உலக மகளிர் தினம் ஒரு கொண்டாட்டமோ, பறைசாற்றுதலோ அல்ல. இன்றைய இளைய தலைமுறைப்பெண்கள் நினைக்கலாம், "எல்லா போராட்டங்களும் முடிந்துவிட்டன, பெண்களுக்கான விடிவு காலம் பிறந்துவிட்டது" என்று. ஆனால், கடந்த காலத்தில் வாழ்ந்த பெண்ணியவாதிகளுக்கு மட்டுமே தெரியும் அந்தப் போராட்டங்களின் நீண்ட வேதனையான கால கட்டம். கண்ணுக்கு முன் தெரியாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காண யாருமே நினைப்பதில்லை. பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி நாமும் தெரிந்துகொண்டு, உலகுக்கும் தெரியப்படுத்துவதற்கான நாள்தான் மகளிர் தினம். போராட்டங்கள் இன்னும் முடியடையவில்லை. இன்றும் அரசியல், வர்த்தகம் போன்ற துறைகளில் பெண்கள் அதிகம் இல்லை. உலக அளவில் பெண்களுக்கான கல்வி, சுகாதாரம், தம்மேலான வன்முறையை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றில் பெண்கள் பின் தங்கியே இருக்கிறார்கள். குடும்பம், வேலை என்று மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நம் அவசர வாழ்க்கையில் இப்போராட்டங்களைப் பற்றியும், சாதித்ததைப் பற்றியும் சாதிக்கவேண்டியவைப் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பதற்கு நேரம் இருப்பதில்லை. வருடத்தில் ஒரு நாளாவது இதற்கென ஒதுக்கி உலகத்தின் பார்வையைப் பெண்களின் பக்கம் திருப்புவதற்கு இந்த மகளிர் தினம் தேவை தான். மகளிர் தினத்தை முன்னிட்டு உலகெங்கும் நடக்கும் கருத்தரங்குகள், விழாக்கள், இணையத்தில் எழுதப்படும் கட்டுரைகள், அங்கே பறிமாறிக்கொள்ளப்படும் செய்திகள் இவையெல்லாம் மக்களின் சிந்தனைகளைத் தூண்டி விடும். நீங்களோ உங்கள் பக்கத்து வீட்டுக்காரரோ பெண்களைப் பற்றிய புதிய செய்தி ஒன்றை அன்று தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அன்றிலிருந்து பெண்கள் தொடங்கும் தொழில்களுக்கு உதவி செய்வதென ஒருவர் முடிவு செய்யலாம். மக்கள் தொகையில் பாதிக்குமேல் பெண்கள் இருக்கும்போது, அரசுப்பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை ஏன் அதிகமாக இல்லை என்கிற கேள்வி ஒருவர் மனதில் அன்று தோன்றி, வரும் தேர்தலில் ஒரு பெண் வேட்பாளருக்குப் போட்டியிட அவர் திட்டமிடலாம். இனி தன் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்யவேண்டும் என்று ஓர் ஆண் மனம் மாறலாம். இப்படி சிற்சில மனமாற்றங்களையும் மாறுதல்களையும் மகளிர் தினம் ஏற்படுத்துமேயானால், எத்தனை முறை வேண்டுமானாலும் மகளிர் தினங்கள் கொண்டாடலாம்.
மகளிர் தினத்தையொட்டி ஏராளமான பதிவுகள், ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், புதிய கோணங்கள், அதிரடி விவாதங்கள் என தமிழ்மணம் ஒரு வாரமாக களைகட்டியிருந்தது.தமிழ்நாட்டில் பிரபலமான, திறமையான வழக்கறிஞரும், பெண்ணுரிமைக்காகப் பல வகைகளிற் பாடுபட்டு வருபவருமான அருள்மொழி அவர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு பூங்காவிற்காக ஒரு சிறப்பு நேர்காணல் தந்திருக்கிறார். இந்நேர்காணலுக்கான அனைத்துக் கேள்விகளும் பதிவர் செல்வநாயகியாற் தயாரிக்கப்பட்டவை. இந்நேர்காணலின் முதற்பகுதியை இந்த இதழில் அளிக்கிறோம். அடுத்த பகுதி அடுத்த பூங்கா இதழில் வெளிவரும். பேட்டியளித்த அருள்மொழிக்கும், கேள்விகளைத் தயாரித்த செல்வநாயகி, தமிழ்நதி மற்றும்
ஜெஸிலா அவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.
