இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தொகுப்பாளரின் மேசையிலிருந்து Print E-mail
ஆசிரியர் குழு   

பல்விதமான படையெடுப்புக்களால் தமிழகம் இழந்த சொத்துக்கள் கணக்கிலடங்கா. இசைத் தமிழ் அவற்றுள் முக்கியமானது. எளிய மக்களின் அன்றாட வாழ்வில் பிறந்த இசை, விற்பன்னர்களின் நற்பணிகளால் செழுமையுற்றுப் புகழடைந்து பரந்திருந்தது. ஔவை ஒரு நல்ல பாணர் என்று இன்குலாப்பின் ஔவை நாடகம் உணர்த்தும். தமிழிசையின் மிக நீண்ட மரபு காலப்போக்கில் விளிம்புக்குத் தள்ளப்பட்டும், பெயர் மாற்றங்களுக்குட்படுத்தப்பட்டும் இன்று ஒரு இரண்டாந்தர இசையென்ற நிலைக்கும், திரையிசை என்ற வடிவுக்குள்ளும் குறுக்கப்பட்டிருக்கிறது.

 

நம் தொன்மையைக் குறித்த அறிதலும், பெருமிதத் தலைநிமிர்வுமே நம் இசைத்தமிழை மீட்டெடுக்கும் வல்லாயுதங்கள். அறிதலுக்கான ஒரு படியாக, தமிழிசைக்குப் பெரும் பங்குகளை ஆற்றிவருபவரும், சிந்துப் பாடல்களில் முனைவர் பட்டம் பெற்றவருமாகிய புதுச்சேரி பேராசிரியர் திருமுருகன் அவர்களது செவ்வி வரும் நான்கு வாரங்களுக்கு வெளிவரும். முதல் பகுதியில் இவர் தமிழிசையின் தோற்றம், பண்கள், இசை மரபுகளினிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை இசைநயத்துடனும், மனதிற்பதியும் அழகான பாடல்களினூடாகவும் கற்றுத் தருகிறார். இவரைச் செவ்வி கண்டு பதிந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில் சேரன். தமிழுக்காகப் பல பணிகளை ஆற்றிவரும் அருமையான இளைஞர் இவர்.

தமிழ் மரபு அறக்கட்டளையினை நிர்வகித்துவரும் முனைவர் நா.கண்ணன் தற்போது நான்கு வலைப்பதிவுகளை உருவாக்கியுள்ளார். இவற்றின் மூலம் வலைப்பதிவர்களும், ஏனையோரும் தமிழ் இசை, பேச்சு வழக்கு குறித்த ஒலிக்கோப்புக்களையும், அசைபடங்களையும், புகைப்படங்களையும் பகிர்வதற்கு வழிசெய்யப்படுகிறது. மேலும் தமிழ் ஆராய்ச்சி குறித்த தகவல்களும் இங்கு பதியப்பெறும். பதிவர்கள் இத்தகு முயற்சிகளுக்கு பங்களிப்பார்கள் என நம்புகிறோம்.

ஜெகத் ஒரு பயனுள்ள செயலியை உருவாக்கியிருக்கிறார். இதுவொரு எழுத்துப் பெயர்ப்புச் செயலி. இந்திய மொழிகள் சிலவற்றுக்கு இவற்றை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் காட்டியிருக்கிறார். உதாரணமாக உங்களுக்கு மலையாளம், இந்தி, வங்காளத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு வரியைத் தமிழில் படிக்க வேண்டுமானால் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம் என்கிறார்!

