இப்போதைய சூடான விவாதம் கனிமொழியின் அரசியல் பிரவேசம்தான். அதை பத்தி நாமும் கருத்து சொல்லலைன்னா எப்படிங்க? நம்ம கருத்தை யாரு கேட்டாலும் கேக்கலைன்னாலும் நம்ம கருத்து சொல்றதுன்றது எப்பவுமே நமக்கு ஒரு வழக்கந்தான். அதுலயும் இந்த ப்லாக் ஆரம்பிச்சப்புறம் ஒரு வியாதியாவே மாறி கருத்து கண்ணம்மாவா ஆயாச்சு(கருத்து கந்தசாமிக்கு பெண்பால் ஒன்னு வேணுமேன்னு யோசிச்சதுல கிடைச்சதுதான் இந்த க.க.).
சரி பேச ஆரம்பிச்ச விஷயத்துக்கு வருவோம். முதலில் ஒரு விஷயம். ஒரு பதவியிலிருப்பவரின் வாரிசு என்பதற்காகவே ஒருத்தருக்கு வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு தவறோ அதே அளவு தவறு அவருக்கு அதே காரணத்துக்காக வாய்ப்பு மறுக்கப்படுதலும். ஆனா இவரோட அவரை சம்பந்த படுத்தி மனசுக்குள்ள வந்து உக்காரற முன்முடிவுகளை தவிர்த்துட்டு பாக்கறதும் ஒரு கஷ்டமான விஷயம்தான். ஆக இந்த மாதிரி விஷயங்களில் இரு தரப்பிலிருந்தும் மன முதிர்ச்சி தேவைப்படுகிறது. உண்மையிலேயே திறமையிருந்தால் மட்டுமே தன் வாரிசை தன் துறையிலிறங்க அனுமதிக்க வேண்டும். அதுவும் அவருக்கு எந்த சலுகையும் வழங்கப்பட்டுவிடவில்லை என்று தெளிவாகவே பொதுமக்களுக்கு தெரியவைக்குமளவு ஒளிவு மறைவற்ற நடவடிக்கைகள் வேண்டும். இது வாரிசை களமிறக்குபவர்களுக்கு. தள்ளி நின்று பார்க்கும் மக்களுக்கு(குறிப்பாக பத்திரிக்கையாளர்கள்) தேவையானவை: முன்முடிவுகளை தவிர்த்து வாரிசுகளின் செயலை விமர்சித்தல். தந்தை/முன்னோடியோடே ஒப்பிட்டு எப்போதும் விமர்சிப்பது என்பதை ஒதுக்கி வைக்க வேண்டும். அப்பாவை அடியொட்டி ஏதேனும் செய்தால் சொந்த சிந்தனை இல்லை - அவர் நிழலில் வாழ்கிறார் என்று குமுற வேண்டியது. மாற்றாக ஏதேனும் செய்தால் தந்தையை மதிக்காது தாந்தோன்றித்தனமாக செயல்படுவதாக குதிக்க வேண்டியது. இரண்டுமின்றி ஒரு மூன்றாவது மனிதர் இதே விஷயத்தை செய்திருந்தால், எப்படி பார்ப்போமோ அப்படி பார்க்க பழக வேண்டும்.
