இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
இந்திய இனங்களில் மரபணு ஆராய்ச்சி - சிறப்புச் செவ்வி Print E-mail
---   

kt1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 முனைவர் தங்கராஜ் அவர்கள் இந்திய நடுவணரசால் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டிருக்கும் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் (Centre for Cellular and Molecular Biology) ஆராய்ச்சியாளராக இருக்கிறார். கடந்த சுமார் பதினைந்து வருடங்களாக மரபியல் துறையிலும் குறிப்பாக மக்கட்தொகை மரபியல் (population genetics) துறையில் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருபவர். இவரது கட்டுரைகள் உலகப் புகழ்பெற்ற Science போன்ற பத்திரிகைகளில் வெளிவந்து ஏராளமானோரால் எடுத்தாளப்படுகின்றன.. அண்மையில் United Kingdom அரசின் UK-India Education and Research Initiative (UKIERI) Award  சிறப்பு விருதினைப் பெற்றவர். தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்திய மக்கட்தொகை மரபணுக்களின் மீதான ஆராய்ச்சிகளைக் குறித்து அவர் பூங்காவுக்கு அளித்த சிறப்புச் செவ்வி:

பூங்கா:  ஆப்பிரிக்காவில் தோன்றிய தற்கால மனித இனம் இந்தியாவுக்குள் வந்தது குறித்த உங்கள் ஆராய்ச்சிகளைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

முனைவர் தங்கராஜ்: தற்கால மனிதன் தோன்றியது எங்கே என்பது குறித்து, முன்னர் வேறுபட்ட கருத்துகள் இருந்தன. ஆப்பிரிக்காவில்தான் தோன்றினானா? வெவ்வேறு கண்டங்களில் தோன்றினானா? ஆப்பிரிக்காவில்தான் தோன்றினான் என்று இப்போது உறுதிப்பட்டிருக்கிறது. இவ்வாறு தோன்றிய மனிதன் எப்படி உலகம் முழுமைக்கும் பரவினான் என்பது முக்கியமான கேள்வி. இதைப் பலரும் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். நாங்கள் முதலில் ஆராய்ந்தது அந்தமான், நிக்கோபார் தீவுகளிலிருக்கும் தொல்குடியினரின் மரபணுக்களை. அங்கே ஆறு இனங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். நான்கு நீக்ராய்டுகள், அதாவது கறுப்பரினத்தைச் சேர்ந்தவர்களைப் போன்றவர்கள். இரண்டு இனங்கள் மங்கோலியர்களைப் போல், அதாவது சீனர்களைப் போல என்று சொல்லலாம். இவர்களில் ஓங்கே, ஜாவா, க்ரேட் அந்தமானீஸ் மற்றும் நிகோபாரீஸ் ஆகியோரின் மரபணுக்களை, குறிப்பாக, ஒய் க்ரோமோசோம், மற்றும் மைட்டோகாண்டிரியா மரபணுவை ஆராய்ந்தோம். அவற்றில் ஏற்பட்டிருக்கும் மரபணு மாற்றங்களைக் (mutations) கணக்கிட்டோம். இவற்றை வைத்து அவர்கள் அங்கு குடியேறிய  காலத்தைக் கணக்கிட்டால் 65000 முதல் 70000 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் அங்கே வந்திருக்கலாம் என்று தெரிகிறது. வந்தவர்கள் இந்தியாவின் மேற்குக் கடற்கரை வழியாகத்தான் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது.அவர்கள் இந்தியாவினூடாக நிலவழியாக வந்திருந்தால் அவர்கள் விட்டுச் சென்ற மரபணுக்கள் இப்போது இருக்கும் மக்கள் தொகையிலும் யாருக்கேனும் இருக்குமல்லவா? அதற்காக இந்தியாவில் பல்வேறு இனத்தவரின் மரபணுக்களை ஆராய்ந்தோம். அப்போது மேற்கு வங்கத்திலிருக்கும் ஒரு இனக்குழுவில், அந்தமான் நிக்கோபார் இனக்குழுக்களின் மரபணுக்களின் அமைப்பு இருக்கிறது.  இவ்வாராய்ச்சி முடிவை, புகழ் பெற்ற Science பத்திரிகையில் வெளியிட்டோம். இன்னும் இனங்களுக்கிடையேயான தொடர்புகளைக் குறித்த எங்கள் ஆராய்ச்சி தொடர்கிறது. சுமார் பத்தாயிரம் வரையிலான மக்களிடமிருந்து மரபணுக்களை எடுத்து ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்.  இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