தமிழ் இலக்கியங்கள் பெண்களை 'கற்பு', 'பதி விரதம்' போன்ற மூடநம்பிக்கைகளால் முடக்கிவைத்திருந்ததை தமிழியின் 'தினம் மகளிர் தினம்' பதிவு சுட்டிக்காட்டுகிறது. பெரியார், பாரதியார் போன்றவர்களின் பெண் உரிமைக்குரல்கள் சமூகத்தைச் சிந்திக்கவைத்தன. விதவை வாழ்க்கையின் வேதனை, இளம் வயது திருமணம், கல்வி மறுப்பு போன்றவை குறைந்துவிட்டதென்று நம்பிக்கையூட்டும் தமிழி, அடுத்து, பெண்ணியம், பெண் விடுதலை என்று பேசிக்கொண்டிருந்தவர்களும் குறைந்துவிட்டார்கள் என்று சொல்லி சற்றே நம் நம்பிக்கை குறைத்து, பின், "பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்போது காரியத்தில் இறங்கிவிட்டார்கள்" என்று சொல்லி மீண்டும் நம்மை நிமிர வைக்கிறார்.
தமிழியின் கருத்திலிருந்து வேறுபட்டிருக்கிறார் கீதா சாம்பசிவம் தனது 'ஆன்மீக வழியில் பெண்கள்' பதிவில். வேத காலங்களிலும், இலக்கியங்களிலும் பெண்கள் எந்த வகையிலும் இழிவுபடுத்தப்படவில்லை என்றும், அவர்கள் ஆன்மீகத்தைப் பின்பற்றியதால் கல்வியிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினார்கள் என்பதையும் ஒளவையார், காரைக்கால் அம்மையார் போன்ற உதாரணங்களுடன் கூறுகிறார்.சமூகத்தின் பார்வைக்குப் பெண்ணியவாதியாகளாகச் சமூகமுகப்பூச்சுப் போட்டு தம்மை காட்டிக்கொள்ளும் பெண்கள் சிலர் தம் சொந்த வாழ்க்கையில் பெண்ணியவாதக் கொள்ளைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்பதை 'விடுதலை' என்ற ஆசீப் மீரானின் சிறுகதை கோடிட்டுக் காட்டுகிறது.சலுகைகளும் பரிந்துரைகளும் சுதந்திரமும் நிறைந்த ஆண்களின் உலகம் பொறாமைப்பட வேண்டிய ஒன்று. பெண் என்கிற காரணத்தினாலேயே தனக்குக் கிடைக்காமல் போய்விட்டச் சுதந்திரத்திர தாகத்தினை, துணிச்சலுடன் சமூகத்தை மீறும் பெண்களையும், துர்க்கை போன்ற பெண் தெய்வங்களையும், பெண் போராளிகளையும் பார்த்து ஆற்றிக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார் தமிழ்நதி, தன் 'ஆறிக்கொண்டிருக்கிறது எனக்கான தேனீர்' பதிவில். அமைதியான இரவு நேரத்தில் காலார நடப்பதையும், இரவு நேரத்தில் தன் வீட்டு முன் புறம் கூடத் தன்னுடையதாக இல்லையே என்கிற தமிழ்நதியின் ஆதங்கம் பல பெண்களின் மனதைத் தொற்றிக்கொள்வதைத் தடுக்க முடியாது.
