'நாடக நிகழ்வுகளில் ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இனியேனும் ஆண்கள் அதை தீர்த்து வைப்பீர்கள்தானே..?' என்று கேட்டிருக்கிறார் சினேகிதி. இதோ என் பங்குக்கு என்னால் முடிந்தது.
பிரளயனின் வீதி நாடகக் குழுவைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் மட்டும் வாய்க்காமலேயே இருந்தது. மிக சமீபத்தில் அந்த சந்தர்ப்பமும் வாய்த்தது. இந்திய மாணவர் சங்கம் நடத்திய மாணவர் கலாசார கலை இரவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நெல்லைக்கு வந்திருந்தது பிரளயனின் சென்னை வீதி நாடகக் குழு. பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் விழா. ச.தமிழ்செல்வன், கு.ஞானசம்பந்தன் போன்றோர் பேசி முடித்த பின்பு மேடையேறிய பிரளயன் குழுவினர் முதலில் நடத்திய நாடகம் 'பவுன்குஞ்சு'.
தலைப்பின் எளிமை அல்லது பிரளயன் குழுவைப்பற்றிய அறியாமை ஏதோவொன்றின் காரணமாகவோ ஆரம்பத்தில் பார்வையாளர்களிடம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை. ஒருவகையில் நாடகம் சொல்ல வந்த செய்தி, பார்வையாளர்களின் மனதில் முழுமையாக பதிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

செருப்புக்கு ஏற்ப காலை வெட்டுவது மாதிரி, நடைமுறைக்கு ஒவ்வாத பாடத்திட்டங்களுக்கு கட்டாயமாக பழக்கப்படுத்தப்படுகின்றனர் நம் குழந்தைகள். சுய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காத, மனப்பாட திறனை மட்டுமே வளர்க்கும் இந்த கல்வித்திட்டத்தால் மழலையிலேயே நம் மூலைகள் மழுங்குனிகளாக மாற்றப்படுகின்றன. இந்த திணிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பயிற்றுனர்களாக இருக்கும் ஆசிரியர்கள், ஒப்புவிக்கும் இயந்திரங்களாக மாறிப்போய்விட்டனர்.
குழந்தை பருவத்தில்தான், மனதெங்கும் மழைக்கால ஈசல்கள் போல புதிது, புதிதாக கேள்விகள் உற்பத்தியாகும். நோக்கமும், விளைவும் அறியாத பால்மனசின் கேள்விகள் எதையாவது நம் பாடசாலைகள் தீர்த்து வைத்திருக்கின்றனவா..? தீர்த்து வைக்காவிட்டாலும் பரவாயில்லை. குழந்தைகளின் வார்த்தைகளை யாரும் காதுகொடுத்துக் கேட்பதுக்கூட இல்லை. இந்த உணர்வின் உக்கிர தாக்கத்தை, 'ஆயிஷா' என்ற குறுநாவல் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் இரா.நடராஜன். இதைத்தழுவிய நாடக வடிவம்தான் 'பவுன்குஞ்ச'.(அண்மையில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணனின் 'கிறுகிறுவானம்' என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தில், பெரியவர்கள் தன் பேச்சைக் கேட்காததால், மரம், ஆடு, மாடு, அணில், நிழல் என்று யாவற்றுடனும் பேசித்திரியும் சிறுவனின் சித்திரம் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கிறது).
படிப்பின் நிறம்,மணம் அறியாத ஒரு கிராமத்து தகப்பன், கூலி வேலை பார்ப்பதால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தன் மகன் பவுன்குஞ்சை பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கிறார். அவனை ஆசிரியர்கள் படாதபாடு படுத்தி எடுக்கின்றனர். கிராமத்து அப்பாவித்தனத்துடன் எதையாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும் பவுன்குஞ்சுவை நோக்கி, 'உன் மனது பரிசுத்தம் அடையுமாக..உன் கலக எண்ணங்கள் கிருமி நீக்கம் செய்யப்படுவதாக.. கேள்வி சாத்தான்கள் உன்னைவிட்டு விலகுவதாக..' என்று மனதெங்கும் கடுப்பு பொங்கி வழிய பரிசுத்த ஆவியின் பெயராலே ஆசிர்வதிக்கிறார் ஆசிரியர். அன்று ஆங்கிலப் பாடம். ஒவ்வொரு மாணவராக வரச்சொல்லி, எண்ணெயை பாட்டிலில் நிரப்புவதற்கு பயன்படுத்தும் புனலை மாணவரின் வாயில் வைத்து,'a,b,c,d,e,f...' என்று கடகடவென்று ஒப்பிக்கிறார்.
