தீராநதி மே இதழில் எதார்த்த இயக்குநர், அமீர் அவர்களின் பேட்டி(நன்றி : மோகன்தாஸ்) வெளிவந்துள்ளது. அதில் கவிஞர் கடற்கரய் கேட்ட கேள்விகளும், இயக்குநர் தந்த பதில்களும்...
////தீராநதி: விளிம்பு நிலை மக்களான அரவாணிகளை ஒரு இசைக் கலைஞர்களாகவே காட்டி இருக்கிறீர்கள். அது வரைக்கும் அது பெருமிதம் கொள்ளத் தக்கது. ஆனால் நீங்களும் அதில் சில இடங்களில் 'சின்னத் தனமான' வார்த்தைகளை எழுதி இருக்கிறீர்களே ஏன்?

இங்கே கடற்கரய்யின் கேள்வியே அடிப்படையில்ல் தவறு. காட்சிப்படி அதில் வரும் திருநங்கைகள் யாரும் இசைக்கலைஞசர்கள் கிடையாது. பொதுவாக, இசைக்கலைஞசர் என்று யாரைக் குறிப்பிடுவோம் என்றால் குரலிசைப்பவர்களையோ, வாத்திய கருவி வாசிப்பவர்களையோ கூறலாம். ஆனால், காட்சிப்படி வயதான கிராமிய பாடகி ஒருவர் பாட அய்ந்தாறு கரகாட்டக்கலைஞசர்கள் (ஒரு ஓரத்தில் கண்ணியமாக)ஆட, கூட சேர்ந்து, டப்பாங்குத்து ஆடுபவர்களே இப்படத்தில் வரும் திருநங்கைகள். அதாவது இவர்கள் தொழில்முறை (professional) பாடகர்களோ, வாத்தியக் கருவி வாசிப்பவர்களோ கிடையாது. அப்படி இருக்க, இதில் திருநங்கைகளை இசைக்கலைஞசர்களாக காட்டப்படுகிறார்கள் என்பது "கேப்பவன் கேனைன்ன எரும மாடு ஏரோப்ளேன் ஓட்டு" ங்கற கதையால்ல இருக்கு!!
இதே மதுரையில் ப்ரொபசனல் கரகாட்டக் கலைஞசர் மதனம்மா என்னும் திருநங்கையும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை முறையாக பயன்படுத்தியிருந்து, அவர்களை கலைஞசர்கள் என்று சொன்னாலாவது பொருத்தமாக இருக்கும். ஆனால், இலக்கியவாதிகளுக்கு ரெக்கார்ட் டான்ஸர்களூம் கலைஞசர்களாகவே தெரிவதால் நாமும் அதனை ஏற்றுக் கொள்வோம்.
/////அமீர்: அது மாதிரி ஏன் வைத்தேன் என்றால், அவர்கள் நிஜத்தில் அப்படித்தான் பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள். அதனால் அதை வைத்தேன். அதை வைத்து காசு பண்ண வேண்டும் என்பதற்காக அதை நான் செய்திருந்தால் அது தவறு. நான் அப்படிச் செய்யவில்லை. ////
அவர்கள் நிஜத்தில் அப்படித்தான் பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள். அப்படியா அமீர், அப்படியென்றால் நிஜத்தில் மதுரை மண்ணின் மக்கள் (நீங்கள், உங்கள் நாயகன், நாயகனின் வழித்தோன்றல்கள் உட்பட) திருநங்கைகள் மீது கட்டவிழ்க்கும் ஒடுக்குமுறை, பாலியல் வன்முறை இவையெல்லாம் நிஜம் இல்லையா? அல்லது தங்களது புனிதக்காமாளை கண்களுக்கு இதுகாறும் இந்த நிஜங்கள் எதுவும் புலப்படவில்லலயா? மகா சண்டியனா நாயகன் திருநங்கைகள் மீது இத்தகைய வன்முறை செய்பவனாக காட்டவேண்டியது தானே? அதுவும் தானே நிஜம், அதில் காட்ட வேண்டியது தானே உங்கள் நிஜத்தை!!
ஒருவேளை, திருநங்கைகள் மேல் பொதுமக்கள் செலுத்தும் சொல் வன்முறை பாலியல் வன்முறை, இவற்றையெல்லாம் தாங்கள் கண்டிருக்கவோ, கேட்டிருக்கவோ மாட்டீர்கள். வேண்டுமென்றால், நான் கடந்து செல்லும் பாதையில் பத்து வயது வாண்டுகள் கூட உங்களது எதார்த்த கிராமிய இசையை ரசித்து பாடி என் முகத்தில் சிறுநீர் கழிப்பதைக் பார்த்து விட்டாவது தங்களின் எதார்த்தத அறிவை வளர்த்துக் கொள்ளுங்களேன். ஆனால், எங்களுக்கோ இத்தகைய பாடல்களும், ரசிகர்களின் கலைவெறி கூத்தும் புதியதில்லை. இன்னும் மூனு மாசம் போனா வேறொரு படம், வேறொரு பாட்டு, வேறொரு அனுபவம், உங்களுக்கும் வேறொரு வெற்றி, வேறொரு பேட்டி, கேள்வி, பதில் etc.,
சரி அப்படி நிஜத்தைத்தான் எதார்த்தமாக காட்டுவேன் என்ற பிடிவாதம் இருந்தால், உங்கள் துறை சார்ந்தே எத்தனை எத்தனை அசிங்கள் இருக்கின்றன!! அதை படங்களில் காட்டவேண்டியது தானே? அங்கே நிருப்பிக்கவேண்டியது தானே உங்கள் எதார்த்தம் மீதான காதலை?! இளைத்தவர்கள் (அலிகள்)தான் உங்கள் எதார்த்ததின் கைத்தடியா?
இங்கே, எதார்த்தம் என்னும் போது இன்னொன்றையும் குறிப்பிட வேண்டியுள்ளது, எதார்த்ததின் மீது இத்தனை காதல் கொண்ட தாங்கள் பாடல் காட்சியில் நான்கு (மேற்படி சின்னத்தனமான வசனம் பேசுபவர் உட்பட)ஆண்களுக்கு அலிவேடம் போட்டு ஆடவைக்க வேண்டிய தேவையென்ன? எதார்த்தம் மீதான தங்களின் அக்கறை அப்போது எதை மேயச் சென்றுவிட்டது?

