தமிழ்மணம்-பூங்கா இதழ்க்குழுவினருக்கு...
வணக்கம்.
வித்யாவின் இந்த இடுகை குறித்து என் எண்ணத்தை தமிழ்மணத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன். தருமி அவர்கள் எழுதிய பதிவு எந்த குறையும் உடையதாக தோன்றவில்லை. ஒரு தாத்தாவாக பேத்திக்கு கூறிய அருமையான கடிதம் அது. அதை பூங்காவில் வெளியிட தேர்வு செய்த்திலும் எந்த தவறும் இல்லை. ஆனால் அதே சமயம் குறிப்பிட்ட நபரை பெயர் குறிப்பிட்டு அழைத்து அறிவுரையூட்டும் அந்த மடலை குறிப்பிட்ட பெயருக்குரிய சம்பந்தப் பட்டவர் நீக்கும் படி வேண்டுகோள் விடுத்த பிறகு நீக்காமல் இருப்பது சரியல்ல. தனிப்ட்ட அறிவுரையாக எழுதப் பட்டிருப்பதால் அதை வெளியிடுவதை தான் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்திருக்கும் நிலையில் அதை நீக்குவதே நியாயம் என்று நான் கருதுகிறேன். இது என் கருத்து.
நன்றி
அன்புடன்
சிந்தாநதி
----------------------------------------------------
அன்புள்ள பூங்கா நிர்வாகிகளுக்கு,
தோழி லிவிங் ஸ்மைலின் பதிவு, நண்பர்கள் தருமி மற்றும் பாலபாரதியின் மடல்களை ஒட்டிய மற்றுமொரு கோரிக்கை இது. தருமியின் கடிதம் நாள் நகர்வாக இந்த வார பூங்காவில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. இதற்குப் பதில் கொடுத்து எழுதப்பட்ட லிவிங் ஸ்மைலின் இடுகையோ, அல்லது தருமி பதிவுக்கேயான அவரது பின்னூட்டமோ ஏதேனும் ஒன்று பூங்காவில் வந்திருந்தால் நலமாக இருந்திருக்கும்.தோழி லிவிங் ஸ்மைலுக்காக எழுதப்பட்ட அந்தக் கடிதம் பூங்காவில் இருப்பதை தோழி விரும்பாத பொழுது அதை நீக்குவதே சாலச் சிறந்தது என்பது என் துணிபு. குறைந்தபட்சம் அதற்கு எதிர்வினையாக ஒரு பதிலாவது பூங்கா கொடுக்கக் கடமைப்பட்டுள்ளது என்பதை இங்கே பதிந்து கொள்ள விரும்புகிறேன்
அன்புடன்
பொன்ஸ்
-----------------------
தமிழ் மணத்திற்கு,
இவ்வார இதழில் பூங்காவிற்கு சம்மந்தம் இல்லாதபடி எனது கட்டுரைக்கு எதிர்வினையாக வந்துள்ள தருமி அவர்களின் கட்டுரை வெளிவந்துள்ளது…
பூங்கா பொதுவாக, இலக்கியம், அரசியல், பெண்ணியம், தலித்தியம் சார்ந்து வெளிவருவதாகவே நான் நினைத்திருந்தேன்.
அரசி தொடர் குறித்து நான் எழுதியிருப்பது உங்கள் அளவுகோலில் மட்டமானதாகவே இருக்கலாம்.. அதற்காக அது சார்ந்து ஒரு இதழில் என்னை அவமானப்படுத்துமளவிற்கு என்னையும் நீங்கள் மட்டமாக அளவிட முடியாது.
நான் எழுதியது உங்களுக்கு உவக்காத பட்சத்தில் நீங்கள் தமிழ்மணத்தில் தடைசெய்யலாம். ஆனால், அதைவிடுத்து எனக்கு மறுப்பு(கண்ணியமாகவே இருந்தாலும்ம்) தெரிவித்து ஒருவர் எழுதிய பதிவை இலக்கியம் சார்ந்ததாக கணக்கில் கொண்டு பிரசுரிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
பேரா. தருமியின் கேள்விகள் அனைத்திற்கும் நான் பதிலளித்துள்ளேன். ஆனால் நான் கேட்ட கேள்வி எதற்கும் யாருமே பதிலளிக்க வில்லை..
