கடைசியாக எப்போது மழையை இரசித்தேன்?
நினைவில்லை.
கருநிறக் காளானென தெருவெங்கும்
ஆங்காங்கே முளைத்திருக்கும்
குடைகளின் விளிம்புகளிலிருந்து
வெண்பனித் துகள்களாய்..
சரம் சரமாய்..
மழைநீர் கோர்த்துத் தொங்குவதை,
தார்ச்சாலைகளில் விழுந்து தெறிப்பதை
கடைசியாக எப்போது விழிவிரியப் பார்த்திருந்தேன்?
அதுவும் நினைவில்லை.
இன்றும் மழைபெய்தது.
உச்சந்தலையில் தென்னைமரக் கொண்டையிட்டலைந்து,
வீட்டுமுற்றத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில்
காகிதப் படகு விடவென
கொப்பித்தாள்களைக் கிழித்து
அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட நாட்களில் பெய்த
அதே மழை..,
மறுபடியும் இன்று.
இப்போதெல்லாம்..,
என் கண்களுக்கு எதுவுமே தெரிவதில்லை
எதிர்ப்படும் மனிதர்கள்,
தெருவில் கடந்து போகும் வாகனங்கள்,
கோவில் வாயிலில் ஒதுங்கியிருக்கும் பிச்சைக்காரர்கள்,
சிறுவர்கள், முதியவர்கள்,
வானம் வெடித்துப் பெய்யும்
பெருமழை...
என எதுவுமே
சிந்தனையின் கனத்த திரைகள்
என்னைப் பார்வையற்றவளாக்கி விட்டன.
விழிகளுக்கும் மூளைக்குமிடையே
பார்வை நரம்பின் குறுகிய வளைவொன்றினுள்
சிந்தனை சிறைப்பட்டிருந்து
என் விழிகளைக் குருடாக்கிப் போனது.
அன்றேல், யார் கண்டார்?
சிந்தனையின் பதுங்கு குழிகளுள்
விம்பங்களினின்றும் வெளிப்பட்ட மின் அதிர்வுகள்
தேங்கிக் கிடக்கின்றனவோ என்னமோ...
சிந்தனை ஒரு சாபக்கேடு
சவக்கிடங்கு
சாத்தானின் ஆயுதம்.
சிந்தனை என் செவிப்பறையைத்
துளைத்திருந்ததெல்லாம் பழங்கதை.
வெள்ளை இயந்திரங்கள் பறித்தெடுத்த மகனைத் தேடி
தெருக்கள் வழியே ஓடித்திரிந்த
கிழவியின் ஓலம்..
கருநிற மிருகமொன்று அப்பாவின் உயிர்விழுங்கக் கண்ட
குழந்தையின் கேவல்..
பூட்ஸ்களின் தடதடப்பு,
உறுமல்கள், நெறுமல்கள்..
எதுவும் என்னை அசைத்துவிட முடியாது,
இன்று.
ஏனெனில்,
என் காதுகள் செவிப்புலனை இழந்து - இப்போது
நாட்களாகின்றன.
சிந்தனை ஒரு சாபக்கேடு
சவக்கிடங்கு
சாத்தானின் ஆயுதம்.
பேசும் திறனை எப்படி இழந்தேன்
என்பது பற்றி
நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை
மௌனித்திருக்கிறேன் - அல்லது
மௌனித்திருக்க விதிக்கப்பட்டிருக்கிறேன்
என்பதற்காய்
நடந்தவையெதுவும் இல்லையென்றாகிடுமா..
அல்லது, நடக்கவே நடக்காததெதுவும்
நடந்துதான் விடுமா..
சிந்தனை என் நாவின் மீது
உறைபனியெனப் படிந்து, இறுகி
அதனைச் செயலற்றதாக்கிற்று.
இனியும், அது குறித்துப் பேச
நான் பிரியப்படவில்லை.
சிந்தனை ஒரு சாபக்கேடு
சவக்கிடங்கு
சாத்தானின் ஆயுதம்.
பேசுதல், கேட்டல், இப்போது பார்த்தலென
அனைத்தையும் இழந்துவிட்ட பின்னும்,
தொலைதூரத்திலுள்ள
இலக்கற்ற புள்ளியொன்றை நோக்கி
முடுக்கிவிட்ட பொம்மை போல
தொடர்கிறதென் பயணம்...
ஆம்,
இப்போதும் என் கண்களுக்கு
எதுவுமே தெரிவதில்லை தான்.