காலத்தின் மாற்றத்தால் சில சமூக நியதிகளுக்கு உட்பட்டு நாம் அனைவரும் ஒயாது உழைத்துக்கொண்டே இருக்கிறோம். வெற்றியின் அளவுகோல்களும் விருப்பத்தின் அளவுகோல்களும் மாறிவிட்டபின் அதற்கேற்றார்போல உழைக்கவும், கற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.
மனத்தகைவு சோர்வுக்கும் பின் பல வித உடல் உபாதைகளுக்கும் இடமளிக்கும். முக்கியமாக வயிற்று அல்சர், இரத்தக் கொதிப்பு, தலைவலி போன்றவை பல நேரங்களில் தகைவைச் சேர்ந்ததே. 6 மாத குழந்தைக்கு கூட அன்னையோ தந்தையோ காப்பகத்தில் விட்டு செல்லும் நாள் முதல் தகைவு ஆரம்பிக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கோ நாடு விட்டு நாடு வாழும் போது மற்ற மாணவர்களுடன் ஒத்துப் போவதிலிருந்து, திடீரென்று வேறு ஊர்களுக்குச் செல்ல நேர்ந்தால் நண்பர்களைவிட்டு செல்ல வேண்டிய அவசியம் போன்ற காரணத்தினால் தகைவு வருகிறது.
முதன் முதலில் 1932 இல் இந்த தகைவின் காரணிகளைப் பற்றி படிக்கும் போது கானன் என்பவர் தகைவை மிருகங்கள் சமாளிக்க சண்டையிடுதலோ அல்லது ஓடவோ செய்கின்றன. இன்றும் மனிதன் அதீத தகைவு வந்தால் சினந்து கொள்ளவோ அல்லது விட்டு விலகவோ செய்கின்றான்.
பின்பு வந்த ஹன்ஸ் செல்யே என்பவர் ஓடுவது சண்டையிடுவது இவற்றுடன் மனிதன் தன்னை மாற்றிக் கொள்ளவும் செய்கின்றான் என்று கூறினார். அதன் பின் உளவியல் துறை நிபுணர்கள் 1960 லிருந்து 70 வரை ஆய்வுகள் செய்து கீழ் கண்டவாறு முடிவுக்கு வந்தனர்.
மனிதன் ஒரு தகைவின் காரணியை எப்படி உணர்கிறானோ அதற்கேற்றார் போல எதிர்வினை ஆற்றுகின்றான். உதாரணமாக நாம் நம்மை ஒருவன் பின்தொடர்வதாகவும், அவனால் நமக்கு தீமை ஏற்படும் என்று நினைத்தால் உடனே ஓடவோ வேகமாக நடக்கவோ அல்லது அருகில் உள்ள ஒரு கடையில் நுழையவோ செய்கிறோம்.
தகைவு ஒரு காரணிக்கு மனிதன் கொடுக்கும் முக்கியத்துவம் பொறுத்தே இருக்கிறது. உதாரணமாக தேர்வின் முடிவைப்பற்றி கவலைப்படத் தேவையில்லாத ஒருவன் தேர்வைக் குறித்து தகைவு கொள்ளத் தேவையில்லை. அதே போல பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வு பலருக்கு தகைவைத் தந்தாலும், அதன் மீது விருப்பம் இல்லாதவருக்கு தகைவைத் தருவதில்லை. இது போன்ற அனுமானங்களே தகைவின் அளவைத் தீர்மானிக்கின்றன.
