இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
உயிர்த்தீ Print E-mail
நளாயினி தாமரைச்செல்வன்   

1)உயிர்த்தீ

 

 

பெண்களின் கைகளில் வளை காப்பு.
உடலெங்கும் கருப்பை வேதனை.
உணர்வுகள் கூட கருப்பையுள் அடக்கமோ..?
காலில் என்ன சலங்கையோ.
அதற்கு நீங்கள் அடிமையோ.?
 
மூக்கில் அழகிய மூக்குத்தி.
உணர்வுகளின் சுவாசம் கூட
மூக்குத்திக்குள் அடக்கமோ..?
கழுத்தில் அழகிய ஆபரணங்கள்.
உங்கள் அழகே அதற்குள் ஜொலிக்குமோ.?
காலில் என்ன சலங்கையோ?
அதற்கும் நீங்கள் அடிமையோ.?
தலையில் மலர்களைச் சூடினாய்
அதற்காய் நீங்கள் மலராமோ?
இடையில் என்ன ஒட்டியாணமோ..?
அதற்குள் உம்மை ஒடுக்குவதோ?
கைகளில் பலமேற்று.
தனித்தே சுவாசிக்கக் கற்றுவிடு.
ஆபரணமாய் நீ மிளிர்.
சலங்கையாய்க் கீத மிசை
மின்னலாய் உன்
சிந்தனையைத் தெளித்துவிடு.
ஆணுக்குள்ளும் மென்மையுண்டு.
ஆணுக்குள்ளும் பெண்மையுண்டு.
ஆணுக்குள்ளும் நளினமுண்டு.
ஆணுக்குள்ளும் அடக்கமுண்டு.
ஆணுக்குள்ளும் பெண்ணை
பலமேற்றும் வல்லமையுண்டு.
ஆணுக்குள்ளும் நந்தவனம் உண்டு.
ஆணுக்குள்ளும் தாய்மை உண்டு.
ஆண்களால் தான் பெண்கள்
மிளிரக் கற்றுள்ளார்கள்.
பிரிய சகியே..! என்றுதான்
பெண்களை ஆண்கள்
விழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆண்களை என்ன சொல்லி
அழைக்கலாம் என
அகராதியின் பக்கங்களைப்
புரட்டிக்கொண்டு இருக்கிறேன்.
2) புரியும் வேதனை

 

