இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தொகுப்பாளரின் மேசையிலிருந்து Print E-mail
ஆசிரியர் குழு   

ஒவ்வொரு மனிதருக்கும்  உணர்வு அல்லது உடற்பூர்வமாக, தான் சார்ந்திருக்கும் சமூகத்தினைக் குறித்த தொடர்ந்த சிந்தனையும், அதனோடு இணக்கம் கொண்டு அதன் குறை நிறைகளில் உடனிருந்து இயைந்து செல்கின்ற தன்மையும் இருக்க வேண்டியது அவசியம். தன்னையும், தன் குடும்பத்தையும் மட்டுமே சுற்றி ஒரு வாழ்வை வடிவமைத்துக் கொள்வதும், அத்தகைய வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளக் கைக்கொள்ளும் கலை, அறிவியல், நுட்பங்கள், ஆன்மீகம் யாவுமே அற்பமானவையே. தனிமனித சுகங்களை மட்டுமே மையநோக்காகக் கொண்டு உருவாக்கப்படும், துய்க்கப்படும் எதனையும் ஒரு சமூகம் புனிதமென்றும் உயர்வென்றும் கொள்ளுதல், மனிதர்களை ஒருவரிடமிருந்து மற்றவரைப் பிரித்துப் பின்னப்படுத்தி ஒற்றுமையையும், ஒத்திசைவையும் குலைத்துவிடும். ஊர்க்குளம், ஊர்க்கிணறு என்று இருந்த நிலைகள் மெல்ல மாற்றம் பெற்று தன் வீட்டுக் குழாய், தனக்கான தண்ணீர் போத்தல் என்ற சுய-மைய வாழ்நிலைக்கு யாவரும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு பகற்பொழுதில் தெருவோரத்தில் சந்திக்கும் இருவர், இருவருக்கும் பொதுவான வாழ்வியல் உரையாடலைச் சட்டென்று தொடங்க முடிகின்றதைப் பார்த்திருக்கிறோம். இது கிராமங்களில் இயல்பாய் நிகழ்வது. நிகழ்வுகளின் குறைந்த எண்ணிக்கை என்பதில் அடங்கிவிடாமல், பொதுவான நிகழ்வுகள் நிரம்பியது என்பதே இங்கு முக்கியம். ஆனால் இத்தகைய பொது உரையாடல்களின் தளம் இப்போது எங்கே இருக்கிறதென்று தேடவேண்டும். தேடினால் கிரிக்கெட் ஸ்கோர் கிடைப்பது வேறு கதை. இப்படியாக, பொதுவான உணர்வுகளும், உரையாடல்களும், கேள்விகளும், பகிர்தல்களும், போராட்டங்களும், விடைகளும், களிப்புகளும் கிட்டத்தட்ட தேய்ந்து மறையும் நிலைக்கு வந்துவிட்ட ஒரு சிதறுண்ட சமூக அமைப்பை நோக்கி நகர்கின்றோம். முடிவில்லாத ஆசைகளினூடே பயணிக்கும் மனது, தன் சொந்த வாழ்வில் இதுவரை கிடைத்திருக்கும் சுகங்களினால் நிறைவடையாது, மேலும் மேலும் தன்னை போகங்களால் நிரப்பிக்கொள்ளத் துடித்து, தனது ipodஐ காதில் திணித்துச் சூழ்நினைவின்றி நடந்து போகிறது. இத்துடிப்பில் தானிருக்கும் சமூகத்தின் அலறல்களோ, அழுகைகளோ, கூப்பாடோ, கேளிக்கையோ ipodஐத் தாண்டி எதுவும் கேட்பதில்லை. இந்தத் துய்மனம், நேரத்துக்குத் தகுந்தாற்போல் தனிமனிதக் கவிஞர்களுடனும், வக்கீல்களுடனும் கூட்டு சேர்ந்துகொள்ளும்; அல்லது தன் துய்ப்புக்கு ஏற்ற கூட்டத்தினரோடு சமூகமாகித் தன் கட்சியின் பாட்டைப் பாடும். இவ்வாரப் பூங்கா இதழில் நுகர்வியம் குறித்த பல சிந்தனைகளைத் தூண்டிவிடும் நல்ல படைப்புகள் இடம்பெற்றுள்ளன. நட்சத்திர வாரத்திற்காக அசுரன் எழுதிய "ஐந்திலக்கச் சம்பளத்தில் எச்சில் பருக்கை" மற்றும் "சில்லறை வணிகம் எனும் பெருங்காதை" ஆகிய இடுகைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். தங்கவேல், தென்றல் ஆகியோரது இடுகைகளும் இத்தகைய பொருளைத் தொட்டு நிற்பவையாகவே இருக்கின்றன.

