|
கண்ணகி சிலப்பத்கார நாயகி அதற்கப்பால் வணக்கத்துக்குரிய தெய்வமாகவும் மாற்றம் பெற்றவள். கண்ணகி வழிபாடு எப்படி எங்கு தொடங்கியது என்பதைப் பற்றியெல்லாம் ஆராயும் எண்ணம் எனக்கு இல்லை. தமிழகத்தில் கண்ணகி வழிபாடு இருக்கிறதா? நான் சந்தித்த தமிழக நண்பர்களிடம் கேட்ட போது இல்லை என்றார்கள்.
ஈழத்தில் கண்ணகி வழிபாடு இருக்கிறதா என்றால் இருக்கிறது. சிங்களவர்களும் பத்தினி தெய்யோ என்பது கண்ணகியை எனக் கேள்விப்பட்டேன் ஆனால் சரியாக அதுவும் தெரியாது கிழக்கு மாகாணத்தில் இருப்பதாகச் சொன்னார்கள் அதைப் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது.
யாழ்ப்பாணத்தில் கண்ணகிக்கு கோயில் உண்டா எனக் கேட்டால் பலரும் இல்லை என்பார்கள். என் வயதொத்தவர்களில் பலருக்குத் தெரியாத போது இனி வரும் சந்ததிக்குத் தெரிய வருமா என்பதைச் சொல்ல முடியவில்லை. ஏனெனில் பெண் தெய்வங்களும் அம்மன் எனும் பொதுமைக்குள் அடக்கப்பட்டு விட்டதும்; பாரம்பரிய பூசகர்களிடம் இருந்து, ஆகம விதிக்கு உட்படாத கோயில்கள் ஆகம விதியோடு மாற்றியமைக்கப்படுவதும், பட்டதும் காரணம்.
எனக்குத் தெரிந்த கோயில்களைப் பட்டியல் இடுகிறேன்.
1. பன்றிதலைச்சி மட்டுவில் சாவகச்சேரி- கண்ணகை அம்மன் என்பதாகச் சொல்லப்பட்டாலும் ஆகம விதிக்கமைய கோயில் அமைக்கப்பட்டு, பார்வதி, பரமேஸ்வரனாகிவிட்ட ஆலயம். பங்குனித் திங்கள் சிறப்பானது. பல ஊர்களிலும் இருந்து மக்கள் பொங்க வருவார்கள். சிலம்பு தாங்கிய கண்ணகி சிலை இருந்ததா/ இல்லையா ஞாபகம் இல்லை.
2. மண்டுவில் கண்ணகை அம்மன், மீசாலை சாவகச்சேரி (சோலையம்மன்)
கோயிலைச் சுத்தி சோலை/ காடு இருக்கு.


ஆகம விதிக்கமைய கோயில், பூசைகள் நடக்கும் ஆலயம். வருடாந்தம் மகோற்சவம் நடக்கும். ஆனால் மூலஸ்தானதில் இருந்த சிற்பங்கள் சிலம்பு தாங்கிய பெண் தெய்வ சிலைகள். யுத்தத்தால் சேதமானபின் மீளமைக்கப்படும் ஆலயத்தில் கண்ணகி சிங்க வாகனம், சூலாயுதத்துடன் காட்சி தரும் சிலைகள் அமைக்கப்படுகிறன.
3. சுட்டிபுரம் கண்ணகை அம்மன்- கோயில் ஆகம விதிக்கமைய அமைக்கப்படா விட்டாலும் பூசைகள் ஆகம விதிக்கமைய அமைந்துள்ளன.
4. கச்சாய கண்ணகை அம்மன்- கோயில் ஆகம விதிக்கமைய இல்லை-பூசை ஆகம விதிகமைய அமைந்துள்ளன.
5. விடத்தற்பளை கண்ணகை அம்மன்- பூசை பரம்பரைப் பூசகர்.
வன்னியில் பூனகரியில் ஒரு கண்ணகை அம்மன் ஆலயம் உண்டு என்பது தெரியும். அதை விட மேலதிகமாக எனக்குத் தெரியாது.
அடுத்து வன்னியர் கோயில் எனும் ஒரு கோயிலைப் பற்றியும் சொல்ல வேண்டும்.
இது சாவகச்சேரியில் இருந்து கச்சாயூடாக கிளாலி செல்லும் வீதியில் விடத்தற்பளையில் இருக்கிறது.
வீதியொரம் இருந்தாலும், மிகுதி மூன்று பக்கமும் பற்றைகளால் சூழப்பட்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஒரு குளம்.
கடவுளுக்குரிய உருவமோ சிலைகளோ இல்லை.
தகரத்தால் கூரையிடப்பட்ட பந்தல்கள். நான்கு பக்கமும் திறந்தவை.
வன்னியர் அப்பந்தல்களுக்கு வெளியே மூன்று பக்கமும் கிடுகு வேலியால் சூழப்பட்டு, கூரையற்று மழை வெயில் காய்ந்தபடி இருந்தார். வருடத்தில் ஒரு முறை பொங்கல் படையல் அதை தொடர்ந்து எட்டம் மடை மட்டுமே அவருக்கான பூசை
அண்மையில் (2005) போன போது பார்த்தால் கூரையற்று இருந்தாருக்கு சிறு சிமேந்து கட்டிடம், ஓட்டுக் கூரை என ஆலய வடிவம் பெற்றது மட்டுமல்ல கோயில் வாசலி திரையில் வள்ளி தெய்வானை சமேதராக முருகன் காட்சி தந்தார்.
இன்னும் பத்து வருடங்களில் ஆகம விதிக்கமைய கோயில் அமைக்கப்படலாம். வன்னியரோட பெயர் சிறி சுப்பிரமணியர் ஆகலாம்.
இதை எழுதியது எனக்கு தெரிந்த ஒரு இரு பத்தாண்டு காலதுக்குள்ளே கண்ணகி என்று சிறுவயதில் சொல்லப்பட்ட ஆலயங்கள் துர்க்கை/ பார்வதியாக மாறுவதும், வன்னியர் சுப்பிரமணியர் ஆவதும் நடக்கிறதென்றால். இதே போல எவ்வளவு மாறியிருக்கும் என்பதை எண்ணிப் பார்ப்பதற்கே.
|