அட ஆமாம் போங்க….! பெண்ணியம் பேசறேன்னு, பழசையெல்லாம் கிளர முடியாது…! ஆனா யேசிக்கிறேன் பேர்வழினு யோசிக்கும் போது பெரும்பாலான பெண்களின் போக்கிற்கு சில காரணங்களைக் கண்டுபிடித்து பெண்கள் முட்டாள்கள் தான்னு முடிவுக்கு வந்துட்டேன்….! இது முட்டாள் தனமான முடிவுனு யாரும் பின்னூட்டமிட முடியாது….!
நீ முட்டாள்னா எல்லா பெண்களுமா…? கேட்பீர்கள் தெரியும், அம்பானி பணக்காரர்னா இந்தியா பணக்கார நாடா என்ன…?
சரி, சரி விசயத்துக்கு வருவோம், செய்திகளில் “வழக்கம் போல் இந்த ஆண்டும் பெண்களே அதிக சதவிகிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்…” என்று செய்து வந்தது. ஆண்கள் எத்தனை இலட்சம், பெண்கள் எத்தனை இலட்சம் தேர்வு எழுதினார்கள்…?கவனிங்கப்பா, கவனிங்கப்பா….!
பல முறை நண்பர்கள் கிண்டல் செய்வார்கள், இவர் யார் தெரியுமா, அவர் யார்னு தெரியுமா..? இது எப்ப, அது எப்ப தெரியுமா…? நான் பேந்த,பேந்த விழித்துவிட்டு தெரியாது தெரியாது என்பேன்…! இரவு குப்பற படுத்துக் கொண்டு (அப்படி படுக்க கூடாதுமா பொம்பள பிள்ளனு அம்மாட்ட திட்டு வாங்கிக் கொண்டு) யோசிச்சா இருட்டில் பிரகாசமாய் மூளையில்(?) விளக்கு எரிந்தது…!
என் தோழிகள் பெரும்பாலும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களாகவே இருந்தனர், சில பெண்கள் மட்டுமே வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர்… அவர்களின் காரணங்கள் எல்லாம் எனக்கு தெரியாது என்னிலையை சொல்கிறேன்…! காலையில் பேப்பர் படிக்க உட்கார்ந்தால் வித விதமாய் திட்டு விழும்… “தடிப்பய மாதிரி, என்ன காலங்காத்தால பேப்பர் வேண்டி கிடக்கு, எனக்கு வந்து உதவி பண்ணு…” அந்த தடிப்பயல்கள் தான் அறிவிலும் தடித்து விடுகிறார்கள்…! வீட்டில் முதலில் ஆண்கள் படித்து விட்டு நமக்குத் தாள் வரும் முன் போதும் போதும் என்றாகிவிடும்.. வேலையைப் பார்ப்பதா, திட்டு வாங்கிக் கொண்டே பேப்பரைப்பார்ப்பதா…? அகா… நாட்டு நடப்ப பார்த்தா நம்ம வீட்டைவிட்டு நடக்க வேண்டியது தான்னு முடிவு பண்ணிடுவோம்…!
முதல் தடவை மாவட்ட நூலகத்திற்குப் போனேன், எனக்கு பயங்கர சந்தேகம், ஆண்கள் பகுதினு ஏதாவது இருந்து தொலைத்து, அங்கு வந்துவிட்டோமொ என்று.. அட ஆமாங்க ஒரு பொண்ணு கூட இல்ல, என் சகோதரனுடன் போனேனோ பிழைத்தேன்…! என் வீட்டில் எனக்கு ரொம்பவும் சுதந்திரம்.. (சில திட்டுக்களுடன் அனா கண்டுகிட்டா தானே., இல்லனா இப்படியா இருப்போம்…) , அதனால் பொது நூலகம் எல்லாம் செல்ல அனுமதி உண்டு… ஆனாலுமே ரொம்பவும் சென்றதில்லை, சகோதரனும், அவன் எடுத்துவரும் புத்தகங்களை அவன் படித்தவுடன் திருப்பிவிடுவான், பாதி படித்த நூல்கள் தான் அதிகம்… ஏன்னா பெண்பிள்ளைகளெல்லாம் அடிக்கடி போகக்கூடாதாம்…( என்னங்கடா இது )
கல்லூரியில் விடுதி, சுதந்திரம், நூலகம்… அப்பாடா கிடைத்ததுடா சந்தர்ப்பம்னு படித்த பெண் தான் நான்…! ஆனால் எத்தனைப் பெண்கள் கல்லூரி நூலகத்தைப் பயன்படுத்தினார்கள் என்பது கேள்விக்குறிதான்…! பலர் பழக்கம் இல்லாததாலும், சிலர் தேவையில்லாததாலும் பயன்படுத்தவில்லை…! (என் தலைமுறை பெண்கள் வரை அத்தனை சுதந்திரம் இல்லை என்று தான் சொல்லுவேன், ஆண் பசங்களுக்கு ஒரு நியதிகளும், பெண் பிள்ளைகளுக்கு ஒரு நியதியும் தான் இருந்தது..) நாம கல்லூரியில் என்ன பண்ணிணோம், பாட புத்தகங்கள் தவிர்த்து என்னவெல்லாம் இருந்ததோ அத்தனையையும் படி…. எதை படிப்பது, எதன் வழி போவது என்று முடிவு செய்யும் முன்னே கல்லூரித்தேர்வுகள் வந்து விடும்…( பிறகு பொது புத்தகங்கள் எடுக்க விடமாட்டானுங்க…) எத்தனை கஷ்டம் டா…!