சில சமயங்களில் சூழ்நிலை மாற்றம் கூட தகைவை ஏற்படுத்தும். சூழ்நிலை மாற்றங்கள் சமூகம், மனிதனின் மனநிலை மற்றும் உடல்நிலையில் மாற்றம் ஏற்படுத்த அவை மாறு வழியில் தகைவை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. சாலைப்பணி நடந்து கொண்டிருக்கும் போது போக்குவரத்து மிகவும் மெதுவாகச் செல்லும். சில சமயம் இது விபத்துக்களில் முடியும், அதனால் போக்குவரத்து ஸ்தம்பிக்க கூடும். இதனால் முதலில் அலுவலகத்திற்கு தாமதமாகிறதே என்று மனநிலையில் பதற்றமும், பின் குறுக்கே நுழைய எத்தனிக்கும் வாகனங்களின் மீது சினமும் உண்டாகும். இந்த சினத்தால் ஏற்படும் மன அமைதியின்மை தொடர்ந்தால் தலைவலி போன்ற உடல் நிலை மாற்றங்கள் ஏற்படுத்தும். இதில் மனிதன் செய்ய முடிவது எதுவுமே இல்லை. பணிக்கு சற்றே விரைவில் கிளம்பிச் சென்றால் தாமதம் பாதிக்காது. அதுவும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், மனைவியும் பணிக்குச் செல்ல நேர்ந்தால் எளிதில் முடிகிற காரியம் இல்லை. அதேபோல அரசியல் மாற்றங்களால் ஏற்படும் மாறுதல்கள் தகைவை உருவாக்க கூடியவை. புறக்காரணிகளால் ஏற்படும் மாற்றங்களை நாம் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் அகக்காரணிகள், நம் கட்டுப்பாட்டில் இருப்பவை, நம்மால் மாற்றக்கூடியவை. மாற்றுவதற்கு நாம் செய்ய வேண்டியதை இங்கே திரும்பப் பதிகிறேன். இந்த மாற்றங்களை ஏற்படுத்த பரவலாக உபயோகிக்கும் Health believe model, Social learning theory அடிப்படையில் சில பயிற்சிகளையும், அதைச் செய்ய நேர நிர்வாகம் ஆகியவற்றையும் காணலாம்.
தகைவு வரும் போது அதன் அளவை பொறுத்து மனிதன் ஒடவோ அல்லது சண்டையிடவோ ஆரம்பிக்கிறான். இது உயிருக்கு பயந்து மட்டும் அல்ல அன்றாட நிகழ்ச்சிகளில் நாம் அனைவரும் எதிர்வினை ஆற்றும் போது இதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம். வினை சிறியதாக இருப்பின் நமது எதிர்வினையும் சிறியதாக இருக்கும். துரதிருஷ்டவசமாக, நமது உடல் பல வித மாற்றங்களுக்கு உள்ளாகிறது. மனிதன் சிடுசிடுவெனவும், கோபமுடையவனாகவும், அதிக நிலையின்மைத் தன்மையுடனும் மாறும் போது இது உடல் நலத்தைப் பாதிக்கிறது. வாகனங்கள் ஓட்டும் போது விபத்துக்குள்ளாவதும், வேலையில் தவறுகள் ஏற்படவும், நெருங்கிய உறவினருடன் மனத்தாங்கல் வரவும் காரணமாகிறது. தகைவைச் சமாளிக்க பல வழிகள் உண்டு. இவை 3 குழுக்களில் (groups)அடங்கும்.
1. செயலை ஒட்டி தகைவை அடக்கும் திறன்: இங்கே நம் தகைவின் காரணிகளை எதிர்கொள்ளத் தேவையான திறமை, சூழ்நிலையை அல்லது நிலைமையில் மாற்றம் விரும்புபவை. இது அறிவியல், சிந்தனை பூர்வமானது. இங்கே அதிகம் செயல்படுபவை நமது மூளைத்திறன் (cognitive ability)
2. உணர்ச்சி பூர்வமாக கட்டுப்படுத்தும் திறன்: இங்கே நமக்கு சூழ்நிலையை கட்டுப்படுத்தும் சக்தி இல்லை ஆனால் அதை எப்படி உணர்வது என்று மனத் திடம் பெறுகிறோம். அல்லது நமக்கும் மேலான ஒரு சக்தியை நம்பி நம் பிரச்சினைகளை விடுவது. இங்கேதான் சாமியாரை நம்பும் மக்கள் வருகிறார்கள்.இன்னொரு சாரார் தன்னம்பிக்கையில் நம்பிக்கை கொண்டு சமாளிக்க முயல்வதும், சிலர் ஒருவித தன்மேலே சினம் கொண்டு எதிரான செயல்களைச் செய்யவும் தொடங்குகிறார்கள். இந்த நிலையை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அதிகமான நேரம் மக்கள் இங்கே செயல்படுத்துவது உணர்ச்சித்திறன் (emotional ability) .
