காலங்கள்தோறும் ஒரு குமுகாயத்தில் நிகழும் அக மற்றும் புற மாற்றங்களைப் பதிந்து வைப்பதில் மொழிக்கு முக்கியமான இடமுண்டு. நீண்ட நெடிய பாரம்பரியத்தின் கலை, கல்வி, அரசியல் முதலான அறிவாதாரங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்தியம்புவதன் மூலம் மக்களும், மொழியும் தொடர்ந்து பரிணமித்தபடி இருக்கிறார்கள். இதனாலேயே தலைமுறைகளின் வழியே ஓடும் மொழி என்ற இந்தப் பொது இழை முக்கியத்துவம் பெறுகிறது. அந்த முக்கியத்துவமே மொழியினைச் சுற்றிய அதிகார மையங்கள் நிறுவப்படுவதற்கும் காரணமாகிப் போனது. மொழியின் சாற்றினைப் பருகுவதற்கும், தனக்கான விடுதலையைத் தேடிக் கொள்வதற்கும் தனிமனிதர்கள் இத்தகைய அதிகார மையங்களின் குறுக்கீடுகளைக் கடந்தே பயணிக்க வேண்டியிருக்கிறது. செவ்வியல் மொழியான தமிழ், தனது வாழ்நாளில் எத்தனையோ அதிகார மையங்களையும், தன்னை அழித்தொழிக்க முனையும் மையங்களையும் கண்டிருக்கிறது. தமிழின் தத்துவ வளமும், இலக்கிய அழகும், மருத்துவம் முதலான கலைகளில் பதியப்பட்டிருக்கும் தேர்ந்த அறிவும் இன்னவான பிறவற்றாலுமே தமிழ் தன்னைக் காத்துக்கொண்டு நிற்கிறது. மேலும், மரபுகளை முன்வைக்கும் தமிழே அவற்றுக்கு எதிரான மரபுகளையும் வளர்ப்பதன் மூலமும் நெடுங்காலமாக சமநிலையைப் பேணித் தன் நிலைத்தன்மையை உறுதிசெய்துகொண்டுள்ளது. மரபுக் கலப்பின் ஒரு வடிவமாக மார்க்சியக் கோட்பாடுகளைத் தமிழர்தம் மரபுகளுடன் இணைப்பதன் மூலம் தனிமனித விடுதலை, சுரண்டலற்ற பொதுவாழ்வு என்பவற்றைக் குறித்தான பலரது கனவும் மெய்ப்படுமென்பதை சுகுணதிவாகரின் இடுகை உணர்த்தும்.
தமிழினைத் தொடர்ந்து காத்து வருவதில் திராவிட அரசுகள் எந்தவிதமான காத்திரமான எடுப்புகளையும் செய்யவில்லை என்பது வேதனையான உண்மை. ஆரம்பக்கல்வியில் தாய்மொழியின் அவசியம் குறித்து நாம் மீண்டும் மீண்டும் அரசுக்கு நினைவுறுத்தவேண்டிய நிலையிலிருக்கிறோம். இத்தகைய நிலையில் தாய்த்தமிழ்ப் பள்ளிகளைக் குறித்த மயிலாடுதுறை சிவாவின் இடுகை ஆறுதல் தருவதாகவும், அரசை முடுக்கிவிடுமாறு நம்மில் பலரையும் தூண்டுவதாகவும் அமைகிறது. அந்தப் பள்ளிகள் உண்டாக்கும் மாணவர்களைப் பற்றிய நம்பிக்கையை நம்முள் எழுப்புகிறது. இம்மாணவர்களை நினைக்கும்போதே, பிரபு ராஜதுரை "ஒரு நாள் பிரபலங்கள்?" இடுகையில் குறிப்பிட்டிருக்கும் "முதல் மாணவர்"களைப் பற்றிய கேள்விகளையும் ஓர்ந்து பார்க்க வேண்டும். ஒப்பீட்டளவில் எத்தகைய கல்வி முறை நல்விளைவுகளை உண்டாக்கும் என்பதை வரும் காலங்கள் முடிவு செய்ய வேண்டும். தமிழைத் தொடர்ந்த கண்ணியில் மேலும் சில இடுகைகளைக் குறிப்பிடுதல் அவசியம். முதலாவதாக, தமிழ் மொழியின் தேர்ந்த இலக்கியக் கருவூலங்களைச் சிதைப்பதன் மூலம் விடுதலையுணர்ச்சியை நசுக்க முயன்ற யாழ் நூலக எரிப்பு குறித்த ஆவணப்படமொன்றை சோமி தயாரித்து வருகிறார்; அவருக்கு உதவுமென்று நீங்கள் நினைக்கும் படங்களை, விபரங்களை அவருக்கு அனுப்பி வைக்கலாம். அவருடைய இடுகை இவ்வாரம் இடம்பெறுகிறது. இரண்டாவதாக, தில்லைச் சம்பவம் குறித்து. தில்லைக் கோயிலுக்குள் தமிழுக்கெதிரான நடவடிக்கைகள், தமிழுணர்வையும், மதத்தைப் பற்றியும் மொழியைப் பற்றியுமான மக்களின் புரிதலையும் மேம்படுத்த உதவும். இச்சம்பவம் குறித்த கோவி.கண்ணன், வெட்டிப்பயல், சந்திப்பு ஆகியோரது இடுகைகள் உரத்துப் பேசுகின்றன. தமிழின் நெடிய வளத்தை இராம.கியின் பதிவுகளில் காணமுடியும். வேர்ச்சொற்களை அகழ்ந்து காட்டுவதில் இவரது திறன் வியக்கத்தக்கது. ஒரு சொல்லினை விளக்கும்போதே பலவற்றையும் சுட்டிக்காட்டி, ஒரு சுற்றுலாவைப் போல மனமகிழ வைப்பார். அவரது இனி என்ற இடுகை இவ்வாரம் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாரத்திற்கான "தமிழ்மணம் வாசிப்பில்" பகுதியில், தன்னுடைய வலைப்பதிவு வாசிப்பனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்பவர் நம் அன்புக்குரிய வெட்டிப்பயல் அவர்கள். அவருக்கு நம் நன்றி.