அடுத்த நாள் வகுப்பில் ஒவ்வொரு மாணவருக்கும் அருகில் செல்கிறார். மாணவர் முழு வேகத்தில் அடி வயிற்றிலிருந்து குரலெழிப்பி வாந்தி எடுக்கிறார். வந்து விழும் வாந்தியைப் பார்த்து,'a,b,c,d,e,f.. அருமை..' என்று உச்சி பாராட்டுகிறார். இப்படியே ஒவ்வொரு மாணவராக வாந்தியெடுக்கின்றனர். கணிதம், அறிவியல்..என்று எல்லா பாடங்களுக்கும் இந்த புனல்,வாந்தி..பயிற்றுமுறை தொடர்கிறது. எல்லா பாடங்களையும் பவுன்குஞ்சால் மட்டும் வாந்தி எடுக்க முடியவில்லை. ஆசிரியர் அவனை திட்டுகிறார். அடிக்கிறார். ஆனால், பவுன்குஞ்சு தன் சுய புத்தியால் கேட்கும் கேள்விகள் ஒன்றுக்குக் கூட ஆசிரியரால் பதில் சொல்ல முடியவில்லை. இப்படி மிக எளிமையாகக் காட்சிப்படுத்தப்பட்ட நாடகம், சொல்ல வந்த சேதியை பார்வையாளர்களின் மனதிற்குள் எளிதாகக் கொண்டுசேர்த்தது. 'பாடத்திட்டத்திலும், கற்பிக்கும் முறையிலும்தான் தவறு இருக்கிறதேயன்றி கற்றுக்கொள்ளும் எங்கள் புத்தியில் இல்லை' என்ற இறுதி முடிவோடு சுமார் ஐம்பது நிமிடங்கள் இசையும், பாடலுமாக நடந்து முடிந்தது.

அடுத்து இரவு 12.30 மணிக்கு 'பயணம்' என்ற இரண்டாவது நாடகத்தை தரையேற்றியது சென்னை வீதி நாடகக் குழு. அது வீதி நாடகத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிந்ததால், குழுவினர் அனைவரும் மேடைக்குக் கீழே வந்துவிட்டனர். அவர்களை சுற்றி நின்றதுபோக, பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் மேடைக்குச் சென்றுவிட்டனர். ஒலிபெருக்கியின்றி, வெறும் குரலுடனேயே நாடகம் நகர்ந்தது.
வறட்சி, வேலையின்மை என்று காலத்தின் கொடிய கரங்கள் துரத்துவதால் கிராம மக்கள், நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கின்றனர். நகர்மயமாதலின் விளைவாக அனைத்துவிதமான வேலை வாய்ப்புகளும் நகரங்களுக்கே செல்கின்றன. இன்னொரு புறம் கிராமத்தின் சாதி கொடூரங்களிலிருந்து ஓரளவிற்கு விடுபட, கல்வி,வேலைவாய்ப்பு பெற்ற தலித்துகளின் இரண்டாம் தலைமுறையினர் நகரங்களுக்கு இடம் பெயர்வது தவிர்க்க இயலாததாகிவிட்டது. இப்படி சொந்த நாட்டின் அகதிகளாய், 'பொறக்குறது ஒரு ஊரு..பொழைக்கிறது ஒரு ஊரு' என்று புலம் பெயர்ந்து வருபவர்கள் அனைவருக்கும் நகரம் நேசக்கரம் நீட்டுவதில்லை. அதிலும் பகட்டின்றி, பவுடர் பூச்சின்றி பிழைக்க வரும் எளியவர்களை எல்லா திசைகளிலும் நகரம் துரத்தியடிக்கிறது.
