இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
ஒரு சனிக்கிழமை இரவு ஒரு காட்டில் Print E-mail
மதுரா   

அரை நாள் கூடுதல் லீவு. சனிக்கிழமை. மார்ச் 3 2007. என்ன பண்ணலாம்? ஊர் சுத்தலாமா? எங்கே? ரொம்ப தூரம் வேண்டாமோ? ஒரு செட் ட்ரஸ். இரண்டு பேக் பாக். எங்க போறோம்? மலை மேல போலாம்பா. சரி. முக்காப் பேன்ட் போடலாம். ஷூ போடலாம். மலையில் காட்டில் நடக்கலாம். சீக்கிரம் சீக்கிரம் சாப்பிடு. இட்டிலி காலி. இன்டர்நெட்ல பாத்தியா? மேப்புல ரூட் பாத்தியா? லோன்லி ப்லானெட் புக்கு எடுத்து வச்சியா? ஃபோன் பண்ணியா ரூமுக்கு? நேர்ல வந்தாத்தான் குடுப்பாங்களாம். சும்மா அங்க போவோம். ஒண்ணுமில்லன்னா திரும்பி வந்திருவோம். "வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்" காண என்னோடு வரும் என் தாயுமானவன்!

காதைச் செவிடாக்கும் அமைதி. என் காது ஜவ்வுகள் கூம் கூம் என்றன. இந்த அமைதி கண்டு பல நாளாயிற்று. வட்ட வடிவ அறை. என் கனவின் நனவாய். கல்லில் கட்டியது. வட்டமாய் ஒரு கோட்டை. ஒரு சென்டு நிலத்தில். வன அதிகாரி கவனிப்பில். முன் விரிந்தது வனம். கண் கவர்ந்தது காடு. இரு கட்டில். ஒரு குப்பைக் கூடை. ஒரு மர மேஜை. ஒரு கண்ணாடி. மூன்று கண்ணாடி ஜன்னல்கள். அகலமான அறை. அகலமான கழிவறை/குளிப்பறை. பக்கத்துப் பட்டணத்தில் உள்ள அறையை விட நூற்றைம்பது ரூபாய் கம்மி. என் மனம் குதூகலித்தது. அழகில் எளிமையின் இனிமையில் இளகியது. வனம் சென்று பார்க்கலாமே என்ற போது நினைக்கவில்லை, கனவை விட அழகாய் இருக்கும் நிஜம் என்று. என்னவன் என் தேர்வுக்கு நன்றி சொல்லியபோது, மேலும் அழகானது என் விருப்பம். இரண்டு ப்ளாஸ்டிக் நாற்காலி. வெளியில் போட்டு உட்கார்ந்தோம் இளைப்பாற, காடு நோக்கியபடி. அருகில் கிளையில் நீல நிறப் பறவை. முழுமையும் நீலமாய். சிறிதாய். என்னை அசர வைத்தது. கீழே ஒரு கரும் பறவை, நடுவில் ஒரு வெள்ளைக் கீற்றோடு. வால் பெரியதாய் இருந்தது. கரும் பறவை எழுப்பிய ஒலி அமைதியின் கனத்தை நெகிழ்வாய்க் கரைத்தது. அதன் ஜோடியும் வந்தது அம்மரத்திற்கு. மற்றொரு மரத்திலிருந்து ஒரு குரல். இரண்டும் பறந்தன அரை நொடியில். நீலப் பறவைக்கும் ஜோடி அங்கே இருந்தது தெரிந்தது அந்த மரங்களில் அடர்ந்த பச்சையை எங்கள் கண்கள் பழகியபின். மாலை மயங்கும் நேரம். பல விதமாய் ஒலிகள் கலந்து கட்டி ஒரு கச்சேரி நடந்தது. எங்களுக்காக. யாரும் இல்லை அங்கு. நாளை ஹோலி. இன்று யாரும் காடு வரவில்லை.

