'பெண்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்', 'பெண்புத்தி பின்புத்தி' என்பது போன்ற பழமொழிகள்/பொதுமொழிகள் உருவானதற்கு ஒரே காரணமாக, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் முன்வைப்பது ஆண்கள் சமைப்பதில்லை என்பது தான். "நச்சரிக்கும் வீட்டு வேலைகளைப் பெண்கள் தலையில் கட்டிவிட்டு, வீடு, சமையல் போன்ற தளைகள் அவர்கள் கால்களைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கும் பொழுது எப்படி மற்ற உலக விசயங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடியும்? பழமொழிகள் எதிர்பார்க்கும் முன்யோசனைக்காரிகளாய் அவர்களால் எப்படிப் பிரகாசிக்க முடியும்?" என்ற கேள்வியை முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.
"ஆதிகாலம் முதலே சமைப்பது ஆணின் தொழில். ஏமாற்றிப் பெண்கள் தலையில் ஏற்றிவிட்டார்கள்" என்று தொடங்குகிறது "ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது" புத்தகம். மானுட இனத்தின் தோற்றம், பரிணாம வளர்ச்சி என்று சரித்திரங்களிலிருந்து சமையல் வரை மெல்ல மெல்ல அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.
தானே சமைத்துச் சாப்பிடவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுமே என்ற ஒரே காரணத்திற்காக, வெளிநாடுகளுக்குப் போகத் தயங்கும் என் தோழனிடம் "ஒரு மனிதன் தான் உயிர் வாழத் தேவையான உணவைத் தானே சமைக்கத் தெரியாவிட்டால், அவன் வாழ்வதற்கே தகுதியில்லாதவன்" என்று பழிச்சண்டை போட்டுக் கொண்டிருக்கும் என் கையில் இந்த மாதிரி, "சமையல் என்பதே முழுதாக, மொத்தமாக ஆணின் வேலை தான்; பெண்கள் செய்யத் தேவையே இல்லை" என்று சொல்லும் புத்தகம் கிடைத்தால் விட முடியுமா? (என்னத்த சொல்ல, தோழனுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. ஆங்கிலப் பெயர்ப்பு இருக்கான்னு கேட்க வேண்டும்..)
சமையல் பெண்பாற்தொழில் ஆனதன் காரணங்களை வேண்டிய மட்டும் அலசிய பின்னர், சமைத்தல் வரலாற்றுக்குள்ளும், உணவின் அரசியலுக்குள்ளும் புகுந்து வேகமெடுக்கிறது புத்தகம். இந்திய சமையல் என்று இன்று அழைக்கப்படும் சமையலில் எப்படி ஒவ்வொரு கட்டத்தில் அரேபியர், சிரியர்கள், கிரீஸ், சீனர்கள், போர்த்துகீசியர்கள் என்று பல நாட்டு விளைபொருட்களும் சமையல் முறைகளும் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை விளக்குகிறார் நூலாசிரியர். ஒருசில உணவுவகைகளை விட்டு ஒதுங்குதல், ஒதுக்குதல் மூலம் எப்படி மனிதர்களிடையே உயர்வு-தாழ்வு கற்பிக்கப்படுகிறது என்னும் உணவின் அரசியலையும் தொட்டுச் செல்லத் தயங்கவில்லை.
வரலாற்றை அடுத்து சமையலறையின் சுற்றுக் காரியங்களை விளக்குகிறார். அடுக்களையின் ஒழுங்கு, சுத்தம், பாத்திரங்கள் அடுக்கும் முறை, தரை மொழுகுதல், கழுவுதல், பொருட்களைத் தேவையான சமயத்தில் வாங்கி நிரப்புவது என்று ஒவ்வொரு சின்னச் சின்ன தகவலையும் திறம்படத் தொகுத்துத் தருகிறார். வீட்டை விட்டு முதன்முதல் வெளியூர் சென்று நாங்கள் சமையலறை அமைத்தபொழுது செய்யவிட்டுப் போன விவரங்கள் கூட இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. "எங்கள் உறவினர் வீட்டில், திருமணமாகி தனிக்குடித்தனம் போகும் பெண்ணுக்கு ரூல்ட் நோட் போட்டு சின்னச் சின்ன சமையற்குறிப்புகள் எழுதிக் கொடுத்திருந்தார் அவர் தாயார்." என்று எப்போதோ படித்த மங்கையர் மலர் சிறுகுறிப்பு நினைவுக்கு வருகிறது. ரூல்டு நோட்களை விட, நண்பனின்/சகோதரனின் திருமணத்தில் பரிசளிக்க மிக நல்ல புத்தகம் இது தான்.
