இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தொகுப்பாளரின் மேசையிலிருந்து Print E-mail
ஆசிரியர் குழு   

பூங்கா தனது வாசகர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது. உலகம் முழுதும் மனிதர்களின் வாழ்வுக்கு உடலுழைப்பே மூலதனம். அதனைக் கொண்டே தனக்கானவற்றை மனிதர்கள் ஈட்டிக்கொள்கிறார்கள். ஆனால் உடலுழைப்பு என்பதை மாற்றாரிடமிருந்து உறிஞ்சிக் கொள்வதற்காகவே பல நாடுகளிலும் பலவிதமான தத்துவங்கள் இயங்குகின்றன. இந்தியாவின் சாதீயப் படிநிலை இப்படியானதொரு உறிஞ்சு வடிவம். இதில் கீழ்நிலையிலிருக்கும் சாதியினரின் உடலுழைப்பு மேநிலைச் சாதியினரால் அடுக்கடுக்காக உறிஞ்சப்படுகிறது. மேலை நாடுகளில் அடுக்கடுக்கான பொருளாதாரப் படிநிலைகளாலும், ஓரளவுக்கு இன பேதங்களாலும் இது நிகழ்கிறது. ஓடியாடிச் செய்யும் உடலுழைப்பு மட்டுமென்றில்லை, உட்கார்ந்தவிடத்திலேயே உடலைக்கெடுத்து உழைக்கும் பலவிதமான இன்றைய பிழைப்பு வழிகளும் முதலாளித்துவத்தின் பற்களினிடையேதான் உயிர்த்திருக்கின்றன. ஆயினும் தன் வேலைக்குப் பெரும் ஆபத்தினையோ, வாழ்வாதாரங்களை முற்றுமுழுதாய் இழந்துவிடும் நிலையோ ஏழ்மை நிலையிலிருக்கும் உழைப்பாளர்களைத்தான் அண்மித்திருக்கிறது. இத்தகைய உழைப்பாளர்கள் பலவற்றையும் எதிர்த்துப் போராடியே தம் வாழ்வினை நகர்த்தவேண்டியிருக்கிறது. இவர்களுக்கான பெருந்துணை இவர்களையொத்த உழைப்பாளர்கள் மட்டுமே. ஏனெனில் முதலாளிகளும், மதங்களும் ஒரு வலிய கூட்டணியை அமைத்து அரசுகளை ஆட்டுவித்துக்கொண்டிருப்பது பல நாடுகளிலும் கண்கூடு. இவர்களை எதிர்ப்பது என்பது திரட்சியான உழைப்பாளர் கூட்டத்தினால் மட்டுமே சாத்தியம். இவர்களை மீண்டும் மீண்டும் ஒன்றுபடுத்தத்தான் இந்த மே தினம். உலகெங்கும் தொழிலாளர்களின் உயிரும் உழைப்பும் மொத்தமாகவும் சிறிது சிறிதாகவும் பறிக்கப்படுவதை எதிர்த்துத் தொடர்ந்து போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்க வேண்டும். பூங்காவின் இந்த இதழில் மேதினத்தையொட்டிய களத்துமேடு, தியாகு மற்றும் சந்திப்பு ஆகியோரின் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தியா என்ற நாட்டுருவாக்கம் நிகழும் முன்பே இப் பெருநிலப்பரப்பினுள் பல்வேறு இனக்குழுக்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்த் தொடர்ந்து குடியேறியும், வெளியேறியும் வருகின்றன. இவ்வினக்குழுக்கள் தங்களுக்குள்ளேயே திருமண உறவுகளை வைத்துக்கொண்டதாலும், பின்னர் தோன்றிய உறுதிப்பட்ட சாதி வேறுபாட்டு முறைகளாலும், ஒவ்வொரு இனக்குழுவும் தனக்கான அடையாளங்களை நெடுங்காலமாகத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. மரபணுக்களில் காணப்படும் இவ்வடையாளங்களைக் கொண்டு மனிதர்களின் இடப்பெயர்ச்சி, நோய்களால் பீடிக்கப்படும் தன்மை முதலியவற்றைக் கண்டுகொள்ள இயலும். இத்தகைய ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடந்து வருகின்றன. இத்தகைய ஆராய்ச்சி முடிவுகள் நம்பவைக்கப்பட்ட, கதைகளாக இறுகிப்போன கருத்தியல்களைப் பெயர்த்துப் போடும் முடிவுகளைத் தாங்கி வருகின்றன. ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பிய நவீன மனிதர்கள் இந்தியாவின் வழியாகத் தென்கிழக்காசிய, ஆஸ்திரேலிய நாடுகளுக்குப் பயணித்தார்கள் என்ற கண்டுபிடிப்பில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் முனைவர் தங்கராஜ் அவர்களின் சிறப்புச் செவ்வி இவ்வாரம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் மேற்கொண்டுள்ள அவரது ஆராய்ச்சிகளைப் பற்றி நம்மிடம் உரையாடியிருக்கிறார். அவருக்கு உங்கள் சார்பில் பூங்காவின் நன்றி.