"விருப்பப்படி" என்றொரு புதிய செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்ரகீம் ஷெரீஃப் இதனை உருவாக்கியுள்ளார். இச்செயலியைப் பயன்படுத்தி, தமிழில் இருக்கும் சுமார் 108 எழுத்துருக்களையும் உங்கள் கணினியில் தட்டச்சுச் செயலியாகப் பயன்படுத்தமுடியும். பலவிதமான எழுத்துருக்கள் தமிழுக்கு இருப்பதும், அவற்றால் விளையும் சாதக/பாதகங்களும் ஒருங்குறியின் வருகைக்குப் பின்னால் சற்றே குறைந்திருக்கின்றன. என்றாலும் அழகான எழுத்துருக்கள் பலவற்றை இழந்துவிடும் நிலையுமிருக்கிறது. "விருப்பப்படி" இவற்றுக்கு ஒரு தீர்வைத் தரலாம். இச்செயலியில் இணைக்கப்பட்டிருக்கும் மேலதிக வசதிகளாவன, தானியங்கிப் பிழைதிருத்தி (ஜிமெயிலில் தமிழ் பிழைதிருத்தியை கூகுள் புகுத்தியிருப்பதைப்பற்றி அண்மையில் பகீ எழுதியிருந்ததையும் இங்கே நினைவுகூர்வோம்), முகவரிப் புத்தகம், தமிழ் அகராதி, முன்னோட்டம் பார்ப்பது, 200 எழுத்துருக்களில் உங்கள் எழுத்தைப் பார்ப்பது. பல செயலிகளோடும் இணைந்தியங்கக் கூடியதாக இச்செயலி இருக்கும். இத்தகவலை நம்மோடு பகிர்ந்துகொண்டவர் வாசன்.

ஒரு எழுத்தாளருக்குத் தன் எழுத்துக்கள் பத்திரிகைகளில் வெளிவருவது ஒரு ஏற்றுக்கொள்ளலின், தரத்தின் குறியீடு என்றால் ஆராய்ச்சியாளர்களுக்குத் தம் கண்டுபிடிப்புகள் உலகத்தரம் வாய்ந்த அத்துறை சார்ந்த சஞ்சிகைகளில் வருவது அவர்களது ஆராய்ச்சியின் தரம் குறித்த ஏற்றுக்கொள்ளலின் குறியீடு. ஊடகத்தினைப் போன்றே, ஆனால் ஊடகத்தைவிட வெகு குறைவான அளவில் இங்கும் பக்கச்சார்பு, சிபாரிசு, தகுதியற்றவை நழுவி மேலே செல்லுதல், பெரும்பொய்கள், இயல்பான கேள்விகளைச் சிதைத்து "ஏற்றுக்கொள்ளப்படும்" படைப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாய நிலை என்பன காணப்பட்டாலும் அறிவின் வளர்ச்சிக்கு இத்தகைய பத்திரிகைகளை விட்டால் வேறு வழியில்லை. தமிழில் இப்படியான பத்திரிகைகள் ஏன் வருவதில்லை, வரவேண்டுமா என்று வினவுகிறார் செல்வன். இவரது தொடரை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்.

எழுதப்பட்ட காலங்களைக் கடந்து வாசிக்கும்போதும், ஒரு படைப்பு, அந்த எழுத்தாளர் உணர்ந்ததை, உணர்த்துவதை வாசகர் உணர்ந்துகொண்டாரென்றால் அப்படைப்பு வெற்றியடைகின்றது. அதற்குக் கால வரையறையென்று எதுவுமில்லை. ஆதவனின் "காகித மலர்கள்" இவ்வகையைச் சேர்ந்தது. தனக்குள்ளிருக்கும் உணர்வுக் குதம்பல்களை அடையாளம் காணத்துடிக்கும் யாரும் இக்கதைக்குள் ஊடுருவி விரவிக் கிடக்கலாம். இதனைப் பற்றித் தானுணர்ந்ததை ரே. பாண்டியன் வெகு நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலகக் கிண்ணப் போட்டிகளின் சுரம் பிடித்துக்கொண்டது. இன்னும் ஒரு மாதத்துக்கும் மேலான காலத்தில் ஒவ்வொரு பந்தின் பின்னாலும் மனம் பாயும், சுழலும், வீழும். கட்டிப்போட்டு உட்காரவைக்கும். தூக்கத்திலும் விழிப்பிலும் மயக்கும். பார்க்கின்றவரிடத்திலெல்லாம் அதைப் பற்றியே பேச வைக்கும். இம்முறை யார் கிண்ணத்தை வெல்வது என்று ஒரு அருமையான தொடரை எழுதியிருக்கிறார் இதனை எழுதுவதற்கு முற்றும் பொருத்தமான வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் அவர்கள். கிரிக்கெட்டோடு தொடர்ந்த தொடுதலில் இல்லாமலிருப்பவர்களுக்கு எந்தெந்த அணி என்ன நிலையிலிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். இலங்கையணி குறித்த இவரது அலசலில் உள்ளார்ந்திருக்கும் அரசியல் சிந்திக்க வைக்கும்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இளையராஜா-சேரனின் மாயக்கண்ணாடி இசைத்தொகுப்பு வெளிவந்துவிட்டது. அதிலிருந்து ஒரு பாடலையும், ஒரு எளிய இரசிகரின் எண்ணங்களையும் இவ்விதழில் காணலாம்.