குடும்பம், சமூகம், அங்கீகாரம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு என எல்லா கதவும் சாத்தப்பட்டு, புறக்கணிப்பின் எல்லையில் நின்று வாழ்க்கையை ஓட்டும் திருநங்கைகளின் நிர்வானத்தின் மீது தங்களின் ஆதிக்க/நாகரீக மதிப்பீட்டின் மலஜலத்தை மறைமுக களித்துவிட்டு, அவர்களின் அம்மணத்தில் மீதேறி ஆனந்த நர்த்தனமாடி கலையை வளர்க்கிறார்கள் இக்கலையுலக சேவகர்கள். அன்றைய "கோடான கோழி கூவுற வேலை', முதல் இன்றைய "தலைப்பு செய்தி வாசிப்பது கிரிஜாக்கா, கோமளம்" வரை திருநங்கைகள் மீதான இந்த திரை கற்பழிப்புகளுக்கும் முன்வைக்கப்படும் ஒரே சப்பைக் கட்டு இந்த "எதார்த்தவாதம்" மட்டுமே. அதையே இந்த மரபுமீறியும் வழிமொழிகிறார். வாழ்க எதார்த்தம்!

/////// தீராநதி: சரி, நிஜத்தில் இருக்கிறதைச் சொல்லி இருக்கிறேன் என்கிறீர்கள். ஆனால் பொதுவாக நிஜத்தில் அப்படி இருந்தாலும் பொதுத் தளத்திற்கு அது வரும் போது 'எடிட்' பண்ணித்தான் சொல்ல வேண்டும் என்ற ஒரு மனோபாவம் இங்கு இருக்கிறது. அப்போது நிஜத்தில் இருப்பதை 'எடிட்' செய்யாமல் அப்படியே காட்டலாம் என்கிறீர்களா?
அமீர்: நீங்கள் கேட்ட கேள்வி நியாயமான கேள்வி. சமூகத்தில் அப்படி இருக்கிறது என்பதற்காக பட்டவர்த்தனமாக ஒரு விஷயத்தை அப்படியே சொல்லிவிட முடியாது. சொல்லவும் கூடாது. ஒரு படைப்பாளியின் முக்கியமான பொறுப்பு அது. படைப்பாளி என்பவன் பொது மக்களின் பிரதிநிதியாகி விடுகிறான். அப்படி பிரதிநிதியாகிவிடும்போது, அவன் மக்களுக்குச் சொல்லக் கூடிய விஷயம் நல்ல விஷயமாகத்தான் இருக்க வேண்டும். நான் பட்டவர்த்தனமாகச் சொல்லவே இல்லை. நான் அப்படி பட்டவர்த்தனமாகச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் நான் அதில் கொஞ்சம் 'எடிட்' செய்துதான் சொல்லி இருக்கிறேன். //////
பொன்வண்ணன் ஆரம்ப பாடலில் திருநங்கைகளைப் பற்றி கூறும் போது "என்னையா இது கோமாளிங்கலாட்டம்", மேற்படி பணம் பண்ணும் நோக்கமின்றி எதார்த்தமாக எடுக்கப்பட்ட பாடலில் வரும் "நைட்டெல்லாம் மைக் புடிச்சிட்டு இருந்தேன்", "என்ன நாயனக்காரரே! வாயுல வச்சு ஊதவேண்டியதுதானே, நீங்க ஊதுறிங்களா, இல்ல நான் ஊதவா?" என ஏற்ற இறக்கத்துடன் பேசி வசனங்களும் பலநிலை எடிட்டுகளை கடந்து வந்ததுவா!!
ஆத்தே!! எடிட் செய்ததே இப்பிடியா? அப்ப நான்தான் அவசரப்பட்டு வார்த்தைய அள்ளி வீசிட்டனா? அய்யய்யோ உங்க உத்தம மனசு தெரியாம பேசிபுட்டேன் மன்னிசிடுங்கப்பு.
"அலிகளின் மானம் காத்த எங்கள் எதார்த்த வீரன், சூரன், திரைக்கடவுளுக்கு, அலிகளின் மானம் காத்தமைக்கு நன்றிக்கடனாக, நிர்வானத்தின் போது சிந்தும் எங்களின் ரத்தத்தை காணிக்கையாக்குகிறோம்!!
*நிர்வானம் : பால்மாற்று அறுவை சிகிச்சையின் மரபு வடிவம்.