பயணக்கதைகளும், நனவோடைகளும், நிகழ்வுகளைக் குறித்தான காட்சிப்பதிவுகளும், ஒரு கணமேனும் ஆன்மாவின் கண்களைத் திறக்கச் செய்பவை, சமூகத்தைப் பற்றி யோசிக்க வைப்பவை, நாமென்ன செய்தோம்/செய்யலாமென்று கற்பனை செய்ய வைப்பவை. இவ்வாரம் எம்.எஸ்.வி முத்து, சோமி (மே 13 படுகொலைகளைக் குறித்த இடுகை), தாரா, ஆழியூரான், ப்ரசன்னா ஆகியோரின் இடுகைகள் பூங்காவில் இடம்பெற்றிருக்கின்றன. நெடும்பயணமொன்றில் இடம்பெயர்ந்திருக்கும் அமெரிக்கத் தமிழர்களிடையே எங்கே போவது என்பது குறித்து நிலவும் குழப்ப நிலையை மயிலாடுதுறை சிவா நன்கு படம்பிடித்தாற்போலக் காட்டியுள்ளார். தருமியும், குழலியும் வழமை போல் தங்கள் சமூக அக்கறையினை வெளிப்படுத்தியிருக்கும் இடுகைகள் சிந்தனைக்குகந்தவை.
நீத்தார் பெருமையாக இவ்வாரம் நகுலனின் நினைவாக தமிழ்நதியின் இடுகையும், எல்.வைத்தியநாதனையும் அவரது வாழ்க்கைப் பயணத்தைக் குறித்த கானா பிரபாவின் இடுகையும், LCD என்று நாம் இன்று பாவிக்கும் நுட்பத்தை உண்டாக்கிய டிகென்னஸ் அவர்களுக்கு அஞ்சலியாக அந்நுட்பத்தைப் பற்றிய தீபாவின் எளிய விளக்கமும், புலவர் கு.கலியபெருமாளின் நினைவாக அவரது தன்வரலாற்று நூலைப் பற்றிய ஆழியூரானின் அறிமுகமும், தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
எங்கோ வசந்தம் துளிர்க்கையில் இன்னோரிடத்தில் இலை விழுகிறது போலும்! விழுகின்ற இலை சொன்னதை காயத்ரி தன் கவிதையில் சொல்லியிருக்கிறார். தான் வாசித்த புத்தகங்களைப் பற்றிய நந்தகுமாரின் பதிவு சென்றவாண்டு தமிழ் வலைப்பதிவுலகில் நடந்த புத்தகமீமீயை நினைவூட்டுகிறது.
இடவொதுக்கீட்டைக் குறித்த விவாதங்களின்போது, ஒதுக்கீட்டுக்கு எதிர்த்தரப்பினரால் வைக்கப்படும் வாதங்களுள் ஒன்று, "இது உலகத்திலேயே இல்லாத புதுமை, எல்லா நாடுகளும் "தகுதி, திறமை" அடிப்படையில்தான் இடம் கொடுக்கின்றன" என்பதான திரிப்பு. அமெரிக்காவின் equal opportunity, affirmative action, diversity போன்ற திட்டங்களும், மற்றைய நாடுகளில் பிற்படுத்தப்பட்டவர்களை முன்னேறியவர்களோடு இணைக்குமுகமாக செயற்படுத்தப்படும் திட்டங்களும் இவர்களது கண்களுக்குத் தெரிந்தாலும் அவற்றை இவர்கள் வெளியே சொல்லுவதில்லை. திருவின் தென்னாப்பிரிக்காவைக் குறித்த பதிவு இவ்வகையில் முக்கியமானது. போராட்டங்களுக்குப் பிறகு அங்கு திறக்கப்பட்டிருக்கும் கதவுகளைக் காண முடிகிறது. இதனையொட்டி, வாகன உரிமம் தொடர்பில் இடவொதுக்கீடு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை பிரபு ராஜதுரை தனது சட்ட மொழியின் உதவியுடன் நமக்கு அளித்துள்ளார். பின்னதைப் போன்றே துறைசார்ந்த பதிவுகளில் மழை ஷ்ரேயாவின் பொருளாதாரம் குறித்தை இடுகையையும் குறிப்பிடலாம்.
நுட்பம் பகுதியில் புதிய பதிவரான செந்திலின் மேம்பட்ட கூகுள் தேடல், ரவிசங்கரின் ஃபயர்ஃபாக்ஸின் பயன்பாடு, சி.வி.ஆரின் வானுக்குள் விரியும் அதிசயங்கள், மயூரேசனின் தமிழ்மணம் கருவிப்பட்டை நீட்சி, ஆகியன குறித்த இடுகைகள் இடம்பெறுகின்றன.
இவ்வார பூங்காவுக்குப் பங்களித்த அனைத்து வலைப்பதிவு நண்பர்களுக்கும் பூங்காவின் நன்றி!
|