உச்ச நீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்கு இடைக்காலத் தடைவிதித்திருக்கிறது. தமிழகம் ஒருநாள் வேலை நிறுத்தம் மூலம் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. சாதிகளாய்ப் பிளக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட இந்தியச் சமூகம் தனது இருத்தலுக்கான போராட்டத்தை நடத்துகிறது; தனது நியாயமான பங்கைக் கோருகிறது. இடஒதுக்கீடு என்பது இந்தியச் சமூகத்துக்கு புதியதொன்றல்ல. ஆயிரமாயிரமாண்டுகளாக இடஒதுக்கீடு முறை பொது மக்கள் மேல் திணிக்கப்பட்டே வந்திருக்கிறது. அப்போதெல்லாம் தகுதியைப்பற்றிய, பொருளாதாரத்தைப்பற்றிய தர்மாவேசங்கள் எழுந்ததாய்த் தெரியவில்லை. இந்தப் புதிய இடஒதுக்கீடு பழைய இடஒதுக்கீட்டை குலைத்துப்போடச் சொல்கிறது; எல்லாவற்றிலும் எல்லோருக்கும் நியாயமான பங்கைக் கேட்கிறது. மேற்குடி மருத்துவர்கள் கொதித்தெழுகிறார்கள்; சாதி பார்த்தால் நல்ல மருத்துவர் வருவாரா என்று கிண்டலாய்க் கேட்கிறார்கள்! மருத்துவர்களே ஒரு சாதியாய் ஒதுக்கப்பட்ட போது அங்கு தகுதியைப் பற்றி எப்படி யாருமே யோசிக்கவில்லை! இந்தப்போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; இது எங்களோடு முடியப்போவதும் இல்லை என்று பகத் சிங் சொன்னது போல இந்தப் புதிய இடப்பங்கீட்டிற்கான போர் அவ்வளவு எளிதில் முடியாது போல. குழலி இடஒதுக்கீடு குறித்த பல பதிவுகள், இணையப்பக்கங்கள் குறித்த சுட்டிகளைத் தொகுத்தளிக்கிறார். திரு சாதியால் பிற்படுத்தப்பட்டவர்கள் எதன் பெயரால் நீதி கேட்பார்கள் என்று கேட்கிறார். 'என்றென்றும் அன்புடன்' பாலா இடஒதுக்கீடு குறித்த வழக்கில் அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய அணுகுமுறைகள் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்.
இராம.கியின் 'சுடர்வழியே செய்தி' பல வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது. இந்திய விடுதலைப்போர் பற்றிய வரலாறு பெரும்பாலும் கற்பிக்கப்பட்டதாகவும், பலதரப்பட்ட மக்களின் பங்களிப்பைப் புறக்கணிப்பதாகவுமே இருக்கிறது. மருது சகோதரர்கள் தங்கள் நாட்டு விடுதலையை மட்டும் பாராமல், நாவலந்தீவின் விடுதலைக்கே முதன்மையாய், வெள்ளைக்காரரை வெளியேற்ற வேண்டும் என்று, ஓர் எதிர்ப்புப் போராளி முன்னணியையே, உருவாக்கியுள்ளார்கள். அதில் திப்பு சுல்தான், வட கேரளக் குறுநிலக் காரர்கள், கன்னட அரசர்கள், மராட்டியத் தலைவர்கள், பாஞ்சாலங் குறிச்சி முதற்கொண்டு பல்வேறு தமிழகப் பாளையக் காரர்கள், போராளிக் கழகங்கள் என்று பல்வேறு உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். தென்னிந்திய அளவில் இந்த முன்னணி விரிந்து பரந்திருந்தது என்பது வரலாறு. வரலாறு என்பது மக்களின் விடுதலை குறித்த எழுச்சியும் வீழ்ச்சியுமே ஆகும். ஆனால் இந்திய வரலாற்றில் இப்பக்கங்கள் அலட்சியப்படுத்தப்பட்டு வடக்கில் இருந்தே விடுதலைப்போர் தொடங்கியது போன்ற தோற்றம் கற்பிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அது மகாத்மாக்களின் கால்களைச் சுற்றியே கட்டியெழுப்பப்படுகிறது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான அரசுகளின் நிலப்பறிப்பில் பஞ்சாப் விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைப் பற்றிய பதிவு குமாரின் 'பறிபோகும் விளைநிலங்கள்'. இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான நில ஆக்கிரமிப்பு பாதிப்பது இந்தியாவின் உணவு உற்பத்தியை, தன்னிறைவை, சுயசார்பை. எனவே இந்தப்பிரச்சனையை அணுகும்போது இந்தியாவின் உணவு உற்பத்தியைப் பற்றி எழும் பிரச்சனைகள், அதை எதிர்கொள்ள வேண்டிய உத்திகளை அரசுகளும் மக்களும் ஆராயவேண்டும். இந்தியாவின் உணவுத் தேவை, அதன் உற்பத்தித் திறன், அதை அதிகப்படுத்த செய்யவேண்டிய உத்திகளாக கொள்முதல் விலையை உயர்த்துவது, இயற்கை விவசாயத்தைப் பரவலாக்குவது, நிலச்சீர்திருத்தத்தை கொண்டுவருதல், நீர்வளங்களைத் திறம்படப் பயன்படுத்துதல், மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தடைசெய்தல் போன்ற உத்திகளைப்பற்றி பேசுகிறது. உணவுத்தேவைக்காகப் பிற நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலையில் இருக்கும் இந்தியா சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உண்டாக்கும் முயற்சியில் இந்த வகையில் ஈடுபடுவது அபாயகரமானது.