இக்கித்தோஸின் அமேசான் காடுகள் பற்றி பேசினோம். டென்னசியின் ஸ்மோக்கி மவுன்டன்ஸ் பேசினோம். அதைவிட கேட்ஸ்கில் அழகோ என்று பேசிப் பார்த்தோம். ஆனால் இருவரும் இந்தியாவின் காட்டினுள் கால் வைத்த பெருமையையும் பூரிப்பையும் மறைக்க முடியாமல் குதூகலித்தோம். அமைதியாய் இருந்து ரம்மியமாய் விரிந்த அழகை முழுவதும் பருகினோம். எங்கள் இருவருக்கும் தெரியும் இதைப் போல் எதுவும் இல்லை என்று. இங்கு இப்போது காண்பது நாங்கள் எதிர்பார்க்காமல் கிட்டிய இனிமை என்று. இந்தியாவிற்குள் நுழையுமுன் பல முறை ஆசைப்பட்டது. செய்ய முடியாதோ என்று விசனப்பட்டது. வனவாசம். அதிகாரிகளிடம் செல்லக் கூச்சப்பட்டோம். ஆசைப் பட்டோம். செய்யவில்லை. இன்று வண்டியை நேராய் உள்ளே விட்டு கேட்டுப் பார்த்தோம், நடந்தது நினைத்தது! "எத்தனை விஷயங்கள் நாம் ஆசைப் பட்டு முயற்சிக்காமல் முடிவு செய்கிறோம் கிட்டாது என்று" என்று மீண்டும் ஒருமுறை வாழ்க்கை எங்களுக்கு காட்டிய விசேஷ தினம். நான் பெண்ணாயிருந்து இங்கு வந்தது மேலும் விசேஷம் என்று நினைத்துப் பார்த்தேன். இவ்விடம் வரை பஸ்கள் வருவதில்லை இங்கு. பெண்கள் தனியாக இன்றும் வருவதில்லை.

இந்தியாவில் நான் சாதாரணமானவள். வனம் எனக்கு வெகு தூரம். "அம்புலி மாமா"வில் பார்த்தது. "ஜுராசிக் பார்க்"கில் பார்த்தது. "என்சைக்லோப்பீடியா"வில் பார்த்தது. என் அண்ணனும் நண்பர்களும் காரையாரும் பாபனாசமும் ஏறி வந்து சொன்ன கதைகளில் கண்டது. எனக்கு எட்டாதது. நான் பெண். இந்தியாவில் ஒரு பெண். அம்பையின் "காட்டிலொரு மான்"இல் கண்டது. அபர்னா சென்னின், "மிஸ்டர் அன்ட் மிஸஸ் அய்யர்"இல் பார்த்தது. நான் செல்வது எல்லாரும் குளிக்கும் அருவி வரை. வனத்தில் இருப்பது விளிம்பு நிலை பெண்களோ? எனக்கு அந்த விளிம்பு நிலையில் உள்ள இன்பங்கள் கிட்டாத தூரத்தில் இருப்பது துயரமோ? யார் தடுத்தார்கள்? யார் என்ன சொல்லி விடுவார்கள்? எங்கே இருக்கிறது தடைக்கல்? தெரியவில்லை. யாரைச் சொல்லி என்ன குற்றம்? பஸ் நிறுத்தும் இடத்திலிருந்து வன வாசல் 4 கி.மி. தொலைவு. நடக்கலாம். நான் செல்லாதது என் குற்றமோ? ஆமாம் என்ற பதிலில் இனிமை இருந்தது. இனி செல்வது என் கையில் தானே குற்றம் என் பக்கம் என்றால்.

