
interpreter of maladies
ஜும்பா லஹிரி-யின் புலிட்ஸர் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுப்பு, 'interpreter of maladies'. லண்டனில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்த இந்தியரான லஹிரி-யின் சமீபத்திய நாவல், Namesake, மீரா நாயரால் திரைப்படமாக எடுக்கப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் படம் பார்க்கவில்லை என்றாலும், ஓரளவு நல்ல விமர்சனங்களை படம் பெற்றுள்ளதைப் படித்தேன்.

'interpreter of maladies', ஜும்பா லஹிரியின் முதல் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது சிறுகதைகளைக் கொண்ட இந்த தொகுப்பு பெரும்பாலும் புலம்பெயர் இந்தியர்களை கதை மாந்தர்களாகக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு கதையின் கருப்பொருளும் வெவ்வேறானதும், பொதுவானதுமாகும்.
முதல் கதை 'A Temporary Matter', மணவாழ்க்கை விரிசல் விடத்தொடங்கியிருக்கும் இளந்தம்பதியைப்பற்றியது. தினம் ஒரு மணி நேரமாக மின்சாரம் அறுந்து போகும் 5 நாட்களும், கணவன், மனைவிக்குள் நடக்கும் காட்சிகள் கவிதையாக விரிகின்றன. இருவரும் ஆளுக்கொரு ரகசியம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற விளையாட்டுடன் ஆரம்பித்து சிறிய அதிர்ச்சியுடன் முடிகிறது கதை.
'When Mr.Pirzada came to dine', பங்களாதேஷின் விடுதலைப் போராட்டம் நடக்கும் 1971-ல் நடக்கும் இக்கதை, புலம்பெயர் இந்தியர்கள் மற்றும் ஒரு பங்களாதேஷிக்கு இடையேயான நட்புடன் தொடங்குகிறது. குடும்பத்தை தாய் நாடான பங்களாதேஷில் விட்டுவிட்டு, அமெரிக்காவில் வசிக்கும் Pirzada-வுக்கு ஆதரவு அளிக்கிறது ஒரு இந்தியக் குடும்பம். அவர்கள் வீட்டு வரவேற்பறையில் தொலைக்காட்சியில் பங்களாதேஷ் பற்றிய செய்திகளைப் பார்த்துக்கொண்டே அவர்களுடன் உண்கிறார், Pirzada. அந்த வீட்டு சிறுமியின் பார்வையில் விரிகிறது இந்த்க் கதை.
'interpreter of maladies', என்ற இந்த முன்றாவது கதை, இந்தியாவுக்கு விடுமுறைக்கு வரும் அமெரிக்க வாழ் இந்தியக் குடும்பத்திற்கும், அவர்களுக்கு காரோட்டும் கபாசிக்கும் இடையேயான நிகழ்வுகளைக்கொண்டது. ஒரு கிராமத்தில், மொழிப்பிரச்சினை காரணமாக மக்களின் வியாதியை மருத்துவருக்கு மொழிபெயர்த்து சொல்லும் வித்தியாசமான வேலையை செய்து வருகிறார், கபாசி. முன்னொரு சமயம், கணவனுக்கு துரோகம் இழைத்து விட்டு, அதை மறைத்துக்கொண்டு குற்றவுணர்ச்சியில் தவிக்கிறாள், சுற்றுலா வரும் அந்த மனைவி. கபாசியின் 'வியாதிகளை மொழிபெயர்க்கும்' வித்தியாசமன வேலை, அவர் தனக்கு ஏதும் தீர்வு சொல்லமாட்டாரா என்று அவளை ஏங்க வைக்கிறது. அதே சமயம் அவளைக்கண்டு மனந்தடுமாறும் கபாசி என்று பயணிக்கிறது இக்கதை.
'A Real Durwan' - ஒரு மத்தியதர அடுக்குமாடிக்குடியிருப்பில் பணியாளாக இருக்கும், ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் (அல்லது அவ்வாறு சொல்லிக்கொள்ளும்) முதிய பெண்மணியைப் பற்றிய கதை.
'Sexy' - Extra marital affairs-ஐப்பற்றியது இந்தக்கதை. மணமான ஒரு ஆடவனுடன் காதல் வயப்படுகிறாள் நாயகி. பிறகு எதிர்பாராத இடத்திலிருந்து வரும் ஒரு எதிர்பாராத சொல் அவளைப்புரட்டி, இத்தகைய உறவுகளின் அர்த்தத்தை உணரவைக்கிறது.
'Mrs.Sen's' - புலம்பெயர் இந்தியர்கள் சிலரின் அடிமன ஏக்கங்களையும், தனிமையையும் பேசுகிறது. Baby sitting-க்கு வரும் அமெரிக்க சிறுவன், அவனைப்பார்த்துக்கொள்ளும் இந்தியப்பெண், இவர்களின் தனிமை என்று போகிறது இக்கதை.
'The Blessed House' - கணவன், மனைவிக்கு இடையேயான ego பிரச்சினையை வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியின் பிண்ணணியில் சொல்கிறது.
'The Treatment of Bibi Haldar' - Hysteria-வால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பிரச்சினைகள், அவளது ஏக்கம் என அவளது வாழ்க்கையை சுற்றி நகர்கிறது இந்தக்கதை. அவளுக்குக் கடைசியில் கிடைக்கும் தீர்வு, அவளது பிரச்சினையை நம்மை உணர வைக்கிறது.
'The Third and final continent' - தனிமையில் வாழும் ஒரு அமெரிக்க மூதாட்டி, வாழ்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வரும் ஒரு இளைஞன், புது மண வாழ்க்கையில் அவனது பிரச்சினைகள், கலாச்சார இழப்பைப் பற்றிய பயம் என்று பயணிக்கிறது இறுதிக்கதை.
ஒவ்வொரு கதைக்கும் நான் எளிமையான அறிமுகத்தைக் கொடுத்திருந்தாலும், படிக்கும் பொழுது அவை பல பரிமாணங்களில் விரிகின்றன. வெறும் sentiment குவியலாக இல்லாமல், மனித உணர்வுகளை மிகவும் மறைமுகமான யுக்திகளால் மென்மையாக வருடிச்செல்கிறது, இப்புத்தகம்.
இதுவரை படிக்கவில்லையெனில், கட்டாயம் படியுங்கள். நல்லதொரு அனுபவம் நிச்சயம்.
http://kuraikudam.blogspot.com/2007/03/interpreter-of-maladies.html
|