பெண் அடிமைத்தனம் இன்னும் பல குடும்பச் சூழல்களில் இருந்துவருகிறது. ஆண்கள் ஆயிரம் தவறு செய்தாலும், ஒரு பெண் தவறு செய்தால் அதன் மீது விழும் வெளிச்சம் மிக அதிகமாக இருக்கிறது. தன்னைக் கிண்டல் செய்து பாட்டுப் பாடும் ஆணுடன் அரைகுறை உடையோடு குத்தாட்டம் போடும் பெண்களை, கடமை வீரர்களாய் இருக்கும் கதாநாயகர்களைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் கதாநாயகிகளைக் காட்டும் தமிழ் சினிமாவும் இதே பெண் அடிமைத்தனத்தை தான் சித்தரிக்கிறது என்பதை விளக்குகிறது சிந்தாநதியின் 'பெண்ணைப் பூட்டி வை' பதிவு. தமிழ் சினிமாவால் நகைச்சுவைக்காகவும் வக்கிரத்திற்காகவும் பயன்படுத்தப்படும் மற்றொரு சிறுபான்மைக் குழு - திருநங்கைகள். அவர்களைப் பற்றி சினிமா ஏற்படுத்தியிருக்கும் ஏளனத்தில் இன்றும் மாற்றமில்லை. மக்களிடையே பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் சினிமா எப்படித் திருநங்கைகளைக் கண்ணியமற்ற வகையில் சித்தரிக்கின்றன என்பதை லிவிங் ஸ்மைல் வித்யா தன் 'தமிழ் சினிமாவின் கலா பார்வையில் திருநங்கைகள்' என்ற பதிவில் மிக உருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.
மேலை நாட்டுக் கலாசாரத்தில் குழந்தையை வளர்ப்பதென்பது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சவால். முக்கியமாக அந்த பதின்ம வயது வந்துவிட்டாலே பிரச்சினைதான். ஆபத்தென்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொது என்றாலும், பெண்களுக்கு மனதளவில் மட்டுமல்லாமல் உடல் அளவிலும் அதன் பாதிப்பு இருக்கும் என்பதால் கூடுதல் கவனம் தேவைப்படும். பதினாறு வயது ஆனதும், பகுதிநேரவேலை செய்து சம்பாதித்துத் தம் சொந்தக்கால்களில் நிற்கத் தொடங்கிவிடுகிறார்கள். கல்லூரியில் அடியெடுத்து வைத்தவுடன், தனி வீடு எடுத்து வசிக்கத் தொடங்கி விடுகிறார்கள். குழந்தைகள் மேல் பெற்றோர்கள் நம்பிக்கை வைக்கவேண்டும். தவறே இல்லாமல் ஒரு வாழ்க்கை இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அனுபவம் மிக்க ஒரு பொறுப்பான தாயாகத் தன் 'குழந்தை வளர்க்கிறேன்' பதிவில் துளசி கோபால் சொல்லியிருக்கிறார்.
