இந்தியாவின் தலைவிதியை ஒருகாலத்தில் நிர்ணயம் செய்து வந்த மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் சமூகத்தின் அடித்தளத்து மக்கள் மத்தியிலிருந்து 1984 ஆம் ஆண்டில் உதயமான ஒரு கட்சியை குறுகிய காலகட்டத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அரியணை ஏற்றியது செல்வி மாயாவதியின் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்லாமல், எண்பதுகளில் ஏற்பட்ட தலித் எழுச்சிக்குக் கிடைத்த முதல் அரசியல் வெற்றி என்றும் சொல்லலாம். நடந்து முடிந்த உத்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜ் பார்ட்டி (பிஎஸ்பி) 403 மொத்த இடங்களில் 207ஐ வென்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிராமணர்களிடமும் மற்ற ஆதிக்க சாதியினரிடமும் சரணடந்து விட்டார் என்று பிற்படுத்தப் பட்டவர் மற்றும் தலித்துகளின் அரசியலை ஆதரிப்போரின் விமர்சனம் ஒருபுறம். தலித்துகளும், பிராமணர்களும் பிறபடுத்தப் பட்டவர்களின் ஆதிக்கத்திற்கெதிராய் கைகோர்த்திருப்பதாகக் குதூகலிக்கும் பார்ப்பனிய வாதிகளின் கொண்டாட்டம் என்பது இன்னொரு புறம். இருந்தாலும், சந்தர்ப்பவாதமே அரசியல் என்றாகி விட்ட சூழ்நிலையில், தலித்து அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கான மாயாவதியின் உத்தியாகத்தான் இதை புரிந்து கொள்ள முடிகிறது. அதற்குக் காரணம் மாயாவதியின் முந்தைய ஆட்சிக்காலத்திலான செயல்பாடுகள்தான்.
முன்பு ஒருமுறை முலயாம்சிங்கின் சமாஜ்வாடி கட்சியுடனும் இருமுறை பாரதிய ஜனதாவுடனும் கூட்டணியாட்சியில் முதல் அமைச்சரானார். பிஎஸ்பியின் நிறுவனர் கன்சிராம் ஆரம்பத்தில் பிற்படுத்தபட்டோர் மற்றும் தலித்து ஒற்றுமையை வலியுறுத்தியபடியால் பிஎஸ்பி சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றின. கூட்டணியாட்சியில் முதல் பாதி பெரிய கட்சியான சமாஜ்வாடிக்கு மதிப்பளித்து முலையாம் சிங் முதல்வராக ஒத்துழைத்தது பிஎஸ்பி. ஆனால் இரண்டாம் பாதியில் பிஎஸ்பி தலைமையில் மாயாவதி முதல்வரான போது அவருக்கெதிராக திரைமறைவில் வேலை செய்தது சமாஜ்வாடி கட்சி. தலித்துகளுக்கெதிரான பிற்படுத்தப் பட்ட சாதிகளின் சாதியமனநிலைதான் காரணம் என்று சொல்லப் பட்ட அந்த சூழலுக்குப் பிறகு இரண்டு கட்சிகளும் எதிரும் புதிருமாய்த்தான் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
முலையாம் சிங்கைப் பிடிக்காத பாரதீய ஜனதா மற்றும் காங்கிரசு கட்சிகளை சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறுபான்மை பலத்துடனேயே இரு முறை மாயாவதி ஆட்சிக்கு வந்தார். குறிப்பாக இரண்டு முறையும் பாரதீய ஜனதாவுடன் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடவில்லை. ஆனாலும் தேர்தலுக்குப் பிறகு, இரண்டு முறையும் பாரதீய ஜனதா கட்சி முலயாம்சிங்கைப் பதவிக்கு வராமல் தடுக்க மாயாவதிக்கு வளைந்து கொடுக்க நேரிட்டது. மாயாவதியை முதல்வராக ஏற்றுக் கொண்ட பாரதிய ஜனதா தன்னுடைய மதவாதக் கொள்கைகளைத் திணிக்க மாயாவதி ஒருபோதும் அனுமதிக்கவில்லை. மாறாக தன்னுடைய தலித்து ஆதரவான கொள்கைகளையும், சமூக நீதிக்கான ஆதரவையும் முன்னெடுத்துச் சென்றார். உதாரணமாக, பாரதீய ஆட்சியுடன் கூட்டணியுடன் இருந்த பொழுது தான் அவர் பெரியாருக்கும் உத்திரப் பிரதேசத்தில் சிலை வைத்தார். பெரியார் இராமரையும், இராமாயாணத்தையும் விமர்சித்து எழுதிய நூலை இந்தியில் அச்சிட்டு வெளியிடச் செய்தார். பின்னர் பாரதீய ஜனதாவின் முதலமைச்சர் முறை வரும் பொழுது அதை அனுமதிக்காமல், இரு முறையும் மாயாவதி கூட்டணியை முறித்துக் கொண்டார். மேலும் தன் ஆட்சிக் காலங்களில் தலித்துகள் மத்தியில் முழுமையாக தன் செல்வாக்கை வலுப்படுத்தி தக்க வைத்துக் கொண்டார்.
ஐம்பது ஆண்டுகளாக பார்ப்பனிய-பனியா சாதிகளின் ஆதிக்கத்தில் இருந்து வந்த காங்கிரசு பாரதீய ஜனதா கட்சிகளை முலையாம் சிங் நேரடியாக எதிர்த்து பலவீனப்படுத்தினார் என்றால், அவற்றை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு பலமிழக்கச் செய்தார் மாயாவதி என்றால் மிகையாகாது. இன்று அந்த இரண்டு கட்சிகளையும் செல்லாக் காசாக்கி தலித்து அரசியல் சக்தியையும், பிறபடுத்தப் பட்டோர் அரசியல் சக்தியையும் ஒன்றுக்கு மாற்றாக இன்னொன்றாக உருவாக்கிய மாயாவதி மற்றும் முலையாம் சிங் இருவருமே பாராட்டுக் குரியவர்கள். ஊழல், அராஜகம் என்றெல்லாம் இருவரையும் பற்றி ஊடகங்கள் ஊதிப் பெருக்க நினைத்தாலும், அவற்றையெல்லாம் மீறி உத்திரப் பிரதேசத்தின் அரசியல் என்பது சாமானிய மக்களின் சக்தியால் நிர்ணயிக்கப் படுவது சமூக நீதி அரசியலுக்கு கிடைத்த வெற்றி.
மாயாவதி தன் கட்சியில் பிராமணர்களுக்கும், மற்ற ஆதிக்க சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்ததுவும் வரவேற்கப் படவேண்டியதுதான். அவர்களுக்கும் ஜனநாயகத்தில் பங்கு இருக்க வேண்டும். ஆனால் அரசியல் குடுமியை அவர்கள் கையில் வைத்துக் கொள்வதும், அதன் மூலம் பார்ப்பனிய-பனியா ஆதிக்கத்தையும், வர்ணாசிரம தர்மத்தையும், இந்துத்துவ-இராமஜென்ம வெறியை ஊட்டி வளர்ப்பதும்தான் எதிர்க்கப் பட வேண்டியது. பார்ப்பனிய-பனியா கட்சிகளின் தயவில் ஆட்சியில் இருந்த காலத்திலேயே மாயாவதி அதை சரியாகச் செய்து கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த முறை மாயாவதி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதும் மிகவும் சுவாரசியாமான கேள்விதான்.
|