வேலையால் வந்து
கோலுக்குள் இருந்து
ரிவி பார்த்தபடி
அதிகாரம் செய்யும் கணவனே,
சற்ரு நேரம்
நீ மிதிக்கும் மனைவியாய் மாறு,
புரியும் வேதனை.
வேலைக்குப் போய் வா
சமைத்துப் போடு,
சலவை செய்
பிள்ளைகளைப் பராமரி
பாடம் செல்லிக் கொடு,
கத்திக் குதறும்
கணவனுக்காய்
நடுங்கு.
கண்களைச் சுளற்றி
நித்திரை வந்தாலும்
வெளியில் போன
கணவனுக்காய்
நடுநிசி வரை
சாப்பாட்டுக் கோப்பையுடன்
காத்திரு.
சோர்வு உடம்பைத் தாக்க
உணர்வு ஏதுமற்று
வர்ணனை செய்யும் கணவனின்
உடற்பசி தீர்த்து
ஜடமாய்த் தூங்கு.
காலை கண் எரிவுடன்
கண் விழித்து
அரக்கப் பறக்க
எல்லாம் முடித்து
வேலைக்குப் போ.
வேலையால் வந்து
கோலுக்குள் இருந்து
ரிவி பார்த்தபடி
அதிகாரம் செய்யும் கணவனே
சற்று நேரம் நீ மிதிக்கும்-உன்
மனைவியாய் மாறு,
புரியும் வேதனை.
3) சாட்சி
என் வழக்கு
ஒத்தி வைக்கப்பட்டது.
வாய்க்குள்
துணி அடைத்து
கைகளை
துவக்கின்
பிடியால்
அடித்து முறித்து
வன்புணர்வுக்காய்.
தப்பி ஓடி
என் உயிர் காக்க
தோட்ட வெளியுள்.
சன்னம் பட்டதில்
சரிந்து விழுந்தேன்
முட்புதர் பற்றையுள்.
மெல்லிய உணர்வை
முட்புதருள் வைத்தே
காமத்தால்
பலாத்காரம் செய்தனர்.
வழக்குத் தொடர்ந்தேன்
மெல்லிய உணர்வை
ரணப்படுத்தியதற்காய்.
என் வழக்கு
ஒத்திவைக்கப்பட்டது.
என் மன
எரிப்பிளம்பின்
கசிவும்
பூகம்ப அதிர்வின் பின்
மரணித்துக்கிடக்கும்
மக்களின்
உறவின்
வேதனையின் கசிவும்
உடல் வதையின்
ஆள் மன
பச்சையின் தளும்பும்
சாட்சியாய் போதாதாம்.
என்க்கு நடந்த
கொடுமையின்
கோரத்தை
கண்ட சாட்சி
யாராவது
வாருங்கள்.
மீண்டும் என்னை
கூண்டினுள் வைத்து
வார்த்தையால்
வன்புணர்வு செய்து
என்னை
கொல்ல.
4) இருப்பு
பூக்கள் என்றான்
அலங்கரிக்க முடிந்தது.
மலர்கள் என்றான்
இறைவனை அர்ச்சிக்க முடிந்தது
பூவையர் என்றான்
மலர்களைச் சூட முடிந்தது.
மயில் என்றான்
தோகை விரித்து ஆடும் தகுதி
ஆண் மயிலுக்கானாலும்
மழையை ரசித்து ஆடுவதைப்
பார்க்க முடிந்தது.
குயில் என்றான்
கூவும் தகுதி ஆண் குயிலுக்கானாலும்
அந்த இசையை ரசிக்க முடிந்தது.
பெண்ணாகப் பிறந்ததனால்
வெறும்
ஏற்றுமதிப்பண்டமாகி
வரவேற்பறையை அலங்கரிக்கும்
காகிதப்பூக்களாக
கண்கள் அற்ற மயில்களாக
காதற்ற குயில்களாக
பூச்சாடியுள்
வளர்க்கப்படும் செடிகளாக
ஓ ! எம் வேர்கள் கிளைகள் கூட
அப்பப்போ வெட்டப்படும்.
மண் தனதியல்பிழக்க
புதிதாய் மாற்றப்படும்.
அப்போ கூட
பல வேர்கள் அறுக்கப்படும்.
பன்னிரண்டு சென்ரி மீற்றர்
இருபத்து நான்கு சென்ரி மீற்றர் என
மாறுபட்ட சாடிகளில் வளர்க்கப்படுகிறோம்.
எம் வேர்கள் அதற்குள் உள்ள
வளங்களை மட்டுமே உறிஞ்சி.
சூரிய ஒளி இல்லைதான்
ஆனாலும் கண்ணாடிகளுக் கூடாக
வரும் சொற்ப ஒளி கொண்டு
பச்சயத்தைத் தயாரித்து
வாழத்தான் துடிக்கிறோம்.
ஆனாலும் பல பூச்சாடி மரங்கள்
நீர் இன்றி மண்மாற்ற ஆள் இன்றி
பச்சையம் தயாரிக்க வலுவின்றி
பட்டுத்தான் போகின்றன.
எங்கோ இரண்டொரு செடிகள்
மட்டுமே உயர்ந்து வளர்வதற்காய்
பனியிலும்
வெய்யிலிலும்
பூத்து காய்த்து
கனிந்து
இலையுதிர்த்து
அத்தனை கால மாற்றத்திற்கும்
ஈடு கொடுத்து
தனதிருப்பை இழக்காது
வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)