இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
The Bridges of Madison County(1995) Print E-mail
மூக்கு சுந்தர்   

 

 


ஆக்ஷன் ஹீரோ க்ளிண்ட் ஈஸ்ட்வுட் டைரக்ஷனில் 1995ல் வெளிவந்த படம். அவரே கதாநாயகன். நாவலாக எழுதப்பட்டு பெருவெற்றி பெற்ற கதையை படமாக்கி இருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத கதை, யோசிக்க வைக்கும் கரு, தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதை மற்றும் வசனம்.

அயோவா மாகாணத்தின் கிராமம் ஒன்றில் பதின்ம வயது பிள்ளைகளுடன், பழிபாவம் இல்லாத நல்ல கணவனுடன், ப்ரான்ஸெஸ்கா (Merryl streep) தன் பண்ணை வீட்டில் வசித்து வருகிறாள். நூற்றைம்பது வருடமாக கணவன் குடும்பத்தார்க்கு பழக்கப்பட்டு போயிருக்கும் அந்த வீட்டில் இத்தாலி கிராமத்திலிருந்து வந்து அவள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு ஆண்டுகள் பலவாகின்றன. குழந்தைகள் மற்றும் கணவனுடனா அவள் பழக்க வழக்கத்தில் அன்பும், நெருக்கமும் தெரிந்தாலும், கொஞ்சம் அலுப்பும் தெரிகிறது. மத்திய வயது, பறக்கத் துவங்கி சற்றே விலகத் தலைப்பட்டு இருக்கும் குழந்தைகள், இத்தனை வருடங்களான தாம்பத்தியத்தில் தன்னுடைய ஆகர்ஷிப்புக்கு வெளியே போய்விட்ட கணவன், என நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன.

ஏதோ வேலையாக கணவனும், குழந்தைகளும் ஒரு வாரம் வெளியே செல்கிறார்கள். தினசரி கடமைகளில் இருந்து அவளுக்கு சற்றே ஓய்வு கிடைக்க, வீட்டு முன்புறம் அருகே உலாத்திக் கொண்டிருக்கும் அவளிடம்
பாலத்துக்கு வழி கேட்க வந்த நேஷனல் ஜியாக்ரஃபி போட்டோகிராஃபர் ஒருவன் ஆச்சரியமூட்டுகிறான். காற்றுக்கு சொந்தக்காரனைபோல சொந்த பந்தம் இல்லாமல் விட்டு விடுதலையாகி, உலகம் முழுக்க அலைந்து கொண்டு இருக்கும் அவன், குடும்பப் பொறுப்பு/ பாரத்தின் பொருட்டு அவள் வாழ முடியாத வாழ்க்கையை, வாழ்வதால் அந்த சுதந்திரத்தின் மீதான ஏக்கம் அவனுடன் பேச ஆரம்பித்த ஒரு நாட்களுக்குள்ளேயே அவன் மீதான ஏக்கமாக, பின் விரகமாக மலர்கிறது. அவனிடம் மனசு விட்டுப் பேசலாம் என்று தோன்றி விட வெட்கப்பட்டுக்கொண்டே தன் மனசைப் பகிர்ந்து கொள்கிறாள். பின்னர் தன்னையும்....

அந்த மூன்று நாட்களும் அவர்களிருவரும் பதின்ம வயது குழந்தைகளைப் போல சுற்றித் திரிகிறார்கள். பியர்/சிகரெட்/பிராந்தி வெள்ளமாக பொழிய, அயோவா சாலைகளில், பூங்காங்களில், பாலத்தின்விளிம்புகளில், குளியலறை தொட்டியில், வீட்டின் சாப்பாடு அறை நடனத்தில் காதல் பொறி பறக்கிறது. யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத தன் ரகசியக் கனவுகள் எல்லாம் அவளுக்கு நான்கு நாட்களில் நனவாகிறது. பிரியும் நாளுக்கு முன், அவளுக்கு சந்தேகம் வந்து விடுகிறது. மற்ற பெண் நண்பிகளைப் பற்றி எல்லாம் தன்னிடம் கதைத்த அவன் அவளைப் பற்றி மற்றவர்களிடம் என்ன சொல்லப்போகிறான்??? தன்னை, தன் உணர்வுகளை எப்படி புரிந்து கொண்டானோ என்கிற குமைச்சலில் அவனிடம் தங்கள் உறவை கொச்சைப்படுத்திக் கூறுவதுபோல சுடுசொற்கள் சிலவை வீசிப் பார்க்கிறாள். அதை அமைதியாக எதிர்கொள்ளும் அவன், தன் மனதை, அதில் அவளுக்கான இடத்தைப் புரிய வைக்கிறான். தன்னுடன் வந்து விடுமாறு அவளை அழைக்கிறான். குழந்தைகள் வாழ்க்கைக்காவும், கணவன் உடைந்து போகக்கூடாது என்பதற்காகவும், காமிராக்காரனுக்கான தன் உணர்வுகள் அவனுடன் ஓடிப்போவதால் கேவலப்படுத்தப்படும் அபாயமும் கூடவே இருப்பதால், அவள் கண்ணீருடன் அவனுக்கு விடை கொடுக்கிறாள். மற்ற குடும்பக் கடமைகள் ஊடே சாகும் மட்டும் அந்த நான்கு நாட்களை நினைத்துக் கொண்டே உயிர் விடுகிறாள்.

