இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தொகுப்பாளரின் மேசையிலிருந்து Print E-mail
ஆசிரியர் குழு   

அன்பிற்கினிய வலைப்பதிவு நண்பர்களுக்கு பூங்காவின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
எண்ணிலடங்காக் கோள்களும், கற்களும், தூசும், காற்றறு வெளியுமாயிருக்கும் அண்டத்தில் இப்புவி இன்னொரு முறை தன்னைச் சுற்றிக்கொண்டுவிட்டது. இவ்வண்டத்தையும், புவியினையும் பற்றிய கொள்கைகளும், கோட்பாடுகளும், தேற்றங்களும் அறிவியலின் கண்களினூடாகத் தொடர்ந்தும் மாறிக்கொண்டே வருகின்றன. ஆனால் மதங்களின் கண்களினூடாக இவை மாறியிருக்கின்றனவா? மக்களைப் பக்குவப்படுத்தி மேநிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய நெறிகள், சமயங்களாகி, மதமாகிப் "பரிணாம வளர்ச்சி" அடைந்திருக்கின்றன. சடத்தன்மை பொருந்திய இப்பெருமலைகளைச் சிற்றுளிகள் ஆங்காங்கே கொத்திச் சில்லுகளைப் பொடிக்கின்றன. நம் வழிகளைச் சமைத்துக் கொள்ளவும், போலி அறிவியலறிவிலிருந்து விடுபடவும் நாம் மெய்யான அறிவியலுக்கு முக்கியத்துவம் தந்தாகவும் வேண்டியிருக்கிறது. இவ்வாரப் பூங்கா இதழில் நிறைய அறிவியல் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இவை கோள்களைப் பற்றியும், குவாண்டம் இயற்பியலைப் பற்றியும், வயிற்று உபாதை, உணவு, மூலச்செல் சிகிச்சை, நோவார்ட்டிஸ் என்றவொரு மருந்துக் கம்பெனி இந்தியாவில் காலூன்றிச் செய்யவிருக்கும் கேடுகளைப் பற்றியும், இன்னும் சுற்றுப்புறச் சூழலைச் செம்மைப்படுத்திவிடலாம் எனும் நம்பிக்கை கொள்ளவைக்கும் காற்றால் ஓடும் கார்களைப் பற்றியும் நமக்குச் சொல்கின்றன. இத்தனைச் செய்திகளையும் தமிழால் சொல்லமுடியும், சொல்ல வேண்டும் என்ற நம்பிக்கையினை ஊட்டுகின்றது இராம.கி.யின் "தமிழில் அறிவியல்" கேள்வி-பதில்.
 
அமெரிக்காவில் ஒரு கூடைப்பந்து இறுதிப்போட்டி நடந்தது. அதில் வென்றது ஆப்பிரிக்க அமெரிக்க இன வீராங்கனைகளை அதிகம் கொண்டிருந்தவொரு குழு. இவர்களை சும்மாதான் கிண்டல் செய்தேன் என்று ஒரு இனவெறி தொனிக்கும் வாசகத்தை ஒரு வானொலியின் விமர்சகர் சொல்லிவிட்டார். உடனே அமெரிக்க மிடையம் (media) முழுமையும் ஆர்த்தெழுந்து அவரை உண்டு இல்லை எனச் செய்து கடைசியில் வேலையை விட்டுத் துரத்திவிட்டார்கள். மக்களின் குரலுக்கும், மிடையங்களின் குரலுக்கும் எதனையும் ஆற்றும் வலிவுண்டு. இதே மிடையம் சில மாதங்களுக்கு முன் புகைப்பவர்களை "புதிய பறையர்"களாக ("Smokers the New Outcasts- Growing middleclass intolerance makes smokers feel like pariahs") அட்டைப்படத்தில் அறிவித்து மகிழ்ந்தது. அது இந்தியாவின் Outlook. இப்போது இந்தியாவின் உச்ச நீதிமன்றம் "intellectual pygmies" என்று ஒரு சாரரைக் குறிப்பிட்டிருக்கிறது. ஆப்பிரிக்கப் பழங்குடிகளில் ஒன்றுதான் pygmy. ஆப்பிரிக்கர்களுக்கும், திராவிட இனத்தவருக்கும் மரபணுக்களினடிப்படையிலும், உடற்தோற்றம், கலாச்சார அடிப்படையிலும் ஒற்றுமைகளிருக்கின்றன என்று அறிவியல் தரவுகள் சொல்லிவரும் இவ்வேளையில், இடவொதுக்கீடு கேட்கும் திராவிட இனத்து BC, MBC, SC, STக்களை pygmies என்று குறிப்பது, அதுவும் ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றம், பல்லின மக்கள் வாழ்ந்துவரும் அந்நாட்டில், ஒரு சாரரை வெறும் பிறப்பின் அடிப்படையில் தொடர்ந்து ஒடுக்கி வரும் ஆதிக்க சாதியினரின் குரலைப் பிரதிபலிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.  சிலர் இந்நீதிபதிகளின் சாதிகளைக் குறித்த (அதாவது இவர்களில் "தாழ்ந்த" சாதிக்காரர்களும் இருக்கிறார்கள் என்ற) பொய்ப் பரப்புரைகளைச்  திட்டமிட்டே பரப்பி வருதல் குறித்துப் பதிந்திருக்கிறார் ஜெகத். க்ரீமி லேயர் என்கின்ற உயரடுக்கினைக் களைவது பற்றி வெட்டிப்பயல் எழுதியதும் இப்பிரிவின்கீழ் தொகுக்கப்பட்டிருக்கிறது.