சென்னை வீதிகளை நாளைக்கு நான்கு முறை கடந்து செல்லும் நம்மில் எத்தனை பேர் அந்த பிளாட்பார வாசிகளின் துயரங்களை உணர்கிறோம்..? கடந்த வருடம் அடித்துக்கொட்டிய பேய் மழையில் அவர்கள் எங்கே இருந்திருப்பார்கள்..? கொஞ்சம் நெருங்கிச்சென்று விசாரித்தால், அவர்களுக்கான பூர்வீகம் உங்கள் கிராமத்திற்கு அருகிலோ அல்லது உங்கள் கிராமமாகவோ இருக்கக்கூடும். இப்படி இடம் பெயர்ந்து வரும் சில கிராம வாசிகளை நகரத்தின் மைந்தர்கள் எப்படியெல்லாம் எதிர்கொள்கின்றனர் என்பதுதான் பயணத்தின் கதை. போலீஸ், அரசியல்வாதிகளின் கொடூர அதிகார முகங்கள்..தாதாக்களின் தர்பார்.. என்று சின்னாபின்னாப்படுகிறது் அவர்களின் வாழ்க்கை.

ஒரு ரவுடி காசு வாங்கிக்கொண்டு ஒரு புறம்போக்கு நிலத்தில் குடிசைப் போட்டுக்கொள்ளச் சொல்கிறான். அவர்களும் நம்பி குடிசை அமைக்கின்றனர். இறுதியில் ஒரு அரசியல்வாதி வந்து எல்லாக் குடிசைகளையும் எரித்துவிடுகிறான். எரியும் குடிசைகளுக்கு பின்னணியில் ஒரு பெண்ணின் குரல் ஒலிக்கிறது..'வேண்டுமம்மா ஒரு குடிசை...வேண்டுமம்மா ஒரு நிழல்..'. மொத்தக் கூட்டத்தையும் அந்தப் பெண்ணின் குரல் கட்டிப்போட்டது.(சென்னையின் பள்ளியொன்றில் இசை ஆசிரியையாக வேலைப் பார்ப்பதாக அறிமுகப்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் பெயர் மறந்துவிட்டது). அந்த பின்னிரவில் மைக் எதுவுமின்றி அவர் பாடிய பாடல்கள் பார்வையாளர்களை அறிவுக்கு அப்பாற்பட்ட உணர்வு நிலைக்குக் கொண்டுசென்றன. 'ஊரும் விலகுது...உறவும் விலகுது..தந்தனா..' என்று தொடங்கி பெருஞ்சோகத்தை தன் குரலில் படரவிட்டார். நாடகம் முழுக்க இடையிடையே வந்த 'நகரதேவன்' என்ற பாத்திரம் உண்மையிலேயே சிறப்பு. திடீர், திடீரென ஓடிவந்து லாவணிக்கச்சேரிப் பாடல்கள் மாதிரி நகரத்தின் இயல்புகளை பாடல்களால் விளக்கிவிட்டு ஓடினார். நாடகம் முடிவுற்றபோது நேரம் பின்னிரவு 2.30 மணி. மொத்தக் கூட்டத்தினரும்் கனத்த மனதோடு கலைந்து சென்றனர்.
வீதி நாடகங்களுக்கான சரியான மாற்றை வேறு எதாலும் தர முடியாது. தன் வீட்டு வாசலில் தன் பிரச்னையை ஒரு கலை பேசும்போது அதன் மீது அவனுக்கு ஈர்ப்பு வருவது இயல்பானது. இந்த வடிவத்தில் பார்வையாளன், பார்வையாளன் மட்டுமல்ல..பங்கேற்பாளனும் கூட. பாத்திரத்துக்கும், பார்வையாளனுக்குமான இடைவெளி என்பது வீதி நாடகங்களில் மிகக்குறைவு. 'என் வாழ்க்கையை, என் அரசியலை, என் மேன்மையை, என் அசிங்கத்தை பேசுவதற்கு யாருமே இல்லையா..?' என்று இங்கு லட்சக்கணக்கான எளியவர்களின் மனதிற்குள் தீராத கேள்வியொன்று வெகு நாட்களாய் கனன்றுகொண்டிருக்கிறது. அதை கேள்வியாக்கி மக்களிடம் எடுத்துச் செல்பவை வீதி நாடகங்களே. குளிரூட்டப்பட்ட அரங்கிற்குள், நான்கு சுவர்களுக்குள் நிகழ்த்தப்படும் கலைகளால் யாருக்கும் பயனில்லை.
|