இந்தியக் குடியரசுத்தலைவர் மாளிகையிலிருக்கும் மொகல் தோட்டத்துக்குத் தான் சென்றுவந்த கதையை நமக்குச் சொல்கிறார் முத்துலெட்சுமி. இதனைப் படித்தபிறகு ஒவ்வொரு வீட்டிலும் சில மூலிகைச் செடிகளை வளர்க்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது. அத்தோட்டத்தில் குடியரசுத்தலைவரின் ஆலமரக் கவிதை ஆங்கிலத்திலும், இந்தியிலும் இருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். மொழி குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்வி எழுகிறதா? எழ வேண்டும்!

வினையூக்கியின் "ஒரு ஞாயிற்றுக்கிழமை" சிறுகதை மிகவும் மெல்லிய, புரிந்த வார்த்தைகளால் கோர்க்கப்பட்டிருந்தாலும், அதனுள்ளே பல அறைகளால் கட்டப்பட்டிருக்கிறது.  இது உங்களுக்கு Sixth sense படத்தை நினைவூட்டலாம்.

குழந்தைகள் சிறியதென்று நாம் நினைக்கும் நிகழ்வுகளைக் கண்டுவிடக்கூடிய கண்களைக் கொண்டிருக்கிறார்கள். நாம் தினந்தோறும் பார்க்கிறோமென்றாலும், அணிலுக்கும் பறவைக்குமான உறவைப் பற்றிய கேள்விகளெதுவும் நமக்கில்லை. மழலையின் இச்சிறு குறிப்பு நம் கவனத்தையும் ஈர்க்கிறது.

சிறில் அலெக்ஸின் விமர்சனம், 300 - கிரேக்க வீரர்களின் கதையைக் குறித்த படம். இதன் தொழில்நுட்பங்களுக்காகவும், கதைக் கருவுக்காகவும் பார்க்கத் தூண்டும்.

தனிமனிதரும், சமூகம் எவ்வாறு ஊடாடிக் கொள்கிறார்கள் என்ற தளத்திலிருந்து வெகுவான பயனுள்ள பதிவுகளை எழுதியிருப்பவர் பத்மா. தகைவு ஒவ்வொரு முன்னகர்வுக்கும் தேவையாயிருந்தாலும், அதுவே அதிகமாகிப்போனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், அவற்றைக் களையும் முறைகளையும் தன்னுடைய இடுகையில் நன்கு விளக்கியுள்ளார்.

வன்மையாக இடப்பெயர்வுக்குள்ளாதல் எல்லோரிடத்திலுமே ஒரே மாதிரியான உணர்வினைத் தோற்றுவித்துவிடுவதில்லை. ஒரு விடலைப் பையனுக்கு, யாரு நம்ம வசந்தன்தான்!, அது அழகுக் காட்சிகளையும் காட்டியிருக்கிறது. யாழிலிருந்து வன்னிக்குப் புலம்பெயர்ந்தபோதான நிகழ்வுகளை ஒரு படம்போலத் தீட்டுகிறார் வசந்தன். அதே நேரம் மரணமும், துயரும் நிழலைப்போலவும், அடுத்த கணத்தைப் போலவும் உறுதிசெய்யப்பட்ட ஒரு வாழ்க்கையை ஈழத்தமிழர்கள் வாழ்வதை வரலாற்றில் கறை படிந்த அந்த நாட்கள் என்ற பதிவில் யாழ்கோபி தமிழ்பித்தன் சொல்லுகையில் மனம் கனத்துப்போகிறது.


தூயாவின் அங்கோர் வாட் ஆலயம் பற்றிய குறிப்புகள் மறந்துபோன வரலாற்றுப் பாடங்களை நினைவூட்டுகின்றன. தூயா இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.