சிலர் மேல்படிப்பு படிப்பர்… அவர்களிலும் சிலரே பொது நூல்கள் படிப்பர், வீட்டில் பாட புத்தகங்கள் படிக்கத் தான் நேரமிருக்கும்…! என்ன செய்ய பெண்கள் நன்றாகப் படித்தால் மட்டும் தான் படிக்க வைப்பார்கள்….! அதனால் தானோ என்னவோ ஆண்கள் பொது அறிவிலும், பெண்கள் மதிப்பெண்களிலும் பிரகாசிக்கிரார்கள்…!
புத்தகங்கள் வாங்கி படிக்கலாம்னா., நமக்கு கிடைக்கும் பணத்துல (பூ வாங்காம, அலங்காரப் பொருட்கள் வாங்காம,சந்தோசத்துக்கு செலவிடாமல் முக்கியமா இனிப்பு மற்றும் குளிர் பொருட்கள் வாங்காமல்) புத்தகம் வாங்கலாம்னா அதன் விலை பயமுறுத்தும்…! நமக்கு கிடைக்கும் பணம் அவ்வளவு….!
இளநிலை கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் பலருக்கு கல்யாண வாய்ப்பு வந்திருக்கும்… அம்மாவின் திட்டே அப்படி, மாமியார் புகுந்தவீட்டுத் திட்டு எப்படி இருக்கும்.,கல்யாணமாகிவிட்டால் அழகையே பொருட்படுத்தாத பெண்கள், அறிவையா பொருட்படுத்தப் போகிறார்கள்? ஆண்களை குறை கூறுவது எத்தனை தூரம் சரியென்று தெரியவில்லை, புத்தகத்தை எடுத்துவைத்துக் கொண்டோ, கணிணியிலோ உட்காரும் போது வீட்டில் பெண்கள் திட்டித் தான் பார்த்திருக்கிறேன்., ஆனால் இப்படி பெண்களின் மனதில் ஆண்பிள்ளைகள் மட்டும் தங்கள் இஷ்டத்திற்கு விடப்பட வேண்டும் என்று விதைத்தவர்கள் யாராக இருக்கும்…? விடை தெரியாத கேள்வி தான்…!
இத்தனை அலம்பலில் எங்கு போவது புத்தகங்கள் படிக்க..? பொது அறிவை வளர்க்க…! குடும்பப் பெண்களுக்கு சில காரணங்கள், வேலைக்குப் போகும் பெண்களுக்கோ பல காரணங்கள்….! பெண்களுக்கு படிக்கவும், அதை யோசிக்கவும், புரிந்துகொள்ளவும் வாய்ப்புகளும், தருணங்களும் முக்கியமாக நேரங்களும் குறைவு தான்….!
இணைய இணைப்பில் பல மணி நேரங்கள் செலவிடும் ஆண்களுக்கு, சம்பாதிப்பதை அவர்கள் விருப்பத்திற்கு செலவு செய்து புத்தகங்கள் வாங்கும் ஆண்களுக்கு, படிப்பதற்கும், கணிணியிலும் அதிக நேரம் செலவிடும் ஆண்களுக்கு அறிவும் அதிகம் இருப்பதில் அச்சர்யம் இல்லை…
பி.கு..
தற்போது அந்த நிலை பெரும்பாலும் மாறிவருகிறது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். நேரங்களை பயனுள்ள வழியில் செலவழிக்க பெண்களும் முயலுவதில்லை என்றாலும் அதனை சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்தவும், ஆதரிக்கவும் வேண்டியது அவசியம்.
http://manaodaikasivugal.wordpress.com/2007/05/17/பெண்கள்-முட்டாள்களே/