 

ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மக்களின் வரிப்பணத்தைப் பெருமளவில் உறிஞ்சிக்கொண்டிருக்கும்போது ஆரம்பக்கல்விக்குக் காட்டப்படும் அக்கறை சொற்பமே. சிதைவுற்று வரும் ஆரம்பக்கல்விக் கட்டமைப்பினைப் பற்றிய குறிப்பொன்றினை நாடித்துடிப்பு எனும் பதிவு தருகிறது. கல்விச் சிதைவோடு மட்டுமல்லாது மனச்சிதைவுகளுக்கும் குழந்தைகளை உள்ளாக்கும் பாலியல் வன்முறைகள். தேசீய கீதத்தை அவமதித்துவிட்டதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் பெறும் கவனத்தையேனும் குழந்தைகளைப் பற்றிய அக்கறையினைக் காட்டும் பதிவுகள் பெறுகின்றனவா என்பது கேள்விக்குறியே. அரசுப்பள்ளிகளின் தரம் குறித்துக் கவலைகொள்ளும் இந்நேரத்தில் மனதுக்கு ஆறுதலாகவும் சில நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றிலொன்று வசந்தன் குப்புசாமியின் சாதனை. அமெரிக்காவில் நிதி திரட்டி, ஒரு தமிழக கிராமப் பள்ளியினை மேம்படுத்தும் இவரது செவ்வி இவ்வாரப் பூங்காவில் இடம்பெறுகின்றது.


இவ்வாரப் பூங்காவில் விமரிசனங்களின் மீதான விமரிசனங்கள் மூன்று வைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளோ, பெரியவர்களோ, அவர்களின் மீதான விமரிசனங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. எல்லோராலும் 'இருக்கட்டும்' என்று இருந்துவிடும் ஒரு ஜென் கதைக் கிழவரைப் போல இருந்துவிட முடிவதில்லை. ஒரு சிலரின் தனிப்பட்ட  எதிர்பார்ப்புகள் நிறைவேறாமையால் ஏற்படும் ஏமாற்றங்களை மட்டுமே முன்வைத்து, ஒட்டு மொத்த சமூகத்திற்கான நன்மைகளைப் புறக்கணித்து எழுதப்படும் விமர்சனங்கள்  வெறும் தட்டைப் பரிமாணக் காட்சிகளையே நம்முன் வைக்கின்றன. ஒருவரே எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஒரு பொருளைப் பார்த்து, அதன் இடம், காலம், தன்மைகளை ஆராய்ந்து எழுதப்படுதலே உண்மையான விமரிசனமாக இருக்கக் கூடும். மற்றவற்றையெல்லாம் விமர்சனங்கள் என்ற பெயரினால் அழைப்பதை விடுத்து, அது என்னுள் ஏற்படுத்திய அதிர்வு என்பதுடன் நிறுத்திக் கொள்ளலாம். அதனை விடுத்து அவர் இப்படிச் செய்தார், இப்படிச் செய்திருக்கலாம் என்பன வெற்றோசைகளாகவே அலையும். அதனாலேயே விமரிசனங்கள் என்பவை இரு சாரருக்கிடையே விருப்பு, வெறுப்பு, ஆளுமை குறித்த தர்க்கங்கங்கள் என்பவற்றினூடாக ஓடிக்கொண்டேயிருக்கும் ஒரு தொடர் வண்டியாக இருக்கின்றன. 

பொருளாதார முன்னேற்றத்தின் பக்க விளைவுகளாகத் தோன்றும் நகர நெருக்கடியினை விளக்கமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது சென்னையைக் குறித்த பத்ரியின் பதிவு. இந்தியப் பொருளாதார அமைச்சர் ப.சிதம்பரத்தின் புத்தகமொன்றுக்கு குப்புசாமி செல்லமுத்து எழுதியிருக்கும் அறிமுகமும் இடம்பெறுகிறது.

வாழ்வனுபவமாகவும், கேள்வியனுபவமாகவும், காட்சியனுபவமாகவுமான மேலும் பல பதிவுகள் இவ்வாரப் பூங்காவை செழிப்பித்திருக்கின்றன. நல்லதொரு ஆண்டுக்குள் நம்பிக்கையுடன் நுழைவோம் நண்பர்களே! 

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)