சரி, இவையெல்லாம் வாரிசுகள் களமிறங்குதலை பற்றிய என் பொதுவான சிந்தனை. குறிப்பாக கனிமொழியை பற்றி பேசுவோம். ஒரு குறிப்பிடத்தகுந்த கவிஞர், பத்திரிக்கை துறை அனுபவம் உள்ளவர். எனினும் பெரும்பான்மை மக்களால் தந்தையை ஒட்டியே அறியப்படுபவர். இவர் நேரடியாக ஒரு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்படுவது எவ்வளவு தூரம் சரியானது? அநேகமாய் மத்திய அமைச்சராகவும் ஆகிவிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்த திடீர் பாய்ச்சல் தயாநிதி மாறனுக்கும் இப்போது கனிமொழிக்கும் மட்டுமே சாத்தியமாவது நிச்சயம் வாரிசு அரசியல்தான். ஸ்டாலினை பற்றி வெறும் வாரிசு அரசியல் என்று ஒற்றை வரியில் இப்படி கூற முடியாது. பல வருடங்களாக கட்சியிலும் அரசிலும் பணியாற்றி வருகிறார். எனவே அவரது குறை நிறைகளை நேரடியாக எடை போட முடியும். அவர் செயல்களை விமர்சிக்க முடியும். மேலும் தொடர்ந்து அவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளுக்கே இது வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தயாநிதி மாறனும் தேர்தலில் போட்டியிட்டாரே என்ற கேள்வி இங்கே எழலாம். இப்போது கனிமொழி அமைச்சராவது எப்படி எம்.பியாவதற்கு முன்னரே எளிதில் ஊகிக்கக்கூடியதாக இருக்கிறதோ அப்படியே தயாநிதி தேர்தலில் நிற்பதற்கும் முன்னரே அவர் அமைச்சராவார் என்பதும் உறுதியாகத்தெரியும். ஒரு சாதாரண வேட்பாளர் ஜெயிப்பதற்கும் அமைச்சராக பிரகாசமான வாய்ப்புள்ள ஒருவர் அந்த தொகுதியில் ஜெயிப்பதற்கும் எந்த அளவு வேறுபாடிருக்கும் என்பது சாதாரண வாக்காளருக்கும் தெரியும். எனவேதான் சோ போன்றவர்களுக்கும் கூட ஸ்டாலினின் அரசியலை பற்றி வாரிசு அரசியல் என்று ஒற்றை பார்வைக்குள் தள்ளிவிட முடிவதில்லை . ஆனால் முன்பு தயாநிதி விஷயத்திலும் சரி இப்போது கனிமொழி விஷயத்திலும் சரி, இந்த குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரமுண்டு.
ஆரம்பத்தில் எனக்கு அவர் மேல் அவ்வளவு நல்ல அபிப்ராயமெல்லாம் இல்லை. சுஜாதா, சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்களின் செல்லப்பிள்ளை என்கிற அளவில்தான் முதலில் அவர் எனக்கு அறிமுகமானார். அதிலும் சாரு நிவேதிதாவின் அதிகப்படியான புகழல்(அழகாய் இருக்கிறாய் பயமாயிருக்கிறது வகையறா) எனக்கு ஒரு விதமான எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தி வந்தது. அவர் கருத்து.காம் துவக்கிய போது கூட இதுவும் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் எனவே தோன்றியது. ஆனால் ஒரே விஷயம் அவரை பற்றின எனது கருத்தை மாற்றிப்போட்டது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரதம்தான் அது. சாதாரணமாய் பழ. நெடுமாறனோ அல்லது வை.கோவோ இத்தகைய உண்ணாவிரதத்தை நடத்தினால் பெரிது யாரும் அதை படுத்தியிருக்கப்போவதில்லை. ஆனால் கலைஞர் சென்னை வந்த ஈழ பிரதிநிதிகளை சந்திப்பதை கூட தவிர்த்து வந்த நிலையில் அவர் மகளான கனிமொழி பகிரங்கமாக பந்தலில் உட்கார்ந்து உண்ணாவிரதமிருந்தபோது தன் கருத்துக்களை உணர்வுகளை யாருக்காகவும் வளைத்துக்கொள்ளாதவராய் இருக்கிறாரே என்று ஆச்சரியமானது. அதற்கு பிறகு அவரது கருக்கும் மருதாணி புத்தகத்தை (எப்போதோ ஏதோ ஒரு மனநிலையில் வாங்கி ஒரு ஒரமாய் போட்டு வைத்திருந்தது) எடுத்து ஒரே மூச்சில் படித்தேன். அவரது எழுத்துக்களின் மீது ஒரு ஆர்வத்தை தூண்டியது அது. தோழி.காமில் அவர் எழுதிய தலையங்கங்கள் எல்லாவற்றையும் தேடி பிடித்து படித்தேன். தந்தையின் சாயல் சிறிதுமின்றி அழகாய் தெளிவாய் எளிமையாய் இருக்கும் அவரது எழுத்துக்கள் இப்போது என் விருப்பமானவை பட்டியலில் இருக்கிறது. அடுத்த சந்தர்ப்பங்களில் அவரது புத்தகங்களை முடிந்த அளவு வாங்க குறித்து வைத்திருக்கிறேன்.