பூங்கா: இந்தியாவில் காணப்படும் இனங்களுக்கிடையே இந்த மரபணுக்களில் என்னென்ன மாதிரியான வேறுபாடுகள் இருக்கின்றன?

முனைவர் தங்கராஜ்: இன்றைக்கு இந்தியாவில் சுமார் 5000 மக்கள்தொகைகள் இருக்கின்றன. மக்கள் தொகை என்பதை உட்கலப்பு அதாவது தங்களுக்குள்ளேயே திருமணம்(endogamous) செய்துகொள்ளும் குழுக்கள் (ethnic groups) என்று சொல்லலாம். இவை சாதி என்பதன் ஒரு வடிவாகவும் கொள்ளலாம். இவர்களில் 532 பழங்குடியினர். அதிலும் 72 மிகப்பழைய பழங்குடியினர், இவர்களைக் காட்டுக்குள் சென்றுதான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இவர்கள் வேட்டையாடும் வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள். இவ்வாறு இந்தியாவில் பரந்துபட்டிருக்கும்  சாதியினருக்கிடையே இருக்கும் ஒற்றுமை வேற்றுமை என்னவென்று பலவிடங்களிலும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. சாதி என்பது எப்படித் தோன்றியிருந்திருக்கலாமென்றால், பழங்குடியினராக இருந்த மக்கள் குழு, காட்டிலிருந்து ஊர்களுக்குள் வரும்போது அது ஒரு தனித்த குழுவாகி இருக்கலாம். பின்னர் தோன்றிய சமுதாய ஏற்பாடுகள் இக்குழுக்களை மேலும் இறுக்கமான சாதி என்ற கட்டுமானத்துக்குள் கொண்டு வந்திருக்கலாம் எனத் தற்போதைய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இவ்வகைக் குழுக்களை ஆராயும்போது இவர்களுள் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், நடுத்தர சாதியினர், உயர் சாதியினர் என்ற அடுக்கில் மரபணுக்களுக்கிடையே வேறுபாடுகள் கூடிக்கொண்டே செல்கிறது. உதாரணமாக பழங்குடியினருக்கும், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் ஒற்றுமைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவர்களுடையது ஆப்பிரிக்க இனத்தவரை ஒத்திருப்பதையும் காணலாம். அதே நேரத்தில் உயர்சாதியினரது மரபணுக்கள் ஐரோப்பியர்களின் மரபணுக்களின் கூறுகளைக் கொண்டிருப்பது பல்வேறு ஆராய்ச்சிகளில் உறுதிப்பட்டிருக்கிறது. மைட்டோகாண்டிரியாவின் மரபணுவைக் கொண்டு மக்களின் இடம்பெயர்வு, அதன் காலம் ஆகியவற்றைக் கணக்கிட இயலும். உதாரணமாக திராவிட இனங்களில் M என்ற குறிப்பான் (haplogroup) காணப்படுகிறது. இது ஆப்பிரிக்காவில் காணப்படும் L3 என்ற குறிப்பானுக்கு மிக நெருக்கமானது ஆகும். இது தவிர இந்தியாவில் பிற்காலங்களில் கிளைத்த Mன் கிளைகள் மற்றும் N, R, F மற்றும் B ஆகிய குறிப்பான்களும் காணப்படுகின்றன. இவற்றைக் கொண்டு இனங்களின் வரவைக் காலவரிசைப் படுத்த முடியும். ஆனாலும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த ஆராய்ச்சிகள் மக்களுக்கிடையே பிரிவினையை வளர்ப்பதற்காகச் செய்யப்படுவதில்லை. மாறாக இவற்றை ஆராய்வதன் மூலம் அறிவியல் ரீதியாக வரலாற்றினைக் கட்டமைத்துக் கொள்ளலாம், மனித இனங்களின் நுண்ணிய கூறுகளை உணர்ந்துகொள்ளலாம், இவற்றால் கிடைக்கும் தகவல்களை மருத்துவம், பரிணாமவியல் போன்றவற்றில் பயன்படுத்தலாம் என்பதே முக்கியம்.