தமிழ் மொழியினைக் குறித்த உண்மைகளை, பெருமைகளைச் சொன்னவர்களில் மேலைநாட்டவர்களின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. அத்தகைய ஒருவர் கால்டுவெல். அவரது வாழ்வினைக் குறித்த அரியதொரு கட்டுரையை செந்தழல் ரவி இட்டிருக்கிறார். இதனையொட்டி தியாகுவின் தமிழிசை குறித்த பதிவு, இன்னும் அதிகமான ஆதாரங்களோடு தமிழிசையின் உ(ய)ரிய இடத்தினைப் பற்றிச் சொல்கிறது. இப்பதிவை, சில வாரங்களுக்கு முன்னர் தொடராக வந்த முனைவர் திருமுருகனின் தமிழிசை உரையோடு தொடர்புபடுத்தி அவதானிப்பது, தமிழிசையைப் பற்றிய புரிதலை மேம்படுத்த உதவலாம்.

விடுதலை என்பது அரசியலையும், அவ்வரசின் பரப்பு, நோக்கங்கள் என்பவற்றையும் தாண்டியதாக இருக்கவேண்டும். ஒரு அரசு, தன் விடுதலையை ஒரு மாதிரியாகவும், பிற நாட்டின் விடுதலையை வேறு மாதிரியாகவும் நடத்துமானால் அது இரட்டை வேடமென்றுதான் பொருள்படும். விடுதலைப் போராட்டக் கதைகளைப் படிக்கும்போது தனது நாட்டினது என்றால் பரவசப்படும் உள்ளங்கள், மாற்றாரது விடுதலை வேட்கையைக் குறித்து மௌனம் கொள்வது விந்தையானது. இத்தகைய முரண்பாடுகளில் ஒன்று சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களைப் போற்றுதலும், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் குறித்து மௌனித்திருத்தலும். சர்வதேசத்தின் தொடர்ந்த மௌனங்கள் எண்ணற்றோரைப் பலிகொண்டிருக்கிறது. நேற்று ஸ்ரீலங்காவில் இன்னொரு பத்திரிகையாளனும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறான். கையறுநிலையினை ஒத்த ஒரு நிலையிலிருக்கும் நிவேதாவின் கவிதையும், திரு, சந்திரன், கறுப்பியின் பதிவின் கடைசி வரி ஆகியன ஈழத்தினைப் பற்றி அறிய ஓரளவேனும் துணைசெய்யும்.

மதம் எவ்வாறு பரிணமித்திருக்கிறது என்பதற்கு மாயனின் பதிவும், ஆத்திகத்தைப் பற்றிய கோவி.கண்ணனின் பதிவும், மதம் எவ்வாறு சாதியினைக் கைக்கொண்டிருக்கிறது என்பதற்கு நிர்மலின் பதிவும் நல்ல உதாரணங்கள். சமூகத்தின் தொடர்பில் பெண்களுக்கான விடுதலையைப் பற்றிய ஆசிப் மீரானின் பதிவும், இளந்தலைமுறை மாணவர்கள் தகவலறியும் மசோதாவின் மூலம் சாலைக் கட்டுமானத்தைச் சீரமைக்கத் தூண்டிய மங்கையின் பதிவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பதிவர்களின் தொடர் விளையாட்டில் தன் ஆழ்மனத்து விந்தைகளைத் தனக்கேயுரிய கவிமொழியிலும், கதைமொழியிலும் செல்வநாயகி வரைந்திருக்கிறார். 

வலைப்பதிவுகளை வாசிக்கும் பலரையும் தாங்கள் அவ்வாரத்தில் ரசித்த, பயனென்று கண்ட பதிவுகளைப் பற்றிப் பதிய வாரம் ஒருவராக அழைக்க இருக்கிறோம். இவ்வாரம் துவங்கும் "தமிழ்மணம் வாசிப்பில்" என்ற இப் புதிய பகுதியில் மலைநாடான் தான் ரசித்த பதிவுகளைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு வேளை தவறவிட்டவர்களுக்கு இப் புதிய பகுதி பயனாகவிருக்கும்.இதில் கலந்துகொண்டு தாம் விரும்பிய பதிவுகளைப் பற்றி எவ்வாரத்திலேனும் எழுத ஆர்வமுள்ள பதிவர்கள் எங்களைத் தொடர்பு  கொள்ளலாம். 


  இவற்றைத் தவிர, புகைப்படங்கள், அறிவியல் செய்திகள், இணைய நுட்பம், வாசிப்பனுபவம், சிறுகதையொன்று என, படித்து முடித்ததும் சிந்தனைகளை ஆர்த்தெழச்செய்ய ஒரு தூண்டுகோலாக வருகிறது இவ்வாரப் பூங்கா. 

 

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)