தற்கொலை தீர்வல்ல என்ற விளக்கத்துடன் உயிர் - திரைப்படம் ஆரம்பமாகிறது. ஆனால் திரைக்கதை இக் கருத்தைப் பிரதானமாகக் கொள்ளாமல், அண்ணி தனது மைத்துனன் மீது காமம் கொள்வதையே மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கதையின்படி, அண்ணி தனது கணவனிடம் திருப்தியான உடல் உறவை அனுபவிக்கவில்லை. இயக்குநர் இதனை நேரடியாகத் தெரிவிக்காமல், துண்டுதுண்டாக இரட்டை அர்த்த வசனங்கள், பின்னணிப் பாடல்கள் மூலம் மறைமுகமாகத் தெரிவிக்கிறார். இங்கு பிரச்சினை இதுவல்ல. திறமையாக அமைக்கப்படும் திரைக்கதை மூலம் செய்யப்படும் மோசடியே இங்கு கவனத்திற்குரியது.
கலாபக்காதலன், உயிர் திரைப்படங்கள் வருவதற்கு முன்பு வெளியான படங்கள் வாலி, ஆசை. இத் திரைப்படங்களிலும் முறையே அண்ணன் தம்பி மனைவி மீது ஆசைப்படுவதாகவும், அத்தான் மனைவியின் தங்கை மீது ஆசைப்படுவதாகவும் திரைக்கதையிருந்தது. தமது ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக கொலையும் செய்யக்கூடியவர்களாகக் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத் திரைப்படங்கள் வெளியான காலத்தில், இவை விறுவிறுப்பான படங்கள், வித்தியாசமான கதைக்களம் என்ற ரீதியில்தான் பார்க்கப்பட்டன. உறவுமுறைகள் குறித்து இங்கே கேள்வி எழுப்பப்படவில்லை.
ஆனால் கலாபக்காதலனும், உயிரும் வெளியானபோது அவை உறவுமுறை, பெண்கள், புனிதம், கலாசாரம் குறித்த அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. இதற்கான ஒரே ஒரு காரணம் முன்னைய படங்களில் இடம் பெற்ற ஆண் கதாபாத்திரங்களுக்குப் பதிலாக பின்னைய படங்களில் பெண் கதாபாத்திரங்கள் வருகிறார்கள் என்பது மட்டுமே.
இங்கே 2 குறிப்பிட்ட விடயங்கள் கவனத்தைப் பெறுகின்றன.
1. பெண் பற்றிய பிம்பம் உடைக்கப்படுவதைச் சீரணிக்க முடியாத, சமூகத்தின் பிரதிபலிப்பு.
2. பெண் பற்றிய பிம்பத்தை உடைப்பதாகப் பாவனை காட்டி, பெண்களை பழையநிலையிலேயே வைத்திருக்கும் சினிமா மோசடி.
நகைச்சுவை என்ற பெயரில் பெண்கள் உரியப்படுவதை (ஆண்) சமூகம் ஏற்றுக் கொள்கிறது. ஆணின் காதல், காமம், விரகதாபம் எல்லாம் அங்கீகரிக்கப்பட்ட விடயங்களாகவே இருந்து வருகின்றன.
பெண்கள் சேலைதான் கட்ட வேண்டும் என்ற புத்திமதிகள் சொல்லுகின்ற விஜய்கள் தாங்கள் கனவு காணும்போது மட்டும் சட்டையைக் கிழித்துப்போட்டிருக்கும் திரிசாக்கள், அஸின்களோடு பின்னிப் பிணைந்துகொண்டு பாடி ஆடுகிறார்கள்.
அம்மா/மனைவி/சகோதரி/காதலி என்று பெண்கள் “பக்குவமாகக்” காட்டப்படும் படங்களில்தான், குத்தாட்டம்/கிளப்டான்ஸ் என்று இயன்றவரை பெண்களின் உடம்பை/அசைவுகளைக் காட்டும் நடனங்களும் இடம்பெறுகின்றன. பெண்களைப் புனிதங்களாக/தெய்வங்களாக/தியாகதீபங்களாக கட்டமைக்கும்/போர்த்து மூடும் சினிமாக்கள் தேவைக்கேற்ப அவர்களை அவிழ்த்துவிட்டு அம்மணமாகவும் காட்டப் பின்னிற்பதில்லை. ஆனால் கவனமாக இந்தப் பெண்களின் உறவுமுறைகள், குடும்பம் என்பவற்றைக் காட்டாமல் தவிர்த்திருப்பார்கள்.
வந்த கதைகளையே திரும்பத் திரும்ப புதிய பெயர்களில் எடுத்து வியாபாரம் செய்த தமிழ் சினிமா இப்போது காசு பண்ணுவதற்காக அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. வன்முறையை இயன்றளவு அண்மையில் காட்டுவது என்று ஆரம்பித்து இப்போது பெண்களை இன்னொருவிதமாக வைத்துப் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
உயிர் திரைப்படத்தில் தனது கணவனிடம் பாலியல் திருப்தி காணாத மனைவி தனது மைத்துனனை அடைய விரும்புகிறார். இதற்குரிய நியாயப்படுத்தலாக அவர் சொல்கின்ற காரணங்களில் சில….
பெண்களுக்கு மட்டும் உணர்வில்லையா?
அண்ணி இறந்தால் அண்ணனுக்கு மறுகல்யாணம் செய்து வைக்கின்றீர்கள். அண்ணன் இறந்தால் அண்ணி வேறு திருமணம் செய்யக்கூடாதா?
குழந்தையைத் தனது குழந்தையாகப் பாசம் காட்டும் ஆணைத் திருமணம் செய்யக் கூடாதா?
மேற்படி காரணங்கள் நியாயமானவை. இந்த விடயங்களில் பெண்கள் பாராபட்சமாகவே இன்றுவரை நடாத்தப்படுகிறார்கள்.
ஆனால் படத்தில், அண்ணியை இரையைத் தேடும் பாம்பாக, பெற்ற குழந்தை மேலே கொதிக்கும் பாலை ஊற்றுபவளாக, காமவெறி பிடித்தவளாக மட்டும் காட்டிவிட்டு அவளை நியாயங்களைப் பேச வைப்பதன் மூலம் அந்த நியாயங்களுக்குரிய அர்த்தங்களை நியாயமற்றதாக்குவதே நடந்துள்ளது. திட்டமிட்டு எதிர்மறையாக அமைக்கப்பட்டுள்ள அண்ணி பாத்திரம் பார்வையாளர்கள் மத்தியில் அப் பாத்திரம் குறித்த எதிர்மறையான முன்முடிவுகளை தோற்றுவிக்கும்போது, பெண்களின் நடைமுறைப் பிரச்சினையைப் பேசுவது தெரிந்துகொண்டே செய்யப்படும் தந்திரம்தான்.
ஆண்களைப் போல பெண்களுக்கும் காய்ச்சல், காதல், காமம் எல்லாம் வரும் என்பதை மறுதலிக்கும் முயற்சிகள் அன்றிலிருந்து இன்றும் தொடர்வதன் ஒரு சாட்சியம்தான் உயிர் போன்ற திரைப்படங்கள்.
படித்த பதிவுகள்:
http://tamil.cinesouth.com/specials/specials/wrong.shtml
http://raasukutti.blogspot.com/2006/08/blog-post_02.html
தொடர்புள்ள பதிவுகள்:
http://porukki.weblogs.us/archives/21
|