உனக்கும் எனக்குமான உறவுகள்
இயற்கையின் விதிகள், நியதிகள்.
அது சுயமானது!…
பிணக்குகளுக்கு வித்திட்டது
எது? யார்? ஏன்?!..
எப்போது?…
இன்றா? நேற்றா? ஆதியிலா?!…
உன்னைச் சுமப்பதும்
என்னைச் சுமப்பதும்
அன்னை வயிறுதான்
அதுவும் பத்து மாதந்தான்…
பின்னெப்படி நீ
என்னிலும் உயர்வென்றெண்ணினாய்?!…
உனக்கான ஐம்புலனும்
எனக்கான ஐம்புலனும்
ஒன்றுபோல்தான்!…
உனக்கான எல்லா பசியும்
எனக்கும்…
பிறகெப்படி நீ
என்னிலும் உயர்வென்றெண்ணினாய்?!…
உனக்கான மனது தான்
எனக்கும்…
உனக்கான வலிகள் தான்
எனக்கும்…
பிறகெப்படி எம்மை
தாழ்வென்று எண்ணத்துணிந்தாய்?!
காடு கழனி முதல்
கணனி வரை
பணிகளை பகிர்ந்து செய்ய
எம்மைத்தேடுகின்றாய்.
ஏன்
சமையலரைப் பணியென்றால்
மட்டும் ஓடுகின்றாய்?!…
சுகமென்பது இருவருக்கும்
பொதுவுடமையான போது…
துக்கங்களும் துயரங்களும் மட்டும்
எனக்கென்று தனியுடமையானது?!…
இயற்கையின் விதிகளை
இன்முகத்துடன் ஏற்கின்றேன்…
அதனால் சுமப்பதில்
உன்னை பங்கேற்கச் சொல்லவில்லை!…
வளர்ப்பதில் உன் பங்களிப்பை
சமமாய் எதிர்நோக்குகிறேன்.
பறவைக்கும் விலங்குங்கும்
நீ குறைந்தவனில்லையென்று
நினைக்கின்றேன்!…
பிறகெப்படி
பறவையின் பங்களிப்பு கூட
உன்னிடம் இல்லாமல் போனது!!…
எந்த விலங்கும்
எந்த பறவையும்
தன் இணையை தாழ்த்துவதில்லை…
மனிதா!
சற்றேனும் எண்ணிப்பார்!!…
உன் நிலை
என்னவென்று!!!…
http://kalaiarasan.wordpress.com/2007/04/30/kalaimarthandam-190-you-and-me/