இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
சில்லறை வணிகம் Print E-mail
நிர்மல்   

சில்லறை வணிகத்தில் பெரும் வணிகர்கள் இறங்குவதன் விளைவுகளை ஆய்வு செய்து பதிப்பிக்க வேண்டி இந்திய பன்னாட்டு வணிக உறவு ஆய்வு மைய குழுவை நமது பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. இன்னும் ஐந்து மாதத்தில் இதன் முடிவுகள் வழங்கப்படும்.

சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலாளிகளை எதிர்ப்பவர்கள் உள்நாட்டு முதலாளிகளையும் எதிர்க்கின்றார்கள். ரிலையன்ஸின் ப்ரஸ், டாடாவின் இன்பினிட்டி போன்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் கொடி பிடிக்கப்படுகின்றது.

தற்போதைய வணிக சூழ்நிலையில் விவசாயிகள் விளைபொருள்களுக்கு முழுவிலை கிடைப்பதால் மகிழ்ச்சியாகவும், நுகர்வோர் சரியான விலை உள்ளதால் மிக மிக மகிழ்ச்சியாகவும் இருப்பது போன்றும்,  இனி பெரு வணிகர்கள் வருவதால் இது பாதிக்கப்படும் என்றும் காட்சி வைக்கப்படுகின்றது.

எங்கள் வீட்டில் புள்ளிவிவரக் கணக்கு எடுத்ததில் அப்பா, அம்மா திருச்சியில் ரிலையன்ஸோ, டாடாவோ வந்தாலும் அவர்கள் போவதாயில்லை என்று சொன்னார்கள். நூறு கிராம்,  அல்லது நூற்றம்பது கிராம் என காய் வாங்குகிறோம். பால் ஒரு நாளின் தேவைக்கு பாக்கெட்டில் வாங்கிக் கொள்கிறோம். இதற்கு தெருமுனைக் கடைதான் வசதி என்றார்கள்.

நீங்கள் மொத்தமாக வாங்கிக் குளிர்பதனப் பெட்டியில் பதப்படுத்திக் கொள்ளலாமே என்றதற்கு செய்யலாம் ஆனால் இப்போது இருக்கும் குளிர்பதனப் பெட்டி சிறியது, வாரக் கணக்கில் சேகரிக்க இது ஆகாது, பெரிதாய் வாங்க வேண்டும். கோடையில் மின்சார தட்டுப்பாடு வருகையில் பெரிதாக இருந்தாலும் புண்ணியமிருக்காது என்றார்கள். மளிகைக் கடைகாரருக்கு எங்கள் வீட்டால் கிடைக்கும் வியாபாரம் எதிர்காலத்தில் மாறப் போவதில்லை.

உள்ளூர்ச் சந்தையைக் காண்கையில் அங்கிருக்கும் வணிகர்கள் விவசாயிடம் இருந்து நேரடி வணிகம் செய்வதில்லை. அவர்கள் ஏல முறையில் காலையில் காய்கறிகளை இடைமனிதர்களிடத்து வாங்குகிறார்கள். அந்த இடைமனிதர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு இடைமனிதர்களிடத்து இருந்து பொருள்களை உள்ளூர்ச் சந்தைக்கு தருவிக்கிறார்கள் போலும். இரண்டாம் நிலை இடைமனிதர்கள் விவசாயிகளிடத்து இருந்து விலைக்கு பொருள்களை வாங்குகிறார்கள். உள்ளூர் விவசாயி நேரடியாக விளைபொருளைக் கொணர்ந்து கடை விரிக்க இயலாதாம். இரண்டு இடை மனிதர்களுக்கான பங்கு பணம் பொருளின் விலையின் சேர்க்கப்பட்டு அதற்கும் சேர்த்து விலை செலுத்துகின்றோம். இந்தத் தகவல் செவிவழி அறிந்தது.

பெரும் வணிகர் வருகையில் இரு இடை மனிதர்கள் காணாமல் போகிறார்கள். விவசாயி, பெருவணிகர், நுகர்வோர் என்ற மூன்று அடுக்கு அமைகின்றது. இரு அடுக்குகள் காணாமல் போவது அதைத் தொழிலாக கொண்டிருப்போருக்கு இழப்பே. அவர்களின் இழப்பு நுகர்வோருக்கும், விவசாயிக்கும் வருமானம்.

மற்றொரு முக்கிய கோணம் வரிப்பணம். இடைமனிதரோ, சிறு அளவு வணிகம் புரிவோரோ வரி பொதுவாக செலுத்துவதில்லை. வரிப்பணமே சத்துணவாக, அங்கன்வாடியாக, இலவச மின்சாரமாக பொதுமக்களுக்கு போய்ச் சேருகின்றது. ஆனால் பெரு வணிகம் வரும்போது வரிப்பணம் அரசுக்குச் சேருகின்றது.

இப்போதே சிறு பெரு நகரங்களில் சூப்பர் மார்கெட் கடைகள் உண்டு. இவை உள்ளூரில் உள்ள சிறு கடைகளுக்குப் போட்டியே. சிறு கடைகளை விட விலை குறைவே. அவைகளை எதிர்த்துப் போராடுவதில்லை. பால் சில்லறையாகக் கதவுக்கு வருவது கிட்டதட்ட காணாமல் போய்ப் பாக்கெட்டுகளில் கடைகளில் கிடைக்கின்றது. அதற்காக கண்டணக் கூட்டங்கள் நடத்துவதில்லை.  ஆனால் ரிலையன்ஸ், டாடா என்ற பெயர்கள் வருகையில் அச்சம் பரப்பபடுகின்றது.