சமையலறை ஒழுங்குக்கு அடுத்து சமையலறைக் காதல் மிக அழகான பகுதி. கணவனும் மனைவியுமாக சமைக்கும் பொழுது பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே கவிதை தான் என்பதைப் படிக்கையில், எங்கள் வீட்டில் அம்மாவும் அப்பாவும் (கொஞ்சம் அலுத்துக் கொண்டாலும்) சேர்ந்து சமைக்கும் நாட்களின் நினைவு வந்து போவதைத் தடுக்க முடிவதில்லை. என்ன இருந்தாலும் அடுக்களைக் காதல் அழகு தான்
|
அரிசிக்கும் பருப்புக்கும் தெரியாது -
சமைப்பது ஆணா பெண்ணா என்பது.
யார் மூட்டினாலும் அடுப்பு எரியத்தான் செய்கிறது.
அரிசி வேகத்தான் செய்கிறது. ஆனாலும் சமைப்பது
பெண்களின் வேலை தான் என்கிற மனப்பதிவு
ஆண்டாண்டு காலமாய் நமக்குள் அழுத்தமாய்க் கிடக்கிறது.
.....
அம்மாவையும் மனைவியையும்
மகளையும் உயிரினும் மேலாய் நேசிக்கிற
நாம் அவர்களின் விடுதலை பற்றி
நிஜமாகவே அக்கறை கொண்டுள்ளோமா?
- ச. தமிழ்ச்செல்வன்
|
அழகு என்றதும் அடுத்த அத்தியாயம் சமையலின் அழகியல் பேசுகிறது. ஒவ்வொரு பதார்த்தமும் காய் நறுக்கும் அளவுகளில் தொடங்கி, மசாலா அளவுகள், மஞ்சள் பொடி அளவுகள் என்று ஒவ்வொரு கட்டத்திலும் அழகுக்கான கூறுகள் கொட்டிக் கிடப்பதை நூலாசிரியர் விளக்கும்போது, பழக்கத்தின் காரணமான செய்முறை மூலமே கற்கும் இது போன்ற விவரங்களை முழுமையாக பட்டியலிட ஏன் வேறு புத்தகங்கள் இல்லை என்ற கேள்வி எழுகிறது.
சமையலின் வரலாறு, சுற்றுக் காரியங்கள், அழகியல் என்று எல்லா வெளிவிவகாரங்கள் மூலம் கொஞ்சங் கொஞ்சமாக இழுத்து, சமையலறையின் உள்ளே கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். அடுப்பின் வகைகள், அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், தேவையான பாத்திரங்கள், கரண்டிகள் போன்ற சமையல் சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தி அப்படியே தொடர்ந்து, குழம்பு, ரசம் போன்றவற்றிற்கான மசாலா பொடிகள், வடகங்கள், இட்லி, தோசைப் பொடிகள் ஊறுகாய் வகைகள் போன்ற முன் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் சமையற்குறிப்பையும் முன்வைக்கிறார்.
சமையலின் முன் தயாரிப்புகளையும், சமைப்பதற்கான காரண காரியங்களையும் கொஞ்சம் விரிவாகவே அலசும் இந்நூல், தினசரி சமையலுக்கான குறிப்புகளைக் குறைவாகவே கொண்டிருக்கிறது. சாதம், குழம்பு, ரசம், பொரியல், கூட்டு, தோசை, இட்லி, சப்பாத்தி, பூரி, குருமா, உப்புமா போன்ற சுலபவகை குறிப்புகளுடன் நிறுத்திக் கொள்கிறார் நூலாசிரியர். எப்படியும், இந்த அடிப்படை சமையல் குறிப்புகள் தெளிவாகிவிட்டால், அடுத்தடுத்து வெவ்வேறு பெரிய புத்தகங்களைப் படித்து நன்றாக சமைக்கத் தொடங்கிவிடலாம் என்பதும் உண்மை தான். அடிப்படை சமையற்குறிப்புகள் கூட பொதுவான சமையற்குறிப்பு புத்தகங்கள் சொல்வது போன்ற மேலோட்டமான - அதாவது ஏற்கனவே வெந்நீர் வைக்கும் அளவுக்காவது தெரிந்தவர்களுக்கான- குறிப்பாக இல்லாமல், சமையல் பற்றி ஏதும் தெரியாதவர்களுக்கான சின்னச் சின்ன விவரங்களையும் சேர்த்துச் சொல்கிறது.