எதுவாக இருப்பினும் எனக்கு அறிவுருத்தும் வண்ணம் மட்டுமே எழுதப்பட்ட ஒரு பதிவு ஒரு இதழில் வருமென்றால் அதனை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.
தயவுசெய்து உடனடியாக, அக்கடிதத்தை (பதிவை) நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அல்லது இறுதியான ஒரு பதிவோடு நான் தமிழ்மணத்தை புறக்கணிக்க நேரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!!
லிவிங்ஸ்மைல் வித்யா
---------------
அன்புடையீர்,
என் பதிவு "அன்புள்ள வித்தியாவிற்கு" பூங்காவில் இடம் பெற்றமையால் லி.ஸ். வித்யா தமிழ் மணத்திலிருந்து விலகுவதான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனியொருவரைப் பற்றிய பதிவென்பதால், அந்தக் குறிப்பிட்ட நபரே அதை விரும்பாத பட்சத்தில் அதை பூங்காவில் வெளியிடுவதும், எதிர்ப்பு / வருத்தம் தெரிவித்த பிறகும் அப்பதிவை பூங்காவில் வைத்திருப்பதும் எனக்குச் சரியானதாகத் தெரியவில்லை. என் கருத்துக்கள் மட்டுமே அப்பதிவில் இருப்பதால் அவர்களைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களே வாசிப்பவர்களைச் சென்றடையும் சாத்தியக் கூறுகள் அதிகம். அது ஒரு பதிவரை நமக்குள்ளேயே தாழ்த்துவதாக ஆக்கும் நிலைதான் மிச்சமாகும். அப்பதிவை நான் எழுதியது அந்த நோக்கில் இல்லை என்பது நிச்சயமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். தனிப்பட நட்புணர்வின் மீதான கரிசனத்தில் நான் எழுதிய ஒரு பதிவு அவரைப் பதிவுலகத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று சொல்லுமளவிற்கு காரணமாகி விட்டதற்காக வருந்துகிறேன். அதோடு நான் அவரைக் குறை கூறியிருந்தாலும், அவர் செய்தது தவறில்லை என்றும் கூற கணிசமான பதிவர்கள் இருப்பதும் வெள்ளிடை மலை; ஆனால் பூங்காவில் வந்திருப்பதோ என் ஒரு பக்கக் கருத்து மட்டுமே. ஆகவே எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இப்பதிவு பூங்காவில் இடம் பெற்றதை விடவும், அவரது எதிர்ப்பிற்குப் பிறகும் இன்னும் இடம் பெற்றிருப்பது தவறுதான் என்பது என் நிலைப்பாடு; அது, எழுதியவன் என்ற பொறுப்பில் என்னை மேலும் சங்கடப் படுத்துகிறது. ஆகவே பூங்கா நிர்வாகிகளே, தயவு செய்து அப்பதிவை நீக்கும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
தருமி
------------------------------------------
மேற்கண்ட தருமியின் பதிவு தொடர்பாக வந்த கருத்துகளுக்கு, பூங்கா ஆசிரியர் குழுவின் பதில்:
1. பூங்கா தருமியின் பதிவை பிரசுரிக்கத்தகுதியானது என்று கருதியது.இதற்கு எந்த ஆணாதிக்கக் கருத்தியல்களில் அடிப்படையில் திருநங்கைகள்/ பெண்கள் கேவலப்படுத்தபடுகிறார்களோ அந்த ஆணாதிக்கப் பார்வையின் ஊடாகப் பார்க்காமல், காலங்காலமாக சமூகம் (குடும்பம் உள்ளடக்கிய) பயிற்றுவைத்திருக்கும் பார்வைக்கு மாற்றாக செய்யப்படவேண்டியவைகளாக அவர் கருதுகிறவைகளைச் சொன்னதையும், அம்முயற்சியில் இந்தியச் சமூகத்தில் அடக்கிவைக்கப்பட்ட பாலுணர்வு பற்றிய கருத்தாக்கங்களைப் பற்றி குறிப்பிட்டதையும் காரணமாகக் கொள்ளலாம்.
