ஆமாம். ஆச்சரியமாக இருக்கிறதா? எச். ஐ.வி எனப்படும் வைரஸ் தற்போது இருக்கும் சுமார் 20 வித மருந்துகளுக்கும் போக்கு காட்டிக்கொண்டு இருக்கிறது. இப்போது ஒரு புது மருந்து வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அந்த மருந்து நம் உடம்புக்குள்ளேயே இருக்கிறது என்பதுதான் விந்தை.
செல் என்ற அறிவியல் இதழில் அண்மையில் வெளிவந்திருக்கும் கட்டுரையின்படி, நம் உடலில் இருக்கும் ஒரு நொதியிலிருந்து (enzyme) உடைந்த துண்டு ஒன்றுதான் இந்த மருந்தாக வாய்ப்புள்ளது. இது ஒரு 20 அமினோ அமிலங்கள் (amino acids) இணைந்த ஒரு சின்ன சங்கிலி. பெப்டைடு (peptide) என்று சொல்வார்கள். இந்த சங்கிலிக்குப் பெயர் VIRIP, அதாவது virus inhibitory peptide என்பதன் சுருக்கம். இது alpha-1-antitrypsin என்ற நொதியின் ஒரு துண்டு. இதுதான் அந்தத் துண்டு: LEAIPMSIPPEVKFNKPFVF. இதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் ஒரு அமினோ அமிலத்தைக் குறிப்பது. நம் உடம்புக்குள் இருக்கும் பல புரதங்களும், நொதிகளும் எப்போதும் முழுதாகவே இருப்பதில்லை. முழுதாக இருந்தால் ஒரு வேலையையும், துண்டாக இருந்தால் இன்னொரு வேலையையும், துண்டு-துண்டு-துண்டாக இருந்தால் வெவ்வேறு வேலைகளையும் செய்யும் அதிசயமானவை. அப்படி ஒரு துண்டுதான் இந்த VIRIP. இது என்ன செய்கிறது தெரியுமா? எச்.ஐ.வி கிருமி நம் உடம்புக்குள் இருக்கும் வெள்ளையணுக்களைத் தாக்க வந்து ஒட்டும்போது gp41 என்ற புரதத்தை நீட்டுகிறது. இந்த gp41 புரதம் சாதாரணமாக வைரசின் உறைக்குள் புதைந்திருந்து, ஒட்டும்போது மட்டும் வெளிவரும். அப்படி வெளியே நீளும்போது VIRIP சென்று இந்த gp41 உடன் ஒட்டிக்கொண்டு, வைரஸ் சென்று வெள்ளையணுவோடு ஒட்டாமல் தடுக்கிறது. இப்போது வைரசால் நம் அணுக்களைத் தாக்க முடியாதல்லவா?
இந்த VIRIP சங்கிலியைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இன்னும் வலிவுள்ளதாகவும் செய்திருக்கிறார்கள். இதனை முன்வடிவாகக் கொண்டு இனி மருந்துகளைச் செய்ய முனைவார்கள். இதுவரையில் இருக்கும் மருந்துகளை விட இது வித்தியாசமான வேலையைச் செய்யக்கூடியது, அதான் அந்த gp41 உடன் ஒட்டுவது.
இதனைக் கண்டுபிடித்தவர்கள் செருமானிய ஆராய்ச்சியாளர்கள். முழுசாப் படிக்க இங்கே
அதுல தெரியலன்னா,
இங்கே
அடுத்து என்ன செய்யலாம்னு நா யோசிக்கிறேன்னா, இந்த VIRIP எந்தெந்த மருந்துகளால நம்ம உடம்புலயே தூண்டப்படுதுன்னு பாக்கலாம். நாட்டு மருந்துகள்கூட இந்த வேலையைச் செய்யலாம். அப்படிச் செய்யுமானால் உள்ளுக்குள்ளேயே உடம்பு இதைத் தயாரிக்கும், வெளி மருந்து எதுக்குங்குறேன்!
http://bhaarathi.net/sundara/?p=311
|