எனக்குத் தெரிந்து காதி கதராடைக் கடைகளிலும், கோஆப்டெக்ஸிலும் மட்டும் வணிகம் செய்வோம் என யாரும் தீர்மானம் போட்டதில்லை. கெடுநாள் அறிவித்ததில்லை. மாற்று கடைகள் உண்டு, வணிகமும் உண்டு.சிறு வணிகர், பெரு வணிகர் என்ற குரல்கள் இல்லை. கடந்த முறை சென்னை வந்தபோது ஆலன் சாலியும், டாக்கர் பேண்ட்ஸூம் நல்ல முறையில் ஸ்பென்சரில் இருந்தன.

 

 

பெருவணிகர் நிலையில் லாபமே அவருக்குப் பிரதானம். அவர்கள் தங்கள் பங்குதாரருக்கு லாபமூட்டும் வகையில் மூலப்பொருள் வழங்கும் விவசாயியை நோக்கி தங்கள் கரத்தைச் செலுத்துவார் என்பதும் நடக்க கூடியதே. விவசாயிகள் கூட்டுறவு முறையில் இயங்கி கொள்முதல் செய்யும் முதலாளிகளோடு பேரம் பேசி விலை நிர்ணயம் செய்யும் உரிமை கொண்டிருந்தால் இந்தப் பிரச்சனை தவிர்க்கப்படலாம்.

இடைமனிதர்களும், கடமை உணர்வற்ற அரசு கொள்முதல் இயந்திரங்களும் அகற்றப்பட்டு விவசாயம் தொழிலாக மாற்றப்பட்டு சந்தையில் இயங்கலாம். பிரச்சனையே இல்லாத தொழிலாக விவசாயம் இருக்குமென்பதற்கான உறுதி பத்திரம் எதும் கிடையாது.எல்லாத் தொழில்களுக்கும் உள்ள ஏற்ற இறக்கங்களோடு ஆனால் தனியார் மயமான விவசாயி விளைபொருளுக்கு விலை நிர்ணயம் தொழிலாக மாறும் வாய்ப்பு உள்ளது.

பெருவணிகர் கொள்முதல் வருகையில் வருட சாமான்கள் விற்கும் சந்தைகள் காணாமல் போகலாம் அல்லது அதன் அளவு குறைந்து போகலாம். இப்போது திருச்சியில் இருந்து கொல்லிமலை சென்று சந்தையில் பொருள் வாங்கும் எங்கள் ஊர் பொது மக்கள் அதற்கு மாற்றாக வேறு ஒன்றைப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்கையில் பொருளாதார நட்டம் எங்கள் ஊருக்கு உண்டான போதும், கொல்லிமலையில் சந்தை வைக்கும் விளைவிப்போருக்கு பெருவணிகரிடம் விற்பதால் ஒரே தவணையில் விற்பனைக்கான பணம் கிடைக்கும்.

பெருவணிகர் வருகையில் அவர்களை மட்டுறுத்தும் நுகர்வோர் நலம் காக்கும் சட்டங்களைத் தூசு தட்டி எடுத்தலும்,  அவற்றின் இருப்பைப் பற்றிய அறிவை பொதுமக்களிடம் கொண்டு செல்லுதலும் மற்றும் இவ்வாறான சட்டங்கள் பாரபட்சமற்ற முறையில் நடைமுறைப் படுத்தப்படுதலும் முக்கியம். நுகர்வோர் தங்கள் உரிமைகளைப் பற்றிய தெளிவான அறிவைக் கொண்டு, எல்லாம் என் விதி என்று நினையா மனநிலைக்கு வருதல் பெருவணிகர் வருகையில் அவசியமான ஒன்றாகும்.

பெருவணிகர் பங்குசந்தையில் பங்குகளை விற்று பொது அமைப்பாக இயங்குகையில் தொடர்சியான லாபம் முக்கியமானதாகும். கலப்படம், எடைக்குறைவு போன்றவை இவற்றைப் பாதிக்கும் என்பதால் இவ்வழியில் செலவதைத் தவிர்ப்பார். பெருவணிகம் நேரடி கொள்முதலால் பதுக்கல், கருப்புச் சந்தை போன்றவற்றைக் குறைக்கவும் செய்யலாம்.

அடுப்பில் பாத்திரம் வைத்து விட்டு தாளிக்கக் கடுகு வாங்குவது நமதூரில் சகஜமான ஒரு செயல். இது போன்றவற்றால் தெருமுனைக் கடைகளில் நடக்கும் வியாபாரம் பெருவணிகர் வருகையால் பாதிக்கப்படாது. சிறு, பெரு நகரங்களில் மாத சாமான்கள் விற்கும் மத்திய தரக் கடைகள் இது போன்ற பெருவணிகர் வருகையால் பாதிக்கப்படும். தொழில்கள் விரியும் போது பாதிப்பென்பது இயல்பே. இது சில்லறை வணிகத்துக்கு மட்டுமன்று மற்ற எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும்.

http://sinthipoma.blogspot.com/2007/03/blog-post_03.html

http://sinthipoma.blogspot.com/2007/03/ii.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)