தன் உயிலில், தான் இறந்தவுடன் தன்னை எரித்து பின் சாம்பலை , (என் வாழ்க்கையைத் தான் உங்களுக்கு கொடுத்து விட்டேன். அதையாவது அவனுக்கு கொடுக்க வேண்டும்) அவனைச் சந்திக்க வைத்த பாலத்தில் இருந்து தூவ வேண்டும் என்கிற வேண்டுகொளை வைக்கிறாள். அம்மாவின் இறப்புக்குப் பின் அவள் உயிலுடன் இருக்கிற டயரிக் குறிப்புகளை படிக்கிற அவள் பிள்ளைகள் (அண்ணனும் தங்கையும்) தன் அம்மாவின் கடந்த காலம் தெரிந்து பலவித உணர்ச்சிகளுக்கு ஆளாகிறார்கள். அதிலும் பிள்ளையால் தன் அம்மாவின் "ஒழுக்கம் கெட்ட" நடத்தையை ஜீரணிக்கவே முடியவில்லை. பின்னர், வாழ்கின்ற ஒவ்வொருவருக்குள்ளும், வாழவே முடியாத இன்னொரு பிரதியும் உள்ளே இருப்பதன் நிதரிசனம் புரிந்து கொண்டு, அம்மா அந்த பிரதியை நாலு நாளாவது வாழ விட்டாள் என்கிற பெருமூச்சோடு தங்கள் உடைந்த வாழ்க்கையை சரி செய்ய தங்கள் கூடுகளுக்கு திரும்புகிறார்கள்.

கொஞ்சம் பிசகி இருந்தாலும், காமிராக்காரனின் காம லீலைகள் என்று தடம் புரண்டு விடக் கூடிய கதையை, அதன் சிக்கலை, மனசுப்படி யாருமே வாழ முடியாத குடும்பத்தின் அமைப்புச் சிக்கலை, கண்ணீரும் காவியமுமாக சொல்லி இருக்கிறார்கள். படத்தைப் பார்க்கும்போது அஸ்தித்வ என்கிற தபுவின் இந்திப்படமும், மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர் என்கிற கொங்கனா சென் படமும் நினைவுக்கு வந்தன.

என் கண்ணுக்கு முன்பே இது நடந்திருக்கிறது. மூன்று இருபது வயது பெண்களையும், இரண்டு பத்து வயது ஆண் பிள்ளைகளையும் விட்டு விட்டு, கனவர் இறந்த கொஞ்ச நாளில், மனசுக்குப் பிடித்த ஆணோடு ஒரு அம்மாள் போய் விட்டார். என் தோழியின் அம்மா அவர். அப்போது கேட்டபோது ச்..ச்சீ என இருந்தாலும், பழிச் சொல்லுக்கு பயப்படாமல், தியாகி ஆகி பொய் வாழ்க்கை வாழாமல், திடமாக தடம் மாறிப் போனாரே என்று இப்போது தோன்றுகிறது. பலர் நடக்க நடக்கத் தானே தடங்கள் உருவாகின்றன.

உண்மையான காதல் இணைவதில் முடியவேண்டாம்.காதல் ஜீவிதமாக இருக்கட்டும் என்று எங்கோ படித்த நினைவு. ஆனால் காதல் ஜீவிதமாக
இருக்க மனுசப்பய மனசு அல்லவா செத்துப் போகிறது. யாருக்குமே நிறைவு தராத குடும்ப அமைப்பை என்ன இழவுக்கு தாங்க வேண்டும் / கட்டிக் காக்க வேண்டும் என்றுதான் எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒரு ஆச்சரியம். விருப்ப வாழ்வின் மீதான ஆணின் விழைவை உடல் சார்ந்தது என்று (ஆண்களே) வகைப்படுத்துவதும், பெண்ணின் விழைவை உள்ளம் சார்ந்தது என வகைப்படுத்துவதும் நம் எல்லோருக்கு நம் அம்மாக்கள் மீதான அன்பு கலந்த மரியாதையையே ஸ்திரம் செய்கிறது. ஒரு ஆண் தன் இச்சைகளினை கெளரவப்படுத்தாமல், சமூகத்தின் சட்டங்களுக்கும், குடும்பத்தின் இறுக்கத்துக்கும் பயந்து பலகாலம் புழுக்கத்தில் வாழ்ந்து, அவ்வப்போது அதற்கு மரியாதைக் குறைவான வடிகால்கள் தேடி, தன்னிரக்கத்தில் அதற்காகவும் துயருற்று வாழ்ந்து விடமுடியும். ஆனால் ஒரு பெண் நினைத்து விட்டால், அவள் எதற்காகவும் காத்திருப்பதில்லை. எந்த பெயர் வாங்கவும் அஞ்சுவதில்லை என்பது தான் எனக்கு இப்போதைய நடப்பாக தோன்றுகின்றது.

பார்த்து விட்டு நீங்களும் யோசியுங்கள்.

 
 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)