பூங்கா:  மரபணுக்களை ஆராய்வது மருத்துவத் துறையில் எப்படிப் பயன்படுகிறது?


முனைவர் தங்கராஜ்: குழந்தையற்ற தன்மை (ஆண் மலட்டுத்தன்மை), பாலின வேறுபாடின்மை போன்ற குறைபாடுகளுக்கு அடிப்படைக் காரணம் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் என்று சொல்லலாம். உதாரணமாக ஆண் மலட்டுத்தன்மைக்கு விந்தின் புரதங்களைத் தயாரிக்கும் மரபணுக்கள் துண்டாடப்படுவதால் (gene deletion) விந்துக்களின் வன்மை குறையும். இந்தத் துண்டாடுதல் இந்தியாவில் 8.5% பேருக்கு இருக்கிறது என்ற ஆராய்ச்சி முடிவை 2003ம் ஆண்டில் நாங்கள் வெளியிட்டோம். இப்போது விந்தணுக்களின் மைட்டோகாண்ட்ரியாவில் நிகழும் மரபணு மாற்றங்களை ஆராய்கிறோம். விந்தணுக்களுக்கு நீந்தும் ஆற்றலைக் கொடுப்பது அதன் மைட்டோகாண்டிரியா. அதன் மரபணுவில் மாற்றமிருந்தால் நீந்தும் தன்மை குறையும். அதனாலும் மலடாகலாம். இத்தகைய குறைபாடுகளுக்கு 25% மரபியல் காரணமாகலாம். மற்றபடி சூழமைவு,  வேதிப்பொருட்கள், தான்தோன்றியாக ஏற்படும் மாறுபாடுகள், கதிர்வீச்சு, மாசுபாடு இதெல்லாம்கூட மரபணு மாற்றங்களுக்குக் காரணமாகலாம்.

இவற்றைத் தவிர மரபணுக்களை ஆராய்வதன் மூலம், சில மருந்துகள் ஏன் சிலருக்கு நன்றாக வேலை செய்கிறது, ஆனால் வேறு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன என்ற வேறுபாடுகளை அறிந்துகொள்ள முடியும். ஏனென்றால் நாம் உட்கொள்ளும் மருந்துகள் உடம்புக்குள் சென்றபின் மாறுபாடுகளை (metabolism) அடைகின்றன. இந்த மாறுபாடுகளை உண்டாக்குவது நம் உடம்பில் இருக்கும் நொதிகள். இந்த நொதிகளை உண்டாக்கும் மரபணுக்களில் மாற்றமிருந்தால் அதுவே மருந்தின் வேலைப்பாடு மாறவும் காரணமாகிவிடும். இவற்றையும் மரபணு ஆராய்ச்சியின் பயனாக நாம் கண்டுகொள்ளலாம். இத்துறையில் இந்தியாவில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பூங்கா:  மரபணுக்களைக் குறித்த தகவல்கள் தனிநபர் சார்ந்த, அந்தரங்கமானவை என்பதால் இவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு இருக்குமா? உதாரணமாக ஒரு காப்பீட்டு நிறுவனம் ஒருவரது மரபணுவைக் குறித்த தரவுகளை வைத்துக்கொண்டு அவருக்குக் காப்பீடு வழங்குவதில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாமல்லவா?