ஆண் - பெண் பாகுபாடு குழந்தை பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. சோறு பொங்கும் செப்புச்சாமான்களே பெண் குழந்தைகளின் விளையாட்டுப்பொருட்களாக இருக்கின்றன. பொறுப்பற்ற ஆண்களை உருவாக்குவதும் பெண்களே. தன்னுடைய பெண்பிள்ளைக்குச் சமைக்கவும் வீட்டு வேலை செய்யவும் சொல்லித் தரும் தாய்மார்கள், தம் ஆண்பிள்ளைகளுக்கு அவற்றைச் சொல்லித் தந்தால் வருங்காலத்தில் அந்த ஆண்பிள்ளை தன் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவுமுடியும் என்று 'மகளிர் தினம் அவசியமா?' என்ற தன் பதிவில் சொல்கிறார் ஜெஸீலா. பேருந்துகளில் பெண்களுக்கான இருக்கைகளின் பின்னிருக்கும் ஒரு பெண்ணியவாதக் கருத்து இந்தப் பதிவில் நமக்குப் புலப்படுகிறது. ஆண் - பெண் சமத்துவம் என்று பேசும் பெண்களுக்கு எதற்காக பிரத்யேகமான இருக்கைகள் மட்டும்? ஏனென்றால், ஒரு ஆணுக்கு அன்றைய வேலைகள் அலுவலகத்திலேயே முடிந்துவிடுகிறது. அவன் வீட்டுக்குச் சென்றதும் தேநீர் அருந்திவிட்டு, செய்தித்தாள் படிப்பான் அல்லது தொலைக்காட்சிப் பார்ப்பான். பிறகு ஓய்வு தான். ஆனால் ஒரு பெண்ணுக்கு அலுவலகம் முடிந்த பின்னும், வீட்டு வேலைகள் தொடர்கின்றன. எனவே ஓர் ஆணின் கால்களைவிட பெண்ணின் கால்களுக்கு ஓய்வு அதிகம் தேவை. எனவே, பேருந்துகளில் பெண்களுக்கான பிரத்யேகமான இருக்கைகளும் தேவை என்று தன் தோழி சொன்னதாக முடிக்கிறார் ஜெஸீலா.
வரலாற்றுப்போர்களில் தமிழ்ப்பெண்களின் வீரத்தைப் பற்றி நாம் இலக்கியங்களிலும் இதிகாசத்திலும் படித்திருக்கிறோம். பின்தங்கிய ஒரு குடும்பத்திற் பிறந்து, வளர்ந்து, திருமணம் செய்து, கணவனிடம் அடி உதை வாங்கி, பின் ஒரு போராளியாக மாறிய வீராங்கணை தமிழ்க் கவி அம்மையாரைப் பற்றி வசந்தனின் பதிவில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. தமிழ் ஈழப்போரில் ஒரு மகனை இழந்த பிறகும் தன் கடைசி மகனோடு தானும் இயக்கத்தில் சேர்ந்த இவரின் தனித்திறமைகளைப் பற்றி வசந்தனது பதிவில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. பெண் விடுதலை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய கவிதைகளை சந்திரவதனா, நளாயினி மற்றும் நிர்மலா தம் பதிவில் எழுதியிருக்கிறார்கள். சிறுமிகள் நிவேதிதாவின் ஓவியமும் அஞ்சலியின் புகைப்படங்களும் பூங்காவை அலங்கரிக்கின்றன.
பெண்களைப் பற்றியே இவ்விதழ் பெரிதும் பேசினாலும், வழக்கம்போல மற்றைய துறைகளிலும் படைப்புகள் இந்த வார, பூங்காவில் இருக்கின்றன. இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களினால் சில்லறை வணிகத்திற்கு ஏற்படும் பாதிப்பினை சந்தோஷ், செல்வம், நிர்மல் ஆகியோரின் பதிவுகளில் படிக்கலாம். காய்கறி வியாபாரத்தையும் நவீனப்படுத்தி கோயம்பேடு வியாபாரிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் ரிலையன்ஸ் கம்பெனியின் 'ரிலையன்ஸ் ப்ரஷ்' திட்டத்தைப் பற்றி கெளசி தன் பதிவில் எழுதியிருக்கிறார்.மேலும் முத்து(தமிழினி), கலை, மலைநாடான், பினாத்தல் சுரேஷ், கமலா வாசுகி, நாகை சிவா, மதுரா ஆகியோரும் தங்களது படைப்பினை பூங்காவிற்கு அளித்திருக்கிறார்கள்.
பூங்காவின் வேண்டுகோளுக்கிணங்க, தங்கள் படைப்புக்களையும், சிறப்புக் கட்டுரைகளையும் அனுப்பிய அனைவருக்கும், மற்றும் பங்களிப்புச் செய்த அனைத்துப் பதிவர்களுக்கும் பூங்கா தன் நன்றியைத் தெரிவிக்கிறது.
|