எங்களுக்கு இரவு உணவு கொடுக்க அழைத்துச் சென்ற அன்பர் இன்று இரவு சந்திர கிரகணம், விடிகாலை மூன்று மணிக்கு, முடிந்தால் எழுந்து பாருங்கள் என்றார். சந்திர கிரகணம் நான் பார்த்ததாய் ஞாபகம் இல்லை. 'சந்திர கிரகணம் சாதாரணம் அடிக்கடி வரும்' என்றான் என்னவன். 'நான் பார்த்ததே இல்லையே' என்று மூன்று மணிக்கு அலாரம் வைத்துக் கொண்டேன். முழு நிலவில் அபரீதமான அழகோடு காடு. இரவு ஒலிகள் கேட்டு ரசித்து பின் உறங்க சென்றோம். தூங்கி விழுந்த என்னை முழிக்க வைத்து பல விதமாய்ப் பேசிப் பார்க்க வைத்த பெருமை என்னவனுக்கே. வரப்போவது முழு கிரகணமா இல்லையா என்று இருவருக்கும் தெரியாது. நாங்கள் தனியாய் இருட்டில் காட்டில் நிலாவைப் பார்த்தவண்ணம். குரங்குகள் மரக்கிளைகளில் தாவும் போது கிலி கொடுத்தது எனக்கு.

கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்தது வெண்ணிலவு. கருப்பாய் நிழல் படர்ந்தது. முழுமையாய் நிழல் படரும் தருணம் மஞ்சளாய், சிவப்பாய், கருஞ்சிவப்பாய் பல வண்ணங்கள் தெரிந்தன நிலவில். நிலவு வட்டமாய் இல்லாமல், உருண்டையாய் தெரிந்தது அதிசயமாய் இருந்தது. நிழலின் விளையாட்டு நிலவில். பார்க்காமல் விட்டேனே இத்தனை நாள் என்று அசந்து இருந்தேன் தூக்கம் கட்டிய விழிகளோடு.

நிலவின் ஒவ்வொரு நிலையின் ஒளியிலும் இந்த காடு எங்ஙனம் இருக்கும் என்பதை ஒரே இரவில் எனக்குக் காட்டி கொடுத்தது மெதுவாய் மூடும் கிரகணம். முழுதாய் நிழல் படர்ந்தபோது, விண்மீன்கள் அட்டகாசமாய் மின்னின. உங்களுக்காக ஒரு நாள் வருகிறேன் அம்மாவாசையில் என்று ஆசை வார்த்தை பேச வைத்தது என்னை. "பிக் டிப்பர்" என்னும் "சப்த ரிஷி" தலைக்கு மேல் வந்து இங்கே இருக்கிறேன் பார் என்றது. அங்கு அழகாய் மினுங்குவது ஜூப்பிட்டரோ என்று பேசிக்கொண்டோம்.

காலையில் ஆறரை மணிக்கு 'காட்டு-வழிகாட்டி-நண்பர்' கூட்டிச் சென்றார் எங்கள் இருவரையும் - காய்ந்த இலைகள் சர சரக்க, மேடு பள்ளம், கல், முள், மரம் செடி கொடி அனைத்தையும் முறையே இல்லாமல் அங்கே இங்கே சென்று தாண்டி மான்கள் கண்டோம். மிரண்டு ஓடின, அமைதி கலைக்காமல் வராததை எண்ணி நாங்கள் வருந்துமாறு. காட்டு சேவல் கண்டோம் - மயில் போல் கூவும் சேவல் அது. மயிலும் சேவலே என்று ஞானம் தந்தது. புள்ளி மான்கள் எங்களைக் கண்காணித்தன தள்ளி நின்று கம்பீரமாய். பறவைகள் ஒலிகள் பல கேட்டோம். மான்களும் குரங்குகளும் பேசுவது கேட்டோம். நரிகள் கேட்டோம். சூரியனில் இளங்காலை ஒளிகதிரில் காடுகள் பெறும் நிறங்களில் எங்களைக் கரைத்தோம்.

திங்கள் வேலைக்காக ஞாயிறு செய்ய வெண்டிய காரியங்களை முடிக்க காலையிலேயே கிளம்பினோம் காட்டை விட்டு. அடிக்கடி வரவேண்டும் என்று அன்புடை நெஞ்சங்களைப் பிரிவது போல் கிளம்பினோம். ஊருக்குள் நுழைந்தோம். கலர் கலராய் முகங்கள். ஊரெங்கும் கோலாகலம். இன்று மார்ச் 4 2007. ஹோலி.

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)