொழிப்பும் அறிமுகமற்றுக் கரைந்து போவது. Hrant Dinkஇன் வாழ்வும் மரணமும் பொடிச்சியின் பதிவின் மூலம் நமக்கு அறிமுகமாகின்றன.

Ten canoes என்ற படத்தினைப் பற்றிய ஷ்ரேயாவின் பதிவு பழங்குடி மக்களின் கதையொன்றைப் பற்றியது. குடும்பம் என்பதையும், கணவன் மனைவி உறவென்பதையும் குறித்த பார்வைகளை இது முன்வைக்கிறது. இப்படத்தின் இன்னொரு சிறப்பாகத் தெரிவது இது பழங்குடியினரின் மொழியிலேயே எடுக்கப்பட்டிருப்பது.

"உண்மையான உலகின் வெப்பமாக்க"லில் வைசா, அழிவற்ற பொருளாக நாம் நம்பியிருக்கும் சூரியனின் அழிவைப் பற்றி எழுதியுள்ளார். பிரமிக்க வைக்கும் உண்மைகள். குழந்தைகளுக்குச் சொல்லித் தரப் பெரியவர்கள் படிக்க வேண்டிய பதிவு.

இன்றைய உலகின் முதன்மையான இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங். கரும்பொருள் துளைகளையும், வெளியினையும் பற்றிய ஆராய்ச்சிகளில் மூழ்கியிருப்பவர். 65 வயதாகும் இவர், தனது பாரிய உடல்நலக் குறைவினூடும் விண்வெளிக்குப் பயணிக்கும் இச்சையை வெளியிட்டுள்ளார். அவர் எழுதிய கட்டுரை ஒன்றைத் தமிழில் தந்திருக்கிறார் சித்தார்த். இதில் பொதுமக்கள் எவ்வாறு அறிவியலை அணுக வேண்டும் என்று கூறியுள்ளார்.

மாஹிர் சென்னையில் நடந்த விக்கி முகாம் பற்றிய குறிப்புகளைத் தந்திருக்கிறார். இப்பதிவில் அவரது "தமிழூற்று" பற்றிய நகர்படக் காட்சியையும்  காணலாம்.

ஜெயச்சந்திரனின் "பால் புரதங்களைப்" பற்றிய பதிவைப் படித்தபோது அறிவியற்சொற்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் எவ்வளவு பெரிய அளவில் மாறுபடுகின்றன என்பதைக் காணமுடிகிறது. உதாரணமாக cell என்பதைக் கலம் என்றும், immune system என்பதை நிர்பீடனத் தொகுதி என்றும் குறிப்பிட்டிருப்பது கற்கைக்குரியது.

உடலில் ஓருறுப்பாய் இருந்தபோதிலும், உடலுக்குத் தேவையான பாதுகாப்பையும், அழகையும் தருகின்றபோதிலும், மயிர் என்பது அரசியல்மயப்படுத்தலால் இழிந்த வார்த்தையாகிப் போய் வெகுகாலமாகிவிட்டது. மதநம்பிக்கை, பல மதங்களிலும் மயிராய்க் கொட்டும்போது, அதையும் அள்ளிக் கொண்டு காசு பார்க்கும் திறனைச் சொல்லும் மலைநாடானின் பதிவைக் கண்டு வியந்து போகிறோம்.

எயிட்ஸ் நோயுற்றவர்கள், அதிலும் குறிப்பாகப் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகச் சவால்களை நாம் அறிந்திருக்கிறோமா? கற்றவற்றினால் நம் மனம் அவர்களை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தயாராயிருக்கிறதா? நம் ஏற்றுக்கொள்ளுதல், குறிப்பாக ஒரு உறவாகவோ, அல்லது நட்பாகவோ அவர்களுக்கு நம் இணக்கம் எந்தளவுக்கு முக்கியம் என்பதை நாம் உணர்ந்திருக்கின்றோமா? மங்கை சொல்லும் மீனாட்சியின் அனுபவங்களும், வெற்றிகளும் எயிட்ஸ் நோயாளிகளின் போராட்டங்களையும், அவர்களது மனோவலிவையும், வெல்லும் வீச்சையும் பற்றி மட்டும் கூறி நின்றுவிடாது, அவர்களைச் சுற்றியிருப்போர் செய்தேயாகவேண்டிய கடமைகளையும் சொல்லி வருகின்றது.

ஈழத்தின் முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவரான புதுவை இரத்தினதுரை அவர்களைப் பற்றியும், அவரது கவிதைகளை பற்றியும் எழுதியிருக்கும் பதிவு புதுவை அவர்களுக்கும், சயந்தன் குழுவின் "எழுநா"வுக்கும் ஒரு நல்ல அறிமுகம்!

சிட்னியில் டிராகன் படகுப் போட்டியைப் பற்றிப் பதிந்திருக்கும் கானா பிரபா, அவுஸ்திரேலியாவில் சீனர்களின் கலைகளும், கலாச்சாரமும் கொண்டாடப்படும் விதம் பற்றிக் குறிப்பிட்டிருப்பதோடு, தமிழர்களுக்கு ஒரு பக்க உதையும் கொடுத்திருப்பது படங்களோடு சேர்த்து ரசிக்க வைக்கும்.

"நவீன தூரிகை" என்ற நூலின் வெளியீட்டு விழாவைப் பற்றி சேவியர் எழுதிய குறிப்பில் ஓவிய நூல்களைப் பற்றிய தேவையும், அவை தமிழ் இலக்கிய உலகில் ஒரு பக்க வாத்தியமாகவே இடம்பெறுவதையும், அவற்றுக்குண்டான முதன்மையிடத்தைப் பெற வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தியுள்ளார்.

இப்பதிவுகளோடு அமெரிக்கா என்றாலே ஏகாதிபத்தியம் என்றில்லை என்று கூறிவரும் கூத்தாடியின் அமெரிக்கா பதிவும், சரவணனின் தற்காப்போடு கூடிய "மொழி" திரை விமர்சனமும், நண்பனின் At Five in the Afternoon குறித்த அழுத்தமான விமர்சனமும் இப் பூங்கா இதழை அணிசெய்கின்றன. இந்த இதழுக்குப் படைப்புகளை வழங்கியிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)