நடனம், இசை, தையல், எம்ப்ராய்டரி போன்ற நுண்கலைகளும், மாரல் ஸ்டடிடீஸ், கணக்கு போன்ற தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களையும் கொண்டு விளங்கும் நமது பாட திட்டத்தில் சமையல் கலைக்கு ஏன் இடமில்லை? ஏதேதோ வேதியல் வினைகளை அடுப்புகளுடனும், ஆசிட்களுடனும் சின்ன வயதிலேயே சோதித்துப் பார்க்க முடிந்த குழந்தைகள் ஏன் சமையல் மட்டும் கற்பதில்லை?
இந்த நூல் எனக்குள் ஏற்படுத்திய இந்தக் கேள்விக்குப் பதில் பல வகையாக இருக்கின்றன. சமையல் வேலைகளை, பெரிய மனம் கொண்டு ஆண்கள் இப்போதெல்லாம் பகிர்ந்து கொண்டாலும், அடிப்படையில் இந்தப் பெண்கள் தொழிலை ஆண்களுக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்க முடியும்? கோ-எட் பள்ளிகளில் இதைச் செய்யாமலும் ஒதுக்குவதும் சிரமம்.
இன்னுமொரு காரணம், பொதுவாக சமையல் ஒவ்வொரு இனக் குழு சார்ந்த பயிற்சியாக இருக்கிறது. அந்தந்த இனக் குழுவில் இருப்பவர்கள் அவர்தம் வழிமுறைகளுக்கும், வீட்டு வழக்கங்களுக்கும் ஏற்ப சமையலின் சில சின்னச் சின்ன விவரங்களைக் கற்கிறார்கள். முற்காலத்தில் பெண்களே தத்தம் கணவன் வீடுகளுக்குப் போனபின்னால் தான் சமையல் கற்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கணவன் வீட்டாரின் ருசிகளுக்கும் வழக்கத்திற்கும் ஏற்றாற்போல், சமைத்து புகுந்த வீட்டுப் பெருமையையும் பிறந்தவீட்டுப் புகழையும் கட்டிக் காக்க அவர்களுக்கு இந்த வழி அவசியமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் காரணத்துக்காகவும் ஒரு பொதுவான சமையலறை, பள்ளிகளில் சாத்தியமில்லாமல் போயிருக்கலாம்.
எப்படியோ, இனிமேல் சமையலென்று ஒரு பாடத்தைச் சேர்ப்பதாக இருந்தால், புத்தகம் தனியாக அச்சடிக்க வேண்டாம். "
இந்தப் புத்தகத்தின் வரவேற்பைப் பார்த்தபின், ஆண்களுக்கான சமையற்பட்டறைகளை உருவாக்கும் யோசனை ஆசிரியருக்கு இருந்திருக்கும் என்பது முன்னுரையில் தெரிகிறது. டிசம்பர் 2006இல் முதற்பதிப்பு கண்ட புத்தகத்தின் சமையற்பயிற்சி பட்டறை ஜனவரியிலேயே சாத்தியமாகி இருக்கிறது. இன்னும் இது போன்ற பயிற்சிப் பட்டறைகள் எண்ணிக்கை அதிகமாக ஆக, நூலாசிரியர் கற்பனை செய்யும் 'சமையலறைக் காதல்கள்' சீக்கிரமே தமிழகமெங்கும் சாத்தியமாகிவிடும் என்றே தோன்றுகிறது.
புத்தகம் : ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது
ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன்
வெளியிட்டோர் : வாசல்,
4 Oடி/4, முதல் தெரு,
வசந்த நகர்,
மதுரை - 625 003
செல் - 98421 02133
முதல் பதிப்பு : டிசம்பர் 2006
விலை : ரூ 45/-
முதலடி எடுத்துக் கொடுத்து உதவிய ஆசிப் அண்ணாச்சிக்கு இந்த இடுகை சமர்ப்பணம் :-D
http://poonspakkangkal.blogspot.com/2007/03/blog-post_9421.html
|