2. தருமியின் பதிவின் ஈற்றில் இருந்த சுட்டிகள் வாசகருக்கு போதிய பின்புலங்களைத் தருவதாக இருந்தது என்று ஆசிரியர் குழு கருதுகிறது.
3. பூங்காவில் வெளியிடப்படும் பதிவுகளை முழுக்க முழுக்க ஆசிரியர் குழு ஏற்றுக்கொள்கிறது என்பது பொருள் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறது. பதிவின் கருத்து மட்டுமல்லாது, அதன் சமூக நோக்கம், தொனி, மொழி, பதிவு இடப்படும் சூழல், பதிவரின் அனுமதி போன்ற பல காரணங்கள் ஒரு பதிவை தேர்ந்தெடுக்கக் காரணமாகலாம்.
4. இந்நிலையில் பதிவர் (தருமி) அப்பதிவை பூங்காவில் இருந்து விலக்கிக்கொள்ளக் கோருவதால் தருமியின் இப்பதிவு பூங்காவில் இருந்து எந்த நிபந்தனையும் இன்றி நீக்கப்படுகிறது. பதிவின் தலைப்பு மட்டும் முகப்பில் இருக்கும்.
5. இப்பதிவு தொடர்பாக இதுவரை வந்த/ இனி வரும் வாசகர் அஞ்சல்கள் அடுத்த பூங்கா இதழில் வெளியிடப்படும். வித்யாவின் கருத்துக்களை அவர் விரும்பினால், தொகுத்தளித்தால் அடுத்த இதழில் வெளிட பூங்காவுக்குச் சம்மதமே.
6. பூங்கா ஒவ்வொரு வாசகரின் வேண்டுகோளுக்கும் உடனே எதிர்வினையாற்ற இயலாது என்பதை பதிவர்கள் புரிந்துகொள்ள வேண்டுகிறது. அதே நேரத்தில் பூங்கா வாசகர்களின் கருத்துகளைக் கவனத்தில் கொள்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
7. பூங்காவுக்குத் தேவையான பதிவுகளை கண்டு கொள்ளவும், பதிவரின் அனுமதியைப் பெறவுமே தமிழ்மணம் பூங்காவுக்கு உதவுகிறது. இதற்கப்பால் பூங்காவின் எல்லாம் முடிவுகளும் ஆசிரியர் குழுவின் முடிவுகளே. தமிழ்மணம் பூங்காவின் ஆசிரியர் குழுவின் முடிவுகளை கட்டுப்படுத்துவதில்லை.
8. பூங்காவுக்காவும் அனுமதி அளிக்கப்பட்டு, பூங்காவில் பிரசுரிக்கப்படும் பதிவுகள் இனிவரும் காலங்களில் பூங்காவில் இருந்தோ, பூங்கா இதழ் தொகுப்பில் இருந்தோ நீக்கப்படாது என்பதையும் அத்தகைய வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதையும் பூங்கா இதன் மூலம் பதிவர்களுக்குத் தெரிவிக்கிறது.
இந்தக் குறிப்பிட்ட விதயத்தில் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் பூங்கா ஆசிரியர் குழு அதற்காக வருத்தம் தெரிவிக்கிறது. பதிவர்களின் புரிதலுக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
பூங்கா ஆசிரியர் குழு
-------------------------------------
அன்புள்ள தமிழ்மண நிர்வாகிகள் / பூங்கா ஆசிரியர் குழுவிற்கு:
தற்போதைய பூங்கா இதழில் நந்திகிராம் பற்றிய உங்கள் கருத்துக்கள் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பொதுவாக இன்றைய ஊடகங்களில் வளர்ச்சி பற்றிய கருத்துக்கள் மிகவும் தவறான முறையில் மக்களிடையே பரப்பும் செயலில் தம்மையறியாமல் ஈடுபட்டு வரும் வேளையில் தங்களைப் போன்றவர்கள் மக்களின் வாழ்வாதாரம் பறிபோவது பற்றி கவலைப்படுவது கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. மேலும் பூங்கா இதழின் மேல் வலதுசாரிகளால் குத்தப்பட்டு வரும் முத்திரை எப்படிப் பட்டது என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம் இந்தச் சூழலில் உங்களின் இந்தத் துணிச்சலான கருத்துக்கள் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாக கருதுகிறேன்.
