அமலாக்கப் படும் எந்த ஒரு சட்டமும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே இயற்றப் பட்டாலும், போதிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் அதை சரிவர உபயோகிக்க முடியாமல் போகிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு தேவை. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல தொண்டு நிறுவணங்கள் இன்று களத்தில் இறங்கியுள்ளது. விழிப்புணர்வுடன் சேர்ந்து இன்று நமக்கு தேவை சமுதாய முன்னேற்றப் பணிகளில் அக்கறை, நம்மைச் சுற்றி நடப்பனவற்றில் கவனம்.
மேலே கூறிய சமுதாய பொறுப்பை உணர்ந்து சில ஐஐடி மாணவர்கள், இங்கு தில்லியில் இந்த சட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கிறார்கள். தில்லியில் உள்ள சில முக்கிய சாலைகள் (ரிங் ரோடு, NH-10, NH-24) சரி வர பராமரிக்கப்படாததால், தினமும் அந்த சாலை வழியே வரும் ஐஐடி மாணவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் 46 விண்ணப்பங்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். சாலை இடப்பட்ட சில தினங்களுக்குள் ஏன் அதில் வெடிப்புகளும், குழிகளும் ஏற்படுகின்றன?, பராமரிப்புச் செலவிற்காக ஒதுக்கப்பட்ட தொகை (சுமார் 420 கோடி), சாலை இடப்பட்ட பின் நடத்திய ஆய்வு ரிப்போர்ட் ஆகிய தகவல்களை கேட்டு இந்த மாணவர்கள் விண்ணப்பங்கள் தாக்கல் செய்துள்ளனர்.
அரசு செய்து முடித்த வேலைகளை ஆய்வு செய்யவும் இந்த சட்டம் உதவுமாதலால், இந்த சாலைகளின் தரத்தை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
சுவாதி என்ற ஒரு மாணவி தாக்கல் செய்த ஒரு விண்ணப்பத்தின் பயனாக, சில மாணவர்களும், அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு பொறியாளரும் இந்த சாலையை ஆய்வு செய்தார்கள். இவர்கள் ஆய்வு செய்யப் போவதை அறிந்து, இரண்டு நாட்களுக்கு முன் சாலை பராமரிப்பு பணிகளை துவங்க உத்தரவிட்டனர் அதிகாரிகள்.
இளைய சமுதாயம் இது போல பொறுப்புடன் நடந்து கொள்வது மன நிறைவைத் தருகிறது. நம் சமுதாய அக்கறையை ஒரு முறை சுய பரிசோதனை செய்யத் தூண்டும் ஒரு செயல்பாடு. இவர்களைப் போல ஒவ்வொரு மாணவரும் சிந்தித்தால் ஆரோக்கியமான ஒரு சந்ததி உருவாகும் என்பதில் ஐயம் இல்லை.