3. ஒப்புக்கொள்ளும் மனநிலை அடைதல்: இங்கே நமது கட்டுப்பாட்டுக்குள் அடங்காத ஒரு நிகழ்வு நடந்து விட்டது. நாம் அதை மாற்ற முடியாது என்கிற போது அதற்காக வருந்துவதோ சினம் கொள்ளுவதோ கூடாது என்பதும், மன அமைதி பெறுவதும் வலியுறுத்தப்படுகிறது. நடந்தது நடந்துவிட்டது, இனி என்ன செய்யலாம் என்று சிந்திப்பது இதில் அடங்கும்.
இனி தகைவின் இரு பகுதிகளையும் பல நிலைப்பாடுகளையும் கவனிக்கலாம்.
பலநாள்/காலம் நிலைக்கும் தகைவு: இங்கே நாம் ஒப்புக்கொள்ளும் நிலையில் இருப்பினும், மனம் உடல் சோர்ந்து போக இது காரணம் அழுத்தமும் நம்முடைய காரியத்தை முடிக்கும் திறனும்: பலர் அதிக வேலைப் பளு இருப்பின் அதுவும் குறைந்த காலத்தில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பின் அது செவ்வனே செய்யப்படும் என்ற கணிப்பு குறைந்த காலத்திற்கு நீடிக்கும் தகைவு: இது சாலை விபத்து போன்றது. குறைந்த காலமே இருக்கும் எனினும் காலத்தை பொறுத்து வீரியம் அதிகம்.
தகைவை குறிக்கும் பதிவேடு(diary): இது நமது அன்றாட வாழிவில் தகைவின் காரணிகளை அடையாளம் காட்டும் ஒரு கண்ணாடி. மேலும் ஒவ்வொரு தகைவின் போதும் நாம் எப்படி எதிர்வினை ஆற்றுகின்றோம் என்பதை நமக்கு உணர்த்தும் சிறந்த வழிகாட்டியுமாகும்.
நாம் நாள் தோறும் சில காலத்திற்கு தினமும் அன்று நடந்த நிகழ்வுகளில் அதிகம் நமக்கு தகைவைத் தந்தது எது என்பதையும் அதற்கு எப்படி எதிர்வினை புரிந்தோம் என்பதையும் எழுத வேண்டும். இப்படி செய்வதால் நமக்கு நமது வாழ்வில் அடிக்கடி தகைவைத் தரும் நிகழ்வுகள் எதனால் எப்படி வருகின்றது என்பது தெரியும்.
* தகைவை நல்லபடி ஆராய இது உதவும்
* தகைவின் அளவும் நம்முடைய செயல்பாட்டின் திறத்தையும் ஒப்பிடவும் எந்த அளவு ஸ்ட்ரெஸில் நாம் நன்றாகப் பணியாற்றுகின்றோம் என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.
* நம்முடைய வினைகள் பயன் தந்தனவா, எப்படி மாற்றி எதிர்வினை புரிந்திருக்கலாம் என்று யோசிக்கவும் வாய்ப்பாக அமையும்.
பயன்படுத்தும் முறை:
தகைவு பதிவேடு ஒரு முறையுடன் தகவல்களைப் பதிப்பிப்பதால் நல்ல பயனுள்ளதாகும். இது சில அடிக்கடி வரும் தகைவுகளையும் சில அபூர்வ தகைவுகளையும் பிரித்துப் பார்க்க உதவுகிறது. தகைவைப் பதிக்கும் போது ஒரு முறை வைத்திருப்பது நன்மை பயக்கும். மாலையில் அல்லது இரவில் பதிவு செய்தால் அதை முறையாகச் செய்யவேண்டும்.
* எழுதும் போது நம்முடைய மனநிலை எப்படி இருந்தது என்பதையும் எழுதவும்.