தனிப்பட்ட முறையில் எனக்கு கனிமொழி மீது மிகுந்த அபிமானமுண்டு. ஒரு தெளிவான சிந்தனையும் நல்ல ஆளுமையும் உடையவர். ஆனால் அவரை இப்படி அவசர கதியில் அரசியலுக்கு இழுத்து வந்து அவரது திறமைகளை விட முதல்வரின் மகள் என்ற ஒரே தகுதியில்தான் அவர் இந்த உயரத்தை எட்டினார் என்பது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட முதல்வரே காரணமாகிவிட்டாரோ என்பதுதான் என் எண்ணம்.
ஆனால் அதைவிடவும் வருத்தமான விஷயம் ஒரு பெண் அரசியலுக்கு வந்தால்தான் என்றில்லை, வரப்போவதாய் தெரிந்தாலே போதும் நாங்கள் அவர் உடலமைப்பை பற்றியோ இல்லை அவரது நடத்தை பற்றியோ அஷ்டோத்திர சஹஸ்ரநாம அர்ச்சனைகளையெல்லாம் ஆரம்பித்து விடுவோமாக்கும் என்று தொடை தட்டி கிளம்பியாயிற்று ஒரு கும்பல். ஏதோ ஒரு பேட்டையின் டீக்கடையில் இல்லைங்க, மெத்த படித்த நாகரீக கனவான்கள் உலாவும் தமிழ் வலையுலகாகிய புண்ணிய பூமியிலேயே இந்த கதிதான். இங்கனயே இப்படின்னா எஸ்.எஸ். சந்திரன் தொடங்கி இதுக்காகவே மானியம் வாங்கி வாழ்ந்துகிட்டிருக்கற கும்பல் நாளைக்கு என்ன என்னல்லாம் பேசப்போகுதோ தெரியலை. அதை நினைத்தால்தான் குலை நடுங்குகிறது(இங்கே கனிமொழி தி.மு.க சார்பா களமிறக்கப்பட்டிருப்பதால்தான் அ.தி.மு.க ஆட்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். இதே ஜெயலலிதாவை பற்றி பேச ஆரம்பித்தால் வெற்றி கொண்டான் வகையறாக்களும் இதே ரீதியில்தான் பேச்சு சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வார்கள் என்பதை அறிவேன் நான். எனவே எனக்கு உடனடியாக எந்த கட்சி சாயத்தையும் பூசிடாதீங்க மக்கா...).
சரி, கடைசியா நீ என்னதான் சொல்ல வரேன்னு பொறுமையிழக்கும் கண்மணிகளே, பொறுமை. என் எழுத்தை படிக்கறதுன்னு முடிவு பண்ணி இந்த லிங்கை க்ளிக்கிட்டீங்க இல்ல, அப்புறம் இப்போ வந்து ஃபீல் பண்ணி என்ன பிரயோசனம்? சரி, சரி, ரொம்ப அழுவாதீங்க. இதோ மாரல் ஆப் தி ஸ்டோரி - கனிமொழியின் திட்டமிடல், சிந்தனை போன்றவற்றில் எனக்கு நிச்சயம் நம்பிக்கை உண்டு. ஆனால் அவரது வருகை தவறான பாதையில்தான் அமைந்திருக்கிறது. அதனால் இந்த குற்றச்சாட்டையும் மீறி முதல்வரின் தேர்வு சரியே என பெரும்பான்மை மக்களை நம்பவைக்கும் வண்ணம் நடந்து கொண்டாக வேண்டிய கட்டாயம் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அதை அவர் செய்வார் என்றே நான் நம்புகிறேன். அவரேனும் ஒரு கண்ணியமான அரசியல்வாதிக்கு முன்னுதாரணமாக திகழ்வார் என்று நம்புவோமாக. நம்பிக்கைலதானேங்க நம்ம வாழ்க்கையே ஒடுது?