முனைவர் தங்கராஜ்: இத்தகைய சிக்கல்கள் இப்போதைக்கு இல்லையென்றாலும் இது சாத்தியமானதே. ஒவ்வொரு மனிதனின் எல்லா மரபணுக்களையும் ஆராய்ந்து அந்தத் தரவுகளைக் காத்து வைத்துக்கொள்ளுதல் பெரும் செலவு ஏற்படுத்தக்கூடியது. இருப்பினும் வருங்காலம் எப்படியிருக்கும் என்பதைச் சட்டங்கள்தான் நிர்ணயிக்க இயலும். அண்மையில்கூட அமெரிக்காவில் மரபணுக்களில் காணப்படும் நோய்த்தன்மைகளைக் காரணம் காட்டி வேலை வாய்ப்பு, காப்பீடு போன்றவற்றை மறுப்பது சட்டத்துக்குப் புறம்பானது எனும் சட்டமுன்வரைவு வரப்போவதாகத் தெரிகிறது. எனவே இதில் சட்டத்தின் பங்குதான் அதிகம்.

பூங்கா: உங்களது ஆராய்ச்சிகளுக்கு ஊடகங்களில் எவ்வாறு வரவேற்பு இருக்கிறது?

முனைவர் தங்கராஜ்: இப்போது இந்தியாவில் ஊடகங்கள் அறிவியல் குறித்து நிறைய பேசுகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.  செய்தித்தாள்களில் அறிவியல் கட்டுரைகள் வருகின்றன. வாரந்தோரும் ஒருபக்க இரண்டுபக்க கட்டுரைகள் வரும். அவர்கள் சிறந்த ஆராய்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைக் கொண்டு நம்மைத் தொடர்பு கொள்கிறார்கள். விழிப்புணர்வு இருக்கிறது. பத்திரிகைச் செய்திகளைப் படித்துவிட்டு நோயாளிகளும் எங்களைத் தொடர்பு கொண்டு தங்கள் நோய்களைப் பற்றியும், அதற்கு மரபணு ஆராய்ச்சி மூலமாக விடை கிடைக்குமா என்றும் கேட்கிறார்கள்.

பூங்கா: மரபணுக்களை ஆராய்வதன் மூலம் இனங்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை, வேற்றுமைகளை நீங்கள் ஆராய்வது மக்களிடையே வேற்றுமையை வளர்த்துவிடும் என்று ஏதேனும் மத, சமூக அமைப்புகள் நம்புகின்றனவா, அவை ஏதேனும் இவ்வாராய்ச்சிகளுக்குத் தடையாக இருக்குமென்று நினைக்கிறீர்களா?

முனைவர் தங்கராஜ்: தடைகள் என்று எதுவும் இல்லை. மாறாக, இந்திய மற்றும் பன்னாட்டு அரசுகளின் நிதிகளும், ஊக்கமும் கணிசமான அளவு எங்கள் ஆராய்ச்சிக்குக் கிடைத்து வருகின்றன. நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, இந்த ஆராய்ச்சிகளை நல்ல நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற முறையில்தான் நாங்கள் முன்வைக்கிறோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்பதை நம் வரலாறு சொல்லிக் கொண்டேயிருக்கிறது. இதை நாம் உணர வேண்டும்.

இவ்வாரத்திற்கான பூங்கா இதழ்  வெளிவரும்போது முனைவர் தங்கராஜ், ஓங்கே பழங்குடியினரின் மரபணுக்களை ஆராயும் பொருட்டு ஆஸ்திரேலியக் காடுகளில் பயணித்துக்கொண்டிருப்பார். அவரது ஆராய்ச்சிப் பணி மேலும் சிறக்க உங்கள் சார்பில் பூங்காவின் வாழ்த்துக்கள்!



 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)