பெரும்பான்மை தமிழர்களுக்கு அறிமுகமான அளவில், இசை விமர்சகர் என்பதாக சுப்புடு அவர்களை அறிந்துள்ளேன். கூடுதலாக, இவர் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத ஆசாமி என்பதாகவும், சஞ்சிகைகளைப் படித்த காலத்தில் அறிந்துள்ளேன். சற்றுமுன்: சுப்புடு உடலுக்கு கலாம் அஞ்சலி என்கிற வலைப்பதிவைக் கண்டவுடன், அண்மையில் படித்த சுப்புடுவின் நேர்காணல் ஒன்று நினைவுக்கு வந்தது. " கலைஞர் முதல் கலாப்ரியா வரை ” எனும் நேர்காணல்களின் தொகுப்பு நூலில் இடம்பெற்றிருக்கும் அந்நேர்காணலிலிருந்து சில கேள்விகள் - பதில்கள்.
1991-1995 சுபமங்களா இதழில் வெளிவந்த நேர்காணல்களை நடத்தி தொகுத்தவர்கள், அமரர். கோமல் சுவாமிநாதன் மற்றும் இளையபாரதி.
நூல் வெளியீடு : நர்மதா பதிப்பகம் - சென்னை
0ooo0o0o0o0o00o0o0
சங்கீத விமரிசனம் என்பதை எத்தனை வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் ?
50 வருடங்களுக்கு மேலே. 1938 -ல் இருந்து. முதல் விமரிசனம் விகடனில் வெளிவந்தது.
உங்கள் எழுத்துக்களை ஒட்டி உங்கள் மீது கோபதாபங்கள், விமரிசனங்கள் பல வந்திருக்குமே, அவை உங்களை பாதித்திருக்கின்றனவா?
இல்லவே இல்லை. இப்படி ஏதாவது கோபதாபங்கள், விமரிசனங்கள் வந்தால்தான் சந்தோஷமாக இருக்கிறது.
சில வித்வான்களைப் பற்றி விமரிசனம் எழுதியதைப் பார்த்துவிட்டு அவர்கள் சுப்புடுவிற்கு சங்கீதமே தெரியாது என்று சொல்கிறார்களே…. அதைப் பற்றி…?
அது தப்பு. சங்கீதம் தெரியும். 2,3 வாத்தியம் வாசிப்பேன். இத்தனை வருடமாக நான் எழுதினது தப்புன்னு யாரும் சொல்லலே. எழுதின முறைதான் தப்புன்னு சொல்லியிருக்காங்க. ஐந்து வருடங்களுக்கு முன்பு செம்மங்குடி (சீனிவாசய்யர்) ஒரு கச்சேரியில் தப்பாக பிரயோகம் பண்ணினார். இது சரியான்னு கேட்டேன். தப்புன்னு கூட சொல்லல்லே. “சொல்லுங்கோ… தப்பா இருந்தா நான் திருத்திக்கறேன்’னு எழுதினேன். ” சுப்புடு அப்படி எழுதினது தப்பு… செம்மங்குடியைப் போய் எப்படி அது மாதிரிக் கேக்கலாம்” என்று மாறிப் போச்சு.
கர்நாடக சங்கீதம் வளர்ந்திருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் பல சபாக்களில் கூட்டம் ரொம்பக் குறைவாக இருக்கக் காரணம் என்ன?
சில சமயங்களில் மாலை கச்சேரிகளில் மரியாதை பண்ணனும் என்பதற்காககே தொண்டை போனவர்களை எல்லாம் போட்டு விடுகிறார்கள். அவர்களை விடவும் முடியாது. இந்த மாதிரி உள்ளவர்களை காலை நேர கச்சேரிகளில் தள்ளிவிடலாம். பல்செட் வைத்துக் கொண்டு பாடுகிறவர்களுக்கு எப்படிக் கூட்டம் வரும் ..? மாலை நேரங்களில் இளம் வித்வான்களைப் போடுங்கள் என்று எழுதினேன்.
சென்னைப் பத்திரிக்கைகளில் பலர் சங்கீத விமரிசனம் எழுதுகிறார்கள். அதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
இங்க எழுதறவங்க எல்லாம் விஷயம் தெரிஞ்சவங்கதான். தெரியாதுன்னு சொல்ல மாட்டேன். பட்டம்மாள் மாதிரி பெரிய வித்வான்கள் பாடும்போது ஒண்ணும் சொல்லமாட்டாங்க. ‘ காம்போதி களை கட்டவில்லை’ என்று மட்டும் சிலர் எழுதுவாங்க. ஏன் களைகட்டவில்லை என்று நான் எழுதுவேன்.
ஆனால் கொஞ்சம் குத்துவது போல நீங்கள் எழுதுவதாக சொல்லப்படுகிறதே !