மனிதர்களையும் அதனால் வாழ்க்கையையும் கூர்ந்து கவனிப்பதால் உண்டாகும் எழுத்துக்களே உயிர்ப்பான படைப்புக்களைத் தருகின்றன. அப்படைப்புகளில் மொழி உன்னதமாக மிளிர்வதற்குக் காரணம் அது மனிதனைப் பதிவு செய்வதால்தான். மற்ற எல்லாத் தளங்களைப் போல வலைப்பதிவுகளிலும் குறிப்பிடத்தக்கவளவு மொழி உலர்ந்து வெற்று அலங்காரங்களோடு காணப்படுவதற்குக் காரணம், அது மனிதவாழ்க்கையைவிட பொய்யான கற்பிதங்களைச் சார்ந்திருப்பதால்தான் போலும். 'மரத்துப் போதல்' என்ற சுடர்விழியின் பதிவு நசிந்துபோன விவசாயம் சார்ந்த வாழ்க்கையை, மனிதரைப் பிரதிபலிக்கும் முயற்சியில் மிளிர்கிறது. இப்படியான சாரமான மொழியில் அவர் தனது பதிவுகளைத் தொடர்ந்து தர விழைகிறோம். இராமநாதனின் பதிவு வலிப்பு நோயின் வகைகளை, அதன் பாதிப்புகள் அதை எதிர்கொள்ளும் முறை போன்றவைகளை தெளிவாக விவரிக்கிறது. பொதுவாக இம்மாதிரியான நோய்களைப் பற்றிய விழிப்புணர்வற்ற தன்மைக்குக் காரணம் இவை மக்களுடைய மொழியில் சொல்லப்படாததுதான். அரசால் சொல்லப்படுகிறவைகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. இது போன்ற துறை சார்ந்த வல்லுனர்களின் பதிவுகள் அவ்வகையில் பெறுமதிப்பு வாய்ந்தவை. நன்றி என்பது வெறும் வார்த்தையாக மட்டும் உலர்ந்து போன சமூகத்தில், தனது நன்றியைப் பகிர ஓர் எளிய மனிதன் தன்னிடமிருந்தவற்றில் சிறந்ததைத் தருவதைக் காட்சிப்படுத்துகிறது ஆழியூரானின் பதிவு. முட்டையிட்டுப் பாலூட்டும் அதிசய விலங்கான பிளாட்டிபஸ் பற்றிய அழகிய பதிவொன்றை படங்களுடன் தருகிறார் செல்லி.
இந்த வார இதழில், இசைத்தமிழ் சிறப்பு ஒலிப்பேழையின் நான்காவது மற்றும் நிறைவுப் பகுதி இடம்பெறுகிறது. இதில் முனைவர் இரா. திருமுருகன் அவர்கள் சிந்துப் பாடல்களைக் குறித்து, அதிலும் குறிப்பாக அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து குறித்து மனங்கவரும் வண்ணம் உரையாற்றியிருக்கிறார். தமிழின் மீதும், தமிழ் வளர்ச்சியின் மீதும் பற்றுள்ளவர்களுக்கு மனக்கிளர்ச்சியேற்படுத்தும் இவரது வாழ்க்கைக் குறிப்பும் இவ்வாரப் பூங்காவில் இடம் பெற்றுள்ளது. இதனைக் கண்ணுற்றால் முனைவர் இரா. திருமுருகன் நெறிப்படுத்தும் வண்ணம் தமிழ்ப்பணிகளில் நம்மையும் நாம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வலுப்பெறும்.
வலைப்பதிவுகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பரந்துபட்ட வாசகர்களுக்கு எடுத்துச் செல்வதோடு, வலைப்பதிவுகளுக்கு வெளியே இயங்கும் படைப்பாளிகளை வலைப்பதிவு வாசகர்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டியதை எமது அடுத்தகட்ட பணியாகக் கருதுகிறோம். இம்முயற்சியின் பகுதியாக இனி வரும் இதழ்களில் வலைப்பதிவுகளில் வெளியாகும் இடுகைகளோடு, எமக்கு நேரடியாக அனுப்பப்பெறும் படைப்புகளையும் பதிப்பிற்கு பரிசீலனை செய்வோம். ஆகவே இதுகாறும் வலைப்பதிவு துவக்காமல் வாசகர்களாக மட்டும் இருப்பவர்களும் இனி படைப்புகளை நேரடியாக பூங்காவுக்கு அனுப்பி வைக்கலாம். இச்செய்தினை படைப்பூக்கமிக்க உங்கள் பிற நண்பர்களுக்கும் அறியத் தந்தால் பெருத்த மகிழ்ச்சி அடைவோம்.
|