வாழ்த்துக்களுடன்
ராஜாவனஜ்
--------------------
அன்புள்ள பூங்கா இதழுக்கு
வணக்கம்,பூங்காவின் செயல்பாடுகள் புதிய வலைப்பதிவர்களை உற்சாகமூட்டி ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. பூங்கா ஆரம்பித்தன் நோக்கத்தை ஈடேற்றும் வகையிலான இந்த செயல்பாடுகளுக்கு வாழ்த்துக்கள். பூங்கா போன வார இதழ் 'தொகுப்பாளரின் மேசையில்' பக்கத்தில் நந்திகிராம் சம்பவத்தை மிகச் சரியாகவே அரசு பயங்கரவாதத்துடனும், அதன் பார்ப்ப்னிய தத்துவ அடிப்படையுடனும் ஒப்பிட்டு விமர்சிருந்தார் தொகுப்பாளர். ஆயினும், மக்கள் மீது பயங்க்ரவாதத்தை ஏவிவிட்டு ஜனநாயகத்தை மறுத்த மேற்கு வங்க போலி கம்யுனிஸ்டுகளை விமர்சிக்கும் பொழுது ஒட்டு மொத்தமாக கம்யுனிசம் என்பதே சாதியை தாங்கி பிடிக்கும் தத்துவம் என்று அர்த்தம் வரும் வகையில் விமர்சனம் அமைந்து விட்டது. அது தெரிந்தே நிகழ்ந்த தவறா அல்லது தெரியாமல் புரிதல் குறைபாடாலோ அல்லது அவசரத்தினாலோ நிகழ்ந்த தவறா என்ற விரிவுக்கு செல்வது தேவையற்றது என்று கருதுகிறேன். எனவே சம்பந்தப்பட்ட அந்த புரிதல் தவறு என்ற எனது மாற்றுக் கருத்தை பூங்காவிடம் தெரிவிப்பது எனது கடமையாக கருதி இங்கு எழுதுகிறேன். கம்யுனிசம் பார்ப்ப்னியத்திற்க்கு எந்த வகையிலும் துணை போவதற்கான தத்துவ அடிப்படை கொண்டது இல்லை. எந்த காலத்திலும் அது பார்ப்ப்னியத்தின் எதிரிதான். ஏனேனில் பார்ப்ப்னியம் ஒரு கருத்துமுதல்வாத மக்கள் விரோத தத்துவம். கம்யுனிசமோ மக்களின் விடுதலைக்கான பொருள்முதல்வாத தத்துவம். இந்தியாவில் நிகழ்ந்தவை எல்லாம் போலி கம்யுனிஸ்டுகள் கம்யுனிசத்தை தமது சந்தர்ப்பவாத நிலைபாடுகளுக்கேற்ப்ப திரித்து செய்தவையே. இதற்க்கு கம்யுனிசத்தை குற்றம் சொல்வது நியாயமல்ல என்பது எனது கருத்து. இங்கு தமிழ்மணத்தில் பார்ப்பன பயங்க்ரவாதத்திற்க்கெதிராக சித்தாந்த ரீதியில் நிற்க்கும் வலுவுடன் இயங்குவது புரட்சிகர கம்யுனிச தத்துவத்தை தாங்கி நிற்கும் வலைப்பதிவர்களே என்ற உண்மை எனது இந்த கருத்துக்கு வலு சேர்க்கும். வாழ்த்துக்களுடன்,
அசுரன்.