சில விஷயங்களை காரமாக போட்டால்தான் ஜனங்க படிப்பாங்க. சில சம்பிரதாயங்களுக்கு எதிராக எழுதும் போது, கொஞ்சம் காரமாகத்தான் எழுதியாகணும். ஒரு உதாரணம் சொல்றேன். டெல்லியில் ஒரு சங்கீதக் கச்சேரி. பிரபல வித்வான் பாடிக் கொண்டிருக்கிறார். ‘நீயிரங்காவிடில் ‘ என்ற பாட்டை எப்படி பாவத்தோடு லயிச்சுப் பாடணும்? அவர் அதை சங்கதியெல்லாம் போட்டு கடுமையாகப் பாடிக்கொண்டிருக்கிறார். நான் கல்கியில், அவர் “வீட்டுத் தோட்டத்தில் இருந்த மாமரத்தில் பக்கத்து வீட்டுப் பையன் மாங்காய் பறிக்கிறான் போல இருக்கிறது. நீ இ(ற)ரங்காவிடில் பல்லை உடைச்சிடுவேன்னு சொல்ற மாதிரி கொஞ்சம் கூட பாவம் இல்லாமல் இருந்தது, என விமரிசனம் எழுதினேன்.
கர்நாடக இசை என்பதே இப்பொழுது குறிப்பிட்ட சில பேர்கள்தான் ரசிக்க முடியும், மற்றவர்களுக்கு இது கஷ்டம் என்கிற எண்ணம் நிலவியிருக்கிறதே ! இது உண்மை என்று நினைக்கிறீர்களா?
கர்நாடக இசை மேல்தட்டு இசையாக ஒரு காலத்தில் இருந்தது. இப்ப அப்படி இல்லை. மாறிட்டது. இது எதனால் ஏற்பட்டதுன்னு தெரியல - அது சாபமோ பரிணாமமோ தெரியல்லே - கச்சேரின்னா அது தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடப் பாட்டுக்களாகத்தான் இருக்கணும் என்கிற நிலை முன்ன இருந்தது. சங்கீதப் பிதாமகர்கள் என்று சொல்கிறவர்களுக்கு தமிழ் தெரியாது. அதனால் அவரவர் பாஷையில் பாடினாங்க. அந்தப் பாட்டுக்கள் பிரபலம் ஆயிட்டுது. அதுதான் கர்நாடக இசைன்னு ஆயிட்டுது. பாஷை புரியாமல் ரசிக்க மாட்டான். தியாகராஜ கீர்த்தனையில் எதை ரசிக்கிறான் ? அந்த சங்கதியை. இப்ப ‘ ப்ராவ பாரமா ‘ என்ற கீர்த்தனையை அந்த பாவமே இல்லாமல் பாடினால் எப்படி இருக்கும் ? ‘ பண்டித மோதிலால் ‘ நேருவைப் பறிகொடுத்தோமே ' ன்னு ஜாலியா தாளம் போட்டுக் கொண்டு பாடினால் ரசிக்க முடியுமா ? பாபநாசம் சிவன் பாடல்கள் இல்லையா ..?
இவங்க சங்கீதத்தை கரடுமுரடாகப் பாடினாங்க. தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டிக்கிட்டிருந்தாங்க. அழகுணர்ச்சி இல்லாமல் Craftmanship - ஐ வைத்து சர்க்கஸ் வேலை பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதனால அதுக்கு பாப்புலாரிட்டி குறைஞ்சது. லைட் மியுசுக் பக்கம் கூட்டம் போச்சு.
‘ (மியுசிக்) அகாடமி அக்ரகாரத்தில் ‘ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறீர்களே, பிராமண ஆதிக்கத்தைக் குறிப்பிட்டுச் சொன்ன வார்த்தையா ?
பிராமணரல்லாதார் மத்தியில் உள்ள எண்ணம், அகாடமி பிராமினிஸ்ட் என்பதைத் தெரியப்படுத்தவே எழுதினேன். எப்ப எழுதினேன் தெரியுமா ? டி.எம்.தியாகராஜன் இருக்கிறாரே அவர் மகாவித்வான். அவரைப் போய் ‘ இந்த வருடம் சங்கீத கலாநிதி நீங்கதான்னு ' சொன்னாங்க. அவர் எனக்கு வேணாமய்யா போய்யானுட்டாரு ! எப்படியோ அவரைச் சம்மதிக்க வைச்சாங்க. அப்புறம் என்ன ஆச்சு ? உள்ளுக்குள்ளே டி.என். கிருஷ்ணனுக்கு சங்கீத கலாநிதி கொடுக்கணுமுன்னு ஒரு கோஷ்டி வேலை செய்தது. அரசியல் கட்சித் தேர்தல் போல ஓட்டுப் பிடிக்க வேலை செய்தது. நான் நூறு வயசு வரை இருந்தாலும் அகாடமியைப் பற்றி அப்படித்தான் எழுதுவேன்.
பொதுவாகவே கர்நாடக இசை என்பதே ஒரு பிராமண இசை என்ற எண்ணம் பரவியிருக்கிறதே ..?
பிராமணரல்லாதவர்கள் இந்த லயனுக்கு வரலை. அவர்கள் மத்தியிலே சமூகக் கட்டுப்பாடு அதிகம். ஒரு பெண் மேடையேறிப் பாடறதையோ அல்லது ஆடறதையோ அவங்க சமூகத்தில் அனுமதிக்கறதில்லை. இப்பதான் அவர்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வராங்க. வாய்ப்பு எல்லோருக்கும் பொதுவாகத்தான் இருந்தது.
http://vassan.kollidam.com/?p=46
|