* எழுதும் போது எவ்வளவு செயல் திறன் உங்களுக்கு உள்ளது என்பதை 1-10 வரையிலான அளாவுகோலில் குறிக்க வேண்டும்
* எழுதும் நேரத்தில் தகைவு குறைந்ததா, ஆம் எனில் எது தகைவை குறைத்தது என்பதையும் எழுத வேண்டும்.
* நீங்கள் எப்படி அதை கையாண்டீர்கள் என்பதையும் உங்களின் மனநிலையையும் எழுத வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட குழுவில் இந்த முறையில் ஒரு வாரம் எழுதி பிறகு அதை ஆராய்ந்து பார்த்ததில் எழுதத் துவங்கியபின் பங்குகொண்டோர்கள் தகைவை சரியாக எதிர்கொள்ள கற்றுக் கொண்டதாகவும், மகிழ்ச்சியான செயலி பட்டியலிடும் போது அதை மீண்டும் நினைத்து பார்ப்பதால் மனம் உற்சாகமடைவதாகவும் தெரிந்தது
.
பதிவேடை ஆராயும் முறைகள்:
1. முதலில் பலவிதமான தகைவுகளையும் அதன் காரணிகளையும் இனம் பிரிக்க முடியும். அதிலிருந்து அடிக்கடி நிகழ்வதையும் எப்போதாவது நிகழ்வதையும் இனம் பிரித்து எழுதுங்கள். அதிலிருந்து அதிகம் மன வருத்தத்தைத் தந்த தகைவுகளை அடையாளம் காட்டுங்கள். இவற்றை பட்டியலின் அடியில் குறிப்பிடுங்கள்.
2. பட்டியலின் மேலே உள்ள தகைவுகளை நீங்கள் அடக்கவும் எதிர்கொள்ளவும் கற்றுக் கொண்டீர்களே அனால் மற்றதும் எளிதாகக் கைகூடும்.
3. அதன் பின், மகிழ்ச்சி தந்த செயல்கள், செயல் திறன் அதிகமான நிகழ்வுகள் இவற்றை தகைவின் காரணிகளுக்கு எதிராகப் பட்டியலிடுங்கள். இதிலிருந்து உதாரணமாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தகைவு கொள்ளுமிடம் அதிக செயல் திறன் காட்டி இருப்பதாக வைத்துக்கொண்டால், அந்தத் தகைவின் அளவை நிர்மாணிக்க முடியும்.
4. தகைவின் காரணிகளை எப்படிக் களைய முடியும் அல்லது தடுக்க முடியுமா என்று யோசிக்கவும்
5. கடைசியாக தகைவின் போது எப்படி உணர்ந்தீர்கள் என்பதையும் ஒத்து நோக்குங்கள்.
இப்படி ஒரு வாரம் செய்தால் உங்களுக்கு எது அதிக தகைவைத் தருவது என்பதையும், அதை எப்படி சமாளிப்பது என்பதையும் திட்டமிட முடியும். அதே போல எந்த அளவு தகைவு உங்களின் செயல் திறனின் மிக அதிக சக்தி தருகிறது என்பதையும் தீர்மானிக்க முடியும். அது மட்டுமின்றி இதே போல எதிர்காலத்தில் ஒரு சூழ்நிலை வருமானால் எப்படிச் சமாளிக்க முடியும் என்பது தெரிய வரும்.
இந்த முறையே பல மனநல ஆலோசனையாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சில எளிதான பயிற்சி முறைகளும் அலுவலகத்தில் வரும் எதிர்பாராத தகைவுகளை சமாளிக்கும் விதம் பற்றியும் காணலாம். அலுவலகத்தில் இந்த பயிற்சியை இங்கே சில நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்குப் பயிற்றுவிக்கிறார்கள்.
தமிழோவியத்தில் பல மாதங்களுக்கு முன் எழுதியது இன்னும் அதிகக் குறிப்புகளோடு மீண்டும் இங்கே.
http://reallogic.org/thenthuli/?p=203
http://reallogic.org/thenthuli/?p=210