ஈழப் போராட்டம் பெரும் திருப்பங்களோடு மக்களைத் தம் விடுதலையை நம்பிக்கையோடு எதிர்நோக்கச் செய்திருக்கிறது. அகிம்சை வழிப் போராட்டத்தில் தன்னுயிரை அன்னை பூபதி மாய்த்துக்கொண்ட நாளை ஈழம் தனது நாட்டுப் பற்றாளர் நாளாக அனுட்டிக்கிறது. இதுகுறித்த பதிவினை ஹரனும், ஈழ வரலாற்றில் மிகையொலி விமானத்தின் வீழ்ச்சியின் முக்கியத்துவத்தைக் குறித்து வன்னியனும் பகிர்ந்திருக்கிறார்கள்.

திரு, ஐநாவின் சார்பில் நிகழவிருக்கும் மீன்பிடித்துறை சார்ந்த தொழிலாளர் குறித்த விவாதத்திற்குச் செல்லவிருப்பதைச் சொல்லும் பதிவை நீங்கள் காணலாம். நம் சார்பில் ஒருவர் செல்ல முடிவது நமக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. அவர் கேட்டிருக்கும் விபரங்களை இயன்றவர்கள் அவருக்களித்தால் பெரும்பயனாக இருக்கும்.

பெரியாரைக் குறித்த திரைப்படம் எதிர்பார்த்தமைக்கும் மேலாகப் பெரும் வெற்றியையும், பார்வையாளர்களின் ஒருமனதான நல்விமர்சனத்தையும் ஈட்டி வருகிறது. இப்படத்தின் வெற்றி, அல்லது வெற்றியின் மீதான வேட்கை என்பதே பகுத்தறிவுத் தந்தையின் கருத்துகள் இன்றைய இளைஞர்களையும் கவர்ந்திருப்பதைக் காட்டுகிறது. பாலபாரதியின் பார்வையனுபவம் இவ்வாரப் பூங்காவில் இடம்பெறுகிறது. வரும் வாரங்களிலும் இதனையொட்டிய பதிவுகள் வருமென எதிர்பார்க்கிறோம்.

திரைப்படம் என்ற சிறந்த ஊடகம் செய்யவேண்டிய பணிகள் என்பவை இருக்க, அவை சமுதாயச் சீரழிவை மேற்கொள்வதையே தொழிலாகக் கொள்வதும், அதற்குத் துணைபோகவே தொலைக்காட்சிகள் இருப்பதும் வருத்தத்திற்குரியன. இவ்வருத்தத்தினைப் பதிவு செய்கிறது தென்றலின் பதிவுகள். திரைப்படங்கள் முன்னெடுக்கும் சீரழிவுகளைப் புதிய பதிவரான பாமரனும் பதிந்துள்ளார். அரவாணிகளைத் திரைப்படங்கள் காட்டும் விதம் குறித்துத் தொடர்ந்து எழுதிக் கிளர்ச்சி செய்துவருபவர் வித்யா. இவரது தொடர்ந்த போராட்டம் பதிவர்களிடையே ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவே மக்கள் அனைவருக்குமான புரிதலாகப் பரவ வேண்டும் என்ற முனைப்பிலும் வித்யா இருப்பதை அவரது செயற்பாடுகள் சொல்லிக்கொண்டேயிருக்கின்றன. ஒரு இயக்குனரின் பேட்டியினைக் குறுக்கே புகுந்து கிழிக்கும் அவரது விமர்சனம், இனிமேல் இயக்குனர்களைப் பலநேரங்களிலும் யோசித்துச் செயல்பட, பேச வைக்கும், குறிப்பாக அரவாணிகளைப் பற்றி.

அறிவியல்/நுட்பம் பகுதியில் இவ்வார நட்சத்திரம் வி.ஜெ.சந்திரனின் உணவு மூலம் பரவும் நோயாக்கிகள், உணவுத் தொழிநுட்பம் ஆகியவையும், சந்திரவதனாவின் ஒவ்வாமை குறித்த மீள் பதிவும், பத்மா அரவிந்தின் சமுதாயக் கல்வி குறித்தான பதிவும், மா.சிவக்குமார் எழுதிய தோல் பதனிடுதலைப் பற்றிய தொகுப்பும், சி.வி.ஆர் அழைத்துப்போகும் அண்டவெளியும், மாசிலா எதிர்காலச் சக்தியெனச் சுட்டிக்காட்டும் புவிச்சூட்டியல் பதிவும் இடம்பெறுகின்றன. 

இவற்றைத் தவிர ஜெஸிலா, சுகுணதிவாகர், ஆழியூரான், ஆராதனா, பிரபு ராஜதுரை, கலைஅரசன், கோபா ஆகியோரது பதிவுகளுடன் இவ்வாரப் பூங்கா வருகிறது. பூங்காவுடன் தமது படைப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் அனைத்துப் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் மீண்டுமொருமுறை உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!


 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)