சாமாவின் 'குரு' படத்தைப் பற்றிய விமர்சனம் அப்படத்தினையும், இயக்குனரையும் வானளாவப் புகழும் ஒலிகளுக்கிடையே மறித்துக் கேள்விகளைக் கேட்கிறது. பல பரிமாணங்களிலிருந்தும் இப்படத்தின் மீதும், மணிரத்தினத்தின் மீதும் தன் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார். சில நேரங்களில் படங்களை வெறும் படங்களாக மட்டும் பார்க்காமல், அவற்றின் பின்னான அரசியலோடு சேர்த்துப் பார்ப்பது அவசியமென்று தோன்றுகிறது.

"நாட்டார் தெய்வங்கள்" என்று சின்னக் கோயில்களுக்குள்ளும், காடுகளுக்குள்ளும் தள்ளிவிடப்படுவது மட்டுமன்றி, உயர் அங்கீகாரம் கொடுத்துப் "பெரிய" தெய்வமாக்கும் முயற்சியிலும் பண்டைய வழிபாட்டு முறையும், நாயக நாயகியரும் ஒழிக்கப்படுவதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம். இதன் ஒரு அங்கமாக கண்ணகி வழிபாடு ஈழத்தில் எவ்வாறு அழிக்கப்பட்டு வருகிறது என்பதை வி.ஜெ. சந்திரன் பதிந்துள்ளார். 


தூயாவின் அங்கோர் வாட் ஆலயம் பற்றிய குறிப்புகள் மறந்துபோன வரலாற்றுப் பாடங்களை நினைவூட்டுகின்றன. தூயா இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.

சாமாவின் 'குரு' படத்தைப் பற்றிய விமர்சனம் அப்படத்தினையும், இயக்குனரையும் வானளாவப் புகழும் ஒலிகளுக்கிடையே மறித்துக் கேள்விகளைக் கேட்கிறது. பல பரிமாணங்களிலிருந்தும் இப்படத்தின் மீதும், மணிரத்தினத்தின் மீதும் தன் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார். சில நேரங்களில் படங்களை வெறும் படங்களாக மட்டும் பார்க்காமல், அவற்றின் பின்னான அரசியலோடு சேர்த்துப் பார்ப்பது அவசியமென்று தோன்றுகிறது.

"நாட்டார் தெய்வங்கள்" என்று சின்னக் கோயில்களுக்குள்ளும், காடுகளுக்குள்ளும் தள்ளிவிடப்படுவது மட்டுமன்றி, உயர் அங்கீகாரம் கொடுத்துப் "பெரிய" தெய்வமாக்கும் முயற்சியிலும் பண்டைய வழிபாட்டு முறையும், நாயக நாயகியரும் ஒழிக்கப்படுவதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம். இதன் ஒரு அங்கமாக கண்ணகி வழிபாடு ஈழத்தில் எவ்வாறு அழிக்கப்பட்டு வருகிறது என்பதை வி.ஜெ. சந்திரன் பதிந்துள்ளார். 

"குடும்ப உறவைப் பலப்படுத்துதல்" தொடரின் 9வது பாடம் டி.எம்.ஐ இணையத் தளத்தில் வலையேற்றப்பட்டுள்ளது. பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி என்பது குறித்துக் குழந்தைகளுக்குக் கற்றுத் தரும் ஒரு பாடம் இது. குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவற்றைச் சமாளிக்கும் விதங்களையும் அவர்கள் அறிந்துகொள்ள இதனைத் தரவிறக்கிக் கொள்ளவும்.
பதிவர்களைத் தவிர பிரான்சிலிருந்து ஒரு விருந்தினரின் கடிதமொன்றும் இவ்வாரம் வெளியாகிறது. ரஞ்சித்தின் "ஒரு மன்னிப்புக் கடிதம்" பல்வேறு வினாக்களை நம்முன் வைக்கிறது. இதனைப் பகிர்ந்துகொண்ட ரஞ்சித்துக்கும், இவ்வாரப் பூங்காவுக்கு ஆக்கமளித்த அனைத்துப் பதிவர்களுக்கும் பூங்கா தன் நன்றியைத் தெரிவிக்கிறது.


 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)